கீர்த்தனாரம்பத்திலே விஜயகாந்த் கேப்டனானபோது, அவர் சட்டைப் பையில் சொருகிய கர்ச்சிப் மாதிரி வெளியே தெரிந்த இன்னொரு பெயர் ராமு வசந்தன் என்பது. இந்த ராமு வசந்தன் ஒரு விஜயகாந்த் ரசிகர். ரசிகர் மன்றத் தலைவர். விஜயகாந்துக்கு பிஆர்ஓ மாதிரி வேலை பார்த்தவர். எப்போதும் உடன் இருப்பவர். விஜயகாந்துக்காக வெளியான சினிமா பத்திரிகைகளின் பெரும்பாலான பக்கங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன். தகவல் உதவி அல்லது நன்றி அல்லது புகைப்பட உதவி அல்லது கட்டுரையாக்கம் என்று என்னவாவது ஒரு பெயரில் ராமு வசந்தன் இருப்பார். விஜயகாந்த் என்றாலே இந்தப் பக்கம் ராவுத்தர் அந்தப் பக்கம் ராமு வசந்தன் என்பதுதான் வரல் ஆறு.
பிறகு விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். ராவுத்தர் விடை பெற்றுக்கொள்ள, பிரேமலதா அம்மையாரின் பெயர் அப்போது சேர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது. அப்போதும் ராமு வசந்தன் இருந்தார். ஆனால் கொஞ்ச நாள்தான். திடீரென்று சுதிஷ் என்றார்கள். பிரேமலதா அம்மையார், நல்லதொரு நாளிலே பிரேமலதா அண்ணியாராக மறுஅறிவிக்கப்பட்டார். விஜயகாந்தின் மூளை இதயம் நுரையீரல் கல்லீரல் போன்ற பேருறுப்புகள் அனைத்துமே அண்ணியார்தான் என்று சொன்னார்கள். நல்ல விஷயந்தானே? மாதொரு பாகம் மகத்தான போதம். மச்சானும் சேர்ந்தால் மறுக்க யாருளர்?
ஆனால் அன்று தொடங்கி விஜயகாந்த் கட்சியில் அண்ணியார், சுதிஷ் தவிர மூன்றாவதாக இன்னொரு பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. நேற்று வரைக்குமேகூட. தடாலென்று சந்திரகுமார் என்கிறார்கள். இன்னும் பத்துப் பேரைத் தூக்கிப் போடுகிறார்கள். இவர்களெல்லாம் அதிருப்தியாளர்கள் என்கிறார்கள். திமுகவுடன் கூட்டணி இல்லாததால் கட்சித் தலைமைக்கு எதிராகக் கொடி பிடித்தார்கள் என்கிறார்கள். இங்கே கேப்டன் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அவர்களைப் பதவி நீக்கம் செய்கிறார். அங்கே கலைஞர்தான் தேமுதிகவை உடைக்க சதி செய்தார் என்கிறார்கள்.
வெயில் காலத்தில் என்னத்துக்காக இப்படியெல்லாம் மண்டையிடி கொடுக்கிறார்களோ தெரியவில்லை. அட தெரியாமல்தான் கேட்கிறேன், சம்மட்டி வைத்து உடைக்கிற அளவுக்கா தேமுதிக ஸ்டிராங்?
சென்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கண்டு இருபத்தி ஒன்பது இடங்களை விஜயகாந்த் கட்சி ஜெயித்திருந்தது. நல்ல, கௌரவமான வெற்றிதான். மாபெரும் சபையில் மகத்தான இரண்டாமிடம். எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து. ஏராள ஜபர்தஸ்து. ஆனாலும் அப்போது எட்டு எம்.எல்.ஏக்கள் டைவ் அடித்து அதிமுகவுக்குப் போனது என்னத்துக்காக? எனில், பலமான கட்சியின் கண்ணுக்குத் தெரியாத பலவீனம்தான் என்ன?
திமுகவோ அதிமுகவோ ஆரம்பிக்கப்பட்டபோது அந்தக் கட்சிகளுக்கு இருந்த நியாயமான காரணங்களை இங்கே நினைவுகூரவேண்டியது அவசியமாகிறது. தேர்தல் அரசியல் அவசியம் என்று அண்ணா நினைத்ததால் திமுக. ஊழல் அரசியல் அநாவசியம் என்று எம்.ஜி.ஆர். நினைத்ததால் அதிமுக. மாறாக, எனக்கு முதலமைச்சர் ஆகும் ஆசை என்று கட்சி ஆரம்பித்தவர் விஜயகாந்த். கேப்டன் விசுவாசிகள் மட்டும் வேறெப்படி சிந்திப்பார்கள்? லாபமுள்ள இடத்தில் லாலி பாடுவதில் தப்பில்லை. இந்தக் கொள்கை, கோட்பாட்டுக் கசுமாலங்களெல்லாம் யாருக்கு வேண்டும்? பதவியே லட்சியம். பணமாவது நிச்சயம்.
அப்புறம் அந்த உடைப்பு அரசியல். திமுகவுக்கு அதெல்லாம் புதுசா? அதிமுகவுக்குமேகூடப் புதிதில்லைதான். மகான் கவுண்டமணி சொன்னதுபோல அரசியலில் அதெல்லாம் சாதாரணமப்பா.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய சங்கதி என்னவெனில், தேமுதிக உடைந்ததால் தேமுதிகவுக்கு எந்த லாபமோ நஷ்டமோ இல்லை என்பதுதான். இந்த ஒன்றிரண்டு தினங்களைக் கடந்துவிட்டால் சமூகம் அதனை சட்டை செய்யப் போவதில்லை. ஆனால் கொள்கைக் குன்றுகளான மநகூவின் வைகோவும் திருமாவும் கம்யூ வகையறாக்களும் கொஞ்சநஞ்சம் மிச்சமிருந்த மானம் மரியாதையையும் மொத்தமாக இழக்கப் போகிறார்கள்.
அரசியலில் இந்தக் கொள்கை மாதிரி ஒரு கெட்ட வார்த்தை வேறு கிடையாது. வைத்திருப்பவனையே பதம் பார்க்கும் கெட்ட சரக்கு அது. அதைப் போய் முன்னால் வைத்து கேப்டனுடன் ஒரு கூட்டணி அமைத்த பிரகஸ்பதிகள் பாடுதான் படு பேஜாராகப் போகிறது. ஏற்கெனவே அவர் ஒரு வினோத ரச மஞ்சரி. தமிழ்நாட்டு அரசியலும் தெரியாமல், அதில் திராவிட ஸ்டைல் அப்ரோச்சும் பயிலாமல் தமது சினிமா பிரபலம் ஒன்றை மட்டும் மூலதானமாக்கி முன்னால் வந்தவர். அவரது தடாலடி ஸ்டேட்மெண்டுகளுக்கும் லைவ் ஸ்டண்ட் நடவடிக்கைகளுக்கும் தத்துவார்த்த விளக்கம் கொடுத்தே மநகூவினருக்கு நாக்கு தள்ளியிருக்கும். இப்போது உழக்கில் ஒரு கிழக்கு மேற்கு.
பரம உத்தமம். இந்தத் தேர்தலுக்குப் பிறகு கேப்டன் கூட்டில் இருக்கிற நாலு பேரும் இன்னொரு தென்னந்தோப்பு ஆகப் போவது உறுதியாகியிருக்கிறது. மற்றபடி திமுகவின் உடைப்பு அரசியலும் அதிமுகவின் இழுப்பு அரசியலும் என்றுமுள தென்றலென எண்ணிக்கொண்டு மக்கள்தம் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
அரசியல் அநாதைகள் இவ்வாறாகவும் உருவாக்கப்படுகிறார்கள் என்பதும் வரல் ஆறுதான்.
0
நன்றி: தினமலர் 07/04/16