தமிழகத்தின் எதிர்காலமே, எழுச்சித் தளபதியே, ஆருயிரே, மன்னவரே என்று ஈகா தியேட்டரில் ஆரம்பித்து சாலையெங்கும் தட்டிகளைப் பார்த்தபோது முதலில் குழப்பமாக இருந்தது. பிறகு சந்தேகமாக. இன்விடேஷனில் ஸ்டாலின் பெயர் இல்லை. அப்புறம் எதற்கு இத்தனை வரவேற்புத் தட்டிகள் என்று புரியவில்லை. ஏதாவது திடீர் ஏற்பாடாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் புத்தகக் காட்சி தொடங்கும் பள்ளி வளாகத்தைத் தாண்டியும் தட்டிகள் போய்க்கொண்டே இருந்தபடியால் இது வேறு யாரோ எதற்கோ வைத்திருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன்.
நகரின் மற்றப் பகுதிகளில் பெரிதாக ஒன்றுமில்லாவிட்டாலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எப்படியும் நாலைந்து பேனர்கள், தட்டிகளாவது ஒவ்வொரு வருஷமும் கண்ணில் படும். இந்த வருஷம் படு சுத்தம். புத்தகக் காட்சியைப் பரம ரகசியமாக நடத்துவது என்று முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. ஒரு விளம்பரத்தையும் எங்கும் காணோம். ரைட்டர்பாரா டாட்காம்தான் மாபெரும் சமூக சேவை செய்துகொண்டிருக்கிறது போலிருக்கிறது.
தொடக்க விழாவுக்கு முதல்வர் இல்லாதபடியால் கெடுபிடி இல்லாத ஆரம்பம். பெரிய கூட்டம் என்று சொல்ல முடியாது. இதை எதிர்பார்த்துத் தானோ என்னவோ கட்டுமானப் பணியிலேயே கால்வாசி இன்னமும் மிச்சம் வைத்திருக்கிறார்கள். நான் உள்ளே நுழையும்போது முதலில் கவனித்தது கேண்டீன். கேண்டீனுக்கான இடம் ஒதுக்கப்பட்டுவிட்டது என்பது தெரிந்தது. நாலு பக்கமும் படுதாத் துணி போட்டு என்னவோ பண்ணிக்கொண்டிருந்தார்கள். நாளைக்கு நிச்சயம் சமையல் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள் என்று நம்புகிறேன். அவ்வண்ணமே பதிப்பாளர்களின் தட்டி விளம்பரங்கள், அரங்குக்கு வெளியே வரப்போகிற கடைகள், டிக்கெட் கவுண்ட்டர்கள் எல்லாம் முக்காலே மூணு சதப் பணிகள் முடிந்து – சர்வ நிச்சயமாக நாளைக்கு ரெடியாகிவிடும் என்று தெரிந்தது.
நான் தொடக்க விழா நிகழ்ச்சிக்குப் போகவில்லை. எப்படியும் எங்கள் பி.சி. ஸ்ரீராம்
போய்விடுவார் என்கிறபடியால் நேரே அரங்குக்குள் சென்றுவிட்டேன். பெரும்பாலான அரங்குகளில் இன்னும் புத்தகங்கள் அடுக்கப்படவில்லை. சில அரங்குகளில் சரக்கே வந்து இறங்கவில்லை. காலியாக இருந்தன. ஆனால் வழக்கத்தைவிட இம்முறை கடைகள் அதிகம். புத்தகங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருப்பதை மேலோட்டமான பார்வையில் உணர முடிந்தது. நாளை மாலை ஒரு முழு வடிவம் கிடைத்துவிடும்.
எங்களுடைய New Horizon Media அரங்கில் அனைத்துப் புத்தகங்களையும் இன்றே ஓரளவு ஒழுங்காக அடுக்கியிருந்தார்கள். ஆயிரத்தி நாநூற்று சொச்சப் புத்தகங்கள். புதியவற்றில் சில இன்னும் வந்து சேர்ந்தபாடில்லை. திராவிட இயக்க வரலாறு இரண்டாம் பாகம் வந்துவிட்டது. முதல் பாகம் நாளை வரும் என்றார்கள். ராஜ ராஜ சோழனைக் காணவில்லை, முதல் உலகப்போரைக் காணவில்லை. கட்டக்கடைசி வினாடியில் உயிரைக் கொடுத்து எடிட் செய்த ஸ்பெக்ட்ரம் எங்கே என்று கேட்டால் ‘அப்படின்னா?’ என்றார் ஒரு நல்லவர். எல்லாம் நாளைக்கு வந்துவிடும் என்னும் நன்னம்பிக்கை முனையில் உட்கார்ந்துகொண்டு பரபரவென்று பில் போட்டுக் கொண்டிருந்தார் பிரசன்னா.
என்னுடைய காஷ்மீர், ஆர்.எஸ்.எஸ்., கொசு, அலகிலா விளையாட்டு நான்கும் நல்லபடியாக வந்து சேர்ந்ததைக் கண்டு ஒன்று அல்லது ஒன்றரை சொட்டு ஆனந்தக் கண்ணீர் வந்தது. அநேகமாக அது நடைபாதை தூசு காரணத்தாலும் இருக்கலாம்.
பாதை என்றா சொன்னேன்? மன்னிக்கவும். இம்முறை நடக்கிற பாதையெல்லாம் திகில் பட க்ளைமாக்ஸ் காட்சி ரீரெக்கார்டிங் மாதிரி சத்தம் கொடுக்கிறது. மர ஸ்லாப்கள் போட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் பம்பம்பம்மென்று சத்தம் வருகிறது. பயமாக இருக்கிறது. மேலே போட்டு ஆணியடித்திருக்கும் சாக்குத் துணியும் பல இடங்களில் இன்னும் சரிசெய்யப் பட்டிருக்கவில்லை என்பதால் கீழே பார்த்து ஒழுங்காகத்தான் நடக்கவேண்டியிருந்தது. இதுவும் காலக்ரமத்தில் சரி செய்யப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன்.
விகடன், நக்கீரன், கலைஞன், போன்ற சில நிறுவனங்களின் அரங்குகளு
க்கு சும்மா ஒருரவுண்ட் போய்வந்தேன். நிதானமாக நாளைக்குத்தான் பார்க்கவேண்டும். நக்கீரன் மட்டும் அழகாக டெகரேட் செய்யப்பட்டிருந்தது. எல்சிடி மானிட்டர் வைத்து விளம்பரப்படமெல்லாம் போட்டுக்கொண்டிருந்தார்கள். கோபால் கலக்குகிறார்.
பொதுவாக அரங்கின் அளவில் அரையடி குறைந்துவிட்டதாக நாலைந்து பேர் குறைப்பட்டுக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. க்ரெடிட் கார்ட் கவுண்ட்டர் இன்று திறக்கப்படவில்லை. எல்லாம் நாளைக்குத்தான்.
இன்றைய விசேஷம் சில எழுத்தாள நண்பர்களைச் சந்தித்து கொஞ்சநேரம் உரையாட முடிந்தது. விமலாதித்த மாமல்லன், அவரது புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்ததற்கு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் மழமழவென்று வந்திருந்தார். உற்சாகமாக, அற்புதமாகப் பேசுகிறார். அவர் பார்த்து ரசித்த ஒரு முழுத் திரைப்படத்தை ஒரு சில நிமிடங்களில் அப்படியே தத்ரூபமாக விவரித்து, பேச்சு மூச்சற்றுப் போகச் செய்தார். நிமிஷத்துக்கு ஒருமுறை சுந்தர ராமசாமியை நினைவுகூர்ந்துவிடுகிறார். இந்த மனிதரா இப்படியொரு குஸ்தி பயில்வானாகவும் இருக்கிறார் என்று நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
ஜெயமோகன், அவருடைய ரசிகர் மன்றத்தினர் – சே, இலக்கிய வட்டத்தினர் புடைசூழ கிழக்கு ஸ்டாலுக்கு வந்தார். பக்கா கமர்ஷியல் மசாலா க்ரைம் த்ரில்லர் கெட்டப்பில் வெளிவந்திருக்கும் அவருடைய உலோகம் நாவலை எடுத்துப் பார்த்தார். [அட்டையில் உள்ள அந்த தங்கப் புடைப்பு எழுத்துகளெல்லாம் எனக்கே ஒரு மாதிரி திகிலூட்டக்கூடியதாகத்தான் இருந்தது.] பிரசன்னா அவரிடம், ஒரு நாவலெல்லாம் போதாது; இதே ரேஞ்சில் இன்னும் நாலைந்து எழுதுங்கள், வேகமாக விற்பதற்கு ஒரு செட் வேண்டாமா என்றார். [கிழக்கில் இன்றைய டாப் செல்லர் அதுதான்.] கிழக்கு வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்துக் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தார். ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு பற்றி மிகவும் சிலாகித்தார். தான் மலையாள மொழிபெயர்ப்பில் படித்து ரசித்த ஒரு புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை வாங்கி, நாலு பத்தி தாண்டமுடியாமல் திண்டாடிய அனுபவத்தைச் சொன்னார். அரவிந்தன் நீலகண்டனின் தமிழ் பேப்பர் கட்டுரைகளை மிகவும் சிலாகித்தார். இன்னும் இரண்டு நாள் இருப்பேன் என்றார். திரும்ப வருவார் என்று நினைக்கிறேன்.
என் நண்பர் கவிஞர் சுகுமாரன் வந்திருந்தார். சா. கந்தசாமியைப் பார்த்தேன். ஞாநி இருந்தார். சோம. வள்ளியப்பன் வந்திருந்தார். நெய்வேலியிலிருந்து குறிஞ்சி வேலன் [திசையெட்டும் ஆசிரியர்] வந்திருந்தார். அவரோடு எஸ்ஸார்சியைப் பார்த்தேன். எண்பதுகளில் கணையாழியில் இவரைப் படித்து ரசித்திருக்கிறேன். பல்லாண்டு காலத்துக்குப் பிறகு திரும்பச் சந்தித்தேன்.
கண்காட்சி ஏற்பாட்டைப் பொறுத்தவரை பெரிய மாறுதல்கள் ஏதுமில்லை. நல்லபடியாகவும் கெட்டவிதமாகவும். நாளை முதல் சுறுசுறுப்படையத் தொடங்கிவிடும் என்று நினைக்கிறேன். இன்னும் சற்று விரிவாக நாளைக்கு எழுத விஷயம் இருக்கக்கூடும்.
[பி.கு: நாளை காலை – நேரம் 12.15 ஆகிவிட்டது, இன்று காலை 6 மணிக்கு தமிழ் பேப்பரில் பத்ரியின் வீடியோவுடன் கூடிய ரிப்போர்ட் காண / வாசிக்கத்தவறாதீர்!]
’உ’ பிள்ளையார் சுழி கேப்ஷன் போட்டு அங்கே ஹரன் பிரசன்னா புகைப்படத்தை (பிள்ளையார்?) போட்ட உங்கள் நுண்ணரசியலைக் கண்டு ……… நாராயண.. நாராயண…
அரசியலே இல்லை. வெளிப்படையான வருணனை அல்லவா அது!
[…] முதல் நாள் பற்றி பா. ராகவன் –> http://writerpara.com/paper/?p=1827 […]
விறுவிறுப்பான பதிவுக்கு நன்றி. சனி, ஞாயிறு அன்று கண்காட்சிக்கு வரத் திட்டமிட்டுள்ளேன். உங்களை அங்கே சந்திக்க முடியுமா? காஷ்மீர் புத்தகம் வாங்கவேண்டும். உங்கள் ஆட்டோகிராப் வேண்டும்.
நீங்க சொன்ன அத்தனையையும் ‘மனக்கண்ணால்’ கண்டேன். விழாவுக்கு இருக்க முடியவில்லை என்ற மனக்குறை ‘கொஞ்சம்’ தீர்ந்தது.
சூப்பர். அட்டகாசமான பதிவு பாரா. நிறைய படங்களும் போட்டிருப்பதற்கு நன்றி. தினமும் எதிர்பார்க்கலாமா?
/– இம்முறை நடக்கிற பாதையெல்லாம் திகில் பட க்ளைமாக்ஸ் காட்சி ரீரெக்கார்டிங் மாதிரி சத்தம் கொடுக்கிறது. –/
யாரும் தடுக்கி விழாம இருந்தால் சரி…
// உயிரைக் கொடுத்து எடிட் செய்த ஸ்பெக்ட்ரம் எங்கே என்று கேட்டால் ‘அப்படின்னா?’ என்றார் ஒரு நல்லவர். //
அப்படிக்கேட்ட நல்லவர் பெயர் “ராசா” வா?
🙂
ச்சே… ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸ்தான் சதி செய்கிறது என்றால், கிழக்குமா? 🙁
ஒவ்வோராண்டும் சென்னை புத்தகக் கண்காட்சியை நேரில் பார்க்க ஆசைப்பட்டு, இதுவரை சாத்தியப் படவில்லை. உங்கள் கட்டுரையைப் படிப்பதற்கு ஆறுதலாக இருந்தது. நன்றி, வணக்கம்.
ஸ்டார்ட்ங்கே அமர்களம்!
உங்கள் ஆட்டோகிராப் வேண்டும். Online ல வாங்கினா உங்கள் ஆட்டோகிராப் கிடைக்குமா?
ஹ.பி கல்லா கட்டிங் -கிழக்குக்காக- போட்டோக்கள் செண்டிமெண்ட் குறியீட்டினில் வருமோ சென்ற ஆண்டும் இதுபோலவே கண்ட ஞாபகத்துடன்…! 🙂
//பார்க்க அழகான நடைபாதை//
உலொல்லு (நன்றி:-ரைட்டர்பேயோன்)