தீராப் பிரச்னைகள் [தொடர்ச்சி]

6. நான் இலக்கியவாதி இல்லை. குறிப்பாக, தமிழ் இலக்கியவாதி இல்லவே இல்லை. எழுதுபவன். அவ்வளவே. ஆனால் என் கனவுகளில் பெரும்பாலும் இலக்கிய அடிதடிக் காட்சிகள் மட்டுமே வருகின்றன. இத்தனைக்கும் நான் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வதே இல்லை. பக்கத்தில் எங்காவது நவீன இலக்கியக் கூட்டம் நடக்கிறது என்று தெரிந்தால் இருபத்தைந்து ரூபாய் ஏசி பஸ் பிடித்து இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடிப்போய்விடுவேன்.

இது இங்ஙனம் இருக்க, மார்க்கெடிங் ஆபீசர் போல் டிரெஸ் பண்ணிக்கொண்டு இலக்கியக் கூட்டங்களுக்கு வரும் ஓர் எழுத்தாளரும் ரீபோக் ஷூ அணிந்த ராமலிங்க அடிகளார் போல் உள்ள ஓர் எழுத்தாளரும் அடிக்கடி என் கனவுகளில் கட்டிப்புரண்டு சண்டை போடுகிறார்கள். இந்தச் சண்டைகள் பெரும்பாலும் மேடைகளில் ஆரம்பித்து, என் வீட்டு மொட்டை மாடியில் முடிகிறது. அவர்கள் ஏன் என் வீட்டு மாடிக்கு வரவேண்டும்? என் அனுமதியின்றி எப்படி வரக்கூடும்? கீழிருந்து என் தந்தையாரும் சகோதரர்களும் யார்றா அது? மொதல்ல வெளில போகச் சொல்லு என்று உரக்கக் குரலெழுப்பிக் கத்துவது ஏன் அவர்கள் காதில் விழுவதில்லை? அவர்கள் சண்டைக்கிடையில் என்னை ஏன் பிடித்து இழுத்து, மொட்டை மாடி கைப்பிடிச் சுவரிலிருந்து கீழே தள்ளவேண்டும்? நான் என்ன பாவம் செய்தேன்? அப்படிக் கீழே விழும்போதெல்லாம் என்னை ஏன் ஒரு மீன்பாடி வண்டி தாங்கிப் பிடிக்கிறது?

இந்தக் கனவிலிருந்து தப்பிப்பது எப்படி என்று கடந்த சில ஆண்டுகளாக யோசித்து யோசித்து நான் கண்டுபிடித்த ஒரே வழி – இரவுகளில் தூங்கவேண்டாம் என்பதுதான். அதிகாலை மூன்றரை வாக்கில் படுத்து ஆறு மணிக்கு எழுந்துவிட்டால் இந்தக் கனவிலிருந்து தப்பிக்க முடிகிறது. தவறிப்போய் என்றைக்காவது முன்னதாக உறங்கிவிட்டால் கண்டிப்பாக மீன்பாடி வண்டியில் விழவேண்டியதாகிறது.

7. மிகவும் அற்பமான, எளிய ஆங்கிலச் சொற்களுக்கு அடிக்கடி ஸ்பெல்லிங் மறந்துவிடுகிறது. சமீபத்தில் Relax என்பதை Relacks என்றும் Institution என்பதை Institushion என்றும் Responsibility என்பதை Responcibility என்றும் ஒரே மின்னஞ்சலில் எழுதியிருந்ததை, அனுப்பிவிட்டுத் திரும்பப் படித்தபோது கண்டேன். வெட்கமாக இருந்தது. அருகில் யாராவது இருந்தால் எழுதும்போது ஸ்பெல்லிங் கேட்கத் தயங்கமாட்டேன். யாருமில்லாவிட்டால்தான் என் ஸ்பெல்லிங் குளறுபடி செல்கள் விழித்துக்கொண்டு குதியாட்டம் போடத் தொடங்கிவிடுகின்றன. நண்பர்கள் சிலர் வேர்ட் கோப்பில் ஸ்பெல் செக் எனேபிள் செய்துகொள்ளச் சொன்னார்கள். அது சாத்தியமில்லை. நான் அதிகமும் தமிழ் எழுதுபவன். வார்த்தைக்கு வார்த்தை பச்சைக்கோடு, சிவப்புக்கோடு போட்டுக்கொண்டே இருந்தால் கண்றாவியாக இருக்கும். என்ன செய்து மீட்சியுறலாம் என்று தெரியவில்லை.

8. ஒரு காலத்தில் தினசரி ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, உர்தூ, இரானியப் படம், ரஷ்யப்படம், ஜப்பான் படம், கலைப்படம், கசுமாலப் படம், மசாலாப் படம், மண்ணாங்கட்டிப் படம் என்று எதையும் விட்டதில்லை. திடீரென்று சில வருடங்கள் முன்பு எனக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டது. எந்த தமிழ்ப் படத்துக்குப் போனாலும் காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்து பேசப்போகிற வசனங்கள் முன்கூட்டியே என் காதுகளில் விழத் தொடங்கின. இதனை ‘என் கணிப்பு’ என்றெல்லாம் சொல்ல முடியாது. இயல்பாகவே தமிழ் சினிமாவுக்கான மொழி என்பது ஒரு சில நூறு சொற்களுக்குள் அடங்கிவிடுகிறது. அதனைத் தாண்டி செயல்படவே முடியாது போல் உள்ளது. இதே போலவே, ரஷ்யப் படங்களின் பண்ணை விவசாயப் பிரச்னைகள் சார்ந்தும் இரானியப் படங்களின் உறவுச் சிக்கல்கள் சார்ந்தும் ஹிந்திப் படங்களின் காதல் பிரச்னைகள் சார்ந்தும் சில முன் முடிவுகளை புத்தி எடுத்துவிடுகிறது. அவை பெரிதும் சரியாகவே இருக்கிற காரணத்தால் திரைப்படம், ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்கிற வகையில் என்னளவில் உபயோகமில்லாமல் போய்விட்டது.

ஒரு முழு திரைப்படத்தை ஓர் இயந்திரம் போல் எதிரே நிறுத்திவைத்து அக்கு அக்காகப் பிரித்துக் கழற்றிப் பார்க்கிற மனநிலையில்தான் அணுக முடிகிறதே தவிர, கலைப்படைப்பாகவோ, பொழுதுபோக்கு சாதனமாகவோ உள்வாங்கவே முடிவதில்லை.

இதனாலேயே கடந்த பல வருடங்களாக விரும்பி சினிமாவுக்குப் போகாமலேயே இருந்தேன். இடையில் ‘ஒசாமா’ என்கிற ஆப்கனிஸ்தான் படமொன்றைக் கண்டேன். பிடித்திருந்தது. மற்றபடி எந்தப் படத்தையும் ஏனோ ஆர்வமுடன் பார்க்கவே தோன்றமாட்டேனென்கிறது. என் நண்பன் கண்ணன் தினசரி ஏதாவது ஒரு ஆங்கிலப்பட டிவிடியை எடுத்துவந்து பார்த்துவிட்டுக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்வான். ஒன்றைக்கூட நான் எடுத்துச் சென்றதில்லை. இத்தனைக்கும் அவை அனைத்தும் மிகச் சிறந்த படங்கள் என்று பெயர் பெற்றவை. திரைப்பட விரும்பிகள் வேறு யாருக்கேனும் அந்த டிவிடிக்கள் கிடைக்குமானால் கண்ணனுக்குக் கோயிலே கட்டிவிடுவார்கள். அத்தனை சிறந்த தேர்வுகளாக அவை இருக்கும்.

எனது திரைப்படம் சார்ந்த ரசனையில் பிரச்னையா? உண்மையிலேயே சமீப காலங்களில் வெளியான படங்கள் இத்தனை மோசமான மன விளைவுகளை உண்டாக்கும் தரத்தில்தான் இருந்தனவா என்று சொல்லத் தெரியவில்லை.

9. குடும்பப் பொறுப்பு என்ற ஒன்று சுத்தமாக இல்லாதவன் என்கிற நல்ல பெயர் என் வீட்டில் எனக்குண்டு. இதனை மாற்றும் முயற்சியில் கடந்த சில காலமாகச் சில வீட்டுவேலைகளை வலிய இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து வருகிறேன்.

அவையாவன: காய்கறி வாங்குவது. குழந்தையை எழுப்பி, குளிப்பாட்டி பள்ளிக்கு அனுப்புவது. குடும்ப விசேஷங்கள் ஏதேனும் வந்தால் கண்டிப்பாக அதில் கலந்துகொள்வது. வீட்டார் சொல்லும் வேலைகள் எதுவானாலும் தவறாமல் செய்வது. உணவு குறித்தோ, வேறெது குறித்தோ எவ்விதமான விமரிசனங்களையும் வைக்காதிருப்பது.

இவற்றில் என் பிரச்னைக்குரிய அம்சம், காய்கறி வாங்குவது. சாதாரண காய்கறிக் கடைகள் முதல் ஸ்பென்சர்ஸ் டெய்லி, ரிலையன்ஸ் ஃப்ரெஷ் வரை நான் வசிக்கும் பேட்டையில் காய்கறிகள் வாங்க நிறைய இடங்கள் உண்டு. எல்லா இடங்களிலும் மலை மலையாகவே காய்கறிகள் குவித்துவைக்கப்பட்டிருக்கும். எதைப் பார்த்தாலும் புதிதாகக் கொண்டுவந்து கொட்டியது போலவே தோற்றம் தரும்.

பார்த்துப் பார்த்து [என்றால்: அரைக்கிலோ பீன்ஸ் வாங்கினால்கூட ஒவ்வொரு பீன்ஸையும் தனித்தனியே புரட்டிப் பார்த்து, அழுகல், சொத்தை இல்லாதிருக்கிறதா என்று கவனித்து என்று பொருள்.] நான் வாங்கும் காய்கறிகளில் கண்டிப்பாக வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குறைகள் கண்டுபிடிக்கப்பட்டுவிடுகின்றன.

என் கவனத்துக்கே வராத பிழைகள் எப்படியோ அதில் இடம்பெற்றுவிடுகின்றன. இது எப்படி என்று புரிவதில்லை. கத்திரிக்காயில் கண்டிப்பாகச்  சில சொத்தைகள் வந்துவிடுகின்றன. வெண்டைக்காய் என்றால் சில முற்றலாக இருந்துவிடும். தக்காளி என்றால் அழுகல். வாழைக்காய் என்றால் ஒன்றாவது ஒரு ஓரத்தில் லேசாகப் பழுத்திருக்கும். கீரை வாங்கினால் கேட்கவே வேண்டாம். பூச்சி இருந்தே தீரும். அல்லது வாடிய பயிரின் மேலுக்குக் கொஞ்சம் தண்ணீர் தெளித்து வைத்து என்னை ஏமாற்றியிருப்பான் கடங்காரன் அல்லது கடைக்காரன். முட்டை கோஸ் வாங்கினால் கட்டை அதிகமிருக்கும். உருளைக்கிழங்கில் கூட தக்காளி மாதிரி கொளகொளக்கும் கிழங்குகள் இருந்து தொலைத்துவிடுகின்றன.

இவற்றின்பொருட்டு எனக்குக் கிடைக்கும் பாராட்டுப் பத்திரங்கள் யாவும் சொல்லத் தரமற்றவை.

எத்தனை கழுதை வயதானாலும் சில காரியங்கள் செய்யத் துப்பில்லை என்றால் துப்பில்லைதான். வேண்டாம், நம்பாதே, அவன் வரமாட்டான் என்று திருவிளையாடலில் நாகேஷ் புலம்புவதற்கு ஒப்பாக என் அந்தராத்மா அலறினாலும் ஒருபோதும் நல்விளைவுகள் உண்டானதில்லை.

இதனாலெல்லாம் காய்கறிக் கடைக்குச் செல்லும்போது என்னையறியாமல் ஒரு படபடப்பு வந்துவிடுகிறது. [இனம்புரியாத படபடப்பு என்று அறிமுக எழுத்தாளர்கள் சொல்லுவார்கள்.] ஆகவே என் முழு விழிப்புணர்வுடன் செயல்படவேண்டுமென்று முடிவு செய்து ஒரு கள்ளனை இண்டராகேட் செய்யும் போலீஸ் அதிகாரியின் [கண்டிப்பாக விஜயகாந்த் இல்லை.] தோரணையுடன் காய்கறிகளை ஆராய்கிறேன். கூடவே எனக்குள்ளிருந்து இன்னொரு பா.ராகவன் பிரிந்து வெளியே வந்து நின்று என்னைப் பார்த்து, கைகொட்டிச் சிரிக்கிறான். எல்லாமே சிக்கல். பெரிய சிக்கல்.

உலகிலுள்ள ஊசிப்போன, அழுகிப்போன, முற்றலான, வாடிப்போன காய்கறிகளெல்லாம் ஏன் எனக்கு மட்டுமே கிடைக்கின்றன?

10. வீட்டுக்கதவைப் பூட்டிக்கொண்டு எப்போது வெளியே கிளம்பினாலும் மறக்காமல் ஒரு சந்தேகம் வருகிறது. கதவைப் பூட்டினேனா?

இந்தப் பிரச்னை பலபேருக்கு உண்டு என்பதில் ஓர் அற்ப சந்தோஷம் எனக்குண்டு. ஆனால் என் பிரச்னை இன்னும் சற்று ஆழமானது.

மனத்துக்குள் பூட்டிய கதவை ஊடுருவி உள்ளே சென்று விளக்கை அணைத்தேனா, மின் விசிறி சுழன்றுகொண்டிருந்ததே, அதை நிறுத்தினேனா, மனைவி அடுப்பை அணைத்தாளா, திறந்து வைத்த குழாயை மூடினேனா, பால்கனி கதவைச் சாத்தினேனா, பூட்டிய கதவின் சாவியை மாட்டவேண்டிய இடத்தில் மாட்டினேனா என்று சாத்தியமுள்ள அத்தனை விதமான அற்ப சந்தேகங்களும் போர்வீரர்களைப் போல் என்னைச் சூழ்ந்துகொண்டு இம்சிக்கத் தொடங்கும்.

இதிலிருந்து மீள்வது சுலபம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு ஒரு நாள் அலுவலகம் புறப்படும்போது [அன்றைக்கு மனைவி அவளது அம்மா வீட்டுக்குச் சென்றிருந்தாள்.] ஒவ்வொரு செயலைச் செய்ததும் ஒரு துண்டு பேப்பரில் குறித்துக்கொண்டு, கதவைப் பூட்டி, அதையும் குறித்துக்கொண்டு புறப்பட்டேன்.

பத்தடி போனதும் என் துண்டு பேப்பரைக் காணவில்லை. சட்டைப் பையில் வைக்கிறமாதிரி கீழே நழுவவிட்டிருக்கிறேன் போலிருக்கிறது. உடனே என் சந்தேக பூதங்கள் கைகொட்டிச் சிரிக்கத் தொடங்கிவிட்டன. நான் ஒழுங்காகக் கதவைப் பூட்டியது, செய்த செயல்களைத் துண்டு பேப்பரில் குறித்து வைத்தது எல்லாமே என் மனத்துக்குள் நான் செய்து பார்த்தவை தான் என்றும் நிஜத்தில் அப்படியொரு செயலை மேற்கொள்ளவே இல்லை என்றும், அது என் விருப்பம் மட்டுமே என்றும் தோன்றியது. அரைக்கணம் கூட இருக்காது. நான் நிஜத்துக்குள் கனவு கண்டுகொண்டிருப்பது போலவும் கனவுக்குள் உண்மையாக வாழ்வது போலவும் ஒரு தோற்ற மயக்கம் உருவாகி மறைந்தது.

தாங்கவே முடியவில்லை. பேருந்து நிலையம் வரை சென்றவன் திரும்பவும் வீடு வந்து பூட்டிய கதவை மீண்டுமொருமுறை இழுத்துப் பார்த்துவிட்டே திரும்பினேன்.

எத்தனை நன்றாக எழுதி என்ன? வாழ்வில் வேறு எதிலுமே நேர்த்தியில்லாத அவலம் தரும் வேதனைகளைச் சொல்லி விளக்க முடியாது.

11. இறுதியாக ஒரு பிரச்னை. இதனை எழுத மட்டும் ஏனோ கை தயங்குகிறது. கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு டாக்டர் திருநாவுக்கரசோ, நாராயண ரெட்டியோ தீர்க்கக்கூடியதாக இருக்குமோ என்று எண்ணிவிடாதீர். இது வேறு ரகம். விவகாரமான ரகமும் கூட. இப்போது எழுதுவதற்கில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி