க்ளப்கள்

பேராச்சி கண்ணன் எழுதிய தல புராணம் என்ற புத்தகத்தைப் படிக்க எடுத்தேன். மிகவும் சுவாரசியமாகப் போகிறது. அதில் அடையாறு க்ளப் குறித்த கட்டுரையைப் படித்தபோது சென்னை நகரத்தில் உள்ள க்ளப்கள் சில நினைவுக்கு வந்தன.

சென்னையில் சில க்ளப்கள் இருக்கின்றன. தி. நகர் க்ளப், எஸ்.வி.எஸ் க்ளப், காஸ்மோபாலிடன் க்ளப், ரேஸ் கோர்ஸ் க்ளப் என்பது போல. போரூர் போகிற வழியில் லெ மிக்கல் என்றொரு க்ளப் இருக்கிறது. நான் கிண்டி க்ளப்புக்குச் சென்று பார்த்ததில்லை. ஆனால் மற்ற மூன்று க்ளப்களுக்குத் தலா ஒரு முறை சென்றிருக்கிறேன். முற்காலத்தில் சிறிது வசதி படைத்த கனவான்கள் இளைப்பாறும் இடமாக இந்த க்ளப்கள் இருந்திருக்கின்றன. வீட்டுக்குத் தெரியாமல் செய்யக் கூடிய காரியங்களுக்கும் வசதியாக இருக்கும் போல.

என் மனைவி பழங்கால எழுத்து முறைக்கு ரசிகை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க கால நாவலாசிரியர்களைத் தேடிப் படிப்பார். அவர் சொல்லும் சில கதைகளின் வழியாக அந்நாளில் க்ளப்புக்குப் போகிறவர்களின் சமூக அந்தஸ்து, பழக்க வழக்கங்கள் சார்ந்த ஒரு பிம்பம் எனக்கு முதல் முதலில் கிடைத்தது. அசோகமித்திரன் ஒரு முறை ஏதோ நிகழ்ச்சிக்காக தி நகர் க்ளப்புக்குச் சென்று, சூப் அருந்த நினைத்து மூன்று முறை முயற்சி செய்தும், அங்கே சூப் எடுத்துக் குடிக்கத் தந்த பீங்கான் ஸ்பூன், விரல்களுக்குப் பிடிபடாமல் வழுக்கி வழுக்கிக் கீழே விழுந்ததை என்னிடம் சொல்லியிருக்கிறார்.

நான் முதல் முதலில் சென்றது அண்ணா சாலையில் உள்ள காஸ்மோபாலிடன் க்ளப்புக்கு. சு. சமுத்திரத்துக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்ததைக் கொண்டாடுவதற்காக அந்த க்ளப்பில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமனுடன் அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அந்தச் சூழ்நிலையின் ஆடம்பரம் அன்று என்னை மிரள வைத்தது. சரியாகச் சாப்பிடவே முடியவில்லை. பஃபே பழகாத காலம் (இன்று வரை பழகவில்லை என்பது தனி.) என்பதால், இருந்த அனைத்தையும் தட்டில் போட்டுக்கொண்டு, அனைத்தையும் மேலே சிந்திக்கொண்டு, கீழே கொட்டி வாரி, சமுத்திரத்தைப் பாராட்ட வந்தவர்களுக்குத் தனியொரு கலை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்துவிட்டு வந்தேன்.

பிறகு நெடுங்காலம் கழித்து, லெ மிக்கல் க்ளப்புக்குப் போக 2006 இல் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அது நான் சீரியல் எழுத ஆரம்பித்திருந்த காலம். ஒரு சீரியல் எழுதி முடித்திருந்தேன். இன்னொன்று தொடங்கியிருந்த சமயத்தில் ஓர் இயக்குநர் கதை சொல்வதற்காக என்னை அங்கே வரச் சொல்லியிருந்தார். புல்வெளி நடுவே வரிசையாகக் குச்சி நட்டுக் கூரை வேய்ந்திருந்தார்கள். ஒவ்வொரு கூரைக்கும் கீழே ஒரு மேசை, இரண்டு நாற்காலிகள். ‘ரெண்டு பீர்’ என்று இயக்குநர் ஆர்டர் செய்தார். உடனே, ‘ரெண்டும் எனக்குத்தான். உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க’ என்று சொன்னார். நல்ல வெயில் நேரம் என்பதால் நான் ஒரு ஜூஸ் சொன்னேன்.

ஆர்டர் செய்தவை வந்ததும் இயக்குநர் ஒரே மூச்சில் இரண்டு பீர்களையும் குடித்து முடித்துவிட்டு, ஆரம்பிப்பமா என்று கேட்டார். சிறிதுகூடத் தடுமாற்றம் இல்லாமல், சொற்குழப்பம் இல்லாமல் ஒரு மணி நேரத்தில் ஒரு முழு சீரியல் கதையையும் எனக்குச் சொல்லி முடித்தார். நான் திகைத்துப் போய் அமர்ந்திருந்தேன்.

‘என்ன ஒண்ணும் சொல்ல மாட்டேன்றிங்க? கதை எப்படி இருக்கு?’

‘அது கிடக்கட்டும் சார். பீருக்குன்னு ஒரு மரியாதை இல்லையா, வரலாறு இல்லையா, கௌரவம் இல்லையா? நீங்க அதை இவ்ளோ அவமானப்படுத்துறது தப்பு சார்.’ என்று சொன்னேன்.

என் தலைமுறையில் க்ளப்களைத் தேடிச் செல்வோரை நான் கண்டதில்லை. உல்லாசம் என்றால் பாருக்குப் போவார்கள். தியேட்டர்கள், மால்கள், உணவகங்கள். அவ்வளவுதான். என் நண்பர் கௌதம் மட்டும் (ஜி. கௌதம் என்ற பெயரில் எழுதுவார். சிறந்த பத்திரிகையாளர். விகடன் வளர்ப்பு.) எஸ்.வி.எஸ் க்ளப்பின் சந்தாதாரராக இருந்தார் (இப்போது உண்டா என்று தெரியாது.) யாருடனாவது ஏதாவது பேச வேண்டுமென்றால் எஸ்.வி.எஸ்ஸுக்கு வரச் சொல்லிவிடுவார். ஒரே ஒரு முறை ஏதோ ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக என்னை அங்கே அழைத்துச் சென்றார். க்ளப்பில் அமர்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் வரும் என்று அப்போதுதான் தெரிந்தது.

இப்போதெல்லாம் சந்திப்புகளுக்கு காப்பி ஷாப்புகள் போதுமானவையாக இருக்கின்றன. மணிக் கணக்கில் உட்கார்ந்திருந்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அசோக் நகர் காஃபி டே காப்பி ஷாப்பில், ஒரே ஒரு காப்பி ஆர்டர் செய்துவிட்டு, நான்கு மணி நேரம் போனில் பேசிக்கொண்டே இருந்த ஓர் இளம் பெண்ணை ஒரு நாள் பார்த்தேன். ஏதோ காதல் விவகாரம் என்று நினைக்கிறேன். அன்றைக்கு நான் ஒரு மூன்று மணி நேர கால்ஷீட்டில் ஒருவரைச் சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். எங்கள் சந்திப்பு மேலும் ஒரு மணி நேரம் நீண்டது. அந்த நான்கு மணி நேரமும் அந்தப் பெண் குனிந்த தலை நிமிராமல் யாருடனோ ரகசியமாக போனில் பேசிக்கொண்டேதான் இருந்தாள். 110 ரூபாய் கொடுத்து வாங்கிய காப்பியில் பாதியைக் கூட அவள் குடிக்கவில்லை.

எண்ணிப் பார்த்தால், வாழ்வில் இதுவரை ஒருவரைச் சந்திப்பதன் பொருட்டு இம்மாதிரியான பொது இடங்களுக்கு வரச் சொல்லி நான் அழைத்ததே இல்லை. நான் சென்றதெல்லாம் பிறர் அழைப்பின் பேரில் நடந்ததுதான். வரச் சொல்வதென்றால் என் அலுவலகத்துக்குத்தான் அழைப்பேன். எழுதுவது மட்டுமல்ல. பேசுவதைக் கூட என் கூட்டுக்குள் இருந்து செய்வதுதான் எனக்கு சௌகரியமாக இருக்கிறது.

Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி