Tata Photon என்னும் தண்ட கருமாந்திரம்

சென்ற மாதம் டாட்டா போட்டான் என்னும் டேட்டா கார்ட் ஒன்று வாங்கினேன்.  மொபைலில் தினமும் மூன்று வேளை வரும் விளம்பர எஸ்.எம்.எஸ் நம்பர் ஒன்றை அழைத்து எனது தேவையைச் சொல்லி, எனக்கொரு இண்டர்நெட் குச்சி தேவை என்று தெரிவித்தேன். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் டாட்டா போட்டான் பிரதிநிதி ஒருவர் வீட்டுக்கு வந்தார். பத்து நிமிடங்களில் என் மடினியில் அதை இன்ஸ்டால் செய்துவிட்டு, ரூ. 1200 கருவிக்கான தொகை என்று சொல்லி பெற்றுக்கொண்டார். கருவித்தொகைக்கான பில்லானது, மாதாந்திர பில்லுடன் சேர்ந்து வரும் என்றும் சொன்னார்.

உண்மையில் நான் கேட்டது ப்ரீ பெய்ட் வசதி. ஆனா முதல் மாதம் கண்டிப்பாக போஸ்ட் பெய்டாகத்தான் இருந்தாகவேண்டும் என்று சொல்லிவிட்டு கொடுத்த குச்சிக்கு இலவசம் என்று சொல்லி தோசைக்கல் அளவுக்கு கைக்கடிகாரம் ஒன்றையும் கொடுத்துவிட்டுப் போனார்.

என் வீட்டில் அகலப்பாட்டை இணைய இணைப்பு இருக்கிறது. அது பி.எஸ்.என்.எல்லினுடையது. எந்தப் பிரச்னையும் இல்லாமல் நாளெல்லாம் இணையத்தைப் பயன்படுத்த இயலும்.

ஆனால் கதை விவாதங்களுக்காக வெளியூர் செல்லும்போது பிரச்னையாகிவிடுகிறது. அங்கிருந்தபடியே காட்சிகளை அனுப்ப வசதியாக இருக்குமே என்றுதான் இதைக் கூடுதலாக வாங்கினேன்.

வாங்கிய மரியாதைக்கு மகாபலிபுரத்திலிருந்து இரண்டு நாள் அதைப் பயன்படுத்தவும் செய்தேன். ஒன்றும் பிரச்னை இல்லை.

ஆனால் சென்னை திரும்பியபிறகுதான் பஞ்சாயத்து தொடங்கியது.

ஊர் திரும்பிய இரண்டு மூன்று நாள்கள் கழித்து என் டாட்டா போட்டான் குச்சியை சொருகி இணையத்தைப் பயன்படுத்த முயற்சி செய்தபோது தொடர்பு கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் என்னென்னவோ எரர் காட்டிக்கொண்டே இருந்தது. மூடி வைத்துவிட்டு வழக்கமான பி.எஸ்.என்.எல். தொடர்பில் வேலையை முடித்தேன்.

மறுநாள், அடுத்த நாள் என திரும்பத் திரும்ப முயற்சி செய்தபோதும் டாட்டா போட்டான், டாட்டா மட்டுமே சொன்னது. இணையம் கிடைத்தபாடில்லை. வந்த புண்ணியவான் கொடுத்த மொபைல் நம்பரில் அழைத்தால்  உபயோகத்தில் இல்லை என்றது. கஸ்டமர் கேருக்கு அழைத்தால் ரிங் மட்டும் போகிறதே தவிர யாருமே எடுப்பதில்லை. இது ஒருநாள் இருநாளல்ல. கிட்டத்தட்ட 20 தினங்கள். சுமார் இருநூறு அல்லது இருநூற்றைம்பது முறை போன் செய்தும் ஒருவரிடம் கூடப் பேச முடியாமல் போனதால் நண்பர் அப்புவிடம் சொல்லி (@zenofzeno)  ட்விட்டரில் அவர்களைப் பிடிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டேன்.

நீண்ட போராட்டம் நடத்தி, தன் முயற்சியில் சற்றும் தளராத அப்பு, டாட்டா போட்டானியர்களை ஒருவழியாக ட்விட்டரில் துரத்திப் பிடித்து விஷயத்தை விளக்கி புகாரைப் பதிவு செய்தார். இதற்குள் கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்துவிட்டது.

எப்படியும் முதல் மாத பில் வரும், அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்த வேளையில், நானொருத்தன் அவர்களது வாடிக்கையாளராகியிருப்பதையே மறந்துவிட்டாற்போல் இருந்தார்கள் டாட்டாவினர். பில் என்ற ஒன்று வரவேயில்லை.

இதனிடையில் அப்புவின் விடாப்பிடி நச்சரிப்பின் விளைவாக ட்விட்டர் போட்டானியர்கள் புகாரை ஏற்று எண் ஒன்றை அளித்து, ஆகஸ்ட் 14 அன்று பிரச்னை தீர்க்கப்படும் என்றார்கள்.

பாகிஸ்தானின் சுதந்தர தினம்! நல்லது. எனது போட்டானின் பிரச்னையும் அன்றே தீருமானால் சரித்திரத்தில் இதனைப் பதிவு செய்துவிடலாம் என்று எண்ணியிருந்த வேளை, பாகிஸ்தான் சுதந்தர தினம் முடிவடைந்து, இந்திய சுந்தர தினமும் வந்து போய் ஐந்து நாள்களாகிவிட்டன.

திரும்பவும் ட்விட்டர் போட்டானியர்களைக் குடைந்தால் இம்முறை பதிலே கிடையாது.

வெறுத்துப் போய்விட்டேன். 1200 ரூபாய் தண்டம் என்று மனத்துக்குள் முடிவு செய்த வேளையில் என்னைப் போல் வேறு பலரும் டாட்டா போட்டானின் இந்த நூதன மோசடிக்கு ஆட்பட்டு பணத்த இழந்த கதைகள் மெல்ல மெல்ல எனக்குக் கிடைக்கத் தொடங்கின.

இணையக் குச்சிகளைத் தள்ளிவிடுவதற்கு மட்டுமே அவர்கள் கிலோ கணக்கில் நிறுத்து ஆள்களை எடுக்கிறார்கள் என்றும் சர்வீஸ் சுத்தமாகக் கிடையாதென்றும் முன்னனுபவஸ்தர்கள் இப்போது சொல்கிறார்கள்.

ஆகவே நண்பர்களே, தப்பித்தவறிக்கூட யாரும் டாட்டா போட்டான் டேட்டா கார்ட் வாங்கி ஏமாந்து போகாதீர்கள். ஓசி வாட்ச், பைரேடட் ஆண்ட்டி வைரஸ் சிடி என்று இதில் கிடைக்கும் இலவசங்களுக்கு மயங்கிவிடாதீர்கள்.

டாட்டா என்றால் நம்பிக்கை என்று ஏதோ ஒரு விளம்பரத்தில் அவர்கள் சொல்வார்கள். நான் சொல்கிறேன்,  போட்டான் என்றால் ஃப்ராடு.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

14 comments

  • நானும் இங்கே பெங்களூரில் இரண்டு வருசமாக இதைத்தான் பயன்படுத்தி வருகிறேன். எந்த பிரச்னையும் இல்லை.

    அதிலும் டோகோமோ கம்பெனி இதை எடுத்தபிறகு மாதம் ஒருதடவை அவர்களே போன் செய்து ஏதேனும் பிரச்னை இருக்கிறதா சார்…பில்லிங்கில் தவறு இருக்கிறதா ஐயா…என்றெல்லாம் கஸ்டமர் கேரில் கேட்கிறார்கள்…நான் பி.எஸ்.என்.எல். சிக்னல் பிரச்னையால்தான் இதற்கு மாறினேன்.

    சென்னை வந்தால் கண்டிப்பாக சிக்னல் பிரச்னை எனக்கு வரும்.வீட்டில் எந்த மூலையில் உட்கார்ந்தால் அதிக பாயின்ட்ஸ் வரும் என்று கண்டுபிடித்து வைத்திருக்கிறேன். அங்கே சுவரில் ஒண்டி உட்கார்ந்திருப்பேன்.

    மற்றபடி பெங்களூரில் பிரச்னை இல்லை. ஆம்! முகவர்களுக்கு நல்ல காசு.நீங்கள் ஜஸ்ட் டையல் கால் செய்து கருவி வாங்கணும் என்ன பண்ணலாம்னு கேட்ட அஞ்சு நிமிஷத்தில் ஐம்பது பேர் முற்றுகையிடுவார்கள்.அதுவும் ஏலத்தில் விலை குறைந்து கொண்டே வரும்.

    பேரம் பேசினால் நீங்கள் ஆயிரம் அல்லது எண்ணூறு ரூபாய்க்கு கூட முடித்திருக்கலாம்.உங்களிடம் பழைய கருவியை தலையில் கட்டிவிட்டார்களா என்பது தெரியவில்லை…

  • நான் டாட்டா போட்டான் இணைய குச்சியினை மூன்று வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன்.எந்த பிரச்சினையும் இல்லை.வாங்கும்போது எந்த பொருளும் இலவசமாக கிடைக்கவில்லை.நேரடியாக அவர்களின் அங்காடியில் சென்று வாங்குங்கள்.

    கொடுத்த பணத்திற்கு வரவு சீட்டு கொடுக்காமல் விட்டது தவறு.

  • “தான் பெற்ற ‘இன்பம்’ பெருக இவ்வையகம்” என நினைத்து சும்மா இருந்து விடாமல், கிழித்து தோரணம் கட்டியமைக்கு நன்றி ராகவன்.

  • நான் ரிலையன்ஸ் நெட்கனெக்ட் உபயோகிக்கிறேன். ஓரளவுக்கு விசுவாசமாய் உழைக்கிறது.

  • போட்டான் கடந்த இரண்டு வருடங்களாக உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன் . முகவர் இல்லாமல் நேரடியாக அலுவலகம் மூலமாக வாங்கியது. வேகம் கொஞ்சம் குறைவு தான் (150-250 kbps), அவர்களுக்கு கட்டும் ஆயிரம் ரூபாய்க்கு. வேறு பிரச்னை எதுவும் இல்லை.

  • உங்களுக்கு விற்கப்பட்ட ‘குச்சி’யில் ஏதோ பிரச்சினை, அதனால்தான் இப்படி.மற்றப்படி டாடா போனில் உங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் 🙂

  • பி.எஸ்.என்.எல் விளம்பரத்தில் உங்களை நடிக்க கூப்பிட வாழ்த்துக்கள்.

  • I am using Tata Photon for last one year.No issues.Speed is good in cities.Customer Care also responsive.

  • அன்புள்ள பா.ரா.உங்களது சுல்தான் சலாவுத்தீன் அய்யூபி கட்டுரையை எனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறேன்… சமயம் கிடைக்கும்போது பாருங்களேன்…

  • sir, please read this..similar to your case…i think to find a solution to your usb modem..basically after sales service is worst..once , i was in tata office, one rep try to brainwash me to buy this tataphoton..i check the speed, it showing merely 100kbps..at that time, my bsnl mobile 2g shows 240kbps..i am using reliance usb..better than tata..service also good..but tariff both huge…in reliance, 3000 rs pack – 6 months validity – 18gb..is good (my experience)…

    http://info.akosha.com/consumer-complaints/articles/complaint-against-tata-photon-plus-the-customer-care-menace/

  • தொழில் நுட்ப விஷயத்தில் இந்தியா இன்னும் தேறவேண்டியுள்ளது. எத்தனை பேர்களுக்கு கனெக்‌ஷன் உள்ளது ? அத்தனை பேரையும் சமாளிக்கும் திறனுள்ள சர்வர் (server) உள்ளதா ? என்பதை பார்த்து தான் கனெக்‌ஷன் கொடுக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் தான் இந்த நடைமுறையே இல்லையே. 500 கனெக்‌ஷன் திறனுள்ள சர்வரில் 5000 பேருக்கு கனெக்‌ஷன் கொடுப்பதெல்லாம் இந்தியாவில்தான் சாத்தியம். இதையெல்லாம் யார் தட்டிக்கேட்பது. தங்களை போன்று யாரும் பட்ட அனுபவத்தை எச்சரிக்கையாக பதிவு செய்வதால் மற்றவர்கள் ஏமாறாமல் இருக்கலாம்.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading