மறதி

என்னுடைய நினைவுத் திறன் மிக அதிகம். மிகச் சிறிய வயதுகளில் நடந்த சிறிய சம்பவங்கள்கூட நினைவிருக்கின்றன. தொடக்கப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி நாள்களில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சிகள், அச்சந்தர்ப்பங்களில் நான் அணிந்திருந்த உடைகளின் நிறம் வரை இன்னும் மறக்கவில்லை. ஒழுங்காகப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் மனனம் செய்த பாடப் பகுதிகள், செய்யுள்கள் அனைத்தும் நினைவில் இருக்கின்றன. கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அங்கே எங்கள் பேட்சில் முதல் முதலில் ‘வயசுக்கு வந்த’ பெண்ணையும் அதனை ஒட்டிப் பள்ளியில் நண்பர்கள் இடையே நிகழ்ந்த உரையாடல்களையும் சொல் மாறாமல் நினைவில் வைத்திருக்கிறேன். பத்தாம் வகுப்புத் தேர்வுகள் எழுதி முடித்த பின்னர் விடுமுறை நாள்களில் படித்த பல நாவல்கள் நினைவிருக்கின்றன. அம்மா வந்தாள், ஜேஜே சில குறிப்புகள், கண்ணதாசன், ஜெயகாந்தனின் ஒரு பக்கக் கட்டுரைகளை எல்லாம் காற்புள்ளி, அரைப்புள்ளி மாற்றாமல் இப்போதும் ஒப்பிக்க முடியும்.

ஆனால் இந்தத் திறன் ஏதோ ஒரு கட்டத்தில் மெல்ல மறைய ஆரம்பித்தது. இப்போதெல்லாம் முட்டிக் கொண்டாலும் எதுவும் நினைவில் இருப்பதில்லை. ஒரு நாள் என் மகள் சொல்லியே காட்டிவிட்டாள். கேவலம், அவளுடைய தொலைபேசி எண்ணைக் கூட என்னால் நினைவில் கொள்ள முடிவதில்லை. முன்பெல்லாம் நூற்றுக் கணக்கான தொலைபேசி எண்கள் நினைவில் இருந்தன. அனைத்தும் மறந்து போய் இப்போது என் மனைவியின் எண், ஆர். வெங்கடேஷின் எண், பத்ரியின் எண் என மூன்று மட்டுமே மறக்காதிருக்கின்றன. (இதில் என் மனைவியைத் தவிர மற்ற இருவரையும் ஆண்டுக்கொரு முறை அழைத்தாலே அபூர்வம்.)

என் வண்டியின் பதிவு எண்ணை என்னால் ஒருமுறை கூடச் சரியாக நினைவுகூர முடிந்ததில்லை. அதே போலத்தான் வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் போன்றவையும். சரி. தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. எதையும் நினைவில் கொள்ள அவசியமில்லைதான். எண்களாக இருக்கும் பட்சத்தில். என் கவலை அதுவல்ல. எண்களே நினைவில் இருக்க மறுக்கும்போது வேறு என்ன இருக்கும்?

சிறு வயதில் ஆழ்வார் பாசுரங்களைப் பாடுபட்டுப் படித்து சுமார் ஆயிரம் பாடல்கள் வரை மனனம் செய்திருந்தேன். கம்ப ராமாயணத்தில் சுமார் நூறு, நூற்றைம்பது பாடல்கள் ஒப்பிக்கும் அளவுக்குத் தெரியும். வள்ளலார் மீது பற்று உண்டாகி அவரைப் படிக்க ஆரம்பித்தபோது சிரமமே இல்லாமல் என்ன படித்தாலும் அப்படியே மனத்தில் தங்கிவிடும். சித்தர் பாடல்கள், சிலப்பதிகாரத்தில் கொஞ்சம், வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகள் சில, சாமிநாத சர்மாவின் கார்ல் மார்க்ஸ், கிரீஸ் வாழ்ந்த வரலாறு, திரு.வி.கவின் சில கட்டுரைகள், பாரதியார் கவிதைகள், குறைந்தது 300-400 திருக்குறள் எல்லாம் எக்கணத்தில், எங்கே சுட்டிக் கேட்டாலும் தடுமாற்றமின்றி உடனே சொல்லும் தரத்தில் இருந்தேன். அனைத்துமே தொலைந்து போய்விட்டன.

மிகச் சிறு வயதுகளில் என் அப்பா ஒருமுறை சொன்னார். அர்த்தம் புரியாதது பற்றிக் கவலை வேண்டாம். இப்போது மனப்பாடம் செய்துகொண்டு விட்டால் பிறகு அர்த்தம் புரியும் வயதில் எளிதாக நினைவுகூர்ந்து விளங்கிக்கொண்டு விடலாம். அதைக் கருத்தில் கொண்டுதான் அவ்வளவையும் படித்து வைத்தேன். எல்லாம் வீண். உண்மையிலேயே, எங்கே போனதென்று தெரியவில்லை.

இப்போது எதைப் படித்தாலும் அர்த்தம் புரியாத பிரச்னை இல்லை. எல்லாமே புரிகிறது. ஆனால் எதுவும் நினைவில் இருப்பதில்லை. லேப்டாப்பில், போனில் அவ்வப்போது படிப்பதை நோட்ஸ் எடுத்து வைக்கிறேன். போதாக் குறைக்கு, கையில் எப்போதும் வைத்திருக்கும் குறிப்பேடுகளில் எழுதியும் வைக்கிறேன். ஒருமுறை கை வைத்து எழுதிப் பார்த்துவிட்டால் உயிர் போகும் வரை மறக்காது என்று எல்லோரிடமும் சொல்வது வழக்கம். என் விஷயத்தில் அதுவும் உண்மையில்லை என்றாகிவிட்டது. எழுதிப் பார்ப்பதும் மறந்துதான் போகிறது.

ஞாபக மறதி ஒரு வியாதியாகப் பரிமாணம் பெற்று விட்டதாக என்னால் நினைக்க முடிவதில்லை. என் முயற்சியின் ஏதோ ஓர் இடுக்கில் ஒரு சிக்கல் உள்ளது என்றுதான் தோன்றுகிறது. யாராவது போனில் கூப்பிட்டு எடுக்க முடியாத சந்தர்ப்பமாக இருந்தால், பிறகு அழைக்க வேண்டும் என்று எண்ணிக் கொள்வேன். தவறாமல் மறந்துவிடுகிறேன். ஏதாவது மீட்டிங், கதை விவாதத்தில் இருக்கும்போது எறும்பு கடித்தாற்போல ஏதாவது ஒரு யோசனை வரும். அநேகமாகச் சிறுகதை யோசனையாக இருக்கும். அல்லது ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸுக்கான கரு. குறிப்பிட்ட மீட்டிங் அல்லது விவாதம் முடியும் வரை அதை வைத்துக்கொண்டு தவிப்பேன். புத்தி இரண்டிலும் நிற்காமல் ஊசலாடும். முடிந்ததும் பரபரவென நோட்டுப் புத்தகத்தைத் திறந்து குறித்துக்கொள்ளப் பார்த்தால், பளிச்சென்று மறந்துவிடும். ஒரு முறை இருமுறையல்ல. இப்படிப் பல சமயங்களில் ஆகியிருக்கிறது.

ஆனால் கதவைப் பூட்டினோமா, விளக்கை அணைத்தோமா என்பது போன்ற சந்தேகங்கள் கிடையாது. நான்கு பொருள்கள் வாங்கும் திட்டத்துடன் கடைக்குச் சென்றால் ஒன்றை மறந்துவிடுவது நடக்கிறது. ஆனால் ஒன்றாம் வகுப்பில் உடன் படித்த மாணவர்கள் சிலரது முகங்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. அடுத்த மாதம் செய்ய வேண்டிய பணிகள் குறித்த பட்டியலைப் பிசகின்றி நினைவுகூர முடிகிறது. நாளைக் காலை செய்ய நினைத்திருந்த வேலை மறந்துவிடுகிறது.

இப்படிப் பொத்தாம் பொதுவாக மனத்தில் உள்ளவற்றில் ஒரு பகுதி உதிர்ந்து காணாமல் போவதற்கு பதில் கசடுகளை மட்டும் பிரித்து, பெருக்கித் தள்ள ஒரு சக்தி இருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும். எங்கே முடிகிறது?

இந்தக் கட்டுரையையே ஓர் உலகத் தரமான இறுதி வரி தோன்றியதால்தான் – செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு – எழுத ஆரம்பித்தேன். இப்போது அந்த இறுதி வரி மறந்துவிட்டது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி