கொளுத்திப் போட்ட காதை

வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள போலிஸ் ஸ்டேஷன் மாடியில் நேற்று மாலை தீப்பிடித்துக்கொண்டது. மொட்டை மாடியில் ஓலை வேய்ந்திருந்தபடியால் தீ மிக வேகமாகப் பரவி இரண்டு ஃபயர் எஞ்சின் வண்டிகள் வந்தபிறகுதான் ஓய்ந்தது.
எப்படியும் ஒரு மணிநேரம். பிராந்தியமே பதறிப் போனது. போலிஸ் ஸ்டேஷனை ஒட்டி வேறு சில கடைகள் உண்டு. ஒரு பலசரக்குக் கடை. ஒரு சலூன். ஒரு டீக்கடை. இந்த டீக்கடை சரித்திரப் புகழ்பெற்றது. தமிழ் சினிமா உலகில் வாழும் / வாழ்ந்த எந்த ஒரு டெக்னீஷியனும் இங்கே தேநீர் அருந்தாமல் இருந்திருக்கமாட்டார். இது ஒரு ஜாயிண்ட். தினமும் எந்நேரமும் இங்கே யாராவது சில உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள், கதாசிரியர்கள், இசைக்கலைஞர்கள் டீ குடித்தபடி நின்று பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

தீவிபத்து நடந்த பகுதி

எனக்கு இந்த டீக்கடையைக் காட்டிலும் அருகிலுள்ள பலசரக்குக் கடையைப் பிடிக்கும். குறிப்பாக அக்கடையை நடத்தும் இளைஞன் தாமு. நான் கோடம்பாக்கத்துக்குக் குடி வந்த புதிதில் கோயம்பேட்டிலிருந்து சைக்கிள் கேரியரில் காய்கறிகள் வாங்கி வந்து விற்றுக்கொண்டிருப்பான். பெரிய மளிகைக்கடைகளிலிருந்து மொத்தமாகக் கொள்முதல் செய்து எடுத்து வந்து தன் கடையில் விற்பான். துடிப்பான இளைஞன். காலை ஆறு மணிக்குக் கடையைத் திறந்தால் இரவு 10 மணிவரை உதவிக்கு ஆளில்லாமல் ஒண்டியாளாக நின்று ஆடுவான். அவனது புன்னகையும் இணக்கமான பேச்சும் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் உடனே எங்காவது ஓடிச்சென்றாவது வாங்கி வந்து கொடுக்கும் இயல்பும் பிராந்தியத்தில் வெகு பிரசித்தம்.

தாமு இப்போது சைக்கிளில் சென்று சரக்கு வாங்கி வருவதில்லை. தினமும் மினி லாரியில் சரக்குகள் வந்து அவன் கடையில் இறங்குகின்றன. நான்கே வருடங்கள். தாமுவின் வளர்ச்சி என் கண்முன்னால் நிகழும் ஒரு அற்புதம். அவன் மாறவேயில்லை. அதே பணிவு. அதே புன்னகை. அதே இணக்கம். ‘சார், அந்த கத்திரிக்காய எடுக்காதிங்க.. வாடியிருக்குது. இதை ஏண்டா குடுத்தனுப்பினன்னு அக்கா போன்ல திட்டும்’ என்று ஒவ்வொரு வீட்டின் ஆட்சியாளர் இயல்பையும் துல்லியமாக அறிந்து வைத்திருக்கும் வியாபாரி. என் மகள் கடைக்குப் போனால் ‘மீதி சில்லறை அஞ்சு ரூபா. காசா குடுத்துடட்டுமா இல்ல சாக்லெட் எதாவது வாங்கிக்கிறியா?’ என்று கேட்பான். மறுநாள் என் மகளே சாக்லேட் கேட்டாலும் ‘நேத்துதான் வாங்கின. இன்னிக்கும் சாப்ட்டா உடம்புக்கு நல்லதில்ல’ என்று சொல்லிவிடுவான்.

தீப்பிடித்தது, நல்ல மதிய நேரம். எழுந்த பெரும் புகையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பரபரவென்று கீழே இறங்கிப் போனபோதும் கூட்ட நெரிசலில் எதுவும் கண்ணில் படவில்லை. அதற்குள் செய்தி கேள்விப்பட்டு அம்பேத்கர் சாலைக்கு அந்தப் பக்கம் இருக்கிறவர்கள் எல்லோரும் கூட வேடிக்கை பார்க்க வந்து குழுமிவிட்டார்கள்.

சாலையை அடைத்துக்கொண்டு வந்து நின்ற இரண்டு ஃபயர் எஞ்சின்களின் மீதிருந்தும் போராளிகள் ஸ்பைடர்மேன் மாதிரி தாவி ஏறி வினாடிப் பொழுதில் கட்டடத்தின் மேல் தளத்தை அடைந்து உடனே கடமையாற்றத் தொடங்கினார்கள். ஒரு வழியாகத் தீயை அணைத்து முடித்து அவர்கள் இறங்கியபோது சாலையெங்கும் கன்னங்கரேலென்று சாம்பல் நீர்.

உயிரிழப்பு ஏதுமில்லை. அதுவரை நிம்மதி என்று சொல்லிவிட்டு அனைவரும் கலைந்து போனார்கள்.

பால்கனியில் இருந்தபடி இந்தக் காட்சிகளை திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்த என் மகள் ஒரே ஒரு கேள்விதான் கேட்டாள். தாமு கடைக்கு என்ன ஆச்சு?

என்னால் தாமுவின் கடை வாசல் வரைகூடப் போகமுடியவில்லை. அத்தனை கூட்டம். தவிரவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சாலையெங்கும் நிறைந்து நின்றுவிட்டிருந்தன. நபர்களுக்கு பாதிப்பில்லை என்று தெரிந்ததுமே திரும்பிவிட்டேன்.

ஆனால் மகள் விடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். தாமு கடைக்கு என்ன ஆச்சு? தாமு நன்றாயிருக்கிறானா? போன் செய்து கேள் என்று சொன்னேன். இல்லை. நேரில்போய்தான் பார்க்கவேண்டும் என்றாள்.

வீட்டு காம்பவுண்டைத் தாண்டினால் பத்தடி தூரத்தில் கடை. ஆனால் சற்றுப் பொறுத்துச் செல்லலாமே?

அவள் முகம் சுண்டிவிட்டது. கவனித்தேன்.

வியப்பாக இருந்தது. மிகச் சரியாக அவள் வயதே எனக்கிருந்தபோது ஒரு சம்பவம். அப்போது நாங்கள் கோவூரில் குடியிருந்தோம். என் அப்பா அங்கே ஹெட் மாஸ்டர். வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு டீக்கடை. இப்போதைய நினைவின்படி சற்றே பெரிய டீக்கடைதான். உள்ளே நாலைந்து பெஞ்சுகளும் வெளியே இரண்டு பெஞ்சுகளும் இருக்கும். எப்போதும் கூட்டம் இருக்கும். டீ, மசால்வடை, பஜ்ஜி, போண்டாக்களுக்காக அந்நாளில் பிராந்தியத்தில் மிகவும் பிரபலமான கடை.

எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் ஒரு பிரபலம் இருந்தார். அவர் பேர் கோவூர் இசைதாசன். ஒன்றிரண்டு இசைத்தட்டுகளுக்கு அந்நாளில் பாடல் எழுதியவர் என்கிற வகையில் எப்போதும் பச்சை நிற சால்வையுடன் தான் வீதிக்கு வருவார். குழாயில் தண்ணீர் பிடிக்கும்போதுகூட சால்வையை எடுக்க மாட்டார். டீக்கடையில் அமர்ந்து வடை கடித்தபடி தினத்தந்தி படிக்கும்போதும் சால்வையோடுதான் காட்சியளிப்பார்.

இதே போன்ற ஒரு மதிய வேளை. டீக்கடை வாசலில் உட்கார்ந்து கதை பேசிவிட்டு எழுந்து சென்ற யாரோ ஒரு வத்திப்பெட்டியை விட்டுச் சென்றிருந்தார்கள். நான் சென்று அதே பெஞ்சில் அமர்ந்து பேப்பரைப் படிப்பதுபோல் தீப்பெட்டியை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.

வீட்டுக்கு யாரோ விருந்தினர் வந்திருந்தபடியால் அப்பாவும் அம்மாவும் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தார்கள். பொழுதுபோகவில்லை. எங்கள் வீட்டுக்கும் பக்கத்து டீக்கடைக்கும் இடைப்பட்ட குறுஞ்சந்தில் நின்றபடிக்கு வத்திக்குச்சியைக் கிழித்துக் கிழித்து ஊதி அணைத்துக்கொண்டிருந்தேன். பெட்டி காலியாகவிருந்த சமயம் ஏதோ ஒரு உந்துதலில் கிழித்த குச்சியை டீக்கடையின் ஓலைச் சரிவில் வைத்தேன். தீ மெல்ல மெல்லப் பற்றத் தொடங்கியபோது பயம் வந்துவிட்டது.

தீயை ஊதி அணைக்கப் பார்த்தேன். ஊதிய தீ பரவுமென்று தெரியவில்லை. பரவியது.

கண்ணை மூடிக்கொண்டு வேகமாக வீட்டுக்குள் வந்து படுத்துத் தூங்கியே போனேன்.

நான் கண் விழித்தபோது மணி மாலை ஐந்து அல்லது ஆறு இருக்கும். அச்சத்தோடுதான் எழுந்தேன். சாதுவாக ஹாலுக்கு வந்தபோது அப்பா புலம்பிக்கொண்டிருந்தார். ஐயோ பாவம் கடைக்காரன். இழப்பு மிக அதிகம். மொத்தமாக எரிந்துவிட்டது. எந்தப் படுபாவி இப்படிச் செய்தான் என்று தெரியவில்லை.

எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. ஆனால் சொல்லவில்லை. வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தேன். டீக்கடை இருந்த இடம் வெறும் கட்டைகளாக, கரிமண்டியாக தண்ணீரும் தகரப் பாத்திரங்களும் சிதறிய ஒரு போர்க்களம் போல் இருந்தது.

டீக்கடைக்காரரைக் காணவில்லை. தீயை அணைத்துவிட்டு, விபத்து குறித்துப் பேசி அலுத்து அனைவருமே கலைந்துவிட்டிருந்தார்கள். இசைதாசன் கூட வேறு பச்சை சால்வை அணிந்து வெளியே எங்கோ புறப்பட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

வருத்தமும் குற்ற உணர்வும் தாக்க, என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை. நான் தான் பற்றவைத்தேன் என்று தெரிந்தால் அப்பா கொன்றேவிடுவார் என்று தோன்றியது. அதனால் சொல்லவில்லை. இரண்டு மூன்று நாள்களுக்கு வேறு நினைவே இல்லாதிருந்தது.

ஒரு வாரத்தில் டீக்கடை வேறு ஓலைகளால் புதுவடிவம் பெற்று இயங்க ஆரம்பித்துவிட்டதும்தான் சற்று அமைதியானேன். ஆனாலும் குற்ற உணர்ச்சி அப்படியேதான் இருந்தது.

சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்தபின்னர் அப்பா ஒருநாள் நிதானமாகக் கேட்டார். ‘அன்னிக்கு ஓலைக்கூரைல நெருப்பு வெச்சது நீதானே?’

பகீரென்றது எனக்கு. இல்லை என்றுதான் உடனே சொன்னேன். ‘பொய் சொல்லாதே. உன்னை அடிக்கமாட்டேன். டீக்கடைக்காரனுக்கு நான் அப்பவே பணம் குடுத்து, வேற ஓலை போடச் சொல்லிட்டேன். எனக்குத் தெரியும் நீதான்னு.. நீயே ஒத்துக்கோ’ என்றார்.

நான் அப்போது அதை ஒப்புக்கொண்டேனா என்பது இப்போது நினைவில்லை. அப்பாவுக்கு எப்படி அந்த விஷயம் தெரிந்தது என்பது தான் புரியாத புதிராக இருந்தது. பெஞ்சு மீதிருந்த வத்திப்பெட்டியை நான் எடுத்துச் சென்றதை டீக்கடைக்காரர் பார்த்திருக்க வேண்டும். தனது சந்தேகத்தை என் அப்பாவிடம் சொல்லியிருக்கக்கூடும். என்ன இருந்தாலும் கிராமங்களில் ஹெட் மாஸ்டருக்கு இருக்கும் மரியாதையே அலாதி அல்லவா? விஷயம் விவகாரமாகாமல் தப்பித்தது அப்பாவின் உத்தியோக புண்ணியம்.

கோவூரில் நாங்கள் இருந்த காலம் வரை அதன்பின் ஒருநாளும் அந்த டீக்கடைக்காரரை நேருக்கு நேர் பார்க்கும் துணிவு எனக்கு இருந்ததில்லை. அவர் மட்டும் பார்க்க நேர்ந்தால் சிரிப்பார். அந்தச் சிரிப்பைப் போல் ஒரு பயமுறுத்தும் விஷயம் அன்று வேறில்லை எனக்கு.

நேற்றைய தீவிபத்துச் சம்பவத்தைப் பார்த்தபோது எனக்கு இப்பழைய நிகழ்ச்சி நினைவுக்கு வந்துவிட்டது. நெருப்பின் அபாயம் தெரியாதிருந்த என்னுடைய எட்டு வயதையும், தாமுவுக்கு என்ன ஆச்சு என்று தவித்த என் மகளின் எட்டு வயதையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். கும்பல் கலைந்து சாலை அமைதியானதும் முதல் வேலையாக என் மகளை அழைத்துக்கொண்டு தாமு கடைக்குத்தான் சென்றேன்.

உங்களுக்கு ஒண்ணும் ஆகலியே? என்று அக்கறையுடன் என் மகள் கேட்டாள். தாமு புன்னகை செய்தான். ஒண்ணும் இல்ல பாப்பா…. பாரு, நான் நல்லாத்தான் இருக்கேன். கடைக்கும் ஒண்ணும் ஆகல.. எதாவது சாப்புடறியா? சாக்லெட் வேணுமா?

ஒண்ணும் வேணாம்.. இதுவே போதும் என்று சொல்லிவிட்டு அவள் வீட்டுக்கு ஓடிவிட்டாள்.

எனக்குத்தான் வெட்கமாக இருந்தது. சிறு வயதில் பார்த்த அந்த டீக்கடைக்காரரை அதன்பின் நான் சந்திக்க நேரவேயில்லை. கோவூருக்கே அதன்பின் சென்றதில்லை. முப்பத்தி மூன்று வருடங்கள் கழித்து இப்போது அந்தச் சம்பவம் மிகுந்த துக்கம் தருகிறது. அவர் கையைப் பிடித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கத் தோன்றுகிறது. அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும் திரும்பத் திரும்ப அதையே நினைத்துக்கொள்கிறேன். அடுத்தவாரம் குரோம்பேட்டை செல்வேன். குறைந்தபட்சம் அப்பாவிடமாவது சொல்லிவிடவேண்டும். அன்று டீக்கடைக்கு நெருப்பு வைத்தது நாந்தான்.  நீங்கள் விசாரித்தபோது நான் ஒப்புக்கொண்டேனா இல்லையா என்று நினைவில்லை. இப்போது ஒப்புக்கொள்கிறேன், மன்னித்துவிடுங்கள்.

Share

15 comments

  • ம்ம் நல்லவேளையாக யாருக்கும் ஒன்றும் பெரிய சேதாராமாக அமைந்துவிடவில்லை!

    &*&*&*&*&*&*&

    உங்களின் சிறுவயது தவறுகளில் ஒன்றை மட்டும் இந்த சம்பவம் வெளிக்கொணர உதவியிருக்கிறது இன்னும் எதிர்பார்க்கிறோம் 🙂

  • சுஜாதா அவர்கள் வீட்டுவேலைக்காரி வைத்திருத சுமார் இரண்டேமுக்கால் ரூபாயை கையாண்டு, பிறகு குற்ற உணர்ச்சியில் தவித்தது நினைவுக்கு வருகிறது.

    பிற்காலத்தில் தன் பாட்டியிடம் இதைக்கூற அவரோ தனக்கு அது அப்போதே தெரியும் என்றுகூறியதும் நினைவுக்கு வருகிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  • நீங்கள் எழுதியதை பார்த்து எங்கே அப்பா போலவே உங்கள் மகளும் தீக்குச்சி போட்டுவிட்டாளோ என்று நினைத்தேன், நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை!

    அதை உங்கள் அப்பா உங்களிடம் கேட்ட விதம் அவரின் முதிர்ச்சியை காட்டுகிறது, மன்னிப்பு கேட்கும் மனம் உங்க முதிர்ச்சியை காட்டுது!

    ***

    கோட் வேர்ட்: முதிர்ச்சி! ;)))

  • பழைய சம்பவத்தை வெளிப்படையாக்கியதில் மீண்டும் கனத்த, உங்கள் மனபாரம் சற்றே குறைந்திருக்கும். குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பாடமும் சிலருக்குக் கிடைத்திருக்கும். நன்றி.

  • உங்கள் மோட்டோ வாசகத்தை மனிதனாக இருப்பது எழுத்தாளனாக இருப்பது இரண்டுமே சிரமமல்ல என்று மாற்றி விடுங்கள்.

  • ஒருமுறை கோவூருக்கு நேரா போய்ட்டு வந்துடுங்களேன். கோயிலையும் பார்த்தமாதிரி இருக்கும். டீக்கடை அங்கேயே இருந்திச்சின்னா ஒரு டீ சாப்பிட்டுட்டு, அதே டீக்கடைக்காரரா அல்லவது அவரது மகன் நடத்துறாருன்னு விசாரிக்கவும் ஏதுவா இருக்கும்.

  • எனக்கும் இப்படி ஒரு சம்பவம் நேர்ந்தது, ஊரே ஒன்று கூடி தீயை அணைத்தார்கள். என்ன ஒரு வித்தியாசம், எரிந்தது எங்க வீடுதான், அடுத்தவர்களுக்குச் சொந்தமானது இல்லையென்பதால், குற்றவுணர்வு “அவ்வளவா” இல்லை

  • சிறுவயதில் நீங்கள் கொளுத்திப் போட்டட் இக்கதை நீங்கள் வசனம் எழுதும் ஏதோ ஒரு சீரியலில் பிளாஷ்பேக் காட்சியாக வரும் என ஊகிக்கிறேன் :).ட்

  • பொதுவாக உங்கள் எழுத்தில் எப்போதும் ஒரு துள்ளல் இருக்கும்.ஆனால் இந்த பத்தியில் இருக்கும் பீல் டச்….சூப்பர். இநத டச்சை நான் அ.முத்துலிங்கம் படைப்பில் மட்டுமே இதுவரை உனர்ந்துள்ளேன். முதன் முறையாக உங்களிடம்.. கிரேட் சார்.. கேப் விட்டு வந்தாலும் கலக்கலா வந்திருக்கீங்க..புது அவதாரமாக உண்ர்கிறேன்…

  • அட்டகாசமான ஒரு பதிவு.ரொம்ப யதார்த்தம்.எனக்கும் இது போல நடந்திருக்கிறது. வீட்டை ஒட்டிய சிறு கடையில் என்னை சில நேரம் உட்கார்த்திவைத்தார்கள் சிறு வயதில்.எட்டு ஒன்பது வயதிருக்கும்.அவ்வப்போது பத்து பைசா,நாலணா என்று கடைக்காரருக்குத் தெரியாமல் சுருட்டி சுருட்டி தின்று தீர்த்துவிட்டேன்.இது ஆரம்பித்தது கடைப் பலகாரத்தில்தான்.அந்த கடைப்பலகாரம் போதவில்லை என்றதும் காசு சுருட்டல் ஆரம்பித்தது.

    பின்னர் ஒருநாள் கடை திவாலாகி அதிக கடன்பட்டு வேறு ஒரு ஊரில் வாட்ச்மேன் வேலைபார்க்க குடும்பமே போய்விட்டது.எனக்கோ என்னால்தான் அப்படி ஆகிவிட்டது என்று தனிமையில் கழிவிரக்கம்,பயம்,குற்றவுணர்வு எல்லாம் என்மேல் கவிழ்ந்து மூடிக்கொண்டுவிட்டது.மீண்டு வர மாதங்களாச்சு.இப்போது என்னிடம் இருக்கும் நியாயம்,நேர்மை என்பதன் வேர் அந்த நிகழ்ச்சிதான் என்பது எனக்கே புரியும்.

    அப்படியே சொந்த ஊருக்கு போய்வாருங்கள்…சரியாகிவிடும்

  • நீங்கள் தீ பற்ற வைத்தேன் என்று குறிப்பிடுவது தவறு. நீங்கள் செய்த தவறினால் தீப்பிடித்து கொண்டது என்று குறிப்பிடுங்கள். இந்த விஷயம் தெரிந்து அப்படியே அமுக்கியது உங்கள் தந்தையின் புத்திசாலித்தனம் தான். (இருந்தாலும் உங்கள் அப்பா உங்களிடம் போட்டு வாங்கியிருக்கிறாரோ என்று ஒரு சந்தேகம், பொதுவாக ஆசிரியர்கள் போட்டு வாங்குவதில் கில்லாடிகள்). விளைவு தெரியாமல் மகன் செய்த தவறுக்கு தந்தை அப்போதே பரிகாரம் தேடி விட்டார் எனவே தாங்கள் வருந்த தேவையில்லை.

  • குழந்தைகள் நமக்கு கொடுக்கும் நினைவுகளும், குற்றவுணர்வும் அதிகம். பல சமயம் நாம் ரசித்தாலும், சில சமயம் நம்மை சுய மதிப்பிட வைக்கிறது.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter