ஆம். கிழக்கில் இருந்தல்ல. Prodigy சார்பாக எங்களுடைய முதல் பத்திரிகையை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை [06.07.2008] நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் எங்களுடைய Prodigy ‘மேதை’ வெளியிடப்படுகிறது.
இது ஒரு மாதப் பத்திரிகை. குழந்தைகள்-சிறுவர்கள்-இளைஞர்களின் பொது அறிவுக்கு விருந்தளிக்கும் இதழாக வெளிவரப்போகிறது. ஐந்து ரூபாய் விலை. ‘ப்ராடிஜி புக் க்ளப்’ என்று ஒரு சுவாரசியமான திட்டத்தை நெய்வேலி கண்காட்சி சமயம் அறிமுகப்படுத்துகிறோம். அதன் ஓரங்கமாக இந்தப் பத்திரிகை வெளியிடப்படுகிறது.
புக் க்ளப்பில் உறுப்பினராகிறவர்களுக்கு ‘மேதை’ இலவசமாக அனுப்பிவைக்கப்படும். அதெல்லாம் வேண்டாம், பத்திரிகை மட்டும் போதும் என்பவர்களுக்கு விலை ரூ. ஐந்து. பேஜாரென்றால் ஆண்டு சந்தா 60.
இப்போதைக்கு இந்த ‘மேதை’ மாதப் பத்திரிகையின் முதல் இதழ் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் மட்டும்தான் கிடைக்கப்போகிறது. கண்காட்சிக்குப் பிறகு கடைகளுக்கு வரும். அதற்குள் தீர்ந்துவிட்டால் ஒன்றும் செய்வதற்கில்லை. அடுத்த இதழுக்குக் காத்திருப்பது தவிர வேறு வழியில்லை.
Prodigyஐ நாங்கள் சிறுவர்கள்-இளைஞர்களுக்கான ப்ராண்டாக நினைத்துத்தான் கொண்டுவந்தோம். உண்மையில் பெரியவர்களும் இதனை விரும்பிப் படிக்கிறார்கள். எனவே Prodigy சார்பில் வெளியிடபடும் மாத இதழ் அனைத்துத் தரப்பினருக்கும் உகந்த ஒன்றாக இருந்தாகவேண்டியிருக்கிறது.
தமிழில் பொது அறிவுப் பத்திரிகைகள் அவ்வப்போது நிறைய வந்திருக்கின்றன. மறக்கமுடியாதவை கல்கண்டும் முத்தாரமும். இரண்டும் இன்றைக்கும்கூட இருக்கின்றன. ஆனால் பழைய நட்சத்திர அந்தஸ்தில் இல்லை.
வேகமாக, சீக்கிரமாக, சுவாரசியமாக, சுருக்கமாக – உபயோகமாகப் படிக்க விரும்புகிறவர்களுக்கு Prodigy மேதை விருப்பத்துக்குரிய இதழாக இருக்கவேண்டுமென்று விரும்பி இதனைத் தொடங்குகிறோம். அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, வரலாறு, வாழ்க்கை என்று தொடங்கி, பரந்துபட்ட தளத்தில் இப்பத்திரிகை இயங்கும். கணக்கைக் கூட ஜாலியாகக் கொண்டுவரலாம் என்று பத்ரி சொல்கிறார். பார்க்கலாம்.
கண்டிப்பாக இதில் கோடம்பாக்க சினிமா கிடையாது. கவர்ச்சிப்படங்கள் கிடையாது. ஜோசியம் கிடையாது. வாஸ்து கிடையாது. பரணைக்குப் போய்விட்ட படக்கதை வடிவத்துக்குப் புத்துயிர் கொடுக்கமுடியுமா என்று பார்க்க எனக்கு ஆசை. முயற்சி செய்யத் திட்டம் இருக்கிறது.
இதழைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.
[பின்குறிப்பு: நாளை சனிக்கிழமையும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் நெய்வேலியில் இருப்பேன். புத்தகக் கண்காட்சிக்கு வருகிற நண்பர்கள் நேரில் சந்திக்கலாம். ]Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.