மூணு

ஓடியே விட்டது ஒரு வருடம். சென்ற ஆண்டு ஜூலையில்தான் இனி முழுநேரமும் எழுத்து என்று முடிவு செய்தேன். குடும்பத்தினரின் அச்சம், நண்பர்களின் கவலை, நண்பர்கள்போல் இருந்தவர்களின் நமுட்டுச் சிரிப்பு அனைத்தையும் பதில் கருத்தின்றி வாங்கி வைத்துக்கொண்டு என் முடிவு இதுதான் என்று என் மனைவியிடம் சொன்னேன். சரி என்பதற்கு மேல் அவள் வேறேதும் சொல்லவில்லை. நான் சினிமாவில் கவனம் செலுத்துவேன் என்று அவள் நினைத்தாள். தொலைக்காட்சிதான் என்பதில் தீர்மானமாக இருந்தேன். இதற்குப் பொருளாதாரக் காரணங்கள் தாண்டி வேறு சில காரணங்கள் இருந்தன. அவற்றுள் முதன்மையானது, எழுதுபவனுக்கு இந்த உலகம் தரும் மரியாதை. நிச்சயமாக அது சினிமாவில் கிடையாது. அது இயக்குநரின் மீடியா. இதுதான் எழுத்தாளனின் மீடியா.

எங்கே தொடங்கப் போகிறோம் என்றே தெரியாமல் இருந்தபோது ஹோம் மீடியா சுஜாதா விஜயகுமார் அழைத்து உதிரிப்பூக்களுக்கு எழுத ஒப்பந்தம் செய்த தினத்தை மறக்க முடியாது. உதிரிப் பூக்களுக்கு ஒப்பந்தமாகியிருக்கிறேன் என்பது தெரிந்தும் சினி டைம்ஸில் இருந்து தயாரிப்பாளர் சித்திக் அழைத்து அவர்களுடைய முத்தாரத்துக்கு எழுதக் கேட்டுக்கொண்டது, அந்த நேரத்தில் எனக்கு ராட்சச பலத்தைக் கொடுத்தது. ஒரே நாளில் இந்த இரண்டு சீரியல்களும் என்னுடைய வசனத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கின. பகலில் உதிரிப்பூக்கள், இரவில் முத்தாரம் என்று வைத்துக்கொண்டு தினசரி பன்னிரண்டு மணிநேரங்கள் எழுதினேன். மிச்ச நேரத்தில் பாதியைத் தூங்கிக் கழித்தேன். மீதி எப்படிக் கழிந்தது என்பது நினைவில்லை.

மூன்று மாதங்கள் இருக்குமா? மீண்டும் சினி டைம்ஸில் இருந்து ஒரு போன் கால். அப்போது நண்பர் தேவிபாலா வீட்டில் கதை விவாதத்தில் இருந்தேன். ‘சார் உங்கள முந்தானை முடிச்சுக்கும் எழுத சொல்றார். மூணு முடியுமா?’ என்று கேட்டார் சினி டைம்ஸின் சி.இ.ஓ. சௌந்தர்ராஜன். உடனே பன்னிரண்டு மணி நேரத்துடன் இன்னொரு ஆறைக் கூட்டி, மிச்சம் எவ்வளவு இருக்கிறது என்றுதான் கணக்குப் போட்டேன். சமாளித்துவிடலாம் என்று தோன்றியதால், சரி என்று பதில் சொன்னேன்.

முதலில் கொஞ்சம் முழி பிதுங்கத்தான் செய்தது. ஏனெனில் படப்பிடிப்பு என்பது அத்தனை துல்லியமான திட்டமிடல்களுடன் நடப்பதல்ல. எதிர்பாராத நேரத்தில் ஷெட்யூல் மாறும். நினைக்காத தினங்களில் ஷூட்டிங் கேன்சல் ஆகும். கேன்சல் ஆன ஷூட்டிங் இன்னொரு நாள் இரண்டு யூனிட்டாக ஒரே சமயத்தில் நடக்கும். சில டைரக்டர்கள் தினமும் ஐந்து அல்லது ஆறு காட்சிகளுக்கு மேல் எடுக்க மாட்டார்கள். சிலர் எட்டு, ஒன்பது என்று அடித்து நொறுக்குவார்கள். அனைத்துக்கும் ஈடு கொடுத்தாக வேண்டும். எழுதிக் குவித்தாக வேண்டும். எழுதுவது சரியாகவும் அதற்குமேல் தரமாகவும் இருக்க வேண்டும். ஏதாவது சொதப்பினால் நேரில் போய் சரி செய்து கொடுத்துவிட்டு வரவேண்டியிருக்கும். சென்னை போக்குவரத்தில் ஒரு நாள் ஷூட்டிங் சென்று வந்தால் அடுத்த நாள் படப்பிடிப்புக்கு எழுதி முடிக்க முடியாது போகும்.

கிட்டத்தட்ட பிசாசு போல் வேலை செய்ய ஆரம்பித்தேன். எழுதுவது ஒன்றைத் தவிர புத்தியில் வேறு எண்ணமே கிடையாது. டாய்லெட் போகும்போது மட்டும்தான் புத்தகம் படிக்க முடிந்தது. படித்தாலொழிய எழுத முடியாது என்பதால் டாய்லெட்டில் இருக்கும் நேரத்தை அஞ்சு பத்து நிமிடங்கள் அதிகரித்துக்கொண்டேன்.

உறக்கம் எப்போதுமே எனக்கு ஒரு பிரச்னை இல்லை. ஒரு நாளில் மூன்று நான்கு மணி நேரங்கள் தூங்கினால் எனக்குப் போதும். அதைவிடக் குறைவான நேரம் தூங்கியும்கூட பலநாள் சுறுசுறுப்புடன் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் எழுதிக்கொண்டே இருக்கும்போது திடீரென எப்போதாவது ஒரு அலுப்பு வந்துவிடும். அதுதான் ஆபத்தான எல்லை. அது தானாக விலகினாலொழிய அடுத்த சொல் வராது. அந்த அலுப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே பாட்டு கேட்டேன். கீ போர்ட் வாசித்தேன். கிட்டார் வாசித்தேன். இந்தக் காட்சியை எழுதி முடித்தால்தான் மாவா போடலாம் என்று எனக்கு நானே செல்ல விதி நிர்ணயித்து, பொட்டலத்தை எதிரே வைத்துக்கொள்வேன். அதுவும் வேகம் கொடுக்கும். எப்படியோ செயல்பட ஆரம்பித்து, மூன்று சீரியல்களுக்குத் தேவையான வேகத்துக்கு என்னைப் பழகிக்கொண்டேன்.

சில எதிர்பாராத காரணங்களால் உதிரிப்பூக்கள் தொடரை அறுபது, எழுபது எபிசோட்களுக்கு மேல் என்னால் தொடர இயலாமல் போனது. பழையபடி இரண்டு சீரியல்கள். முத்தாரம், முந்தானை முடிச்சு. திடீரென இப்போது ஒரு நாளின் நேரம் அதிகரித்துவிட்டதாகத் தோன்றியது. வீணாக்காமல் நிறையவே படித்தேன். ஆரம்பித்து நடுவில் நின்றுபோன நீலக்காகம் நாவலின் அடுத்த சில அத்தியாயங்களை எழுதிப் பார்க்கவும் செய்தேன். (முடிக்காமல் இனி பிரசுரிப்பதாயில்லை.) குடும்பத்தோடு பல இடங்களுக்குச் சுற்றுலா போனேன். இதெல்லாம் முன்னெப்போதும் செய்யாதது. செய்ய முடியாததும்கூட.

இந்த அனுபவம் எனக்குச் சொல்லிக்கொடுத்த பெரிய பாடம் இதுதான். நேரமில்லை என்பது ஒரு மாயை. நேரம் நிறையவே இருக்கிறது. பாத்திரத்தில் பத்து கூழாங்கற்களைப் போட்டு நிரப்பிவிடலாம். இன்னும் நிரப்பவேண்டுமென்றால், அடுத்து போடவேண்டியது மணலாயிருக்க வேண்டும். மேலும் நிரப்ப நீரூற்றலாம். கொள்ளளவு பெரிதுதான். கொட்டும் வித்தை நம்மிடமுள்ளது.

இந்த இடத்தில் முந்தானை முடிச்சு தொடரின் இயக்குநர் செல்வத்தைப் பற்றிச் சொல்லவேண்டும். என்னைவிட இளையவர். நான் பிசாசு என்றால் அவர் கொள்ளிவாய்ப் பிசாசு. எப்போதுமே பற்ற வைக்கப்பட்ட வெடிகுண்டு போலவே சுறுசுறுவென்றிருக்கும் அவரது சுபாவம் என்னை மிகவும் கவர்ந்தது. வேலையை வெறித்தனமாக நேசிக்கும் அவருடனான பழக்கமும் நெருக்கமும் என்னை இன்னும் உற்சாகமாக எழுத வைத்தது. ஒரு நாளின் முதல் தொலைபேசி அழைப்பும், இறுதி அழைப்பும் அவருடையதாகத்தான் இருக்கும் என்றாகிப் போனது. இடைப்பட்ட நேரத்தில் எப்படியும் இருபது முறையாவது அழைத்துவிடுவார். அன்று எழுதி, எடுக்கும் ஒவ்வொரு காட்சியையும் அணு அணுவாக ரசித்து, விவாதித்து அதன் பிறகே டேக் செல்வார். எடுத்து முடித்தபின் மீண்டும் அழைப்பார். எப்படி எடுத்திருக்கிறேன் என்று விவரிப்பார். ஷூட்டிங் இல்லாத நாள்களில் சுறுசுறுப்பாக எழுந்து குளித்துவிட்டு நேரே ஸ்டுடியோவுக்குப் போய்விடுவார். அங்கிருந்து அழைத்து, எடிட்டிங்கில் இருக்கிறேன் என்று சொல்லி அப்போதும் காட்சிகளைக் குறித்தே பேசுவார். இந்த மனிதருக்கு வேறு எதுவுமே சிந்திக்கத் தெரியாதா என்று வியந்திருக்கிறேன். நள்ளிரவு தாண்டி எழுதிக்கொண்டிருக்கும் போது என்னையறியாமல் கண் சொருகினால் செல்வத்தைத்தான் நினைத்துக்கொள்வேன். தூக்கம் போய்விடும்.

முத்தாரத்தை முதலில் இயக்கிய கணேஷ் முற்றிலும் வேறு மாதிரி மனிதர். லட்சியங்களுக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளியை – இந்தத் துறை சார்ந்து எனக்குப் புரியவைத்தவர் அவர்தான். கணேஷோடு நான் செலவழித்த நேரங்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் முக்கியமானவை. ஆழ்ந்த ரசனையுடன் அவர் எடுத்த பல காட்சிகள் இன்றும் என் நினைவில் இருக்கின்றன. பல காரணங்களால் அவர் முத்தாரத்திலிருந்து விலகிக்கொள்ள, சுந்தர் கே. விஜயன் இயக்குநராக வந்தார்.

எனக்கு அதுநாள் வரை என் வயது அல்லது ப்ளஸ் ஆர் மைனஸ் ஐந்து வயது வித்தியாசத்தில் உள்ள இயக்குநர்களுடன் மட்டுமே பணியாற்றிய அனுபவம். எஸ்கேவியோ பல்லாயிரக்கணக்கான எபிசோட்களை இயக்கிய பெரும் சீனியர். தவிரவும் மாபெரும் கோபக்காரர் என்று துறையில் சொல்வார்கள். கணேஷும் சரி, செல்வமும் சரி. அவரது மாணவர்களாக இருந்தவர்கள்தாம். (இப்போது புதிதாக கமிட் ஆகியுள்ள செல்லமேவின் இயக்குநர் ஓ.என். ரத்னமும் எஸ்கேவியின் மாணவர்தான்!) தமது குருநாதரைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் முதலில் அவரது கோபத்தைப் பற்றித்தான் என்னிடம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் நான் பார்த்த எஸ்கேவி சற்றும் நம்பமுடியாத அமைதியாளராக இருந்தார். ‘ஹலோ, நான் தான் சுந்தர் கே விஜயன். முத்தாரத்த இனிமே டைரக்ட் பண்ணப்போறேன்’ என்று கைகொடுத்துத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது எப்படி இருந்தாரோ அப்படியேதான் இன்றுவரை (எனக்கு) இருக்கிறார். ‘பிரச்னையே இல்ல சார் டயலாக்ல. நீட்டா இருக்கு. கரெக்‌ஷன் தலைவலி இல்லாம ஷூட்டிங் போகுது’ என்பார். சமீபத்தில் இரண்டு நாள் அவரோடு மகாபலிபுரத்துக்குக் கதை விவாதத்துக்காகச் சென்று வந்தேன்.

‘சார், போன வாரம் செல்லமேல கமிட் ஆயிருக்கேன்’ என்றேன். ‘கங்கிராட்ஸ்’ என்றார். ‘மூணு… முடியுமா?’

‘முடியும்னுதான் சார் நினைக்கறேன். ஏற்கெனவே செஞ்சிருக்கேன்.’

‘குட்’ என்று கைகொடுத்துவிட்டுக் கதையில் ஆழ்ந்துவிட்டார்.

இந்நாள்களில் தினமும் காலை ஆறரை அல்லது ஏழு மணிக்கு எழுந்துவிடுகிறேன். பரபரவென்று தயாராகி எட்டரை அல்லது எட்டே முக்காலுக்கு எழுத உட்கார்ந்தால் ஒன்றரை வரை எழுதுகிறேன். மதிய உணவுக்குப் பிறகு இரண்டு மணிநேர உறக்கம். உறக்கத்துக்குப் பிறகு ஒருமணிநேரம் சும்மா இருப்பது. அதன்பின் மீண்டும் எழுத ஆரம்பித்தால் எப்படியும் நள்ளிரவு தாண்டி இரண்டு அல்லது இரண்டரை வரை போகிறது. தொடர்ந்து எழுதுவது பழகிவிட்டபடியால் வேகம் இன்னும் கூடியிருக்கிறது. மனம் நினைக்கும் வேகத்தில் விரல் டைப்படித்துவிடுகிறது. ஒரு மணிநேரம் எடுக்கும் காட்சிகள் இப்போது இருபது, இருபத்தைந்து நிமிடங்களில் முடிந்துவிடுகின்றன.

எழுதிக்கொண்டே இருந்தாலும் வீட்டில் மனைவி, மகளுடன் பேச்சுக் கொடுத்தபடியேதான் இருக்கிறேன். ஷெட்யூல் ப்ரேக் வரும்போது கண்டிப்பாக எங்காவது வெளியூர் போய்விடுகிறேன். செய்ய நினைத்து, இன்னும் செய்ய முடியாதிருப்பது உடற்பயிற்சி மட்டும்தான். ஆடி முடிந்தபிறகு அதையும் ஒரு கை பார்த்துவிடவேண்டும்.

மாதத்தைச் சொன்னேன்.

Share

34 comments

  • ஆச்சர்ய பார்வைகள் நிறையவே வந்து விழும் 🙂 திருஷ்டி சுத்தி போட்டுக்கொள்ளுங்கள் சார் 🙂

    கிடார் ரிலாக்சிங் எக்ஸ்பீரியன்சினை டிவிட்டரில் கண்ட எங்களுக்கு உடற்பயிற்சி டார்கெட் பெரும் எதிர்பார்ப்பினை உண்டாக்கியிருக்கிறது! :)))

  • கடைசி பஞ்ச் சூப்பர். ஆடிக்கொன்னு அமாவாசைக்கொன்னு கேள்விப்பட்டுருக்கேன். இன்னிக்கு ஆடியமாவாசை. அதுனால ஒன்னா?

    மாதத்துக்கு ஒன்னுகூட இல்லையேன்னு சொன்னேன்.

  • உங்கள் பலம் – உங்கள் வேகம், திட்டமிட்டபடி எழுதுவது, கணினியில் எழுதுவது. வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்.

  • அன்புள்ள ராகவன்,

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் உங்கள் அதீத உற்சாகத்தையும் உழைப்பையும் பார்த்தால் ஓரத்தில் கவலையாயும் இருக்கிறது. உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அறியாதது அல்ல.

  • நீங்கள் எங்களுக்கு மிகப்பெரும் உற்சாக உர்சவம்.! படிக்கும் போதே வெற்றி வைராக்கியம் பற்றிக்கொள்கிறது.. வாழ்த்துக்கள் சார், எங்களையும் வாழ்த்துங்கள் சார். உங்க உடம்பையும் கவனித்து கொள்ளுங்கள்.

  • //ஆடி முடிந்தபிறகு அதையும் ஒரு கை பார்த்துவிடவேண்டும்.//

    ஆடி என்பது மாதமா அல்லது நிஜமாகவே ஆடுதலா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  • சார்
    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆனால் உங்களின் இந்த உழைப்பு பாழாப்போன சீரியலில் கரைகிறதே என்ற ஆதங்கம்/வருத்தம் எனக்கு இருக்கிறது! இந்த உழைப்பில் பாதியில் ‘மாயவலை,டாலர் தேசம் போன்று” இந்திய அரசியல் பற்றி எழுதியிருந்தால் எங்களுக்கு ஒரு அருமையான புத்தகம் கிட்டியிருக்கும்! தவறாக இருந்தால் மன்னிக்கவும்!உடம்பையும் பார்த்துக் கொள்ளவும்
    நன்றி
    சத்தீஷ்

  • ப்ளீஸ் உடல் நலத்தையும் கவனித்து கொள்ளுங்கள். உங்களுடைய பெரும்பாலான புத்தகங்களை படித்துள்ளேன். வருடத்திற்கு குறைந்தது இரு புத்தகங்களை எதிர்பார்கிறேன். Thanks.

  • திருஷ்ட்டியில் நம்பிக்கையில்லை!
    இருந்தாலும் சுத்திப்போடுங்கள்.
    வாழ்த்துக்கள்.
    பாண்டியன்ஜி (வில்லவன் கோதை )

  • அன்பானவரே…உங்களின் அசாத்திய உழைப்பு, எல்லா வெற்றிகளையும் சாத்தியமாக்கும்.வாழ்த்துகள்

  • சத்தீஷ்: இந்த பேயோன் (www.writerpayon.com) கவிதையாக எழுதித் தள்ளிக்கொண்டிருப்பதைக் கண்டித்தீர்களா? அதைவிடவா என் சீரியல் வசனங்கள் உங்களை பாதிக்கின்றன?

  • அன்புள்ள பாரா,

    அசுரத்தனமான உழைப்புக்கு பிரமிப்பான வணக்கங்கள்.

    “ஆடி முடிந்தபிறகு அதையும் ஒரு கை பார்த்துவிடவேண்டும்.

    மாதத்தைச் சொன்னேன்.”

    சரியான குசும்பு.

    சத்தீஷ் சொல்வதை அப்படியே வழிமொழிகிறேன்.

    முழுநேரமும் எழுத்தே என்று வரும்போது எழும் பொருளாதார காரணங்கள் புரிகிறது. எனவே சிற்பம் செதுக்கும் வேலைக்கிடையிலான தளர்வான பொழுதுகளில் மட்டும் அம்மி கொத்திக்கொள்ளுங்கள் போதும்.

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்

  • ஓ மரியா படித்துவிட்டு என்ன இப்ப ஆள் அட்ரஸே இல்லை என்று நினைத்தேன். இப்பொழுதுதான் புரிகிறது உங்களின் நேரமும் நேரமின்மையும். தமிழ் பேப்பரின் இழப்பும் தொலைக்காட்சியுன் லாபமும்….

    ( பை தி வே… பத்ரி சாருக்குத்தான் நன்றி. அவர் தளத்திற்குப் போனால் யாரு latest ஆக பதிவிடுகிறார் என்று பார்த்துவிடலாம்.)

    all the best

  • வாழ்த்துகள் .சும்மாவே பிச்சு எடுப்பீங்க்.. இப்ப சொல்லவே வேனாம்…

  • || சார்
    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆனால் உங்களின் இந்த உழைப்பு பாழாப்போன சீரியலில் கரைகிறதே என்ற ஆதங்கம்/வருத்தம் எனக்கு இருக்கிறது! ||

    இதேதான் எனக்கும் தோன்றியது…(நீங்கள் கிழக்கிலிருந்து தனியாக இயங்கது துவங்கி அறிவித்த அப்போதும்,நீங்கள் காட்சி ஊடகத் துறைக்குள்தான் போகப் போகிறீர்கள் என்பது தோன்றியது)

    வாளை வைத்து வாழைக்காய்தான் வெட்டுவேன் என்றால் என்ன செய்வது??!!

    மன்னிக்கவும்..உங்களுக்கான சரியான காரணங்கள் இருக்கலாம்;ஆனால் தோன்றியதை சொல்லாதிருக்க இயலவில்லை.

  • என்னமோ சொல்லறீங்க ஆனா நெருங்கிய நண்பனை தொலைத்ததை போல உணர்கிறேன் :

  • வாழ்த்துக்கள்!! மேலும் நிறைய எழுதுங்கள்… கொஞ்சம் புத்தகத்திற்கும் சேர்த்து எழுதுங்கள் 🙂 🙂

    • லக்கி: ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 18 காட்சிகள் எழுதுகிறேன். ஒரு காட்சியானது சுமார் 800 முதல் 1300 வார்த்தைகள் வரும். தோராயமாக 1000 என்று வைத்துக்கொண்டால் 18000 சொற்கள், ஒரு நாளைக்கு.வேண்டாம், 15000 என்றே வைத்துக்கொள்ளலாம். மாதத்துக்கு 4,50,000 சொற்கள். பிரேக் தினங்களைக் கழித்தாலும் எப்படீயும் 4 லட்சம் சொற்கள். வருடத்துக்கு 40 லட்சம் சொற்களுக்குக் குறையாது என்றே நினைக்கிறேன்.

  • Para Sir, Please remember every human needs 7.5 to 9 hours of sleep. It is compulsory and your mind keeps track of the debt and will be taken back in many forms (especially by means of heart attack)

  • //வருடத்துக்கு 40 லட்சம் சொற்களுக்குக் குறையாது என்றே நினைக்கிறேன்.//

    எனக்கு இன்னும் ஹார்ட் அட்டாக் வராததற்கு காரணம் போன வாரம் என் மனைவி வரலட்சுமி விரதமிருந்து புதுத்தாலி மாற்றிக் கொண்டதனால்தான் என்று நினைக்கிறேன் 🙂

  • ராகவன் சார்..வாழ்த்துக்கள்.உங்கள் உழைப்பை பார்த்தால் கொஞ்சம் பொறாமையாகவும் உள்ளது.உடம்பையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

  • உங்கள் வேகம் ஆச்சர்யத்தை தருகிறது. உங்கள் உழைப்பு பிரமிப்பை தருகிறது. உங்கள் எழுத்துகள் பரவசத்தை தருகிறது. உங்கள் வெற்றி மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் உங்கள் ஓய்வின்மை கவலையை தருகிறது. “உடம்பார் அழியின்” என்று தொடங்கும் திருமூலர் திருமந்திரத்தை நினைவுறுத்த விரும்புகிறேன்.

  • நிலையில்லா சீரியல் உலகத்திற்கு லாபம்,
    இலக்கிய மற்றும் எழுத்து ஊடகத்திற்கு வெகு நஷ்டம்.
    வாழ்த்துக்கள்

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி