பொலிக! பொலிக! 21

வடகாவிரிக் கரையில் ஊர் திரண்டு நின்றிருந்தது. அத்தனை பேருக்கும் நெஞ்சு கொள்ளாத மகிழ்ச்சி. ஒருபுறம் திருமால் அடியார்கள் பிரபந்தம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். மறுபுறம் மங்கல வாத்திய ஒலி விண்ணை நிறைத்துக்கொண்டிருந்தது. கோயிலில் இருந்து அழகிய மணவாளனே புறப்பட்டுவிட்டான் என்று சேதி வந்தபோது கூட்டத்தின் பரவசம் உச்சத்துக்குப் போனது. ராமானுஜரை வரவேற்கப் பெருமானே வருகிறான் என்றால் இது எப்பேர்ப்பட்ட தருணம்!

எல்லாம் நல்லபடி நடக்கவேண்டும். இங்குதானே வருகிறார்? இங்கு இருக்கத்தானே வருகிறார்? ஆளவந்தாரின் பீடத்தை அலங்கரிக்கத்தானே வருகிறார்? எப்படியோ அரையர் சாதித்துவிட்டார். தம் பாட்டுத் திறத்தால் காஞ்சி வரதராஜனைக் கட்டிப்போட்டுவிட்டார். ஒப்புக்கொண்டு ராமானுஜரும் புறப்பட்டுவிட்டார் என்று சேதி வந்தபோதே திக்குமுக்காடிப் போனார்கள் திருவரங்கவாசிகள்.

பரமபதம் அடைந்துவிட்ட ஆளவந்தாரின் மூடிய விரல்களை நிமிர்த்திக் காட்டிய மகான். பேசியது ஒருவரிதான். ஆனால் எத்தனை தெளிவு, எவ்வளவு அழுத்தம், தன்னம்பிக்கை! தவிரவும் இளைஞர். வைணவ தரிசனம் இவரால்தான் தழைக்க வேண்டுமென்று எம்பெருமான் எண்ணிவிட்டால் யார் மாற்ற முடியும்?

வானில் கருடன் வட்டமிட்டான். காற்று குளிர்ந்து வீசி அரவணைத்தது. ரங்கா ரங்கா என்று கூட்டம் உற்சாகக் குரல் கொடுத்துக்கொண்டிருக்க, தாள வாத்தியங்கள் உச்சத்தில் ஒலித்துக்கொண்டிருக்க, கோயிலில் ஒலித்த மணிச்சத்தம் அனைத்தையும் மீறி வடகாவிரிக் கரையை வந்து தொட்டபோது ராமானுஜர் திருவரங்கம் வந்து சேர்ந்தார்.

‘எம்பெருமானே! எனக்காக நீங்களா முன்னால் வந்து காத்திருக்க வேண்டும்? இது என்ன அபசாரம்?’ என்று பதறி ஓடி வந்து, எழுந்தருளியிருந்த உற்சவ மூர்த்தியின் திருமுன் விழுந்து வணங்கினார் ராமானுஜர்.

‘தவறில்லை ராமானுஜரே! வைணவத்தில் பாகவதனே பெரியவன். பகவான் அவனுக்கு அடுத்தபடிதான். நீங்கள் அறியாததா? ஶ்ரீவைஷ்ணவ தருமத்தைப் புவியெங்கும் அறிவித்துக்கொண்டிருப்பவர் தாங்கள். உங்களைப் பேரருளாளன் விட்டுக் கொடுத்ததே எங்களுக்குப் பெரிய விஷயம். வாருங்கள்!’ என்று வரவேற்றார் பெரிய நம்பி.

கூட்டம் ஊர்வலமாகக் கிளம்பிக் கோயிலுக்குச் சென்றது. வழியெங்கும் வீட்டு வாசல்களில் மலர்ந்திருந்த பெரிய பெரிய கோலங்களிலும் நிலைப்படிகளை அலங்கரித்திருந்த மாவிலைத் தோரணங்களிலும் மக்களின் மகிழ்ச்சியைப் புரிந்துகொண்டார் ராமானுஜர்.

நான் என்ன செய்துவிட்டேன்! ஆளவந்தாரின் ஞானத்தின்முன் கால் தூசு பெறுவேனா! திருக்கச்சி நம்பியின் பிரேம பக்திக்கு முன் நிற்க முடியுமா என்னால்? இதோ, இந்தப் பெரிய நம்பியின் சிரத்தை எத்தனை பிறப்பெடுத்தாலும் எனக்கு வருமா? எடுத்த காரியத்தை முடிக்கிற வல்லமை கொண்ட அரையரின் திறன் எப்பேர்ப்பட்டது! என்னை வரவேற்கவா இத்தனைக் கோலாகலம்?

கூச்சத்தில் சுருங்கியவரைக் கண்டு புன்னகை செய்த பெரிய நம்பி, ‘சுவாமி! இந்தப் பணிவுதான் உமது உயரம்’ என்றார்.

கோயில் சன்னிதியில் நெடுநேரம் ராமானுஜர் கண்மூடி நின்றிருந்தார். செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம். நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் அதைக் காட்டிலும் அதிகம். அனைத்தையும்விடக் கற்கவேண்டியவை கடலளவு உள்ளன. பெருமானே! நான் பயின்று தெளிய இந்த ஒரு ஜென்மம் எப்படிப் போதும் எனக்கு?

சம்பிரதாயங்கள் முடித்து திருமடத்துக்கு வந்து அமர்ந்தபோது முதலியாண்டானும் கூரத்தாழ்வானும் ‘முதல் பணி என்ன?’ என்று கேட்டார்கள்.

‘கோவிந்தன்!’ என்றார் ராமானுஜர்.

திருமலையில் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த பெரிய திருமலை நம்பிக்கு உடனே ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தனுப்பினார். ‘நீங்கள் பெயர் வைத்த பிள்ளை கோவிந்தன். காளஹஸ்தியில் சிவ ஸ்மரணையில் தன்னை மறந்து இருக்கிறான். கீதை சொல்லுவதை அவனுக்கு நினைவுபடுத்துங்கள். அவரவர் ஸ்வதர்மம் என்று ஒன்று இருக்கிறது. வைணவ குலத்தில் பிறந்து பெருமானுக்குச் சேவை செய்ய வேண்டியவன் இப்படிப் பொறுப்பு மறந்து வாழலாமா என்று கேளுங்கள்.’

பெரிய திருமலை நம்பி, கோவிந்தனுக்கும் தாய்மாமன்தான். ஆனால் பெயர் வைத்த பிறகு அவர்கள் சந்தித்ததே இல்லை. நம்பி மலையை விட்டு இறங்கி ஊருக்கு வருவதற்கு, அப்புறம் சந்தர்ப்பமே கூடவில்லை. அவர் வந்தபோது கோவிந்தன் அங்கு இல்லாமல் போயிருந்தான்.

எனவே அவருக்குச் சிறு குறுகுறுப்பு இருந்தது. என்னை அவன் எப்படி எதிர்கொள்ளப் போகிறான்?

காளஹஸ்திக்கு நம்பிகள் வந்து சேர்ந்தார். கோவிந்தன் தினமும் குளித்து முழுகி சிவபூஜைக்குப் பூப்பறித்துச் செல்லும் குளக்கரைக்கு வந்து உட்கார்ந்தார். கோவிந்தன் பூப்பறிக்க வந்தபோது மெல்ல பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

‘அப்பனே, உனக்கு உன் சகோதரன் இளையாழ்வானை ஞாபகமிருக்கிறதா? குருவே ஆனாலும் மாயாவாதம் பேசுகிற இடத்தில் மறுத்துப் பேசி அவன் வெல்லும்போதெல்லாம் கரகோஷம் செய்து நீ சந்தோஷப்பட்டது நினைவிருக்கிறதா? இருவருமாகக் காஞ்சிப் பேரருளாளன் சன்னிதியில் பழி கிடந்த தினங்கள் மறக்காதிருக்கிறதா?’

‘ஐயா, நீங்கள் யார்?’

அன்று தொடங்கி பத்து நாள்களுக்குப் பெரிய திருமலை நம்பி இடைவிடாமல் கோவிந்தனுடன் பேசிக்கொண்டே இருந்தார். ‘நான் யார் என்று சொன்னால் நீ யார் என்பது உனக்குப் புரியுமா கோவிந்தா? எம்பெருமானின் பாதாரவிந்தங்களில் பழிகிடக்க வேண்டிய உன் கடமை புரியுமா? இந்தப் பூக்களைக் கொண்டுபோய் நீ சேர்க்க வேண்டிய இடம் விஷ்ணுவின் பாதங்கள் அல்லவா? எத்தனை சிறப்பானதானாலும் உனது தருமத்தை ஒதுக்கி வைத்துவிட்டு இன்னொன்றைக் கைக்கொள்வது கற்றவனுக்கு அழகா? நீ படித்தவன் அல்லவா? ஞானஸ்தன் அல்லவா?’

‘ஆனால் ஐயா, கங்கைக் கரையில் பாணலிங்க வடிவில் என்னிடம் வந்து சேர்ந்தவர் சாட்சாத் ஈஸ்வர மூர்த்தியே அல்லவா?’

‘ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். உனக்குக் கிடைத்தது சாளக்கிராமமாக இருந்திருந்தால்தான் நீ பிறந்த குலத்தின் பெருமை காத்திருப்பாயா? ஒன்றுமே கிடைக்காதிருந்திருந்தால்? நாத்திகனாகியிருப்பாயோ?’

பெரிய திருமலை நம்பி, ஆளவந்தாரின் சீடர். அவரது ஞானத்தின் சாறை அப்படியே ஏந்திக் குடித்த மகாபண்டிதர். சித்தாந்தங்களுக்கு அப்பால், தத்துவங்களுக்கு அப்பால், தருக்கங்களுக்கு அப்பால் அனைத்துக்கும் பொருளாக நிறைந்திருக்கிற பரமாத்மாவின் சொரூபம் அறிந்தவர். கோவிந்தன் மனத்தை மாற்ற அவருக்கு ஒரு கணம் போதும். இருப்பினும் அவன் நம்பிக்கொண்டிருந்த அத்வைத சித்தாந்தத்தைவிட சரணாகதி என்னும் ஒற்றைத் தாரக மந்திரத்தின் அருமையை அவனுக்கு உணர்த்தவே அவர் அந்த அவகாசத்தை எடுத்துக்கொண்டார்.

பத்தாம் நாள் முடிவில் கோவிந்தன் மனம் மாறினார். ‘என் அண்ணா இப்போது எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டார்.

‘திருவரங்கத்துக்குச் செல் மகனே. ஒரு பெரும் விசை அங்கு உன்னைச் செலுத்தக் காத்திருக்கிறது!’

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி