மதனசுந்தர ஜவ்வாது பாகவதர்

 

அத்தியாவசியப பொருள்களின் விலைகள் நம்பமுடியாத உயரங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், சென்னையில் வசிப்பவர்கள் ஒரு மாறுதலுக்கு அண்ணாசாலை காதி கிராமோத்யக் பவனை முயற்சி செய்து பார்க்கலாம். வெளிச் சந்தையில் எந்தப் பொருள் என்ன விலையாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். காதியில் அந்த விலையில் குறைந்தது பதினைந்து சதவீதமாவது குறைவாக உள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், கடுகு, சீரகம், மிளகு போன்ற பொருள்கள், குளிக்க, துவைக்க சோப்புகள், தைலங்கள், வாசனை திரவியங்கள், குழம்புப் பொடி, ரசப்பொடி, மிளகாய்ப்பொடி ரகங்கள், மூலிகை மருந்துகள், பினாயில் போன்ற பொருள்கள் – இதுதான் என்றில்லை. எதுவும் கிடைக்கிறது. கண்டிப்பாக, மிகத் தரமான பொருள்கள். சற்றும் சந்தேகமே வேண்டாம்.

அரசு இயக்கும் அமுதம் அங்காடிகளிலும் மளிகைப் பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பது உண்மையே. ஆனால் பொருள்களின் தரத்தைப் பொருத்த அளவில் காதி எட்ட முடியாத உயரத்தில் உள்ளது என்பது அநேகமாகப் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நான் காதிக்குச் செல்லும்போதெல்லாம் அநேகமாக அந்தப் பெரிய மாளிகையினுள் கொள்முதலுக்குச் செல்லும் ஒரே மனிதன் நாந்தான் என்னும் உணர்வு ஒவ்வொரு முறையும் ஏற்படுகிறது. மக்கள் பெரும்பாலும் அந்தப்பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை. காதி என்றால் கதர் ஜிப்பா மட்டும் என்னும் எண்ணம் எப்படியோ மனத்தில் படிந்துவிட்டிருக்கிறது. இது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது.

கொஞ்சகாலம் முன்பு – சரியாகச் சொல்வதென்றால், காந்தியின் சில கட்டுரைகளைப் படித்துவிட்டு, கிராமப் பொருளாதார மேம்பாடு எப்படி ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதைப் பற்றித் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். காந்தி முப்பதுகளில் எழுதிய கட்டுரைகள் அவை. கிராமப் பொருளாதார மேம்பாடு என்பது முன்னொரு காலத்தில் சரோஜ் நாராயண் சுவாமி மற்றும் ஜெயா பாலாஜியின் குரல்களில் உதித்து, அதிலேயே மரணமடைந்துகொண்டிருந்த ஒரு விஷயம் என்பது நினைவுக்கு வந்தது. இப்போதெல்லாம் செய்திகளில்கூட இந்தப் பிரயோகத்தைக் காணமுடிவதில்லை.

கடந்தவாரம் புதிய தலைமுறை வார இதழில் மாலன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்தியாவின் மக்கள் தொகை முப்பது கோடியாக இருந்தபோது இங்கே எத்தனை பருப்பு உற்பத்தி செய்யப்பட்டதோ, அதே அளவுதான் இன்றைய நூற்று முப்பது கோடி அளவுக்கும் உற்பத்தியாகிறது. தேவை அதிகமாகவும் உற்பத்தி மிகக் குறைவாகவும் உள்ள நிலையில் இறக்குமதி தவிர நாம் செய்யக்கூடியது வேறில்லை. எனவே அதைச் செய்கிறோம். தேவையான அளவில் நாம் சமரசம் செய்வதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிடுகிற பட்சத்தில் இறக்குமதி செய்யும் பொருள்களின் விலை கணிசமாக உயரத் தொடங்கிவிடுகிறது. துவரம் பருப்பு கிலோ நூறு ரூபாயைத் தொடும்போது அது செய்தியாகிறது. சாம்பார் காய்ச்சி, கலந்து அடித்தகையோடு அது மறந்தும் விடுகிறது. விலையேற்றத்துக்கு ஒருவாறு பழகிவிடுகிறோம்.

ஆனால் எந்தளவுக்கு இந்தப் ‘பழகிவிடுதல்’ சாத்தியம்? இதே நூறு ரூபாய் என்பது இருநூறாக ஆகும்போது என்ன செய்வோம்? அப்போது நமது வருமானமும் நூறு சதவீதம் அதிகரித்திருக்குமானால் ஒன்றும் செய்யத் தோன்றாது. ஆனால் நூறு சதவீத வருமான அதிகரிப்பு சாத்தியமா? நூறு சத வருமான அதிகரிப்பு என்பதுதான் சாத்தியமில்லையே தவிர நூறு ரூபாய் துவரம்பருப்பு, இருநூறு ஆகாது என்று சத்தியமாகச் சொல்ல முடியாது. ஆகும். ஏனெனில் நமக்குத் தேவை இருக்கிறது. அதற்கேற்ற அளவு உற்பத்திப் பெருக்கம் இங்கே இல்லை.

காரணம் விவசாயிகளுக்குத் தரப்படும் கொள்முதல் விலை மிகக் குறைவாக இருக்கிறது என்பது தொடங்கி, கிராமப்புற மக்கள் விவசாயத்தை விடுத்து மாற்றுத் தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து வருவதுவரை பல உண்டு. கிராமப்புற மேம்பாடு என்பது பேச்சளவிலேயே பெரும்பாலும் தேங்கிவிடுவதால் கிராமப்புற மக்கள் வெறுத்துப் போய் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து விடுவது அதிகரித்து வருகிறது. செய்வதற்கு ஆளில்லாமல் விவசாயம் குன்றுவதால், வேறு வழியில்லாமல் இறக்குமதி செய்கிறோம். எனவே சொல்லும் விலையைக் கொடுத்தாக வேண்டியுள்ளது. பெட்ரோல் ஆனாலென்ன, பருப்பானால் என்ன? இறக்குமதி என்றால் கண்டிப்பாக ப்ரீமியம் விலைதான்.

இது மட்டும்தான் காரணம் என்றில்லை. செலவுகளைக் கொஞ்சம் குறைப்பதற்காகவாவது கொஞ்சநாள் சுதேசிச் சரக்குகளை மட்டும் உபயோகித்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. தவிரவும் அவசியமே என்றாலும் ஆடம்பரமாகத் தோற்றமளிக்கக்கூடிய எதையும் பயன்படுத்தாதிருந்து பார்க்கலாம் என்றும் நினைத்தேன். அதன் முதல் படியாக ஒன்றரை வருடங்களுக்கு முன்பு என் காரை விற்றேன். வாரத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தேன். மாதம் எப்படியும் ஐந்து முதல் ஆறாயிரம் ரூபாய் அதற்குச் செலவாகிக்கொண்டிருந்தது. தவிர ஓட்டுநர் சம்பளம் ஆறாயிரம் ரூபாய். [நானே ஓட்டுவதென்றால் தினசரி ஒரு கொலை வழக்குக்காக நீதிமன்றம் செல்ல நேரிடும்.]

ஆனால் கார் எனக்கு அவசியமாக இருந்தது. என் புறநகர் வீட்டிலிருந்து சென்னைக்குள் பேருந்து அல்லது ரயிலில் வந்து செல்வது என்பது மிகுந்த அயற்சியை அளிக்கக்கூடிய விஷயம். வந்து போகலாம். பெரிய விஷயமில்லை. ஆனால் வீடு திரும்பினால் சாப்பிட்டுவிட்டுப் படுக்கத்தான் தோன்றும். இரவெல்லாம் வேலை பார்க்க முடியாது. அதனால்தான் கார் வாங்கினேன்.

காரும் கூடாது, என் வேலையும் கெடக்கூடாது என்று தீர்மானித்தபோதுதான் சென்னைக்குள்ளே குடிமாறி வந்து, காரை விற்று ஸ்கூட்டர் வாங்கினேன். இப்போது என் மாத பெட்ரோல் செலவு அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் மட்டுமே.

இந்தச் சிக்கனம் மூலம் சாத்தியமான சேமிப்பு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. கார் இல்லாததால் நான் ஒன்றும் குறைந்துபோய்விடவில்லை. மாறாக என் கையிருப்பு அதிகரித்தது. எனில், இன்னும் சில விதங்களிலும் இதனைப் பிரயோகம் செய்து பார்க்கலாமே?

காதியில் நான் முதல் முதலில் வாங்கிய பொருள் சோப்பு. அதுநாள் வரை டெட்டால் சோப் தவிர வேறெதையும் பயன்படுத்த விரும்பாதவன் நான். ஒரு சோப் எனக்கு ஐந்து அல்லது ஆறு நாள்களுக்கு மட்டுமே வரும். மாதம் 150 ரூபாய் சோப்புக்கே போய்க்கொண்டிருந்தது. காதிக்குச் சென்றபோது அபரஞ்சி என்றொரு சோப்பைப் பார்த்தேன். நல்ல கோவிந்தா மஞ்சள் நிற அட்டைப்பெட்டி. உள்ளே டேபிள் வெயிட் மாதிரி கனமாக, பச்சை நிறத்தில் ஓவல் வடிவ அபரஞ்சி. துளசியின் மணம், நிறம், குணம் கொண்டது. விலை ரூபாய் இருபது மட்டுமே. சரி ஒன்று வாங்கி உபயோகித்துப் பார்க்கலாம் என்று வாங்கினேன்.

உண்மையிலேயே அபரஞ்சி உள்ளம் கொள்ளை கொள்ளக்கூடிய சோப்பாக இருந்தது. அபாரமான வாசனை கொண்ட ஆரோக்கிய சோப் அது. தவிரவும் ட்யூராசெல் பேட்டரி முயல் மாதிரி அது பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கும். குறைந்தது ஒரு சோப் ஒன்றரை மாதங்களுக்கு வருகிறது. ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட சோப் அது.

அடுத்தது வாசனாதி திரவியங்கள். நான் நாலாயிரம் ரூபாய் வீட்டுக்குச் சம்பளமாக எடுத்துவந்த காலத்திலிருந்தே பாடி ஸ்ப்ரே, பர்ஃப்யூம் வகையறாக்கள் இல்லாமல் வெளியே கிளம்பாத ஜில்பான்ஸ் பேர்வழி. விதவிதமான ஸ்பிரேக்கள், அபாரமான விலையில் மட்டுமே கிடைக்கும். ஒரு போதும் அது பற்றிய விமரிசனம் எனக்கு இருந்ததில்லை. யாராவது சுட்டிக்காட்டினாலும் பொருட்படுத்த மாட்டேன். கொசு மருந்துக்காரன் பீய்ச்சிவிட்டுப் போவதுபோல தினமும் குளித்துவிட்டு தேகமெங்கும் பாடி ஸ்பிரேவால் மறுகுளியல் போடாமல் வெளியே கிளம்பமாட்டேன். எனக்கு எப்போதும் வாசனையாக இருந்தாக வேண்டும். அப்போதுதான் எழுத மூட் வரும்.

காதியில் எனக்கு ஜவ்வாது அறிமுகமானது. வெறும் முப்பது ரூபாய். ஒரு சிறிய பாட்டில் ஜவ்வாது [பொடி, க்ரீம் இரு விதமாகவும் கிடைக்கும்.] ஊரைக்கூட்டும் நறுமணம் கமழ்வது. இதுவும் ஒரு மாதம் வரக்கூடியது. தவிரவும் இயற்கையான பொருள். ரசாயன சேர்மானம் இல்லாதது. எனக்கு ஜவ்வாது வாசனை ரொம்பப் பிடித்துவிட்டது. அலுவலகத்தில் முகில் எனக்கு மதன சுந்தர ஜவ்வாது பாகவதர் என்று பட்டப்பெயர் வைத்தான். அந்தக் கிண்டலும் கமகமவென்றே இருப்பதாகப் பட்டது.

அந்தக் காலத்து பாகவதர்கள் உபயோகித்தார்கள் என்பதனாலேயே ஜவ்வாதை நாம் நிராகரிப்பதும், அது பழம்பெருச்சாளிகளின் வாசனைப்பொருள் என்று ஒதுக்கிவைப்பதும் அபத்தம் என்று தோன்றியது. பாகவதர் கிராப்பும் ஜெமினி கணேசன் பேண்ட்டும் மறுஃபேஷனாகிவிட்ட காலத்தில் பாடி ஸ்ப்ரேக்களின் இடத்தில் ஜவ்வாதைத் திரும்பக் கொண்டுவைப்பதில் என்ன பிழை? எனக்குத் தெரிந்து ஒன்றுமில்லை. எனவே ஜவ்வாதுக்கு மாறினேன். இருநூறு ரூபாய் பாடி ஸ்ப்ரே இடத்துக்கு முப்பது ரூபாய் ஜவ்வாது.

இது கொடுத்த பரவசம் கொஞ்சநஞ்சமல்ல. நான் காதியின் காதலனாகிப் போனேன். அங்கே வேறென்னென்ன கிடைக்கின்றன என்று கவனமாக ஆராயத் தொடங்கினேன்.

எதுவும் கிடைக்கும். அண்ணாசாலை காதி பவன் என்பது ஸ்பென்சர் ப்ளாசா, சிடி செண்டர் போலவே ஒரு நல்ல ஷாப்பிங் மால். ஆனால் சுதேசி ஷாப்பிங் மால். உள்ளே நுழையும்போதே நன்னாரி, எலுமிச்சை ஜூஸ்கள், பதநீர்க் கடைகள் இருக்கின்றன. ஆறு ரூபாய் நன்னாரி ஜூஸுக்கு இன்னொரு பெயர் அமிர்தம். ஜில்லென்று அருந்திவிட்டு உள்ளே போகலாம். நிதானமாக எடை பார்த்துவிட்டு, ரத்த அழுத்தம் பரிசோதித்துக்கொண்டு[பத்து ரூபாய்.] கடை கடையாக ஆராயலாம். மளிகைப் பொருள்கள் கிடைக்கும் விசாலமான ஹால் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. எளிதாகப் பார்த்து வாங்க வசதியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எடுத்துப் போட்டுக்கொண்டு போனால் வினாடிகளில் கம்ப்யூட்டர் பில்லிங். கடன் அட்டை வாங்கிக்கொள்கிறார்கள். இந்த வளாகத்துக்குள்ளேயே சித்த மருத்துவப் பொடிகள், லேகியங்கள், தைலங்கள் போன்றவையும் இருக்கின்றன. விற்பனைப் பிரதிநிதிகள் ஒவ்வொன்றையும் எடுத்து மிக அழகாக விளக்குகிறார்கள்.

உங்களுக்கு ‘பிராண்ட்’ மாயை மட்டும் இல்லை என்றால் காதியில் இன்னதுதான் கிடைக்கும் என்றில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம். விதவிதமான செருப்புகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பைகள், பர்ஸ்கள், பெல்ட்கள், முத்து, பவழம், மணி மாலைகள், ஸ்படிகம், ருத்திராட்ச மாலைகள், வேட்டி, துண்டு, சேலைகள், படுக்கைகள், படுக்கை விரிப்புகள், தலையணை, போர்வைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், சிற்பங்கள், சிலைகள், இருக்கவே இருக்கிறது ஜிப்பாக்கள்.

முற்றிலும் உள்நாட்டில், கிராமப்புறங்களில், பெரும்பாலும் பெண்களால் கைத்தொழிலாக மேற்கொள்ளப்படும் இந்தத் தயாரிப்புகள் நம்பமுடியாத அளவுக்குத் தரமாகவும் விலை மலிவாகவும் உள்ளன. இவை பரவலாகாததற்குக் காதியும் ஒரு காரணம். அவர்கள் முழு வர்த்தகமாக இதனைச் செய்யவில்லை என்பதனால் பல இடங்களில் கிளைகள் இருந்தும் எல்லா இடங்களிலும் இதே அளவுக்கு எல்லா பொருள்களும் கிடைக்கும்படி வைப்பதில்லை. சென்னை நகரில் உள்ள பல காதி பவன்களில் வெறும் ஜிப்பாக்களும் சபரிமலை சீசன் வேஷ்டிகளும் மட்டும்தான் இருக்கின்றன. அற்புத சோப் அபரஞ்சி அண்ணாசாலை காதி தவிர வேறு எங்குமே இருப்பதில்லை. [லாயிட்ஸ் சாலை காதி பவனில் ஒருவேளை இருக்கலாம். நான் போகவில்லை.]

எனவே புறநகர்வாசிகளுக்கு இது பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பதில் வியப்பில்லை. சென்னைக்குள்ளே குடியிருப்பவர்கள் மட்டுமாவது இந்த இடத்துக்கு முடிந்தபோது போய்வரலாம். மாதம் ஒருமுறை மளிகைப் பொருள் வாங்கவாவது போவது என்னும் வழக்கத்தை வைத்துக்கொண்டால், அந்தக் குறிப்பிட்ட வகையில் கணிசமான சேமிப்பு நிச்சயம் சாத்தியமாகும். தமிழகத்தின் ஒவ்வொரு பெருநகரத்திலும் அநேகமாக இம்மாதிரி ஒரு பெரிய காதி அங்காடியாவது நிச்சயம் இருக்குமென்று நம்புகிறேன்.

தொலைக்காட்சி திணிக்கும் பிராண்ட் போதையிலிருந்து விடுபட்டு சுதேசித் தயாரிப்புகளை உபயோகிக்கத் தொடங்குவது நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.


இது தொடர்புள்ள அருள்செல்வனின் கட்டுரை ஒன்று இங்கே.

Share

55 comments

 • காதிகிராஃப்ட் என்பது தமிழகம் சார்ந்த அமைப்பா? சின்ன வயதில் அப்பா எங்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி முதற்கொண்டு வெண்ணெய், பண்டிகை ஆடைகள் சகலமும் காந்தி பொம்மை வைத்த கடையில்தான் வாங்கித்தருவார். ஆனால் இப்போது பெங்களூரிலோ, முன்பு ஹைதராபாதிலோ எங்கும் இதைப் பார்த்த நினைவில்லை.
  – என். சொக்கன்,
  பெங்களூரு.

  • சொக்கன், காதி குறித்த உனது அனைத்து சந்தேகங்களையும் http://www.kvic.org.in/v4/homepage.asp இந்தத் தளம் தீர்த்துவைக்கும் என்று நினைக்கிறேன்.

 • பெங்களூரில் முக்குக்கு முக்கு காதி பந்தார் என இருக்கிறது. துணிகள்,பாய்கள், சில வாசனை பொருள்கள் வாங்கலாம். எல்லாவற்றிலும் எல்லாமும் கிடைக்காது எனினும் பரவாயில்லை. தமிழக அளவில் இங்கு காதிக்கு சிறந்த கட்டமைப்பு இல்லை. மெஜஸ்டிக் ஏரியாவில் இருக்கும் காதிதான் ஒரு பார்வையில் சென்னை காதிகடைகளின் ரேஞ்ச் கிடைக்கும் இடம்.மளிகை சாமான்கள் தமிழகத்தில்தான் சிறப்பாக இருக்கும்.
  அருள்
  பலகால காதி வாடிக்கையாளன்.

  • அன்புள்ள அருள், கட்டுரை வாசித்தேன். இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். //இன்றைக்கு நான் ஒரு காந்தீய வாதி அல்லன். // என்னும் வரியின் முன்கதையையும், ஏன் இன்றைக்கு இல்லை என்பதற்கான காரணத்தையும் அறிந்துகொள்ள விருப்பம். ஏனெனில் எனக்கு காந்தி பிடிக்காது என்று சில அபத்தக் காரணங்களுக்காகக் கல்லூரி நாள்களில் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு, அவரை வாசிக்கத் தொடங்கியபிறகு முற்றிலும் மாறிப்போனவன் நான். என்னளவில் காந்தி நமக்குத் தண்ணீர் போல. கோககோலா இல்லாமல் நம்மால் வாழமுடியும். தண்ணீர் இல்லாது முடியாது. காந்தியின் மீதான அனைத்து விமரிசனங்களுமே அவரைப் புரிந்துகொள்ளாமையின் விளைவுதான் என்று கருதுகிறேன்.

 • சொக்கன் ஸார் பழைய ஏர்போர்ட் ரோட்டில் இருக்கே ஒண்ணு.

 • எங்க வீட்டுக்கிட்ட சீதாலெட்சுமி மாமி இருந்தாங்க. அவங்க இந்த காதி கடையோட ரொம்ப ஆஸ்தான வாடிக்கையாளர். அவங்க இறந்த பொழுது எங்களுக்கெல்லாம் கூட துணி எடுத்துக் குடுத்தாங்க. ஆனா அவங்க நினைவால காதியில் இருந்துதான். அப்போதான் ஒரு பெரியவர் சொன்னாரு….
  ..
  ..
  ..
  …..
  ..
  செத்தும் குடுத்தா சீதா காதி!!

 • பாரா : நல்லது. ஆனால், காதி யிலே முக்கியமான சிக்கலே, கஸ்டமர் யார், சேல்ஸ்மென் யார் என்று அடிக்கடி ஏற்படும் குழப்பமே. நீங்கள் தேடிச் செல்லும் பொருளை, உடனடியாகக் கண்டு பிடித்து வாங்க முடிந்தால், அது உங்கள் அதிர்ஷ்ட தினம். சர்க்கார் நிறுவனம் என்பதாலே, அங்கே வேலை செய்பவர்கள் எல்லாம், தங்களை இன்கம்டாக்ஸ் அதிகாரிகளாகவும், லோன் அப்ரூவல் செய்யும் வங்கி அதிகாரிகளாகவும் நினைத்துக் கொள்வது ஒரே காமெடியாக இருக்கும்.  retailing என்பது பலவித நுணுக்கங்கள் நிறைந்த மகாசமுத்திரம். காதி க்கும் அதற்கும் எந்த ஸ்னானப்ராப்தியும் இல்லை. எவனாவது ஒரு நல்ல இ.ஆ.ப அதிகாரி வந்து சீர்படுத்தினால் ஒழிய, விளங்காது.

 • சொக்கன் : ஆமாம், தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் கழகம் என்று நினைக்கிறேன், அந்த நிறுவனத்தின் ஒரு அங்கம் தான், காதி கிராஃப்ட். பல மாநிலங்களிலே, இது போல தனித்தனியாக அமைப்பு உண்டு.

  • பிரகாஷ், காதி என்பது ஓர் இயக்கம். அரசாங்கம் நடத்துவது. விவரங்களை இங்கே பார்க்கலாம். காதி பந்தர், காதி கிராஃப்ட், காதி கிராமோத்யக் பவன், காதி பவன் என்று இடத்துக்கு ஒரு பெயரில் இது இயங்குகிறது. அண்ணாசாலை காதியில் விற்பனையாளர்கள் மிகவும் தன்மையாக நடந்துகொள்கிறார்கள். ஒழுங்காகப் பொருள்களை வரிசைப்படுத்தி, எடுத்துக்கொடுத்து, விளக்கம் அளிக்கிறார்கள். கடையைச் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் இப்படித்தானா என்று தெரியவில்லை.

 • இந்த நிறுவனத்தின் முதலாளி யார் என்று ஒரு வார்த்தை சேர்த்திருக்கலாம் 🙂 🙂 🙂 it would have answered chokkan’s doubt

 • முற்றிலும் உண்மை 
  நாட்டின் பெருவாரியான மக்கள் இடம் போதுமான பணம் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பு நம் அனைவரிடமும் உண்டு. நல்ல விளம்பரங்கள் சுதேசி பொருட்களை இன்னும் பல மக்களிடம் கொண்டு சேர்க்கும்.
   
  அன்புடன்
  இராமச்சந்திரன்

 • நல்ல விஷயம்! பல நினைவுகளை கிளந்துவிட்டது!
   
  நான் கோவை காதியில் சந்தன எண்ணெய் வாங்குவது வழக்கம். (அப்போதே 10 அவுண்ஸ் 250ரூ) உங்களைப்போல வாசனைப்ப்ரியனென்றாலும் வயதான பெரிசுகள் உபயோகிக்கும் ஜவ்வாது, எனக்கு ஒவ்வாது! ஒரே சொட்டு சந்தன எண்ணெயை காதுக்கு பின்னால தடவினால் நாள்முழுக்க நறுமணம்!
   
  மேலும் காதியில் மட்டுமே தரமான கோலாப்பூர் செருப்புகள் கிடைக்கும்! காலேஜ் படிப்பு முடியும் வரையில் நான் கைத்தறி உடைகள்தான் அணிந்தேன் (ஆனால் கோ-ஆப்டெக்ஸ்).
   

 • கோபாலபுரம் லாயிட்ஸ் சாலையிலும் ஒரு பெரிய காதி/கதர் கடை உண்டு அங்கும் பல பொருட்கள், மதிய சாப்பாடு உண்டு, இப்போது இருக்கிறதா?. சென்னை வந்தால் அன்ணா சாலை காதிக்கு போவதுண்டு, அன்பளிப்பாக கைவினை பொருட்கள் வாங்க வேண்டிய தேவை வந்தால். காதி/கதர் கைவினைப் பொருட்கள்,சிறுதொழில்கள் தரம் குறைந்தவை அல்ல.சரியான சந்தைப்படுத்துதல் இல்லை.ஒரு காலத்தில் குடிர் என்ற சோப்பு, சக்திமால்ட் என்கிற சத்துமாவு (பாலில் கரைத்து சாப்பிட) என்றெல்லாம் விர்றார்கள்.இப்போது எப்படியோ?. அபரஞ்சி என்கிற பெயர் 19ம் நூற்றாண்டு நாவல்/1950களில் வந்த தமிழ் சினிமாவில் ராஜகுமாரியின் தோழி பாத்திரத்தின் பெயர் போல் இருப்பதால் பா,ராவிற்கு பிடித்துப் போயிற்றோ :).

  • தமிழ் அண்டர்டாக்! எனக்கு அபரஞ்சி பெயர் பிடிக்கவில்லைதான். பேக்கேஜும் கண்றாவியாகத்தான் உள்ளது. ஆனால் என்ன செய்ய? சோப்பு நன்றாக உள்ளது. போதும்.

 • அன்புள்ள ராகவன்,
  'காதி'க்கான பிரச்சாரம் என்று கிண்டலடிக்கப்பட்டாலும் கூட இன்றைய சூழ்நிலையில் மிக அவசியமான கட்டுரை. இன்று பேஷன் என்கிற பெயரில் தன்னிச்சையாக பல ஆடம்பரங்களை அவசியம் என்று கருதி உபயோகித்துக் கொண்டு வருகிறோம். சற்று சிந்தித்துப் பார்த்தாலே பல விஷயங்களி்ல் அநாவசியச் செலவு செய்துக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. மேலும் தொலைக்காட்சி விளம்பரங்களும் மாம்பழம் என்றாலே குளிர்பானம் என்பது போன்று பல சமாச்சாரங்களை மூளைச் சலவை செய்கிறது. பன்னாட்டுக் குப்பைகள் நம் தலையில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சுதேசிப் பொருட்களை மாத்திரமே உபயோகிப்பது என்கிற பழைய பிரச்சார காலத்திற்கு மீண்டும் செல்லலாம். தவறேயில்லை.

  • சுரேஷ், நன்றி. காதிக்கு யாரும் இதுவரை பிரசாரம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் அவசியம் செய்யவேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது. கிண்டல்கள் விரைவில் காணாமல் போய்விடும். அதைப்பற்றி நாம் கவலையே கொள்ளவேண்டாம்.

 • சனிக்கிழமை மாலை அண்ணாசாலை காதிகிராப்ட் சென்றேன்.
  இக்கட்டுரையில் சொல்லப்பட்டவை அனைத்தையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
  காதியில் ஒரே பிரச்னை என்னவென்றால், எட்டு மணிக்கு மூடிவிடுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. 🙁

 • Even U will get lunch at very cheap rate. கை குத்தல் அரிசி. Delicious food. but at roof. try once and write in blog. but u ahve to be there at 1200 hrs.

 • நாங்கள் இப்பவும் ஒரு சில பொருட்கள் காதியில் தான் வாங்குகிறோம். ஆனால், சிதம்பரம் காதியில் மளிகைப்பொருள்களெல்லாம் கிடைக்குமான்னு தெரியலை. ரீட்டெயிலிங் பற்றி நீங்கள் சொன்னது 100% சரி. ஒரு செட் கதர் வேட்டி சட்டை வாங்கி பில் போட்டு பைசா அடைப்பதற்குள் தாவு தீர்கிறது.
  ப்ராண்ட் மாயைன்னு சொன்னாலும் சில ப்ராண்டுகளின் தரத்திற்காக ப்ராண்ட் காதலனாகவே இருக்கிறேன். கொஞ்சம் காலம் ஆனால் சரி ஆகலாம்.
  ஒரு சோப் நாலு நாளைக்கா? குளிப்பிங்களா அல்லது கரைப்பிங்களா?

 • நன்றாக இருக்கிறது மறு அறிமுகம் போல! ப்ராண்ட் மோகம் ஜாஸ்தியானதால் இது கஷ்டம் தான்!

 • During lunch time at tress U will get delicious meals with very normal rate, கை குத்தல் அரிசி, and all other traditional tamil cusine. but the que will be very long. It starts at 1200 i belive. Heavy Havy rush. U would not find a food in that price in chennai.
  Try once and write about that experence…..

 • >>இன்றைக்கு நான் ஒரு காந்தீய வாதி அல்லன். >>ஏன் இன்றைக்கு இல்லை.
  —-
  இதை விரிவாகத்தான் சொல்ல முடியும். இருந்தாலும் சில புள்ளிகள்:
  1. சிந்தனையாளர்களுள் காந்திதான் இன்னும் என்னுடன் தொடர்ந்து அதிகம் உரையாடுபவர். தொடர்ந்து படிக்கிறேன். இருந்தாலும் சேரும் புள்ளிகளைவிட விலகும் புள்ளிகள் எண்ணிக்கையில் அதிகம்.
  2. அவரூடைய சிந்தனை வழிமுறைகளில் எனக்கொன்றும் பிரச்சினையில்லை. அந்த விதத்தில் அவர் ஒரு மகத்தான வழிகாட்டி. ஆனால் அவருடைய முடிவுகளிலும்/செயல்களிலும்  எனக்கு பிரச்சினை உள்ளது. மதம், சமூகம், அரசியல், அனைத்திலும்.
  3. காந்தி  கருத்தளவில் ஒரு அனார்க்கிஸ்ட் என்றே எனக்கு படுகிறது. செயல்வடிவத்தில் சமரசவாதியாக தென்பட்டாலும். இது மிகவும் கடினமான நிலைபாடு. நிறுவனமயமாக்கப் பட்ட சமூகத்தில் வசிப்பவர்களுக்கு. மானுட வரலாறு ஒரு திரள் சமுதாயத்தை நோக்கி அதிவேகமாக  சென்று கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து செயல்பட ஒன்று புறக்காரணிகள் அமையவேண்டும் (உலகளாவிய பொருளாதார பேரழிவு) அல்லது இருக்கும் சட்டகங்களைச் சீர்குலைக்க வேண்டும். அதை அகிம்சை முறையில் செய்ய ஒரு தளத்திற்குத்தான் கொண்டு செல்ல முடியும். அதற்குமேல் அரசு கட்டவிழ்த்துவிடும் அதிகாரத்தை எதிர்கொள்ள இயலாது. நர்மதை அணை என்ன ஆயிற்று. காந்தி எப்படி போராடியிருப்பார் என நினைத்துப் பார்க்க முடிகிறதா?
  4. அவருடைய சிந்தனைகள்/செயல்பாடுகள் அனைத்தும் ஒரு மாற்று வாழ்வியலுக்கான வழியைக் காட்டுவதுபோல இருக்கலாம். ஆனால் எதை நடைமுறைப்படுத்த இயலும் சொல்லுங்கள். மையமாக்குதலை எதிர்க்கும் எந்தச் செயலையும் இன்றைய சமுதாயம் கனிவுடன் பார்க்காது. பொருளாதார தாராளமயமாக்கல் கொண்டுவந்துள்ள சில அனுகூலங்களை முன்வைத்து இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய  நடுத்தர மக்கள் கூட்டம் பெரிய நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டுள்ளது. அதைத் திருப்பி மீண்டும் ஒரு மையமழித்த, நுகர்வோர் கலாச்சரமற்ற,  திரள்வாதத்திற்கு மாற்றான திசையை நோக்கி பெருமளவு மக்களையும் திருப்புவது ஏலாது. ஓரிருவர் நம்மைப்போல காதியை ஆதரிக்கிறோம். இதுபோல ஒருகோடி மக்கள் இருந்தாலும் கூட அது ஒருகோடிதான். நூறு கோடி எதிர் கருத்தில்.
  5. காந்தியின் தேசியவாதம் அரசியல் தேசியவாதம் அல்ல. பண்பாட்டு தேசியவாதம். ஆனால் இன்றைய இந்தியா ஒரு அரசியல் தேசிய மையவாதத்தின் வெற்றி. அதை மாற்றவேண்டுமானால் காந்தியே வந்தாலும் கடினம் என்றே தோன்றுகிறது.
  6. ஆனால் ஒன்றைச் சொல்லவேண்டும். தொழில்நுட்பவியலாளர்கள் இன்று வளம்பேணுதலை (sustainability) ஒரு இயக்கமாகவே முன்னெடுக்கிறார்கள். இன்று வடிவமைக்கப்படும் உயர்நுட்ப பொறிகள் அனைத்திலும் இது ஒரு ஆதார கோட்பாட்டு அளவில் உள்ளிறக்கப் படுகிறது. உள்ளிருந்து பார்ப்பவர்களுக்கு தெளிவாகத் தெரியும் மாற்றம் இது. உயர்தொழில் நுட்பத்துறையில்தான் காந்தியின் பார்வைகளை ஒட்டிய கருத்துருவாக்கங்கள்  கோட்பாட்டளவில் பிற சமுதாயச் செயல்பாடுகளுக்கு முன்னரே  உள்வாங்கப் படுகின்றன என்பது பலருக்கு ஆச்சரியமளிக்கலாம்.
  7. 'ஏறக்குறைய காந்தியவாதி' யின் இன்றைய சிந்தனை நிலை என இதைக்கொள்ளலாம். அதனால்தான் காந்தியவாதியாக நான் இல்லை என்று சொல்லுகிறேன்.
  அருள்

  • அருள், விரிவான பதிலுக்கு நன்றி. பதிலாக நிறைய எழுத / கேட்க விருப்பம். வேகமாக முட்டிமோதும் எண்ணங்களை உடனே எழுதினால் கோவை கூடாது. கொஞ்சம் பொறுத்து எழுதுகிறேன். பதிலாக அல்லது தனிக் கட்டுரையாக.

 • என் அப்பாவோடு விரல் பிடித்துக்கொண்டு மவுண்ட் ரோடு காதி சென்று வந்த நாட்களின் ஞாபகங்களைக் கிளறி விட்டீர்கள். பல்பொடி, காலத்துக்கும் கிழியாத வேஷ்டி, லேகியங்கள், பாம்புப் பஞ்சாங்கம் என்று ஏதாவது வாங்க அப்பா அடிக்கடி அங்கே ஷாப்பிங் கூட்டிப் போவார். கடையில் எப்போதுமே கூட்டம் இருக்காது. அப்பா காலத்துக்குப் பின்னர் நான் தனியாகவும் குடும்பத்துடனும் சென்னை வரும்போதெல்லாம் காதியில் போய் ஏதாவது வாங்கி வருவது வழக்கம்- அந்த இடத்தில் பார்க்கிங் மகா கேவலமாக இருந்தபோதிலும்.
  நவராத்திரியின் போது காதியில் அழகாக மாடியில் கொலு வைத்திருப்பார்கள். பல நல்ல நல்ல பொமமைகள் குறைந்த விலையில் கிடைக்கும். சின்னச் சின்ன கிஃப்ட் சாமான்கள் இப்போதெல்லாம் வெள்ளியில் கூடக் கிடைக்கின்றன. உலோக பொம்மைகள் தவிர, ஃபைபர், பேப்பர்மாஷ், மரம் என்று எக்கச்சக்கமான சாய்ஸ். விலையெல்லாம் பாரா சொல்வது மாதிரி கொள்ளை மலிவு தான். பேக்கிங் பண்ணி அமெரிக்கா கொண்டு வருவதற்குள் பிராணனே போய் விடும். அழுக்கு நியூஸ்பேப்பரைச் சுற்றி சுற்றி சணலால் கட்டிக் கட்டி அபத்தமான பேக்கிங். கடை வாசல் தாண்டுமுன்பே அதெல்லாம் பிரிந்து கழண்டு விழுந்து விடும்.  கை கொள்ளாமல் அள்ளிக்கொண்டுதான் வரவேண்டும்.
  ஆனால் அந்தக் கொடுமையை எல்லாம் தாண்டி, ராமர் செட், கீதோபதேசம், மரத்தினாலான பிரம்மாண்ட தசாவதார செட், செட்டியார் பொம்மை, தஞ்சாவூர் செட், கல்யாண நாதஸ்வர செட், டான்சிங் லேடி என்று ஒன்றொன்றாய் எங்கள் வீட்டில் இருக்கும் பல கலை அழகுப் பொருட்களும் நான் அங்கிருந்து கொண்டு வந்தவையே. 
  ஏழு, எட்டு அடி நீளம் கொண்ட தசாவதார மர செட்டையும், துவார பாலகர்கள் மாதிரி கலைநயம் மிக்க புக்-எண்டுகளையும் வைத்துக்கொண்டு நான் ஏர்போர்டில் பட்ட பாடு தனியாகப் பதியப்பட வேண்டிய வரலாறு. இப்போது நினைத்தாலும் கதி கலங்குகிறது.
  ஆனால், நவராத்திரியில் அழகு மாம்ஸெல்லாம் “எப்படி இவளே, உங்க வீட்டுக்காரர் இவ்வளவு சாமானையும் தூக்கிக்கிட்டு வந்தாரு? எங்க வீட்லயும் இருக்கே ஒரு ஜடம்” என்று என் மனவியிடம் கேட்டுக்கொண்டே பொறாமையுடன் என்னை சைட் அடிக்கையில் அந்த மர வலி மறந்தே போவதும் உண்மை!
  “அவாளோட ராவுகளி’ல் இது பற்றி விலாவாரியாக எழுதியிருக்கிறேன்.

 • சுவாரச்யமாக இருந்தது. காதி கிராம உத்யோக் பவனில் விற்கப்படும் பொருட்கள் தரமானவை என்பதில் எனக்கு சந்தேகமில்லை (உபயோகித்துப் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்). ஆனால் இப்படிப்பட்ட பரவ்ச அனுபவங்கள் ஏனோ எனக்கு சித்திக்கவில்லை. அங்கே சில, மிகச் சில புத்தகங்களை ஓரங்கட்டி, பில் போடுகிற இடத்திற்கருகில் கண்ணாடிப் பெட்டிக்குள் அடக்கம் பண்ணியிருப்பார்கள். அவற்றில் சில வித்தியாசமான புத்தகங்கள்.தமிழில் சாத்தியமாகும் இன்னொரு விதமான நடைக்காகப் படித்துப் பார்க்கலாம். கா.கி.பவனில் முன்னெல்லாம் பனங்கல்கண்டு கிடைத்துக் கொண்டிருந்தது. நாள் முழுக்க டிவியில் லைவ் பண்ணுகிற தருணங்களில் தொண்டை உலராமல் இருக்கச் செய்யும் அருமருந்து அது. ஹால்ஸ், விகஸ் எதுவும் அதற்கு ஈடில்லை. எங்க ஊரில் மட்டும் கிடைக்கும் சில்லுக் கருப்பட்டியை லாயிட்ஸ் ரோடில் வாங்கியிருக்கிறேன். (கொட்டானோடு)
  காந்தியப் பொருளாதாரம் பற்றிப் பேசுகிற்வர்கள்  ஜேசி குமரப்பாவின் நூல்களையும் படிக்க வேண்டும். அதைப் பற்றின பார்வை ஆழப்பட அது உதவும்/
  காந்தியைப் பற்றி பத்ரியும், காதியைப் பற்றி பாராவும் எழுதித் தள்ளுவதைப் பார்க்கும் போது கிழக்குப் பதிப்பகம் சபர்மதி ஆஸ்ரமமாகிவிடுமோ எனக் கவலை எழுகிறது. மொட்டை மாடியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை  வைத்தால் சொல்லுங்கள் வருகிறேன் (துப்பாக்கி இல்லாமல்)
  மாலன்

  • அன்புள்ள மாலன், நன்றி. ஆனால் கிழக்கில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நடத்தும் சூழல் உருவாகும் வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். துரதிருஷ்டவசமாக இது ஒரு நாத்திக ஆபீசாக அமைந்துவிட்டது. நண்பர்கள் ஒரு சிலரைத் தவிர அலுவலகமே சாமி இல்லை என்று சத்தியம் செய்கிறது. அந்த விஷயத்தில் தனியாக மாட்டிக்கொண்டு நான் படும் பாடுகள் உங்களுக்குத் தெரியாது. வாய்ப்பிருந்தால் சுகம் பிரம்மாஸ்மியில் எழுதுகிறேன்.

  • ஜிவி, புதிய தலைமைச் செயலக வளாகத்துக்கு எதிரே உள்ளது.

 •  
  அன்புள்ள பாரா,


  நீங்கள் என் கடவுள்.
  நீங்கள் என் கடவுள்.
  நீங்கள் என் கடவுள்.
  நீங்கள் என் கடவுள்.
  நீங்கள் என் கடவுள்.
  நீங்கள் என் கடவுள்.
  நீங்கள் என் கடவுள்.
  நீங்கள் என் கடவுள்.
  நீங்கள் என் கடவுள்.
  நீங்கள் என் கடவுள்.
  நடுகுறிப்பு : இந்த மெயிலை அப்படியே உங்கள் தளத்தில் பதிப்பிக்கவும். அப்போதுதான் நீங்கள் பெரிய எழுத்தாளர் என்று ஒசாமா பின் லேடன் என் கனவில் வந்து சொன்னார்.


  அன்புடன்,


  நீங்கள் இனி எழுதாமலே இருந்தாலும், தன் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கப் போகும் உங்கள் பக்தன்…


  கே.எஸ்.நாகராஜன்.

  • கொலைவெறி கொண்ட நாகராஜன் அவர்களுக்கு, அவசரத்தில் நீங்கள் முகவரி மாற்றி கமெண்ட் போட்டுவிட்டீர்கள் என்பதை அறியத் தருகிறேன்.

 • அன்பு பாரா ’சாரு’க்கு,
  இப்படி ஒரு பின்னூட்டம் போடும் அளவிற்கு நாகராஜன் ஒரு ‘அதிர்ஷ்ட’சாலி என்பது தெரியாது போயிற்றே!!
   

 • அன்புள்ள பாரா –
   
  இந்த கடிதத்தை உங்களுக்கு எப்படி எழுதுவதென்றே தெரியவில்லை. எழுதும் போது கை கால் எல்லாம் நடுங்குவதால், காப்பிக்கடையில் இருக்கும் 17 வயது பெண் நான் சொல்ல எழுதியது இக்கடிதம்… கடுதாசி… வேணாம் லெட்டர்னே வச்சுக்கோங்க!
   
  உங்கள் எழுத்தை ஒருநாள் படிக்காவிட்டால் கைகால் எல்லாம் ஜன்னி கண்டதுபோல முதல் மரியாதை சிவாஜிக்கு ஆடியது போல பார்ட் பார்ட்டாக ஆடுகிறது. உங்களை சாட்டர் டே ஈவினிங் நேரில் சந்தித்தபோது காலை வணக்கம் என்று நீங்கள் சொன்ன போது என் சவரம் செய்யப்பட்ட தலையில் இருந்த அத்தனை முடியும் கூச்சரித்தது என்று சொல்வேன். எத்தனை மென்மையானவர் நீங்கள். நீங்களா இப்படி எழுதுகிறீர்கள் என்று எனக்கே சந்தேகம்!
   
  தெய்வமே… சே… தெய்வமென்ன மனிதர்களுக்கு மட்டும்தானே… உங்களை இயற்கையே என்று வழிபடவேண்டும்! இயற்கைதானே தெய்வங்களுக்கும் மேலானது. உங்களுக்கு ஒருவர் 4 வார்த்தை லெட்டர் எழுதியதை நாப்பது நாள் சாப்பிடாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டே நீங்கள் மொழிபெயர்த்து இட்டது படித்தபோது என் உடல் முழுவதும் கண்ணீரால் அழுதது. உத்தம எழுத்தாளன் நான் மப்பில் 12 மணி வெயிலில் ஏசி இல்லாத காரில் வந்ததால் வந்த வேர்வை என்று ஏளனம் கூறலாம், ஆனால் அந்த கண்ணீரின் மதிப்பு தயிர்வடைகளுக்கும் உளுந்து வடைகளுக்கும் புரியப்போவதில்லை!
   
  பக்கத்துவீட்டுகாரன் உங்கள் பூனைக்கு பால் வைக்கவில்லையா? என்ன உலகமிது? வாயில்லாத அந்த ஜீவனுக்கு இப்படி ஒரு அவல நிலையா. எகிப்த்தில் பூனைகளின் உச்சாவை ப்ரிஜ்ஜில் சேமித்து வணங்குகிறார்கள். என் பக்கத்துவீட்டு ஆளும் அப்படித்தான் என் பூனைக்கு ஒட்டகப்பாலை வைக்காமல் இரண்டே லிட்டர் ஆவின் பால் கொடுத்தான். என்ன தடித்தனம் பாருங்கள். நீங்கள் மிடில் கிளாஸ் மாதவன்களைப்பற்றி எழுதியது எனக்கு ஞாபகம் வந்தது! என்ன செய்வது பாரா… இப்படி மிடில்கிளாஸ் மனநிலைக்கு மத்தியில் நாம் சிரமப்படவேண்டியுள்ளது! அடுத்த வாரம்தான் கண்ட்டைனரில் ஒட்டகப்பால் வருமென்று சுகாதாரதுறை அமைச்சர் எஸ்.எம்.எஸ் அனுப்பினார். நான் அதை கண்டுகொள்ளவில்லை!
   
  பாண்டிச்சேரியில் இருந்த சைவ சன்மார்க்க ரெஸ்தாரண்ட்டில் உச்சா கதவில் ‘ஆம்ப்ளை’ என்று எழுதியிருக்கும். அதைப்பார்த்ததும் நீங்க ‘ஹோம்ப்ரே’ பற்றி எழுதிய நியாபகம் வந்தது. இப்படித்தான் எங்கு எப்போது கக்கா உச்சா போனாலும் உங்கள் நினைவுதான். என் தோழிகூட காலையிலேயே உங்க ’பாரா’யணத்தை அரம்பித்துவிட்டீர்களா என்று என்னை சீண்டுவாள். பெண்களுக்கே உள்ள பொறாமை, நாம் என்ன செய்ய!
   
  காதியில் கெல்வின் கெளைன் லங்கோடு விற்பதில்லை என்று கேள்விப்பட்டேன்! தரித்திர இந்தியாவில் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? பாரா – லங்கோடு இல்லாத உங்கள் சிரமத்தை நினைக்க எனக்கே அழுகை வருகிறது! கொஞ்ச நாள் லங்கோடு போடாமலேயே இருங்கள். லுங்கி அணியும் போது மட்டும் பூனையிடம் கவனமாக இருக்கவும்!
   
  இயற்கையே, அண்ட சராசரமே, உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு என்னை மன்னியுங்கள்! எத்தனையோ புத்தகங்கள் எழுதும் உங்கள் பொன்னான நேரத்தை வீணடித்துவிட்டோமே என்று சுய பச்சாதாபம் எட்டிப்பார்க்கிறது. இதை அந்தரத்தில் தொங்கிக்கொண்டே நீங்கள் மொழிபெயர்த்து போடவைத்துவிட்ட அவலத்தை எண்ணி மனம் வேதனைப்படுகிறது! ஆனால் என்ன செய்வேன் எழுதாவிட்டால் விவேகனந்தருக்கு வந்த நோய்வந்துவிடுமோ என்று பயமாகவும் இருக்கிறது.
   
  டேக் கேர். வித் ஹக்ஸ் எண்ட் கிஸ்ஸஸ்!
   
  -நவடைனோ!
   
  பி.எஸ்: இதை எழுதி கொடுத்த 17 வயது பெண் வெக்கத்தில் முகம் சிவந்து விட்டாள். ஐ லவ் பாரா என்று மந்தரித்து விட்டதுபோல கத்திவிட்டு ஓடியே விட்டாள். என்னே உங்க பவர்!

  • நட்புச் செல்வங்களே! என் சீட்டுக்கு அடியில் குண்டுவைக்கும் திருக்கைங்கர்யங்களை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள். விவகார கமெண்ட்கள் இனி வேண்டாம்!

 • ஆஹா….. பாரா, உங்கள் கொலைவெறிப் படையினர் உங்களுக்கும் உ.த. எழுத்தாளர் வரிசைல துண்டு போட்டு இல்லையில்லை பத்தாறு வேஷ்டியே போட்டு இடம் பிடிச்சுடுவாங்க போலிருக்கே… என்சாய்…… கூடிய விரைவில் உங்களைப் பத்தி டாடி ரிட்டர்ன்ஸ் பதிவு ஏதேனும் வருமா என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்… 🙂

 •  திரு பாரா அவர்களுக்கு,
  காதி க்ராமோத்யோக் பவன் இயக்குநர் எழுதுவது:
  உங்கள் பதிவை ப்ரிண்ட் எடுத்துக்கொண்டு ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சம் பேர் அபரஞ்சி சோப்பு வாங்க வந்தவண்ணம் இருக்கிறார்கள். இதனால் எங்கள் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், வேலைப்பளுவுக்கும் ஆளாகி இருக்கிறார்கள். அந்த சோப் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படவும் நீங்களே காரணமாக இருப்பதால், உங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை வரும் 20 ஆம் தேதிக்குள் எழுத்துபூர்வமாக மூன்று கரித்தாள் நகல்களுடன் (முதல் தாள் நோட்டரி வழக்கறிஞரால் சான்றுரைக்கப்பெற்றதாக இருத்தல் அவசியம்) இந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 
  20ஆம் தேதிக்குள் எந்தப்பதிலும் வராவிடில் மேற்கண்ட குற்றச்சாட்டுகள் உம்மீது ருசுப்படுத்தப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்பட்டு, சட்டம் தன் கடமையைச் செய்யும்.
   இப்படிக்கு,
  தங்கள் உண்மையுள்ள,
  (ஒ–ம்)

 • திரு பாரா அவர்களுக்கு

  தாங்கள் ஒப்பந்தங்கள் ஏதுமின்றி காதி க்ராமோத்யோக் பவனிற்கு வேலை செய்வதாகவும் அவர்கள் பொருட்கள் முக்கியமாக அபரஞ்சி சோப் மற்றும் ஜவ்வாது, செய்ய வேண்டிய பணிகளை செவ்வனே செய்து முடிப்பதாகவும் அதற்காக கணிசமான ஒரு தொகையை இடைத்தரகாகப் பெற்றுக் கொள்வதாகவும் எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.

  இந்தத் தொகை மீது வருமான வரி செலுத்தாமல் இருப்பதால் தங்களுக்கு இதற்கு முன் பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இது குறித்து தங்களிடமிருந்து தகவல் ஏதும் கிடைக்கப் பெறாத காரணத்தினால் இந்திய வருமான வரி சட்டம் (செக் 243(3)ஆ பிரிவின் கீழ்) எங்களுக்கு வழங்கி இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்து தங்களின் அசையும் அசையா சொத்துக்களைக் கைப்பற்றி பொது ஏலத்தில் விட முடிவு செய்து இருக்கிறோம்.

  இந்த நோட்டீஸ் கிடைக்கப்பட்ட நேரத்தில் இருந்து தங்களின் அசையும் / அசையா சொத்துக்களை பயன்படுத்தவோ விற்கவோ வேறு எந்த முறையிலும் உரிமை மாற்றிக் கொடுக்கவோ கூடாது. மீறி செய்தீர்களானால் அது குறித்து மேலதிக நடவடிக்கை எடுக்க எங்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட விழைகிறோம்.

  இது குறித்து எங்களிடமிருந்து அடுத்த தகவல் வரும் வரை காத்திருக்கவும்.

  இவண்

  வருமான வரி உயராணையர்
  சென்னை
   

 • அன்புள்ள பாரா வாசகர்களுக்கு,

  முன்னாள் அபரஞ்சி சோப் தயாரிப்பாளர் எழுதிக்கொள்வது

  பாரா அவர்கள் தன் பதிவில் எங்கள் தயாரிப்பான சோப்பைக் குறித்து சிலாகித்து எழுதியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். முப்பது நாளில் மூன்னூறு கோடியை அழித்தால் பெரிய சொத்துகிடைக்கும் என்று எனது ஒன்றுவிட்ட சித்தப்பா எழுதிவைத்துவிட்டு சென்ற உயிலின் படி – யாருமே வந்து வாங்கமாட்டார்கள் என்ற இமாலய நம்பிக்கையில் காதிகிராமோத்யோக் பவனிற்கு மட்டுமே சோப்பு சப்ளை செய்துவந்தேன்.

  எனது காரியம் கைகூடி வரும்வேளையில் வி.கே.இராமசாமியிடம் அமவுண்ட் வாங்கிக்கொண்டு என் சோப்பிற்கு நான் கேக்காமலேயே பாரா அவர்கள் விளம்பரம் செய்திருப்பதனைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். மேற்சென்ற கடிதமொன்றில் காதி அதிகாரி குறிப்பிட்டபடி, இவர் வலைப்பதிவில் பதிப்பித்த ஒருவார காலத்தில்,விற்பனை நிலவரத்தின்படி அபரஞ்சி சோப்பு நிறுவனம், ப்ராக்டர் & காம்பிளைப் பின்னுக்கு அனுப்பி, அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பில் முதன்மை இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது.
   
  அமெரிக்கன் கான்ஸுலேட்டை ஜெமினி சர்க்கிளிலிருந்து இடம் மாற்றிவிட்டார்களோ என அமெரிக்க தூதர் உட்பட அனைவரும் சந்தேகம் கொள்ளும்படி காலங்கார்த்தாலேயே காதிமுன் பிரிண்ட் அவுட்டுடன் மக்கள் சாரிசாரியாக நிற்கின்றனர்.

  இப்படி ரவுண்டு கட்டி அனைவரும் வாங்கியதில், வரவேண்டிய பெருஞ்சொத்து வராமல் எனக்கு சுமார் மூவாயிரம் கோடி இழப்பு. சொத்துபோனால் போகிறது என்று கூட என்னைத் தேற்றிக்கொண்டேன். ஆனால் பட்ட காயத்தினில் உப்பாக, ரம்பா மற்றும் சவுந்தர்யாவும் என்னைவிட்டு ஓடிவிட்டார்கள். இவ்வீடு செய்யமுடியாத இரட்டை இழப்பிற்கு பாரா என்ன பதில் சொல்லப்போகிறார் என்று வாசகர்களே நீங்களாவது கேட்டுச்சொல்லுங்கள்.

  இப்படிக்கு,

  அபரஞ்சி அருணாச்சலா

   

 • கிழக்கில் வெள்ளிகிழமை பஜனையா, நானும் கலந்து கொள்கிறேன்.மூன்று நிபந்தனைகள்:
  1)பெர்முடாவுடன் பனியன் அல்லது பெர்முடாவுடன் டிஷர்ட் அணிந்து வருபவர்களையும் அனுமதிக்க வேண்டும்
  2)ரகுபதி ராகவ ராஜாராம் என்பதில் உள்ள ராகவை நீக்கிவிட்டு ரகுபதி ராஜாராம் என்று பாட வேண்டும்
  3)நியுட்டன்,கலிலியோ,டார்வின்,ஐன்ஸ்டீன் மற்றும் ரிச்சர்ட் டாகின்ஸ் மீதான பக்தி பாடல்களை பாட அனுமதிக்கவேண்டும்.இவற்றை நான் ஆங்கிலத்திலிருந்து முறைப்படி அனுமதி பெற்று மொழி பெயர்த்திருக்கிறேன். இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
  இப்படிக்கு
  பார்டி  ஏஷாத்ரி
   

 • நான் மேற் க‌ண்ட‌ நீர்த்துப் போக‌ச் செய்யும் க‌ம‌ண்ட்க‌ளை விடுத்து, இந்த‌ அர்டிகிளை ப‌கிற்கிறேன்,
  Article from a friend of mine. (Earth.org.in)
  Free Market or Market Freedom?
  In Hind Swaraj, Gandhi agrees with Napolean that the English are a nation of shopkeepers. If we look at USA, Japan or other Western European nations today, they are all just nations of shopkeepers. The US President has become a self-appointed champion of what he thinks is democracy, and uses bloody violence to install his own version of "peace"; peace that enables his campaign contributors to go and rob these nations through commerce. If a country were to refuse exports and imports, it would be ridiculed as being backward, and if it has riches like oil or diamonds, the champions of democracy may deem it necessary to wage a war on it so the world can "live in peace"! The whole world is becoming a market and all governments are just paid strong-arm men of the businessmen.
  On the other side, if we look at consumers, people all over the world are becoming increasingly like each other. Whether we like it or not, America is setting the trend for the rest of the world to follow. The middle class dream today is to own a concrete house or a flat with a 12-15 year housing loan, double pay checks through white collar jobs, 1 or 2 kids and a car (ofcourse on a loan), TV, Washing Machine and all the works that go with a city living. And both the man and wife are willing to toil away the better part of their youth in trying to achieve what is popularly known as a quality life-style or a visible living. This is not only in USA, Germany, Australia or France but India, China, Brazil, Philippines and such countries which already have a stable social fabric proven over thousands of years. Why are we changing? Why do we try to pretend or become what we really are not? Who is actually changing our value system? Most don't ask this question and even if a few dare ask such anarchic questions, they are shot down as being backward or not keeping with the times.
  Our children are educated in English schools, watch cable TV from birth and eat pizza, icecream, burgers, drink cola from a very young age. In effect, we are grooming every new generation with conditioned tastes, so that the new generation when it grows, becomes a ready and willing market of consumers for inessential and wholly unhealthy products – consumers who know nothing at all about production, or even if their goods are produced legally, let alone ethically. Basic skills like washing one's own clothes are becoming extinct. It occurs to me that the only choice for the new generation is a Hobson's choice!
  We may well ask, "What is wrong with this choice, we are after all comfortable?". True, but comfortable at what price? North America consumes resources at an alarming rate, and the average American consumes 12 times as much as his 3rd world neighbour. ( With 5% of world population, North America consumes roughly the same amount of non-renewable energy as the whole of Asia – which houses 60% of the world. While the world average of urban population is only 49.2%, that of North America is 80.8 % and Asia is 39.9 % – India is below 30%). One can imagine the abysmal calamity if world consumption were to increase twelvefold – we will simply collapse in a huge energy and resource crisis. Yet this is what we are actively promoting as economic and social progress.
  Advocates for development extoll a free market economy and talk of trading without boundaries. But the free market creates artificial wants in the consumers, teaching them more and more consumption, and making them less and less responsible for themselves. Cable television has become the prime medium of persuading the public. And our sports, soaps, talk-shows and all similar rubbish are just means of selling products to consumers. We seem to be enslaved by a deeply planned and executed campaign to promote consumption. The more free the market becomes, the more captive we feel! Like Shakespeare's Antony we merely feel
  These strong Egyptian fetters I must break,
  Or lose myself in dotage
  So what is the anti-dote for this dotage?
  We should realize that true economic freedom is not freedom to market but freedom from the market. How do we free ourselves from the market? Not all of us can buy a piece of land and grow our food and live off the land. Working in a job, living in a city , do we economic slaves have any chance of freedom? We sure do!
  We need not and should not do anything violently revolutionary to quit our existing life-style. The first step is to draw the line where we are and change direction – that is, we should not add to our existing consumption but change direction and try to see what are the things we have now and what can we give up out of that. This change of direction is a major step.
  Secondly, we should differentiate between life and livelihood. Trying to simplify our livelihood before simplifying our lifestyle is putting the cart before the horse. When we leave our livelihood as is, and work diligently on our lifestyle, we will soon discover that we dont need a livelihood at all! At that point whatever decision we take is likely to be correct.
  Thirdly, being advocates of non-violence, we should not thrust our views or life style (or the lack of it!) on our dependents. We should ourselves be simple and patiently work towards educating our immediate family on the need to simplify.
  Fourth, as consumers we should patronize ecologically responsible products.
  Finally, most importantly, we should depend on local economies instead of global economies. A very good way to implement this is to use products that are not advertised! Now this sounds like madness – do we have products that are not advertised? Yes we do – atleast in India. The Khadi Gramodyog Bhavan has most of the homeneeds and I haven't seen any of them being advertised. Although they are sometimes distributed with not-too-small an ecological footprint, they are anyday better than products of centralized industry that are pushed down our throat with media ads. Wherever possible, if we use products that are not advertised, then advertisements will become uneconomicand the centralized market will die a natural death!
  If more people patronize local economies, there will be many job opportunities created in the small scale and cottage industry sector (like if lot of us used mud pots instead of stainless steel, potters wont come to cities in search of jobs). Local economies will result in de-urbanization, leading to lowered consumption.
  Let us consider a hypothetical example. Let us assume that a family of 5 spends 50 rupees a month on a branded toothpaste. If a town with 50,000 people switches to locally made herbal tooth-powder (and if we reasonably suppose that the herbal powder costs Rs. 25 as against Rs. 50 of the paste), then that small town with around 10,000 families, immediately creates local employment and lower ecological footprint; creating a cottage business manufacturing herbal tooth powder and a ready market of 2.5 lakhs (quarter million rupees) every month. If we further assume that it employs unskilled woman labour at a cost of 1200 rupees per person month and assuming 30% of the turnover goes for wages, we are creating a local employment for 62 people. Apart from this there will be jobs in local distribution, local management etc. We will also brush our teeth at half the cost!
  So it is very much within our power to save the earth and ourselves, without doing anything revolutionary.
  In all this we should always be committed to non-violent change; gradual & peaceful to us as well as others.
   
  with Thanks to : http://earth.org.in/index.php?page=k002 (Nature at its best)
   

 • பாரா,
  காதியின் வாடிக்கையாளர் சேவை சில கிளைகளில் மோசம்தான்;ஆனால் சில கிளைகளில் உண்மையில் அபாரம்.நான் நேரில் அனுபவித்து மகிழ்ந்திருக்கிறேன்.
   
  வாடிக்கையாளர்கள் வருகையை ரசித்து மகிழ வேண்டும் என்ற உளப்பாட்டுடன் செய்யப்படும் வாடிக்கையாளர் சேவை அது;பொதுவாக இன்றைய நவீன ஷாப்பிங் மால்களில் கூட காணக் கிடைக்காதது…
   
  அது போல அவர்களின் பொருள்களிலும் சில அபாரத் தரத்துடன் இருக்கும்;சில காசு வீணாவதற்கான பொருள்களாக இருக்கும்.எனது லிஸ்டில் தோல் பொருள்கள்,ஜவ்வாது(சுமார் 20 வருடங்களாக உபயோகம்),உலர் வத்தல்கள்(மிளகு தக்காளி போன்றவை) அடங்கும்.எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்த்தரம் பார்த்து வாங்குதல் நலம்!
   
  பெரும்பாலும் நான் செல்வது மதுரை டவுன்ஹால் தெருவின் கிளைதான்..அபரஞ்சி என் கண்ணில் படவில்லை இதுவரை…
  இங்கு பதியப்பட்டிருக்கும் பல கமெண்டுகள் அப்பட்டமான நகர நாகரிக திமிர்த்தனத்தைப் பறை சாற்றுகின்றன ! இவற்றை எப்படி அனுமதிக்கிறீர்கள் என்று தெரியவில்லை!(அவர்கள் அனைவரும் நீங்கள் தினமும் சந்திக்கும் நேரடி நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் மட்டும் இவ்வகை கமெண்டுகளை ஒப்புக் கொள்ள முடியும் ! அதுவும் தோழமையின் பேரில் மட்டும்….)
   
  நானும் கூட இங்கு பதிலளிக்க மிகவும் தயங்கினேன்;எதேச்சையாக வார விடுமுறையில் உங்கள் பல பத்திகளை மீண்டும் படிக்க நேரந்த போதுதான் உறைத்தது,என்னுடைய பல பதில்கள் அல்லது கேள்விகளுக்கும் நீங்கள் எந்த எதிர்வினையும் ஆற்றாதிருந்தது..அதனால்!
   
  ஆனாலும் இப்பதிவின் கருத்தும் அளிக்கப்பட்டிருக்கும் பின்னூட்டங்களும் எனது எதிர்வினையை உறுதி செய்தன !

  • அறிவன்: கமெண்ட்களுக்கு பதில் சொல்லியே தீர்வது என்பது என் திட்டத்தில் இல்லாதது, எப்போதும். என் கருத்தை நான் எழுதிவிட்ட பிறகு மாற்றுக்கருத்துகளை அல்லது எதிர்வினைகளை அப்படியே அங்கீகரிப்பது ஒன்றுதான் நான் செய்யக்கூடியது. நேரமும் விருப்பமும் அவசியமும் இருந்தால் மட்டுமே கமெண்ட்களுக்கு பதில் சொல்கிறேன். தவிரவும் மாற்றுக்கருத்துகள் அனைத்துடனும் மல்லுக்கட்டி என்னுடையதை நிலைநாட்டும் விருப்பம் எனக்குக் கிடையாது. இதனாலேயே பெரும்பாலும் நான் கருத்துகளுக்கு பதில் சொல்வதில்லை. வலையுலக வழக்கப்படி நல்ல பதிவு என்போருக்கு நன்றி என்று திரும்பத் திரும்ப பதிலளிப்பதிலும் விருப்பமில்லை. இதனால் நான் நன்றிகெட்டவனும் அல்லன். புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

 • இன்னொன்று…அத்தியாவசியப் பொருள்களின் விலை நம்ப முடியாத அளவுக்குப் போகும் போதுதான் காதிக்கு செல்ல வேண்டும் என்று பலரும் நினைத்து விடப் போகிறார்கள்!

 • அடக்கொடுமையே! தமிழ்நாட்டில் நகைச்சுவைக்கு இவ்வளவு பஞ்சமா? 🙁
  இங்கே நகைச்சுவை என்று நினைத்துக்கொண்டு அச்சுபிச்சு என்று கொட்டப்பட்டிருப்பவற்றை நினைத்து பரிதாபப்படுகிறேன். வர வர உங்களின் வலைப்பூ கமெண்ட் செக்‌ஷனும் உ.த.எழுத்தாளரின் கமெண்ட் செக்‌ஷன் மாதிரி மொன்னை ஆகிக் கொண்டு வருகிறது. பத்ரியின் கமெண்டு மட்டும் லேசான புன்முறுவலை தந்தது 🙂
  நிஜமாகவே உங்களுக்கும் பக்தன்
  அதிர்ஷ்ட(ப்) பார்வை

 • பாகவதர் சார்,புரிந்தது…நன்றி…
   
  பதிவுகளில் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற 'உரையாடல் தனத்திற்கு' பழகி விட்ட எங்கள் மனச்சாய்வு காரணமோ? !
  :))

 • திருச்சியில் தெப்பகுளத்தருகில் காதி பவனுக்கு அடிக்கடி விசிட் செய்வதுண்டு. கதர் அல்லாத ஆனால் மல் (!?) ஜிப்பாக்கள் (அரைக்கை) வாங்குவதுண்டு. தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைக்கும் பெங்களூர் சம்மர் சீதோஷ்ண நிலைக்கும் ஏற்ற மேலாடை. அணிந்திருப்பதின் பாரமே தெரியாத துணி .

  சமீபத்தில் திருச்சி சென்றபோது நானே கடையின் 2ஆம் மாடியில் எந்த ஷெல்பில் இருக்கிறது என காட்டி வாங்கவேண்டிய நிலைமை. அங்கிருப்பவர்களுக்கு அங்கிருக்கும் பொருட்கள் பற்றிய விரிவான அறிமுகமோ, கஸ்டமர்களை கவனிக்கவேண்டிய முனைப்போ இல்லை.

  – அலெக்ஸ் பாண்டியன்

 • பாரா,  நானும் நெடுநாள் காதிப் பொருட்களை வாங்கி உபயோகித்து வருகிறேன்.. .  வலைப்பதிவில் காதி பற்றி எழுதி  சுதேசி/சர்வோதய  பொருளாதாரத்திற்கு  உரம் சேர்ப்பதற்கு நன்றி.
  // காதிக்கு யாரும் இதுவரை பிரசாரம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் அவசியம் செய்யவேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது //
  உண்மையில் தேவையானது “விளம்பரம்”, பிரசாரம் அல்ல.. ஆனால் காதி இயக்கக் காரர்கள் பிரசார mindsetல் மட்டுமே தான் இருக்கிறார்கள் – அது தான் பிரசினை.. காதி மற்றும் கிராமப் பொருட்கள் எவ்வளவு சிறந்தவை, அருமையானவை என்று இந்த ஊடக யுகத்தில் எடுத்துச் சொல்ல அவர்கள் முயல்வதில்லை..  கொள்கைப் பற்றினால் உந்தப் பட்டு  மக்கள் தங்கள் கடைகளில் வந்து வாங்குவார்கள் என்று நினைக்கிறார்கள் – அது ஒரு அளவுக்கு மேல் விற்பனையைப் பெருக்காது..
  ”விளம்பரம்” என்பதே காந்தீயத்திற்கு எதிரானது என்று பச்சை காந்தியர்கள் வாதிடலாம்.  ஆனால்,  சர்வோதய பொருளாதாரம் என்ற சமூக இயக்கத்தை தக்க வைத்து வளர்த்தெடுப்பதற்காகவாவது  வேறு ஒரு சில கொள்கைகளை   transform செய்யவேண்டும்..

 • Good write up on Khadi. I believe the predecesor to Khadi industry is All India Village Industries Association (AIVIA) setup by J.C.Kumarappa. You might be interested to read the book titled, "Bapu Kuti" by Rajni Bakshi.

 • காதியில் தேன் வாங்கி இருக்கிறேன். அதில் சக்கரைப்பாகு இருப்பதாக் யாரோ சொல்ல அப்புறம் கைதிக்கு செல்வதில்லை. உங்கள் பதிவு காதி மேல் காதல் கொள்ள வைக்கிறது. கைதிக்கு புறப்பட வேண்டியது தான்.
  நன்றி

 • Jubuda… dubuda.. juguda… ( new brand for Kadhi to sell foreign Hand-e-crafts ) Then all shall buy. Other wise it is more sin compare to WTO twin tower nonsense.

 • நண்பரே, உங்கள் கட்டுரையைப் படித்துவிட்டு, நானும் ஒருநாள் அண்ணாசாலை காதி சென்றேன்.
  ஏற்கெனவே திநகர் ரங்கநாதன் தெருவில் ஒரு காதி கடை இருக்கிறது.இங்கு ஒவ்வொரு பொருளும் ஆனை விலை குதிர விலை விற்கிறார்கள்.
  உங்கள் கட்டுரையைப் படித்தபின்புதான் ஒரு உண்மை எனக்கு விளங்கியது.
  இது போலி காதி கடை என்பதை உணர்ந்தேன்.
  காதி என்ற பெயரை வைத்துக் கொண்டு, பல போலி கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு, காந்தியை நம்பிக் கொண்டிருக்கும் பணக்காரர்கள்தான் ஒரே குறி. நம்மைப் போன்ற நடுத்தரவாதிகளைப் பற்றி கவலைப் படுவதில்லை.
  நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 • சென்னையில் பல போலி காதி கடைகள் உள்ளன. இங்கு ஆனை விலை குதிர விலையில் பொருட்கள் உள்ளன.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter