டால்ஃபின் பாரா

வெற்றிகரமாக இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து நீச்சலுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். பழைய வேகம், குத்தாட்டங்கள் இப்போது முடிவதில்லை. ஆனால் குளத்தில் இருக்கும் ஒரு மணி நேரமும் கை கால் தொப்பைக்கு வேலை கொடுக்கிறேன் என்னும் மகிழ்ச்சி உள்ளது.

நான் போகும் அதிகாலை ஆறு மணி செட்டில் நிறைய 4-10 வயதுக் குழந்தைகள் வருகிறார்கள். பயிற்சியின் முதல் நாலைந்து தினங்கள் உயிர் பயத்தில் ஆ ஊ என்று அலறியவர்கள் எல்லாம் இன்றைக்கு ‘மாஸ்டர், செவன் ஃபீட்டுக்கு எப்ப போலாம்?’ என்கிறார்கள். ஒரு சிறுவன் – இதே பதினைந்து நாள் முன்பு பயிற்சிக்கு சேர்ந்தவன் இன்று ஐந்து ரூபாய் நாணயத்தை நடு நீரில் விசிறியடித்துவிட்டு, பாய்ந்து குதித்துத் தேடி எடுத்து வருகிறான். பார்க்கவே பரம சந்தோஷமாக உள்ளது.

எனக்கு மல்லாக்கப் படுத்து நீந்துவதில் பெருவிருப்பம் உண்டு. முன்பெல்லாம் அநாயாசமாக முழுக்குளத்தை மல்லாக்கப் படுத்தவாறே சுற்றி வருவேன். ஆனால் இப்போது எத்தனை முயற்சி செய்தாலும் அது மட்டும் முடிவதில்லை. ஏனென்றே தெரியவில்லை. கால்களும் கரங்களும் சரியாகவே இயங்குகின்றன. ஆனாலும் தேகமானது ஒரு தெர்மாகோல் பந்து போல, போட்ட இடத்திலேயே மிதக்கிறது. நாளைக்கு இந்தத் தடையை உடைத்தெறிய வேண்டுமென்று சபதம் பூண்டிருக்கிறேன்.

நிற்க. இந்த விடுமுறையை வீணாக்காமல் என் மகளையும் பயிற்சியில் சேர்த்து, இரு வாரங்களாக தினமும் உடன் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறேன். அவளும் ஆ ஊ என்று அலறிக்கொண்டுதான் இருந்தாள். இன்று அநாயாசமாக முழுக்குளத்தை நீந்திக் கடக்கிறாள். ஏழடியில் சர்வ அலட்சியமாகக் குதித்து சைக்ளிங் செய்கிறாள். பார்த்துப் பார்த்துப் புல்லரித்துப் போகிறேன்.

நீச்சல் ஒரு உடற்பயிற்சியோ இல்லையோ. மிகச் சிறந்த தியானம். குளத்தில் இருக்கும் ஒரு மணி நேரமும் நீரையும் நீந்துவதையும் தவிர வேறெதையுமே நினைப்பதில்லை. அடுத்த ஜென்மத்தில் மீன்பிடிப்பாளர்கள் இல்லாத ஏதேனுமொரு க்ஷேத்திரத்தில் உள்ள குளத்தில் மீனாகப் பிறக்க ஆசையாக இருக்கிறது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி