ஓட்டுக்குப் பணம் வாங்கினால் ஓராண்டு காலச் சிறை என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வருகிற தேர்தலை மகா ஜனங்கள் ஒரு திருவிழா ஆக்குவதே மேற்படி சங்கதியால்தான். அப்படி இருக்கிற நிலையில் இப்படியெல்லாம் இசகுபிசகாகச் சட்டம் கொண்டு வந்து அண்டர்வேருக்குள் அணுகுண்டு வைத்தால் என்ன அர்த்தம்? இதெல்லாம் மனித உரிமை மீறல் வகையறாவுக்குள் வருமா என்று தெரியவில்லை.
கட்சிகள் எதுவும் இன்னும் பிரசாரம்கூட ஆரம்பிக்காத நிலையிலேயே கிட்டத்தட்ட எட்டுக் கோடி ரூபாய் பறிமுதலாகியிருக்கும் போலிருக்கிறது. இதையெல்லாம் எங்கிருந்து எங்கே கொண்டுபோய்க்கொண்டிருந்தார்களோ. எத்தனை பேர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டார்களோ. எல்லாம் எள்ளு.
சென்ற தேர்தல் சமயம் இந்தப் பணப் பட்டுவாடா விவகாரம்தான் தொலைக்காட்சிகளில் பெரும் பரபரப்பு அம்சமாக இருந்தது. ஓலைச் சரிவுகளின் பின்னால் லுங்கியை மடித்துக் கட்டி, குத்திட்டு அமர்ந்து சூட்கேஸ்களிலிருந்து கத்தை கத்தையாக எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். நள தமயந்தி படத்தில் மோர்சிங் வித்வான் அப்பளத்தை எண்ணுவாரே, அப்படி எண்ணினார்கள்.
பயபுள்ளைகளுக்கு எத்தனை சமூக அக்கறை! அதுநாள் வரை சூட்கேஸ் நிறைந்த பணத்தை ஜெய்சங்கர் படங்களில் மட்டுமே பார்த்த தமிழ் சமூகத்துக்கு அது சந்தேகமில்லாமல் கண்கொள்ளாக் காட்சிதான். தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்கள் சுழன்று சுழன்று இந்தப் பட்டுவாடா திருவிழாவைப் படமெடுத்து ஒளிபரப்பினார்கள். எந்த சானலைத் திருப்பினாலும் இதே காட்சி. மறு ஒளிபரப்புகளிலேயே கதி மோட்சம் கண்ட காட்சி அது.
இதற்குத்தான் இந்த முறை வேட்டு அறிவித்திருக்கிறது தேர்தல் கமிஷன். தவிரவும் வீடு தோறும் ஒரு விழிப்புணர்வுக் குழு தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, ஏன் பணம் பெறக்கூடாது என்று பிரசாரம்வேறு செய்யப் போகிறது. சற்றே மிஷனரித்தனமான நடவடிக்கையாகத் தோன்றினாலும் இதுவும் தேவையே.
கொஞ்சம் உரக்க யோசித்துப் பார்த்தால் பரிதாபமாகத்தான் உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் பிரதானப் போட்டியாளர்களை உள்ளடக்கிய இரண்டு பெரும் கட்சிகள் பணம் தர நினைக்குமா? ஓட்டுக்கு நூறு இருநூறு? அல்லது வீட்டுக்கு ஐந்நூறு ஆயிரம்? அதற்குமேல் வாய்ப்பில்லை. அம்மக்கள் மிஞ்சிப் போனால் தமது நாலைந்து நாள் உழைப்பில் இந்தப் பணத்தைச் சம்பாதித்துவிட முடியும்.
இந்தக் குறைந்தபட்ச வருவாய்க்காகத் தமது கம்பீரத்தை, கௌரவத்தை அடகு வைக்கிறோம் என்று யோசித்து அறியத் தெரியாதவர்களைத்தான் இக்கட்சிகள் வட்டமிடுகின்றன. அவர்களே பெரும்பான்மையானவர்களாக இருப்பது ஒரு துரதிருஷ்டம் என்றால், அந்தப் பெரும்பான்மையின் சதவீதத்தைக் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்வதில் ஆட்சியாளர்கள் காட்டும் அக்கறை அதனினும் பெரிய துரதிருஷ்டம்.
1997ம் வருடம். பிகாரில் பொதுத் தேர்தல். லாலுவின் வீட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகளில் ஒன்றை நிறுத்தினால்கூட ஜெயித்துவிடும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். எனவே லாலு நிற்பதில் பிரச்னை என்பது புரிந்தது. அப்படியேதான் ஆனது.
ஊழல் குற்றச்சாட்டுகள், வாத விவாதங்கள், தீர்ப்புக் களேபரங்களின் இறுதியில் லாலு இல்லாத ஒரு தேர்தலை பிகார் எதிர்கொள்ளும் சூழல் உருவானபோது, தெய்வாதீனமாக அவர் தொழுவத்து ஜீவாத்மாக்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்காமல் தமது மனைவி ராப்ரி தேவியை முதல்வர் வேட்பாளராகத் தன் கட்சியின் சார்பில் நிறுத்தினார். இதில் அவரது எதிர்க்கட்சிகளுக்கும் எதிரிக் கட்சிகளுக்கும் அதி பயங்கரக் கோபம். ராப்ரிக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்?
அச்சமயம் பிகாரில் உள்ள பக்சர் என்னும் பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தேன். ஒரு குப்பம். அங்கே எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் ஒவ்வொருத்தர் கையிலும் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. அதிர்ந்துவிட்டேன். அவை லாலு எதிர்ப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கிவிட்டுப் போனவை.
நீ என் கட்சிக்கு ஓட்டுப் போடு அல்லது போடாது போ. ஆனால் ஆர்ஜேடி ஆட்கள் வந்தால் சுட்டுவிடு என்று சொல்லிவிட்டுப் போனார்களாம்.
நல்லவேளை அம்மாதிரி அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை என்றாலும் துப்பாக்கியை அன்பளிப்பாகக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளும் மனநிலையைக் கவனிப்பது அவசியம்.
வாக்காளர்களிடையே விழிப்புணர்வு வேண்டும் என்பதும், பணம் வாங்க மறுப்பதை அவர்கள் பெருமையாகக் கருதவேண்டும் என்பதும் ஓட்டளிப்பதை ஒரு தேசியக் கடமையாக உணரவேண்டும் என்பதும் அவசியமே. இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கிவைக்கும் கையோடு தேர்தல் கமிஷன் இன்னொரு சட்டத்தையும் பொதுவில் தூக்கிப் போடலாம்.
பணம் அல்லது பொருளை லஞ்சமாகக் கொடுக்கும் கட்சிகள் (வேட்பாளர்களல்ல; கட்சிகள்) அடுத்தப் பத்திருபது வருஷங்களுக்கு கார்ப்பரேஷன் தேர்தல்களில்கூட நிற்க முடியாது!
முடியுமா? செய்வார்களா? தேர்தல் கமிஷன் இதைச் செய்தால் கண்ணை மூடிக்கொண்டு விழுந்து சேவிக்கலாம்.
(நன்றி: தினமலர் 18/03/16)