புத்தாண்டுத் தீர்மானங்கள்

பொதுவாக நிறையப் பேர் செய்வதும், பெரும்பாலும் யாரும் கடைப்பிடிக்க முடியாமல் கைவிடுவதுமாக ஒவ்வோர் ஆண்டும் நகைப்புக்கு இடமாவது, புத்தாண்டுத் தீர்மானங்கள். தீர்மானங்களைச் செயல்படுத்த முடியாமல் போவதற்கு முக்கியமான காரணம், குறிப்பிட்ட செயலைச் செய்வதற்கு நாம் ஆயத்தமாக இருக்கிறோமா, இல்லையா என்கிற தெளிவின்மையே. ஆரம்பித்துவிடலாம்; பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனநிலையிலேயே பல தீர்மானங்களைச் செயல்படுத்தத் தொடங்குவோம். துரதிருஷ்டவசமாக அது நடக்காது.

முன்பெல்லாம் குறைந்தது பத்து புத்தாண்டுத் தீர்மானங்களாவது வைத்திருப்பேன். அவற்றுள் ஒன்றிரண்டைக் கூட ஆண்டு முடிவதற்குள் நிறைவேற்ற முடியாது. ஒரு கட்டத்தில் இது சலிப்பைத் தந்து, தீர்மானம் செய்வதை நிறுத்தினேன். பிறகு யோசித்துப் பார்த்தபோதுதான், நமக்கு சுலப சாத்தியங்களாக உள்ளவற்றில் மட்டுமே தீர்மானமான முடிவெடுக்க வேண்டும் என்பது புரிந்தது. திடீர் ஆர்வத்தில் தொடங்கும் எதுவும் தீர்மானங்களுக்குரியதல்ல என்பதும் அப்போது புரிந்ததே. உதாரணமாகக் கார் ஓட்டுதல், நீச்சல் போன்றவை. முழுத் தீவிரத்துடன்தான் இச்செயல்களில் ஈடுபட்டேன். ஆனால் முடியாமல் விட்டு விட நேர்ந்தது. டயட் என்பதையும் கிட்டத்தட்ட இதில் சேர்க்கலாம். ஐந்தாண்டுக் காலம் உக்கிரமாக டயட் கடைப்பிடித்து, கணிசமாக (அதிகபட்சம் 28 கிலோ) எடை குறைத்தேன். அந்த ஐந்தாண்டுக் காலத்துக்கு முன்னர் நான் விரும்பி உண்ட அனைத்தையும் அப்போது முற்றிலுமாக விலக்கி வைத்திருந்ததால், ஏதோ ஒரு பலவீனமான சமயத்தில் அவை திரும்பவும் ஒரு பிசாசு போலப் பாய்ந்து கவ்விக்கொண்டுவிட்டன. விளைவு, மீண்டும் எடை ஏற்றம்.

இவற்றைக் கூர்ந்து கவனித்தபோது ஒன்று புரிந்தது. எழுத்துக்கு அப்பால் நான் மேற்கொள்ளும் தீர்மானங்கள் எதுவும் வெற்றியடைவதில்லை. அப்படியே சில வெற்றி கண்டாலும் அவை என் தீர்மானத்தால் நடப்பதல்ல. பெரும்பாலும் என் மனைவியின் தீர்மானமாக இருக்கும். ஆனால் எழுத்து சார்ந்து நிர்ணயிக்கும் இலக்குகளை மிக எளிதாகத் தொட்டுவிடுகிறேன். காரணம், எழுதுவதற்குத் தனியான மெனக்கெடல்கள் ஏதும் எனக்கு அவசியமில்லை. படிப்பு-ஆய்வு-சிந்தனை-எழுதுவது என்று ஒன்றோடொன்று தொடர்புடைய நான்கும் எவ்வளவு பாரம் சேர்த்தாலும் தாங்கக் கூடியதாக உள்ளது. மற்றவற்றில் பளு ஏறினால் மனம் முரண்டு பிடிக்கிறது.

ஓர் உதாரணம் சொல்கிறேன். ‘மீண்டும் தாலிபன்’ என்னுடைய சென்ற ஆண்டு திட்டத்தில் இல்லை. கபடவேடதாரியும் முன்னூறு வயதுப் பெண்ணும் எழுதுதல் பற்றிய குறிப்புகளும் மட்டும்தான் ஆண்டுத் தொடக்கத்திலேயே எண்ணமாகக் கைவசம் இருந்தன. ஆனால் மீண்டும் தாலிபன் எழுதும் சூழல் ஏற்பட்டபோது வெறும் இரண்டு நாள் அவகாசம் எடுத்துக்கொண்டு மனத்தை முற்றிலுமாக அதில் மூழ்கடித்துவிட முடிந்தது. அது கபடவேடதாரியைக் காட்டிலும் அளவில் பெரிது. தவிர, அல்புனைப் பிரதி என்பதால் ஏராளமாகப் படிக்கவும் ஆய்வு செய்யவும் தேவை இருந்தது. இருப்பினும் என் அன்றாடத்தில் அதை எளிதாகச் சொருகிவிட முடிந்தது. மீண்டும் தாலிபன் எழுதிய நாள்களில் சமைக்கக் கற்றுக் கொள்வது என்றோ, ஷேர் மார்க்கெட் சூட்சுமம் பயில்வது என்றோ தீர்மானம் செய்திருந்தேன் என்றால் அது மங்களம் பாடியிருக்கும்.

எனவே, தீர்மானங்களை நமது இயல்புக்கு மிகவும் எளிதாகப் பொருந்தக் கூடிய துறை சார்ந்து, சற்றே சவால் உள்ளதாக அமைத்துக்கொள்வது நல்லது. சவால் நிறைவேறியதும் அடுத்த வருடம் இன்னும் சிறிது கரடுமுரடான சவாலை மேற்கொள்ளலாம்.

2022க்கு மூன்று தீர்மானங்கள் வைத்திருக்கிறேன். இதில் முதல் இரண்டும் சுமார் 2000 பக்கங்கள் கொள்ளளவு கொண்டவை. ஒன்று, சற்று விவகாரமான ஓர் அல்புனைவு. (அரசியல் / தீவிரவாதம் அல்ல.) இன்னொன்று மிகவுமே விவகாரமான ஒரு நாவல். மூன்றாவதும் பக்கக் கணக்கு கொண்டதுதான். என்ன என்று இப்போது சொல்வதற்கில்லை. வடிவம் அகப்பட்டதும் சொல்கிறேன்.

Share

1 comment

  • ஆர்பாட்டமாக ஆரம்பித்து எதற்கும் அகப்படாமல் போவதை விட பொருத்தமானவற்றில் பொருத்திக் கொள்வது எப்படி? என்பதை சொல்லியிருக்கிறீர்கள். //தீர்மானங்களை நமது இயல்புக்கு மிகவும் எளிதாகப் பொருந்தக் கூடிய துறை சார்ந்து, சற்றே சவால் உள்ளதாக அமைத்துக்கொள்வது நல்லது. சவால் நிறைவேறியதும் அடுத்த வருடம் இன்னும் சிறிது கரடுமுரடான சவாலை மேற்கொள்ளலாம்// நினைவுக்குறிப்பில் எழுதிய தீர்மானத்தை இன்னும் இறுதி செய்யாத நிலையில் உங்களின் இந்த வரிகள் தீர்மானத்தை இன்னும் அணுக்கமாய் அனுகி இறுதியாக்க உதவும் என நினைக்கிறேன்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி