வெயிலோடு விளையாடு

சென்னையில் வெயில் வாட்டத் தொடங்கிவிட்டது. இம்மாதமும் அடுத்த மாதமும் எப்படிப் போகப்போகிறது என்றே தெரியவில்லை. இப்போதே ஆங்காங்கே வெயில் சார்ந்த வியாதிகள் தலையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இம்முறை சென்னைவாசிகள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்.

நலம் வெளியீடுகளின் ஆசிரியர் ஆர். பார்த்தசாரதி, தமிழ் பேப்பரில் கத்திரிக் குறிப்புகள் எழுதியிருக்கிறார். இதெல்லாம் படிக்க நன்றாக இருக்கும்; பின்பற்ற முடியுமா என்று மேல்மனம் ஒரு கேள்வி கேட்கும். கொன்றுவிடுங்கள். பின்பற்றுவதே வெயிலுக்கு நல்லது.

நான் கடைப்பிடிக்கும் சில எளிய வழிகள்:

எக்காரணம் கொண்டும் கண்ட கெமிக்கல் கலந்த சோப்புகளை உபயோகிப்பதில்லை. இவ்வுலகில் அபரஞ்சிக்கு நிகரான ஒரு சோப் கிடையாது என்பது என் தீர்மானம். ஏற்கெனவே இது குறித்து எழுதியிருக்கிறேன். நல்ல செங்கல் கட்டி சைஸுக்கு இருக்கும். ஒரு சோப்பாகப்பட்டது, என்ன தேய் தேய்த்தாலும், எருமையையே குளிப்பாட்டினாலும் ஒரு மாதத்துக்குக் குறையாமல் வரும். நன்கு நுரைக்கும். நல்ல வாசனையும் அளிக்கும். தேகத்தில் நெடுநேரம் அவ்வாசனை இருக்கும். சரும வியாதிகள் வரவிடாமல் பாதுகாக்கும் அருமையான காதி சோப் இது. முயற்சி செய்து பார்க்கலாம்.

கற்றாழை ஜெல் என்ற ஒன்று காதியில் கிடைக்கிறது. சாதாரண நாட்டு மருந்துக் கடைகளிலும் இருக்கும். குளிக்குமுன் அதை முகத்தில் பூசிக் குளிப்பது நல்லது. ஆஃப்டர் ஷேவிங் லோஷனாக நான் இதையே பலகாலமாகப் பயன்படுத்தி வருகிறேன். வெயில் காலத்தின் கல்யாண குணங்களுள் ஒன்றான சூட்டுக்கட்டி வருவதை இது தடுக்கும்.

ஹிந்தி நடிகர் கோவிந்தாவால் புகழ்பெற்ற நவரத்தினத் தைலம் வாங்கி வைத்துக்கொண்டு உச்சந்தலையில் கரகரகரவென்று நாலு தேய் தேய்த்துப் பத்து நிமிடம் காத்திருந்து குளித்துப் பாருங்கள். கண்ணுக்கு ரொம்பக் குளிர்ச்சியாக இருக்கிறது. குளித்து ரொம்ப நேரத்துக்கு ஃப்ரெஷ்ஷாக உணரமுடிகிறது.

மகாராஜாவின் செங்கோல் மாதிரி இருக்குமிடத்தில் எனக்கெதிரே ஒரு முழு பாட்டில் நிறையத் தண்ணீர் எப்போதும் வைத்துக்கொண்டுவிடுகிறேன். பத்து நிமிடங்களுக்கு இரண்டு மிடறு தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்கிறேன். ஒரு நாளைக்குக் குறைந்தது நான்கு முறையாவது பாட்டிலை நிறைத்துக்கொள்கிறேன்.

கூடுமானவரை பகலில் வெளியே போவதைத் தவிர்த்துவிடுகிறேன். அலுவலக நேரத்தையும் காலை ஆறு மணி என்று மாற்றிக்கொண்டிருப்பதால் வெயில் பார்ப்பதில்லை. மதியம் வீட்டுக்குப் போகிற பயண நேரம் கொடுமையானதுதான். ஆனாலும் பத்தே நிமிடங்கள். டிராஃபிக் குறைவாக இருக்கிறது. ஓடியே போய்விடுகிறேன்.

மதிய உணவில் நிச்சயமாக வெள்ளரிக்காய் அல்லது வாழைத்தண்டு பச்சடி, ஏதாவது ஒரு கீரை இருக்கும். சாப்பிட்டுவிட்டு ஒரு சிறுதுயில். மாலை எழுந்து மூடிருந்தால் குளித்து, இல்லாவிட்டால் முகம் கழுவி வேலை பார்க்க உட்கார்ந்துவிடுகிறேன். நல்ல பெரிய சைஸ் தர்பூஸ் பழங்கள் நாற்பது ரூபாய்க்குக் கிடைக்கின்றன. இரண்டிரண்டாக வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. நான் பழமாகச் சாப்பிடுவதில்லை. ஜூஸ் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துச் சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கிறது. மாம்பழம் கிடைக்க ஆரம்பித்துவிட்டதா பாருங்கள். மாம்பழ ஜூஸும் குளிர்ச்சி தரக்கூடியதே. [மா சூடு என்று யாராவது சொன்னால் காதில் போட்டுக்கொள்ளாதீர்கள்.]

குளிர்ப் பிரதேசங்களுக்குச் சுற்றுலா போவதெல்லாம் ஓரிரு நாள்களுக்குச் சரி. இருக்குமிடத்தில் சூட்டைக் குறைக்க என்ன முடியுமோ பாருங்கள். ஒரு எட்டு முழ வேட்டியை நனைத்து அறையின் குறுக்கே உலர்த்தினால்கூட நல்ல பலன் இருக்கும்.

வெயில் காலத்தின் பெரிய தண்டனை, நீண்ட நேரம் சுறுசுறுப்புடன் வேலை பார்க்க முடியாது என்பது. கத்திரி தொடக்கமே மிகுந்த அயர்ச்சியையும் சோர்வையும் தருவதாக இருக்கிறது இம்முறை. நல்ல ஃபாஸ்ட் பீட்டில் ஓடக்கூடிய இசையை மட்டுமே இப்போதெல்லாம் ஒலிக்கவிட்டு வேலை பார்க்கிறேன். உத்வேகமளிக்கக்கூடிய இசை என்பது எனக்கு நுஸ்ரத் ஃபதே அலிகானும் எல் ஷங்கரும். இரவுகளில் இந்த இருவரைத் தான் திரும்பத் திரும்பக் கேட்கிறேன்.

ஏசி அறைக்குள் உட்கார்ந்து வேலை பார்ப்பவனுக்கே இத்தனை ஜபர்தஸ்துகள் வேண்டியிருக்கின்றன என்றால் வெளியே அலைந்து திரிந்து உத்தியோகம் பார்க்கிறவர்கள் பாடு எத்தனை சிரமம். அவர்கள் அத்தனை பேரும் இந்தக் கொடும் வெயிலினால் உண்டாகக்கூடிய கேடுகள் ஏதுமின்றி இந்நாள்களைக் கடக்க எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.

Share

10 comments

  • வடை எனக்கே 🙂 விருதுக்குப் பிறகும் மொக்கை பேணுதல் வருத்தம் தருகிறது. அதனால் டெலீட் செய்கிறேன். – பாரா

  • ///அலுவலக நேரத்தையும் காலை ஆறு மணி என்று மாற்றிக்கொண்டிருப்பதால்//

    ஆளில்லா அலுவலகத்தில் பாரா வேலை செய்வதையும்,
    மதியத்திற்கு பிறகு…
    பாரா இல்லா அலுவலகத்தில் ஆட்கள் வேலை செய்வதையும்,
    யாவரும் காண எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன். 🙂

  • வணக்கம் பாரா! சிறப்பான இடுகை,சரியான சமயத்தில்.ஆனால் சாப்பாட்டில் தயிரும்,குடிக்க மோரும் இதில் விட்டுப்போனது பெருங்குறை (அட்லீஸ்ட் எனக்கு).கடும் கோடை வெய்யிலில் கோக் அருந்தும் வாலிப,வயோதிக அன்பர்களுக்கு நீங்கள் ஏதேனும் சொல்லியிருக்கலாம்.

  • //ஏசி அறைக்குள் உட்கார்ந்து வேலை பார்ப்பவனுக்கே இத்தனை ஜபர்தஸ்துகள் வேண்டியிருக்கின்றன என்றால் வெளியே அலைந்து திரிந்து உத்தியோகம் பார்க்கிறவர்கள் பாடு எத்தனை சிரமம். அவர்கள் அத்தனை பேரும் இந்தக் கொடும் வெயிலினால் உண்டாகக்கூடிய கேடுகள் ஏதுமின்றி இந்நாள்களைக் கடக்க எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.//

    இந்த மனிதாபிமானம்தான் நல்ல எழுத்துக்கு அடிப்படையான விசயம். சிறந்த எழுத்தாளர்கள் எல்லோரினிடத்திலும் இதனைப் பார்க்க முடியும்.

    நன்றி பாரா!

    ஒரு நாளின் பலமணி நேரத்தை வெயிலில் கழித்து திரும்பும் உங்களின் ஒரு சேல்ஸ்மேன் வாசகன்.

    ரத்தினசாமி.

  • ராகவன் ஸார்,
    வருஷாவருஷம் “இந்த வருஷம் வெயில் ஜாஸ்தி” குரல்கள் கேட்கும் என நினைக்கிறேன்!
    ஒரு இருபது, முப்பது வருடங்களுக்கு முன் வந்த விகடன் ஜோக்குகளில், துணுக்குகளில் கூட இப்படித்தான் இருக்கும் என படுகிறது!

  • நண்பரே,

    மிக பயனுள்ள பதிவு.நன்றிகள் பல.
    உடல் சூட்டை தணிக்க மெந்தயமும் நல்ல மருந்து.
    இரவில் சிறிது தயிரில் ஊறவைத்த மெந்தயத்தை
    காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்,உடல் சூடு
    நன்கு தணியும்.மேலும் காதி பற்றிய உங்கள் இணைப்பு பதிவையும் படித்தேன்
    சில ஐயங்கள்
    இங்கு மாதாந்திர சாமான் வாங்கிவிட்டு வீட்டுக்கு எடுத்து வருவது எப்படி?
    ஆட்டோ என்றால் “வால்மார்ட்”டில் வாங்கிய செலவு ஆகி விடும்!!
    ஆனால் நிச்சயமாக சின்ன விஷயங்களை try செய்வேன்.
    மேலும் ஒரு விஷயம்..
    உலகிலேயே அதிக மக்கள் நடமாடும் இடம் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு.அங்கு ஒருவர் 2’x2′ கடையில் ஈர்க்குச்சி விற்றால் கூட ஒரு 15 பேர் அங்கு இருப்பர்.ஆனால் அந்த தெருவிலேயே ஒரே ஒரு customer கூட இல்லாத கடை என்றால் அது Gramyodyog Bhavan தான்!

  • மிக எளிமையாக பயன் படும் வகையில் எழுதி உள்ளீர்கள். ஆறு மணிக்கே வேலைக்கு வர ஒப்பு கொள்கிறார்களா? கிழக்கு வாழ்க. (நாங்கல்லாம் எப்ப போனாலும், இரவு கிளம்ப நேரம் ஆகிடும். வேலை அப்படி ம்ம்)

  • //ஏசி அறைக்குள் உட்கார்ந்து வேலை பார்ப்பவனுக்கே இத்தனை ஜபர்தஸ்துகள் வேண்டியிருக்கின்றன என்றால் வெளியே அலைந்து திரிந்து உத்தியோகம் பார்க்கிறவர்கள் பாடு எத்தனை சிரமம். அவர்கள் அத்தனை பேரும் இந்தக் கொடும் வெயிலினால் உண்டாகக்கூடிய கேடுகள் ஏதுமின்றி இந்நாள்களைக் கடக்க எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.//

    அற்புதமான வரிகள் சார். நானும் உங்களைப்போல அடிக்கடி இப்படி நினைத்துக்கொள்வேன்.

  • எங்கள் (கோவை) பகுதியில் தொடர் மழை மற்றும் எப்போதும் மேற்கு‍ தொடர்ச்சி மலைச் சாரல் காற்றால் இந்த கோடையை ஒருவாறு‍ சமாளித்துக் கொண்‌டு‍ இருக்கிறோம். சென்னைவாசிகளை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!