பொலிக! பொலிக! 20

‘என்ன சொல்கிறீர்? ஆளவந்தார் இறந்துவிட்டாரா! எம்பெருமானே!’ என்று நெஞ்சில் கைவைத்து அப்படியே சரிந்துவிட்டார் திருக்கச்சி நம்பி.

‘நம்பமுடியவில்லை சுவாமி. அவர் பாதம் பணிந்து, உபதேசமாக ஓரிரு ரத்தினங்களையேனும் பெற்றுவரலாம் என்று எண்ணித்தான் திருவரங்கத்துக்கே போனேன். ஆனால் போன இடத்தில் எனக்கு வாய்த்தது இதுதான்.’

ராமானுஜர் கண்களைத் துடைத்துக்கொண்டார். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கு முன்னால் இப்படியொரு அடி விழுந்துவிடுகிறது. மிகச் சிறு வயதில் தந்தையை இழந்தது முதல் அடி. சுதாரித்துக்கொண்டு கல்வியைத் தொடர்ந்தபோது தமது குணத்துக்குச் சற்றும் பொருந்தாத ஒரு பெண்ணை மணந்து வாழநேர்ந்தது அடுத்த அடி. அம்மா எப்படியாவது அவளைத் திருத்தி, சரிசெய்துவிடுவாள் என்று ராமானுஜர் நினைத்திருந்தார். ஆனால் அவளும் போய்விட்டாள். அது மூன்றாவது. பயிலச் சென்ற இடத்தில் ஆசாரியருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நான்காவது. எப்படியாவது திருக்கச்சி நம்பியிடம் சீடனாகச் சேர்ந்துவிடலாம் என்று எண்ணியிருந்தபோது அந்த வாய்ப்பு தனக்கில்லை என்று தெரிந்தது ஐந்தாவது. இதோ, ஆளவந்தாரை தரிசிக்கப் போய் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நேர்ந்தது ஆறாவது.

‘மனத்தைத் தளரவிடாதீர் ராமானுஜரே! இருந்த காலம் வரை அவரிடமிருந்து என்ன பெற்றோம், எத்தனை பெற்றோம் என்று எண்ணிப் பார்த்து நிம்மதியடைவோம்.’

‘எனக்கு அதுவும் வாய்க்கவில்லையே. என்றேனும் ஒருநாள் அவரை தரிசித்துத் தாள் பணியும் கணத்தில் அப்படியே அவரது ஞானத்தின் ஜீவரசத்தை உறிஞ்சி எடுத்துக்கொண்டுவிடமாட்டோமா என்று ஒரு காலத்தில் பைத்தியம்போல் எண்ணிக்கொண்டிருப்பேன். வேத உபநிடத வகுப்புகளில் ஒவ்வொரு வரிக்கும் யாதவர் சொல்லும் பொருளை எதிரே வைத்து, ஆசாரியர் ஆளவந்தார் இதற்கு எவ்வாறு பொருள் சொல்வார் என்று நினைத்துப் பார்த்துக்கொண்டே இருப்பேன். அவரது எண்ணத்தின் வரி வடிவங்கள் ஒரு தரிசனம்போல் என் மனத்தில் அப்படியே ஏறிவிடுவதாக உணர்வேன்.’

திருக்கச்சி நம்பி புன்னகை செய்தார். ‘புரிகிறது ராமானுஜரே! அவர் விடைபெற்றுத்தான் போயிருக்கிறார். விட்டுவிட்டுப் போகவில்லை. அதுவும் உம்மை.’

‘என்னையா! நிச்சயமாக இல்லை நம்பிகளே. நான் அற்பனிலும் அற்பன். பாவிகளில் பெரும் பாவி. இல்லாவிட்டால் ஆசாரியரின் தரிசனம்கூடவா எனக்கு கிடைத்திருக்காது?’

ராமானுஜர் வெகுநாள் சமாதானமாகவே இல்லை. திருவரங்கத்தில் ஆளவந்தாரின் நேரடிச் சீடர்கள் எதிரே காட்ட முடியாத தமது உணர்ச்சிகளையெல்லாம் காஞ்சியில் நம்பிகளிடம் கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருந்தார்.

‘நீர் கோயிலுக்கு வாரும். பேரருளாளன் சன்னிதியில் பிரபந்தம் சொல்லிக்கொண்டிரும். ஆசுவாசம் உமக்கு அதில்தான் கிடைக்கும்.’ என்று திருக்கச்சி நம்பி அவரைத் தேற்றி கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.

அப்போதுதான் திருவரங்கப் பெருமான் அரையர் அங்கு வந்து சேர்ந்தார்.

திருக்கச்சி நம்பிக்கு அப்போதே புரிந்துவிட்டது. ஆனால் காட்டிக்கொள்ளவில்லை. அரையரை வரவேற்று மரியாதை செய்து சன்னிதிக்கு அழைத்துச் சென்றபோது அவர் கேட்டார். ‘நம்பிகளே, நான் வரதன் திருமுன் நாலு பாசுரம் பாட விரும்புகிறேன். உத்தரவு கிடைக்குமா?’

காஞ்சி கோயிலுக்கும் அரையர் உண்டு. இசையாலும் நாட்டியத்தாலும் இறைவனை மகிழ்விக்கும் திருப்பணியாளர். அவர் சொன்னார், ‘அரங்கன் அனுபவித்தது எங்கள் வரதனுக்கும் இன்று கிட்டுமென்றால் யார் தடுப்பார்கள்? தாராளமாக ஆரம்பியுங்கள்!’

கச்சிக்கு வாய்த்தான் மண்டபத்தில் பேரருளாளன் வீற்றிருந்தான். சுற்றிலும் கோயில் முக்கியஸ்தர்கள். ஆலவட்டம் வீசுகிற திருக்கச்சி நம்பி. அவருக்குச் சற்றுத் தள்ளி தமது சீடர்களுடன் அமர்ந்திருந்த ராமானுஜர். இங்கே காஞ்சி நகர் அரையர். எதிரே திருவரங்க அரையர்.

‘பாடுங்கள் அரையரே!’

அவர் ஆரம்பித்தார். அது உயிரை உருக்கும் குரல். பூச்சற்ற பக்தியின் பூரண வெளிப்பாடு. உருகி உருகிப் பாடிக் களித்த பன்னிரண்டு பேரின் உள்ளத்தை உருவி எடுத்து முன்னால் வைத்து வணங்குகிற பெருவித்தை. பாசுரங்களின் உருக்கத்தில் அரையர் தன்னை மறந்து ஆடவும் ஆரம்பித்தார். பத்து நிமிடம். அரை மணி. ஒரு மணிநேரம். அவர் எப்போது தொடங்கி எப்போது நிறுத்தினார் என்று யாருக்குமே தெரியவில்லை.

ராமானுஜர் பிரமை பிடித்தாற்போலப் பார்த்துக்கொண்டிருந்தார். என்ன குரல்! என்ன தெய்வீகம்! எப்பேர்ப்பட்ட கலை ஆளுமை இவர்! இப்படியொரு சங்கீதத்திலா அரங்கன் தினசரி குளித்துக் குளிர்ந்துகொண்டிருக்கிறான்! அவனுக்கு எப்பேர்ப்பட்ட கொடுப்பினை!

மண்டபத்தில் கூடியிருந்த அத்தனை பேரும் அரையரைப் போற்றிப் பேச வாய் திறந்த தருணத்தில் அது நிகழ்ந்தது. வரதனே வாய் திறந்தான்!

அது அசரீரியா, அந்தராத்மாவுக்குள் ஒலித்த பேரருளாளனின் ரகசியக் குரலா – யாருக்கும் புரியவில்லை. ஆனால் பேசியது அவந்தான். அதில் சந்தேகமில்லை.

‘அரையரே, நெக்குருகச் செய்துவிட்டீர்! என்ன வேண்டும் உமக்கு? தயங்காமல் கேளும்.’

கோயில் பிரசாதங்களும் பரிவட்ட மரியாதையும் மற்றதும் முன்னால் வந்து நின்றன.

அரையர் கைகூப்பி மறுத்தார். ‘அருளாளா! எனக்குப் பரிவட்ட மரியாதையெல்லாம் வேண்டாம். பதிலாக இந்த ராமானுஜரை என்னோடு அனுப்பிவைத்துவிடு. ஶ்ரீவைஷ்ணவ தரிசனம் தழைக்க இவர் இங்கிருப்பதைவிட அரங்க நகரில் வந்து ஆசாரிய பீடத்தை அலங்கரிப்பதே உகந்தது.’

ராமானுஜர் திடுக்கிட்டுப் போனார். ‘நானா! நானெப்படி வருவேன்? என்னால் வரதனைவிட்டு நகர முடியாது.’

அரையர் அவருக்கு பதில் சொல்லவில்லை. அருளாளனைப் பார்த்தேதான் பேசினார். ‘என்ன வேண்டுமென்று நீ கேட்டாய். நான் வேண்டியதைச் சொல்லிவிட்டேன். மற்றபடி உன் இஷ்டம்.’

‘தர்மசங்கடப் படுத்துகிறாய் அப்பனே. ராமானுஜர் நமக்கு உகந்தவர். அவரை எப்படி நான் அரங்கனுக்கு விட்டுக் கொடுப்பேன்?’

‘அது உன் இஷ்டம். கேட்டதைக் கொடுக்கும் தெய்வமென்று பேரெடுத்தவன் நீ. பேர் நிலைக்க நினைத்தால் அதற்குரியதைச் செய்.’

ராமானுஜருக்குப் புரிந்துவிட்டது. மதுராந்தகம் ஏரிக்கரையில் பெரிய நம்பியை முன்னொரு சமயம் சந்தித்தபோதே தோன்றியதுதான். எம்பெருமான் சித்தம் நடைமுறைக்கு வர இத்தனைக் காலம் பிடித்திருக்கிறது. நல்லது. இதுவும் அவன் விருப்பம்.

‘முதலியாண்டான்! நீ திருமடத்துக்கு உடனே சென்று நமது திருவாராதனப் பெருமாளை எடுத்து வந்துவிடு. திருவரங்கத்துக்கு நாம் போனாலும் அருளாளனுக்குச் செய்யும் ஆராதனை நிற்காது.’

அன்றே ராமானுஜர் அரங்கமாநகருக்குப் புறப்பட்டார்.

(தொடரும்)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!