யாழினி

கடந்த ஒரு வாரமாகக் கதறக் கதறக் கலைச் சேவை. நான் ஆறு சீரியல்களுக்கு ஒரே சமயத்தில் எழுதியிருக்கிறேன். அப்போதுகூட இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. புத்தகக் காட்சிக்குக் கூட இன்று போகலாம்; அடுத்த மூன்று நாள்களுக்கு முடியாது; வெள்ளிக் கிழமை போகலாம்; அதன் பிறகு முடியாது என்று கணக்குப் போட்டு வாழ வேண்டிய அளவுக்கு பணி நெருக்கடி. வீட்டுக்கே இரண்டு நாள்களுக்கொரு முறை போகும் கொடூரமெல்லாம் நடக்கிறது. சிறிது நேரமாவது அதன் பிடியில் இருந்து விலகி வரலாம் என்றுதான் ஃபேஸ்புக்குக்கே வருகிறேன். இங்கும் யாராவது அதை நினைவுபடுத்தி எதையாவது கேட்டு வைத்துவிடுகிறார்கள். உடனே தலை தெரிக்க ஓடிவிட வேண்டியதாகிறது.

இன்று மதியம் சாப்பிடுவதற்காக ஒரு உணவகத்துக்குச் சென்றிருந்தேன். அடுத்த இருக்கையில் ஓர் இளம் கணவன் மனைவி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். நான் போய் உட்கார்ந்ததிலிருந்து இருவரும் என்னையே முறைத்து முறைத்துப் பார்த்து, தமக்குள் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன். உணவகங்களில் வாசகர்கள், ரசிகர்கள் வந்து பேசுவது, ஆட்டோகிராஃப் கேட்பது, செல்ஃபி எடுத்துக்கொள்வது வழக்கம்தான். இரண்டு நாள்களுக்கு முன்பு சிஎஸ்கேவுடன் குப்தா பவனுக்குப் போயிருந்தபோதுகூட யாரோ ஒரு வாசகர் வந்து கைகுலுக்கி, செல்ஃபி எடுத்துக்கொண்டு சென்றார். ஆனால் மேற்படி கணவன் மனைவியைப் பார்த்தால் வாசிப்பவர்களாகத் தெரியவில்லை. (அதெல்லாம் நமக்குப் பார்க்கும்போதே தெரிந்துவிடும்.) அப்படி இருந்தும் என்னை உற்று உற்றுப் பார்க்கிறார்கள் என்றால் உணவை நான் மூக்கிலோ முழியிலோ ஈஷிக்கொண்டிருக்கிறேன் என்று பொருள் கொண்டு கர்ச்சிப்பை எடுத்து முகமெங்கும் ஒருமுறை துடைத்துக்கொண்டேன்.

ஒரு பத்து நிமிடங்களுக்கு அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். சட்டென்று அந்தக் கணவர் எழுந்து என் அருகே வந்து, ‘சார், நீங்கள் பாராதானே?’என்று கேட்டார். ஒப்புக்கொண்டதும் கணவன் மனைவி இருவருமாக மீண்டும் சேர்ந்து வந்து அறிமுகப்படுத்திக்கொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள்.

இதுவரை பிரச்னை இல்லை. இப்போதுதான் சிக்கல் தொடங்கியது. ‘ஆனாலும் யாழினிய நீங்க அப்டி ஒரு வில்லி ஆக்கியிருக்கக்கூடாது சார். அவ ரொம்ப பாவம்’ என்று அந்தக் கணவர் சொன்னார்.

ஆம். பாவம்தான். ஆனால் நான் என்ன செய்ய முடியும்? கதையோடு எனக்கு சம்பந்தமில்லையே என்று சொன்னேன்.

‘நீங்க ஒரு ரைட்டர்தானே சார்? இதெல்லாம் தப்புன்னு ஏன் சொல்லல?’ என்று அந்தக் கணவரின் மனைவி கேட்டார்.

நியாயமான கேள்விதான். எனவே இன்றிரவு சொல்கிறேன் என்று சொன்னேன்.

‘வெண்பா பக்கா ஃப்ராடு சார். அவ செய்யறதெல்லாம் திருட்டுத்தனம். அவள எப்படி சார் ஹீரோயினா ஏத்துக்க முடியும்?’ இது அடுத்த வினா.

வேணாம், ஏத்துக்காதிங்க என்று சொன்னேன்.

‘யாழினிதான் சார் ஹீரோயின்.’

‘ஆம். சந்தேகமில்லாமல்.’

‘கவின கடுமையா தண்டிக்கணும் சார்.’

‘அவசியம்.’

‘இவளும் இல்லாம அவளும் இல்லாம அவன் செருப்படி படணும் சார்.’

‘நல்ல கருத்து.’

‘யாழினிக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிடுங்க சார்.’

இங்கேதான் திடுக்கிட்டுப் போனேன். என்னை ஒரு கல்யாண ப்ரோக்கர் ஸ்தானத்தில் அல்லது திருமணம் செய்து வைக்கும் ஐயர் ஸ்தானத்தில் அல்லது ஒரு தகப்பன் ஸ்தானத்தில் நினைத்து உணர்ச்சிவயப்பட்டுக் கேட்டார் அந்தக் கணவர். இப்போது நான் என்ன சொல்ல வேண்டும்?

யாழினி கவினை விரும்புகிறாள். மணந்தால் மகாதேவன் என்றிருக்கிறாள். ஆனால் கவின் செருப்படி பட வேண்டும், இவளும் இல்லாமல் அவளும் இல்லாமல் அல்லாட வேண்டும் என்று ஏற்கெனவே தீர்ப்பு சொல்லியாகிவிட்டது. எவ்வளவு சிக்கல்.

‘லட்டுக்குட்டி சார் அந்தப் பொண்ணு. அவள அழ விடாதிங்க சார்.’

என்னடா இது சோதனை. ஒரு யாழினி ரசிகரிடம் மாட்டிக்கொண்டோமே என்று மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. அந்தக் கணவன் மனைவி சாப்பிட்டு முடித்ததும் அரைக்கிலோ மோதிசூர் லட்டு பார்சல் வாங்கியதையும் பார்த்தேன். யாழினியும் சேட்டுப் பெண்தான். மோதிசூர் லட்டு, பான்பீடா தயாரிப்புத் திறமையெல்லாம் ரத்தத்திலேயே இருக்கும். ‘பேசாமல் நீங்களே அவளைக் கல்யாணம் செய்துகொண்டு விடுங்களேன். நான் வேண்டுமானால் டைரக்டருக்கு போன் செய்து அவள் வீட்டாரைப் பேசச் சொல்கிறேன்’ என்று கேட்டேன்.

அதுவரை யாழினிக்காகத் தன் கணவனுடன் இணைந்து வாதாடிக்கொண்டிருந்த அந்த மனைவிக்கு சுர்ரென்று கோபம் வந்துவிட்டது. ‘கட்டிக்குவானோ என்னவோ. செருப்பு பிஞ்சிடும்’ என்று சொன்னார். அவர்கள் இருவரும் தினமும் சேர்ந்து சீரியல் பார்க்கும்போது என்னவெல்லாம், எப்படியெல்லாம் பேசிக்கொள்வார்கள் என்று அறிய மிகவும் ஆவலாக இருந்தது. அதைச் சிறிது மாற்றிக் கேட்டேன்.

‘இது வரைக்கும் எத்தனை செருப்பு பிஞ்சிருக்கு?’யா

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி