ஒரு ஆய் கதை

பதவியேற்பு விழாவுக்கு ஸ்ரீமான் நரேந்திர மோடி வந்தார், பார்த்துக்கொண்டே இருங்கள் – பத்து நாளுக்குள் குஜராத் மின்சாரம் ராம ரதத்தில் ஏறி வந்து சேரும் என்று சொன்னார்கள். தமிழகத்தைப் பிடித்த ஆற்காட்டு சாபம் அத்தனை சீக்கிரம் விமோசனம் பெறுமா என்ன? இது அரசியல் பேசும் கட்டுரையல்ல. நான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று நடைபெற்ற சம்பவம்.

ஒழுங்காக தினமும் ஒரு மணிநேரம் மின்சாரம் போய்க்கொண்டிருந்தது. மக்கள் சந்தோஷமாகத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். என்ன நினைத்ததோ மின்சார வாரியம் – மின் தடையே இல்லை, வெறும் குறைந்த மின் அழுத்தப் பிரச்னைதான் என்று மக்களை மேலும் குஷிப்படுத்த, கடந்த சில நாள்களாக எங்கள் பிராந்தியத்துக்கு மின்சாரத்தை இங்க் ஃபில்லரில் வழங்க ஆரம்பித்தார்கள். [சென்னையில் பெரும்பாலான இடங்களில் இப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்.] இந்த இங்க் ஃபில்லர் மின்சாரம் எப்படிப்பட்டதென்றால், கரண்ட் இருக்கும், ஆனால் குழல் விளக்கு எரியாது. கரண்ட் இருக்கும். ஆனால் மின்விசிறியால் உபயோகம் இருக்காது. கரண்ட் இருக்கும். மைக்ரோவேவ் எடுக்காது. கரண்ட் இருக்கும். ஃப்ரிட்ஜ் வேலை செய்யாது. கரண்ட் இருக்கும். துணி துவைக்கும் இயந்திரம் குவார்ட்டர் கோவிந்தன் மாதிரி முனகலுடன் சுழலும். கரண்ட் இருக்கும். ஆனால் யுபிஎஸ் எடுக்காது. அனைத்திலும் சிகரம், கரண்ட் இருக்கும் – மோட்டார் போடமுடியாது.

நேற்றும் கரண்ட் இருந்தது. ஆனால் மோட்டார் வேலை செய்யவில்லை. இருபதுக்கும் மேற்பட்ட குடித்தனங்கள் உள்ள வீட்டுத் தொகுப்பு. நேற்றுக் காலை முதலே அத்தனை பேரும் உஸ்ஸு உஸ்ஸென்று மின் விசிறியையும் அடிக்கும் அனல் காற்றையும் மாற்றி மாற்றி சபித்துக்கொண்டிருந்தார்கள். முதல் நாள் மோட்டார் போட்டு டேங்கில் தண்ணீர் ஏற்றியிருந்தபடியால் நேற்று மதியம் வரை அது குறித்து யாருக்கும் எந்த விபரீதமும் தோன்றவில்லை. எந்த வீட்டுக்காரர் பாத்ரூம் போய்விட்டு முதல் முதலில் குழாயைத் திறந்து காற்று வருவதைக் கண்டு அதிர்ந்தார் என்று சரியாகத் தெரியவில்லை. பிற்பகல் மூன்று மணிக்கு விஷயம் பரவிவிட்டது. தொட்டியில் தண்ணீர் இல்லை. நிரப்புவதற்கு மோட்டார் எடுக்கவில்லை.

விற்பன்னர்கள் என்னென்னவோ செய்து பார்த்தார்கள். [மின்சார வாரியத்துக்கு போன் செய்வது என்பதும் அதிலொன்று.] மூன்று வழி மின்சாரத்தில், கொஞ்சம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கும் மின் துணுக்குகளை (!) மொத்தமாகத் திரட்டி ஒரு வழியில் ஓடவிட்டு, அந்த ஒரு வழியை மோட்டாருக்கு அர்ப்பணம் செய்யலாமா என்றெல்லாம் பரிசோதித்தார்கள். எதுவும் பலிக்கவில்லை.

நேரம் ஆக ஆக, ஒரு தீக்குச்சியின் வெளிச்சத்தைக் காட்டிலும் குறைவான வெளிச்சத்தையே மின் விளக்குகள் வழங்க ஆரம்பித்ததைக் கண்டோம். நிச்சயமாக மோட்டார் எடுக்காது என்பது தெரிந்துவிட்டது.

இதற்குள் இருட்டத் தொடங்கிவிட, அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவோர் ஒவ்வொருவரையும் வாசலிலேயே மடக்கி, யாரும் பாத்ரூமுக்கு முதலில் ஓடாதீர்கள் என்று எச்சரித்து அனுப்பவேண்டிய பொறுப்பை யாராவது ஏற்கவேண்டியிருந்தது. [‘அப்ப எங்கதான் சார் போறது?’ ‘எங்க வேணா போலாம் சார். போயிட்டு தண்ணி மட்டும்தான் கேக்கக்கூடாது.’]

மின்சார வாரிய அலுவலகத்துக்கு மாற்றி மாற்றி போன் செய்து களைத்துப் போன குடியிருப்புப் பகுதி செயலாளர், வசிக்கும் அத்தனை பேரையும் போன் செய்யச் சொல்லி வற்புறுத்தினார். மின்வாரியர்கள் உலக உத்தமர்களல்லவா? ரிசீவரை எடுத்துக் கீழே வைத்துவிட்டார்கள். தப்பித்தவறி ஓரிருமுறை யாராவது எடுத்து, விஷயத்தைச் சொன்னதும் ‘பாக்கறோம் சார்’ என்ற இருசொல் பதில் தவிர வேறு கிடையாது.

குழந்தைகள் சிணுங்க ஆரம்பித்தன. புழுக்கம் மேலும் மேலும் அதிகரித்தது. வீட்டுக்கு நாலு பேர் என்று கணக்கு வைத்துக்கொண்டால் கூடக் குறைந்தது தொண்ணூறு பேராவது அங்கே வசிக்கிறோம். தொண்ணூறு பேர் பன்னிரண்டு மணிநேரமாக இயற்கை அன்னையை கவனிக்க முடியாதபடிக்கு ஓர் இருப்பியல் சிக்கல். புத்திசாலிகள் சிலர் மாலையே மினரல் வாட்டர் கேன் வாங்கி உபாதையைத் தீர்த்துக்கொண்டார்கள். இந்த யோசனை வராதவர்கள் இரவுக்குப் பிறகு மிகவும் சிரமப்பட்டுப் போய்விட்டார்கள். தொலைக்காட்சித் தொடர்கள், இரவு சமையல், வழக்கமான பணிகள் எதுவும் கிடையாது. ஒன்பது மணியளவில் குடியிருப்புவாசிகள் அத்தனை பேரும் வாசலில் கூடிவிட்டார்கள். அத்தனைபேர் வீடுகளிலும் தலா ஒரு மின்சார விளக்கு மூக்கு ஒழுகுவதுபோல் எரிந்தது. ஏதாவது செய்யவேண்டும். விளக்கு எரியாவிட்டால் பரவாயில்லை. மின்விசிறி சுற்றாவிட்டால் பரவாயில்லை. குடிக்க நீர் இல்லாதுபோனாலும் பரவாயில்லை. கழுவ நீர் அவசியம். ஆவின் பாலில் எல்லாம் அது சாத்தியமில்லை. சமய சந்தர்ப்பம் பார்த்து லாரிக்காரர்களும் கிடைக்கவில்லை.

எங்கிருந்தோ ஒரு எலக்ட்ரீஷியனை அழைத்து வந்தார்கள். ஏதாவது செய்யமுடியுமா என்று சில மணிநேரங்கள் ஆராய்ச்சி செய்துவிட்டு ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் அவர். மறுபுறம் மோட்டார் ஓடுவதற்கு எங்காவது ஜெனரேட்டர் வாடகைக்குக் கிடைக்குமா என்று தேடி ஒரு படை புறப்பட்டது. பிரச்னை என்பது பரம்பொருள் போன்றது. அனைவருக்கும் பொதுவானது. மன்னிக்கவும். ஜெனரேட்டர்கள் அனைத்தும் இதே போன்ற பிரச்னைக்காகப் பல்வேறு இடங்களுக்குப் போயிருக்கின்றன. காத்திருந்து, பதிவு செய்தால் காலக்ரமத்தில் வந்து சேரும்.

சரி ஒரு புரட்சி செய்துவிடலாம் என்று முடிவு செய்து திரும்பவும் மின்சார வாரியத்தின்மீது படையெடுத்து ஒரு வழியாக நள்ளிரவு பன்னிரண்டு மணி சுமாருக்கு எங்கிருந்தோ ஒரு பணியாளரைத் தட்டியெழுப்பி அழைத்து வந்தார்கள். அந்த அறிஞர் ஆராய்ச்சிகள் செய்துவிட்டு, ‘ஒரே ஒரு வழிதாங்க. நீங்க எல்லாரும் காசு போட்டு உங்களுக்குன்னு ஒரு டிரான்ஸ்பார்மர் வாங்கிருங்க. இப்பிடி அடிக்கடி பிரச்னை வராது’ என்று சொன்னார். தாமு கடையில் டிரான்ஸ்பார்மர்கள் விற்பதில்லை என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லி, விடிந்ததும் அதற்கு ஏற்பாடு செய்யலாம், இப்போது கழுவ ஒரு வழி செய்யுங்கள் என்று காலை கையைப் பிடித்து திருட்டுக் கெஞ்சு கெஞ்சிய பிறகு மேலும் ஓரிரு மணிநேரங்கள் அவர் உத்தியோகம் பார்க்கவேண்டியிருந்தது.

இரவு இரண்டு மணி சுமாருக்கு மோட்டார் ஹுர்ர்ர்ர் என்றது. மக்கள் ஹுர்ரே என்றார்கள். கிணறுகளே இல்லாத நகரத்தில் வசிப்பதன் ஒரு பெரும் விபரீதம் நேற்று புரிந்தது. நேற்று முழுதும் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு அவதிப்பட்ட எங்கள் குடியிருப்புப் பகுதிவாசிகள் பலபேர் இன்று அலுவலகங்களுக்கு லீவ் போட்டுவிட்டார்கள். திருப்தியாக முழுநாளும் டாய்லெட் போகலாம்.

டேங்க் நிரம்பிவிட்டது.

Share

38 comments

  • What a pitiable condition? Do the authorities know the common man’s problems in leading just a normal life? Let the government concentrate only on basic needs of the people – electricity, transportation, sanitary conditions in public places, road conditions, water supply, orderly supply of essential items in fair price shops and the like. If all these requirements are met, industries will automatically come to our State, spiralling employment opportunities to millions. Above all, we need a responsive government machinery. In modern days, we need a common platform like consumers’ forum to lobby and make the government work for the people. Alas, for decades, the government cannot even fix the perennial problem of hiring autos in TN, while all other States have good models.

  • வளசரவாக்கம் பகுதியில்…

    நேற்றுக் காலை சரியாக 9 மணிக்கு டாண் என்று கரண்ட் கட்.

    அடப்படுபாவிகளா.. வழக்கம் போல ஊர் முழுக்க ஒயரைப் பிடுங்கி கழுவி மாட்டும் 1 நாள் மெயிண்டண்ன்ஸ் கூத்து நம்ம ஏரியாவில் என்று பேப்பரில் வரலையே என்று நினைத்து 155333-க்கு ஃபோன் செய்தேன். “உங்க ஏரியாவிலே கரண்ட் இல்லையா?” என்று அதிர்ச்சி காட்டினார்கள்.

    அப்படியே ஒரு மணி நேரம் போனது. மீண்டும் ஃபோன் செய்து கேட்ட போது, “சீக்கிரம் வந்திடும் சார்” என்றார்கள்.

    11.15… திரும்ப ஃபோன் செய்த போது வளசரவாக்கம் ஈபி அலுவலக ஃபோன் நம்பர் கொடுத்து அங்கே கேட்கச் சொன்னார்கள்.

    ஃபோன் செய்தால் யாரும் எடுக்கவேயில்லை. திரும்பத் திரும்ப விக்கிரமாதித்தன் கணக்காய் ஃபோன் செய்து ஒரு அம்மணி அலுத்துக் கொண்டே எடுத்தார். சொன்னவுடன், ”இன்னைலேர்ந்து 11 to 12 ரெகுலர் கட்” என்றார். “காலைல 9 மணியிலிருந்து இல்லை” என்று சொல்லி முடிக்கும் முன்பே ஃபோன் கட்!

    12.15… கரண்ட் இல்லை. மீண்டும் லோக்கல் ஆஃபீசுக்கு ஃபோன். வழக்கம் போல பல தடவை ஃபோன் செய்த பிறகு அதே அம்மணி! “அதெல்லாம் இல்லையே.. உங்களுக்கு பக்கத்திலே எல்லாம் கரண்ட் இருக்கா பாருங்க” என்று சொல்லிவிட்டு வழக்கம் போல பதிலுக்கே காத்திராமல் கட் செய்து விட்டார்.

    இப்படியே மாறி மாறி பல தடவை பல எண்களுக்கு ஃபோன் செய்து, ஒரு வழியாக 4.15 மணிக்கு லைன் மேன் வந்து சேர்ந்து, “இது போரூர் ஏரியாவிலே வரும் சார்.. எங்களது இல்லை” என்று போலீஸ்காரர்கள் ஸ்டேஷன் லிமிட்டிற்கு பேசிவிட்டு போயாகிவிட்டது!

    “அப்புறம் ஏன்யா 155333-லே உங்க ஆபீஸ் நம்பர் குடுத்தாய்ங்க? காலையில இருந்து நான் நூறு தடவை ஃபோன் செஞ்சப்ப எல்லாம் உங்களுக்குத் தெரியலையா” என்று கேட்டதற்கு, “ஃபோன் எடுத்த அம்மா அப்புறம் ஏ.ஈ. ரெண்டு பேரும் புதுசு சார். அவங்களுக்கு ஏரியா தெரியாது” என்று பதில் வந்தது!

    அப்புறம் எப்போதும் எங்கள் ஏரியாவில் கரண்ட் கட்டாகும் ரெகுலர் 5 to 6-ம் சேர்த்து கட் ஆகித் தொலைத்து 6 மணிக்கு வந்து சேர்ந்தது!
    கஷ்ட காலம்!

  • இந்த எழுத்து நடைக்காகவே இன்னும் பல இடையூறுகள் வர வேண்டிக்கொள்கிறேன். ரசித்தேன் ( உங்கள் கஷ்டத்தை அல்ல, கட்டுரையை )

  • தாத்தா இருந்தபோது தடையில்லாத மின்சாரம் சென்னைக்காவது கிடைத்தது. இப்போது சென்னைக்கும் எங்க ஊர் நிலைமையா? தாத்தா இருக்கும்போது எங்க ஊர்ல தினமும் ரெண்டு மணிநேரம்தான் மின்சாரத்தைத் துண்டிப்பாங்க. அம்மா வந்ததும் மூன்று மணிநேரம்! தாத்தா விவரமான ஆளுதான். சென்னையில ஒரு மணிநேரம் நிறுத்தினால் கூட அது பெரிய விளைவை ஏற்படுத்தும் என்று….

  • மிகவும் அருமையாக ,”அனுபவித்து” எழுதப்பட்ட கட்டுரை..
    நன்றி பா.ரா ஜி

    ஆகஸ்ட் 15 ந்தேதி மறு பதிப்பு செய்தால் 64 ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடலாம்!

    உஷ்ணத்திலிருந்து மின்சாரம் எடுக்க முடியும் ..பெயர் thermal energy
    இதையே Bio thermal energy(உடல் உஷ்ணத்திலிருந்து மின்சாரம்) க்கும் வழி கண்டுபிடிக்கப்பட்டால்..
    ஒவ்வொரு இந்தியனின் உடலிலிருந்தும்(read வயிறு) குறைந்தது 10KW மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.அதாவது நமக்கு (தமிழ்நாட்டிற்கு) தேவையான 15000 MW, just சென்னை வாழ் தமிழர்களே உற்பத்தி செய்யலாம்.
    😉

  • //D. Chandramouli//
    சார் வசிப்பது எங்கேயோ?
    யூரப் ஆ? யூ.எஸ்.ஏ யா?
    தெரிஞ்சுக்கலாமா?
    😉

  • கிணறுகள் இல்லா நகரத்தில் வசிப்பது பிரச்சனை இல்லை, கிணற்றை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாதவர்கள் எல்லாம் ஒன்று கூடி வசிப்பதுதான் பிரச்சனை.

    அது சரி முன்ன பின்ன கிணற்றை பார்த்து இருக்கேளா? பார்க்காவிட்டால் உங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் எல்லாம் கூடி உங்கள் க்ரவுண்ட் ஃப்ளோருக்கு இன்ப சுற்றுலா செல்லுங்கள்.

    அங்கே உள்ளது நவீன கிணறு, சம்ப் எனும் வடிவில்.

    ஏஞ்சாமி சம்பை திறந்து ஒரு வாளியில் கயித்த கட்டி எறச்சிருக்கலாம்ல நீரை,

    மின்சாரம் இல்லா நேரத்தில்….

    கதவை திறந்தால் காற்று வரும் – இது நித்யானந்தசாமி

    சம்பை திறந்தால் தண்ணி வரும் – இது கோயிஞ்சாமி

    பி.கு:
    தண்ணி எறைக்கவும், தூக்கி சொமக்கவும் திறனியில்லாதவர்கள் உங்கள் குடியிருப்பில் இருந்தால் அதற்கு இந்த கோயிஞ்சாமி பொருப்பில்ல!

  • இதுதான் பிரச்சினை, இன்று மின்சார விநியோகம் இல்லை என்று சொல்லிய்ருக்கலாம்.கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை உள்ள பொறுப்பின்மை,அல்ட்சியம்தான் இதற்கு காரணம்.நுகர்வோர் நீதிமன்றத்தில் மின்வாரியம் மீது வழக்குப் போட்டு நட்ட ஈடு கேட்கவேண்டும்.பிற நகரங்களிலும் அறிவிக்கப்பட்ட,அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் இருக்கின்றன
    என்று அறிகிறேன். எங்கோ கோளாறு இருக்கிறது.அதுதான் உற்பத்தி விநியோகம்,தேவை- மூன்றினையும் சமன் செய்ய முடியாத நிலைக்கு காரணம்.மின்சாரத்தினை ஒழுங்காக தர முடியாத அரசு வீட்டிற்கு ஒரு இன்வெர்டர் இலவசம் என்று கொடுத்துவிடலாம்.

  • மூக்கு சுந்தர்ஜி- பேப்பருக்கு பழகினாலும் கை கழுவ தண்ணீர் வேண்டும் 🙂

  • அடியேன் புறாக்கூண்டில் சம்ப் எனும் அகண்ட சொம்புக்கும் மின் மோட்டார் கொண்டு தான் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது.. அடியேன் வசிக்கும் ஆறு கூண்டுகளுக்கே அரசு தரும் நீர் இணைப்பு சொம்பில் ஊற்ற வசதி இல்லை.. அனுமதி தர மாட்டார்களா/அதை கொண்டு ஆய் கழுவ மனசு வருமா என்பது எல்லாம் அடுத்த பிரச்சினை.. நிலத்தடி நீர் தான் உறிஞ்சப்படவேண்டும்.. ஜூஸும் இளநீரும் உறிஞ்ச தெரிந்த உனக்கு கூட்டு சேர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்ச தெம்பில்லையா என்ற கேள்விக்கோ சாமிகளின் அதி உன்னத அறிவுரைக்கோ பரவசமடையலாமே தவிர்த்து காரியத்திலெல்லாம் இறங்க முடியாது..

  • தொண்ணூறு பேருக்கும் ஒட்டுக்கா தண்ணில ஒருநாள் மட்டும் கண்டம் இருந்திருக்கலாம்யா.. தப்பிச்சிருக்கீங்க.. அடி முட்டாள் தனமா இருந்தாலும் உங்க கட்டுரைய படிச்ச வேகத்துல ஆர்டீசியன் கிணறு பீச்சியடிக்கிற மாதிரி கருத்தா கிளம்புதைய்யா..

  • எவ்வளவு அழகான எழுத்து நடை.நல்ல சிறுகதையாக எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து.

  • தமிழ் இனிது

    தமிழ் இணையங்களையும், வலைப்பூக்களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு முயற்சியே தமிழ் இனிது வலைத்தளம்.
    http://tamilinithuthiratti.blogspot.com/

    இதற்கு உங்களது ஆதரவு தேவை. உங்களது வலைத்தளங்களின், வலைப்பூக்களின் முகவரியை எமக்கு inithutamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

  • டெரர்! இந்த விடயத்தை இப்படிகூட ரசனையாக எழுதுமுடியுமா? இடையிலே வரும் ஒரே ஒரு வசனத்தை திரும்பத் திரும்ப படித்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

  • //நல்ல சிறுகதையாக எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து.//

    இப்போ மட்டும் என்ன செஞ்சிருக்காராம்?!

  • //தமிழ் இனிது//

    உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா?

    எழுதப்பட்ட கட்டுரை சம்பந்தமா “ஆஹா” “அற்புதம்” “பிரமாதம்” அப்படீன்னு ஒரு கமெண்ட் அடிச்சிட்டுல்ல விளம்பரமெல்லாம் தருவீங்க? இப்போ மாத்தியாச்சா?!

  • பா ரா சார்,
    பழைய மாடல்ல அண்டாவுல தண்ணீர் ரொப்பி வச்சுடுங்க. தீர்ந்தது பிரச்சினை.

  • ஒட்டு மொத்த சென்னையும் (கொளத்தூர், சேப்பாக்கம் தவிர)ஓட்டு போட்டீர்கள் அல்லவா?. பலனை அனுபவியுங்கள்….. ஐந்து வருடமாக சென்னைக்கு மட்டும் தனி மரியாதை கொடுத்து மின் தட்டுப்பாட்டில் இருந்து விலக்கு கொடுத்த தாத்தாவுக்கு பாடம் புகட்டிய சென்னைவாசிகளுக்கு இன்னும் நிறைய வரவிருக்கிறது.. தயாராக இருங்கள்..

  • நீலக் காகம் மறுபடியும் பறந்தாத் தான் இந்த பிரச்சினை தீரும்………

  • //Mr. Ganpat

    I’m in Jakarta, Indonesia.

    Tks//

    Thank you Sir!

    கொடுத்து வைத்தவர்!!

  • எல்லாம் இருக்கிறது.ஆனால் எதுவும் கிடைக்காது.நாசமா போக!

  • சஹ்ரிதயன்
    http://pgportal.gov.in/

    எல்லாரும் பொய் இங்கே திட்டு வரலாம் பிரச்சினை அப்டியே தன இருக்கும் ஆனா டென்ஷன் கொறையும் நிறைய !

  • அய்யா….உங்கள் கட்டுரை கொஞ்சம் மிகையான கற்பனையோ என்று தோன்றுகிறது……!!! எங்கள் ஊரில் [கிராமம்] ஒருநாள் விட்டு ஒருநாள் மூன்றுமணி நேரம் கரண்ட் போகிறது….

  • >>>>டேங்க் நிரம்பிவிட்டது.<<<<

    எந்த டேங்க்? ;))))

  • என்னதான் மின்சாரவாரியம் கரெண்டை ‘கட்’ அடித்து சோதித்தாலும், பிறப்பு விகிதம் மட்டும் அதிகரித்துக் கொண்டே போகிறதே? இதன் ரகசியம் என்ன? 🙁

    //டேங்க் நிரம்பிவிட்டது//

    பதலக்கூர் ஸ்டைலில் ஃபினிஷிங் டச் 🙂

  • அய்யா…நல்லவேளை…நானெல்லாம் சென்னைமாநரகத்தில் வசிக்கவில்லை….எங்க கிரமத்துல…இருக்கவே இருக்கு..திறந்தவெளி புல்களைக் கழகம்…அப்பாடா தப்பிச்சிட்டோம்டா சாமீ

  • மின்சார விளக்குகள் இப்போ மண்ணெண்ணெய் விளக்கு எரியும் அளவில் தான் எங்கள் பகுதியிலும் ஒளிர்கிறது. மோட்டர் கேட்டுப் போய் சரி செய்ய வேண்டி வந்தது.

    அனுபவம் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருந்தாலும் கோயிஞ்சாமி எண் 408 சொல்லி இருப்பது தான் முகத்தில் அறையும் யதார்த்தம். sump என்று ஓன்று இல்லாமல் ஒரு
    அடுக்கு மாடி குடியிருப்பு இருக்க வாய்ப்பில்லை. அல்லது வேறு நீர்நிலை அமைப்பு இருக்கிறது. அதனால் தான் கரண்ட் வந்ததும் tank நிரம்பியது. உங்கள் குடியிருப்பில்
    நீங்கள் உட்பட அனைவரும் ஒரு தண்ணீர் வாளி இறைத்துக் கொள்ள முடியாத சோம்பேறிகளாக இருப்பீர்களானால் கூட கொஞ்சம்யோசித்து யாரையாவது வைத்து இறைத்து இருக்கலாம்.இப்படி வயிற்றை பிடித்துக் கொண்டு மின்சார வாரியத்தை திட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டு இருக்க வேண்டாம்.

  • ada arivalikala,
    how to get water to sump?in most of the houses,bore well to sump and sump to motor.pl think a while.

  • பிரச்னை என்பது பரம்பொருள் போன்றது. அனைவருக்கும் பொதுவானது.//
    கிணறுகளே இல்லாத நகரத்தில் வசிப்பதன் ஒரு பெரும் விபரீதம் நேற்று புரிந்தது//

    மிக மிக ரசித்தேன் ஐயா..எவ்வளவு இயல்பாகவும் நறுக் என்றும் இருக்கின்றன வரிகள்.ஒரு அவச்தையைக்கூட இவ்வளவு அழகாக ரசிக்கும் வண்ணம் சொல்ல முடியுமா?காயப்படுத்தும் வண்ணம் பேசுவதையே சிலர் விமர்சனம் எண்ணிக்கொண்டு தகாத வார்த்தைகளை படித்தவர்கள் தத்தம் வலையில் பதிவு செய்து நாற்றம் எடுக்க வைக்கின்றனர்.ஆனால் உண்மையில் சொல்ல வந்த விஷயத்தை மிக தெளிவாகவும் நச் என்றும் எடுத்துரைத்திருக்கின்றீர்கள்.அருமை அருமை,*நீங்கள் பட்ட அவஸ்தையை சொல்லவில்லை *

    இது போன்று விடிய விடிய கரென்ட் இல்லாமல் ஒரு சில தடவைகள் இருக்க நேரிட்டது.ஆனால் போன் செய்ததும் கிடையாது.போன் செய்தாலும் அவர்கள் வந்தது கிடையாது.அவர்களாக பார்த்து பிச்சை போடும் வரை அமைதியாகவே இருப்போம்.பழகி விட்டது துயரங்கள்.

  • உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு, தயவு செய்து சொல்றதை கேளுங்க, சென்னை கூடிய சீக்கிரத்தில் மக்கள் வாழ தகுதியில்லா இடமா மாறிடும், மாறிக்கிட்டு வருது. பேசாம எங்க ஊருக்கு வந்திடுங்க. சொர்க்கமே என்றாலும் அது எங்க கிராமம் போல வருமா ? குளத்திலே வருஷம் முழுக்க தண்ணி இருக்கும், ஒரு கடப்பாறையை வச்சி கிணறு தோண்டிடலாம், கல்கண்டு மாதிரி தண்ணி. சுத்தமாத காத்து, மே மாசத்திலேயும் மர மட்டையினால் குளுகுளு காத்து. பிரெண்ட்லியான ஆடு,மாடுகள், கோழி, நாய், பூனை ஆசையா இருக்குல ?

  • எங்கள் சிறு தொழில் நகரத்தில், தினமும் மூன்று மணி நேர அறிவிக்கப்பட்ட தொடர் மின்வெட்டு மற்றும் இரு அரைமணி நேர அறிவிக்கப்படா மின்வெட்டு தினசரி தொடர்கிற்து!!

    நேற்றிரவு எட்டு மணிக்கு போன மின்சாரம் மூன்று மணி விடியலில்தான் வந்தது!! ஒரு மணிக்கு யு.பி.ஸ் தன் சக்தியை இழந்து விட்டது.தூக்கத்திலிருந்து எழுந்த என் ஐந்து வயது மகள், நான் விசிறி கொண்டிருப்பதை பார்த்து விட்டு, அப்பா கரண்ட் வர ரொம்ப லேட்டாகும் விசிறாதீங்கப்பா, கை வலிக்கும் என்கிற அளவுக்கு, வாழ்வியல் யதார்த்தங்களில் மின்வெட்டு மிக எளிதாக கலந்து விட்டது..

  • கிணறு இல்லாத நம் இன்​றைய நகர வீடுகள் மட்டுமல்ல. கரி அடுப்பு விறகு அடுப்பு பயன்படுத்தும் பழக்கத்​தை அறி​வை இழந்துவிட்ட இன்​றைய வாழ்க்​கையும், அதற்கு லாயக்கற்ற இன்​றைய நம் வீடுகளின் அ​மைப்பும், பா​தைசாரிகளுக்கு வழி​யே இல்லாத சா​லை அ​மைப்புகளும், ​சைக்கிளில் ​செல்லும் வாய்ப்புக​ளை இழந்துவிட்ட நமது நகர அ​மைப்புகளும் குறித்த பயம் நாளும்நாளும் அதிகரித்துக் ​ ​கொண்​டே இருக்கிறது. கடந்து வந்த பா​தைக​ளை பின்​னேறிச் ​செல்லமுடியாத அளவிற்கு நிரந்தரமாக அ​டைத்துக் ​கொண்​டே வந்து ​கொண்டிருக்கும் நம் ​செயல்கள் நி​னைத்துப் பார்க்க​வே பயமாக இருக்கிறது.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி