தனக்கு மனம் என்பதே இல்லை என்றும் அதனால் சலனம் என்றால் என்னவென்றே தெரியாது எனவும் சொல்கிறான் நம் சூனியன். தன்னுடைய படைப்புகள், எவ்வளவு துல்லியமாகச் செயல்படுகின்றன என்றும் அவர்களது செயல்கள் எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது என்பதையும் அதில் ஒரு லலிதம் இருக்கிறது என்பதையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறான்.
ஆனால் மனித இனமே ஒரு பாவப்பட்ட பிறப்பு என்கிறான். கடவுளின் திறமையாக அவன் வர்ணிப்பது புறத்தோற்ற வடிவத்தை மட்டும் தான். அதிலும் ஷில்பாவை கண்டவனுக்கு அவளை ஒரு பேரழகியாகக் கடவுள் சிருஷ்டித்திருப்பதாகச் சொல்கிறான். அவளைச் சற்றுநேரம் வர்ணித்தபின் அவளின் மன ஓட்டங்களை அறிந்து கொள்ள அவளுக்குள் நுழைகிறான். ஷில்பாவுக்கும் பாராவுக்கும் உள்ள தொடர்பு என்ன எப்படி வந்தது என்பதை காண்கிறோம். நல்ல ஒரு எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள அன்பை அழகாகச் சொல்கிறான் ஷில்பா ஒரு வழக்கறிஞர் என்பதால் அவளின் விவரங்கள் அனைத்தும் அழகாகச் சேகரித்து தொகுத்து வைக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் சரிதான் ஆனால் ஷில்பாவுக்கும் சாகரிகாவிற்கும் உள்ள தொடர்பைக் குறித்து எதையோ கண்டு கொள்கிறான் சூனியன். அதை வைத்துத் திட்டமொன்றை தீட்டுகிறான்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!