முன்னொரு காலத்தில் எடைக்குறைப்பில் ஒரு தீவிரவாத வேகத்துடன் ஈடுபட்டிருந்தேன். ஒரு வருட இடைவெளியில் பதினாறோ பதினேழோ கிலோக்களை இழக்கவும் செய்தேன். அது குறித்து அப்போது நிறைய எழுதியும் உள்ளேன்.
அதன்பின் அந்த ஆர்வம் வற்றிவிட்டது. ஏனெனில் எடைக் குறைப்பு முயற்சிகளும் உணவுக் கட்டுப்பாடும் தனியொரு அலுவலாக எனக்கு இருந்தன. கணிசமான நேரம், அதைவிட அதிக கவனத்தைக் கோரின. என் வாழ்க்கை முறை அதற்கு இடம் தரவில்லை. எனவே விட்டுவிட்டேன். காலக்ரமத்தில் நல்லபடியாக மீண்டும் பழைய எடைக்கே வந்து சேர்ந்தேன்.
இப்போது பணிச்சுமை மேலும் அதிகரித்தது. எனது ஒழுங்கீனங்கள் எல்லை மீறத் தொடங்கின. ஒழுங்கான உணவு, ஒழுங்கான உறக்கம் என்பது அறவே இல்லாது போனது. ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்பட்டது. அதற்குத் தனியே மாத்திரை எடுத்துக்கொள்ளத் தொடங்கினேன். எழுத்து வேலைகளைக் கணிசமாகக் குறைத்து வெறும் இரண்டே சீரியல்கள்தான் இப்போது. இதுவே நாக்கு தள்ளச் செய்கிறது. வயதும் ஏறுகிறதல்லவா?
சில நாள்களுக்கு முன்னர் சொக்கன் வீட்டுக்கு வந்திருந்தான். அவன் கையில் ஒரு பட்டை கட்டியிருந்தான். MI Band என்று சொன்னான். தினசரி எத்தனை அடிகள் நடக்கிறோம் என்று அளந்து சொல்லும் பட்டை. அதன்மூலம் எத்தனை கலோரி செலவாகிறது என்று அறிந்துகொள்ளலாம்.
என்னை அது பெரிதாகக் கவரவில்லை. எண்ணெயும் வெண்ணெயும் பெரிதாகக் கவரக்கூடிய யாரையும் அது கவரத் தான் கவராது. ஆனால் என் மனைவிக்கு அந்தப் பட்டை பிடித்துவிட்டது. உடனே இரண்டு வாங்கியாக வேண்டும் என்று அடம் பிடித்து சொக்கன் மூலமாகவே வரவழைத்தும் விட்டாள்.
நேற்று கூரியரில் வந்து சேர்ந்த அந்த கலோரிக் கரைப்புப் பட்டையை நேற்று மாலையே கங்கணமாகக் கட்டிக்கொண்டாகிவிட்டது. கட்டாயத்தின்பேரில் நிகழ்ந்ததுதான் இது என்றாலும் அதைக் கட்டிக்கொண்டதில் இருந்து நிமிடத்துக்கொருதரம் எத்தனை அடிகள் நடந்திருக்கிறேன் என்று பார்க்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
நானே சற்றும் எதிர்பாராவிதமாக இன்று காலை பத்து நிமிட வாக்கிங் போய்வந்தேன். (டிரைவிங் வகுப்பு சேர்ந்ததில் இருந்து நீச்சலுக்கு விடுப்பு. இது முடிந்ததும் மீண்டும் அது.) எப்போதும் உட்கார்ந்து குளிப்பவன் இன்று நின்று குளித்தேன். ஏழெட்டு முறை குனிந்து நிமிரவும் செய்திருக்கிறேன் என்பது எனக்கே பரவசமளிக்கிறது. இன்று காலை 6 மணி முதல் இதை எழுதும் பன்னிரண்டரைக்குள்ளாக 3263 அடியெடுத்து வைத்திருக்கிறேன் என்கிறது எம்.ஐ. ஆப்.
யார் கண்டது? மீண்டும் எடைக்குறைப்பு வெறி உண்டாகி ஓர் ஆண் இலியானாவாகிவிடப் போகிறேனோ என்னவோ.
அது ஆகாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் என் மனைவியும் இப்பட்டையைக் கட்டிக்கொண்டிருக்கிறபடியால் தினசரி யார் அதிகக் கலோரி செலவிட்டிருக்கிறார்கள் என்கிற ஒப்பீடு வீட்டில் அவசியம் எழும். தினசரி மண்ணைக் கவ்வுவது சற்று சங்கடம் தரக்கூடும் என்று உள்ளுணர்வு எச்சரிக்கிறது. எம்பெருமான் என் பக்கம் இருந்து அப்பட்டையைக் காட்டிலும் இப்பட்டை அரைக் கலோரியேனும் அதிகம் இழந்திருப்பதாகச் சுட்ட விழைகிறேன்.