பொன்னான வாக்கு – 35

ரெண்டு நாளாக மனசே சரியில்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது. விதியைப் பார்த்தீர்களா? எத்தனைக் கொடூரமும் கயவாளித்தனமும் அதற்கு இருந்தால், நாளும் பொழுதும் மக்களுக்காகப் பாடுபடும் தலைவர்களை இப்படிப் போட்டு வாட்டி வறுக்கும்? பிரத்தியேகமான சங்கதி எதுவுமே ஒரு மனுஷனுக்கு இருக்கக்கூடாது என்றால் என்ன அர்த்தம்? அட அள்ளிக்கொடுக்க வேண்டாம். சின்னச் சின்ன சலுகைகள்? அதுவுமா தப்பு? சுக சௌகரியங்களில் சலுகை. வருமானக் கால்வாய்களில் சலுகை. வாங்கிப் போடும் இனங்களில் சலுகை. வங்கிக் கடன் சலுகை.

எது முடிகிறது? ஒரு தலைவராகப்பட்டவர் தனக்கென ஒரு குச்சி ஐஸ் வாங்கிச் சாப்பிடக் கூட நூறு முகங்களைப் பார்க்கவேண்டியிருக்கிறது. யார் என்ன நினைத்துக்கொள்வார்களோ என்கிற கவலை. எந்தப் பரதேசி எப்படி எழுதித் தொலைப்பானோ என்கிற கவலை. எதிர்க்கட்சிக்காரர்கள் எந்த இடத்தில் சட்டையைப் பிடிப்பார்களோ என்கிற கவலை.

நமது முதல்வரை எடுத்துக்கொள்ளுங்கள். ஆவணப்படி அவர் கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி. எத்தனை பாடுபட்டு ஹைதராபாத்தில் ஒரு திராட்சைத் தோட்டமும் கொடநாட்டில் ஒரு எஸ்டேட்டும் சிறுதாவூர் போன்ற குக்கிராமங்களில் குறுவிவசாயமும் செய்து வளர்ந்திருக்கிறார்! அவர்மீதுதான் இந்தச் சமூகம் சொத்துக் குவிப்பு வழக்கு போடுகிறது. ஆட்சி அதிகாரத்தைப் பிடுங்குகிறது. படாதபாடு பட்டு அவர் மீண்டு வந்து அடுத்தடுத்த தேர்தல்களைச் சந்திக்கத் தயாரானால் மீண்டும் சொத்தென்ன, சுகமென்ன என்ற கேள்வி.

ஒரு நேர்மையான விவசாயி அல்லும் பகலும் அயராது பாடுபட்டால் நாற்பத்தியொரு கோடியே அறுபத்தி மூன்று லட்சத்து ஐம்பத்தையாயிரம் மதிப்பில் அசையும் சொத்துகளையும், எழுபத்திரண்டு கோடியே ஒன்பது லட்சத்து எண்பத்தி மூவாயிரம் ரூபாய்க்கு அசையா சொத்துகளையும் சம்பாதித்துச் சேர்க்க முடியும் என்பதை இந்த மண்ணுக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

இதனைப் பாராட்ட வேண்டாமா? கொண்டாட வேண்டாமா? தவிரவும் அவருக்கென யார் இருக்கிறார்கள்? எல்லாம் தமிழ் மக்களுக்கான அவரது உழைப்பு. இத்தனை இருந்தும் அவருக்கு என்ன பயன்? இரண்டு கோடி ரூபாய்க்கு மேலான வங்கிக்கடன் கத்தி அவர் கழுத்துக்கு நேரே தொங்கிக்கொண்டிருக்கிறது. கழுத்தை நகர்த்தி வைத்துக்கொண்டு உட்காரக்கூட நேரமின்றி அவர் பிரசாரப் புயலாக மாநிலமெங்கும் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்.

எண்ணிப் பாருங்கள்! இரண்டு கோடிக் கடன்! யாரால் முடியும்? ஒரு மகானுபாவர் ஒன்பதாயிரம் கோடிக்குக் கடன் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு இங்கிலாந்துக்கே போய்ச் சேர்ந்துவிட்டார். அவரைக் கூப்பிட்டு விசாரிக்கவோ தண்டிக்கவோ வக்கற்ற சமூகம்தான், ஒரு குறு விவசாயியின் இரண்டு கோடிக் கடன் குறித்த விவரங்களை வேட்பாளர் மனுவோடு சேர்த்து எழுதி வாங்கி ஊரெல்லாம் தண்டோரா போட்டு அறிவித்துக்கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் கேள்விப்படுகிறபோது துக்கம் முட்டாமல் பின்னே மாடா முட்டும்?

ஜெயலலிதாவை விடுங்கள். அவராவது, நடப்பு ஆட்சியாளர். தமிழர்களின் தனிப்பெரும் தலைவர் கருணாநிதி ஆட்சியைப் பார்த்துப் பல வருடங்களாகிவிட்டன. ஜெயலலிதாவாவது விவசாயியாக இருப்பவர். ஆனால் இவரோ வெறும் சமூக சேவகர்! தொண்ணூற்றி இரண்டு வயதில் தேங்காய் சேவை, லெமன் சேவை அல்ல; சமூக சேவையை மட்டுமே சாப்பிட்டு வாழ்பவர். ஒரு சமூக சேவகருக்கு என்ன பெரிய வருமானம் இருந்துவிட முடியும்? இந்த சமூகம் எந்த சேவகருக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது? அட, அள்ளிக் கொடுக்க வேண்டாம். கிள்ளிக்கொடுக்கக்கூட ஆயிரத்தெட்டு சிங்கநாதம் பண்ணுவதல்லவா சமூக அ-நீதி?

கலைஞருக்கு அசையா சொத்துகளே கிடையாது. 1956ம் வருஷம் புதையல் என்ற படத்துக்குக் கதை வசனம் எழுதி சம்பாதித்த பணத்தில் வாங்கிய கோபாலபுரம் வீட்டையும் ஏழை மக்களுக்கு மருத்துவமனை கட்டுவதற்காக எழுதிக் கொடுத்துவிட்டார். தனக்கென ஒரு வீடில்லா இம்மனிதரின் பெயரில் நிலம் நீச்சு என்னவாவது உண்டாவென்றால் அதுவும் கிடையாது. வீட்டுக்கும் சரி, கட்சிக்கும் சரி. அசையும் சொத்தென்றால் அது அவர் மட்டும்தான். அதற்கே பதிமூன்று கோடி ரூபாய் மதிப்பீடு போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் அக்கிரமம் அல்லவா?

தயாளு அம்மாள் வெறும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் வைத்திருக்கிறார். ராசாத்தி அம்மாளோவெனில் ஐம்பத்தி ஆறாயிரம் ரூபாய் ரொக்கம் வைத்திருக்கிறார். ஒரு சராசரி மத்தியதர வர்க்கத் தமிழன் எப்படி இருப்பானோ அப்படி இருக்கிறது இந்தக் குடும்பம். சமூக சேவை தவிர இன்னொன்று அறியாத கலைஞருக்குத் துணைவி வழியில் பதினொரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமை மட்டும் இருக்கிறது. இதைக்கூடவா தள்ளுபடி செய்யாது இச்சமூகம்? வெட்கம்.

டாக்டர் அன்புமணிக்குக் கூட அசையும் சொத்துகளோ, அசையாச் சொத்துகளோ கிடையாது. ஒழுங்காக நாடி பார்த்து, நாக்கை நீட்டச்சொல்லிப் பார்த்து, ஒரு இஞ்செக்‌ஷன் போட்டா சரியாயிடும் என்று அவர் அக்கடாவென்று தொழில் நடத்திச் செழித்திருக்கலாம். எங்கே விடுகிறது இந்த சமூக அக்கறை?

ஏதோ முப்பாட்டன் முருகன் அருளால் சீமானுக்கு மட்டும் ஒரு ஃபாரின் கார் இருக்கிறது. ஒடாத படங்கள்தாம் என்றாலும் அவரும் படமெடுத்த பாம்பல்லவா? இதுகூட இல்லாவிட்டால் எப்படி?

இப்போதெல்லாம் தேர்தல் காலமென்றால், நமது தலைவர்களின் இந்த அந்தரங்கப் பொருளாதாரப் புள்ளி விவரங்கள் அம்பலத்துக்கு வருகிற வைபவம் சேர்ந்துகொண்டுவிடுகிறது. சற்று பேஜார்தான். நம்மாலானது, ‘ஒன்றுமே இல்லாத’ இந்த உத்தமோத்தமர்களுக்காகச் சற்று இரக்கப்படுவோம். பிறகு புன்னகையோடு கடந்து போய்விடலாம்.

வேறென்ன பிறகு விவசாயம் செய்து நம்மாலும் நூறு கோடிக்குமேல் சம்பாதிக்கவா முடியும்?

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி