வெஜ் பேலியோ தொடர்பாக இணையத்தில் நான் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்’ கிழக்கு பதிப்பகம் மூலம் வருகிற சென்னை புத்தகக் காட்சியில் நூலாக வெளியாகிறது.
இந்தப் புத்தகத்துக்கு ஒரு விசேடம். இக்கட்டுரைத் தொகுப்பை நான் முதலில் மின் நூலாக அமேசானில் வெளியிட்டேன். ஒரு சில மாதங்களிலேயே மிக நல்ல விற்பனை உயரம் தொட்டது. மின் நூலாக வெளியிட்ட ஒன்றின் இரண்டாம் பதிப்பை அச்சுப் பதிப்பாகக் கொண்டு வருவதென்பது தமிழில் அநேகமாக இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன். [விமலாதித்த மாமல்லனின் ‘தவிப்பு’ சிறுகதைத் தொகுப்பு இதற்குமுன் வெளியாகிவிட்டால் இது இரண்டாவது.] இம்மாதிரியான ஏடாகூடப் பரீட்சார்த்தங்களை பத்ரி தவிர வேறெந்தப் பதிப்பெலியையும் வைத்துச் செய்து பார்க்க முடியாது. பத்ரிக்கு என் மனமார்ந்த நன்றி.
இந்தப் புத்தகத்துக்கு இன்னொரு விசேடமும் உண்டு. அது என்னவென்றால், புத்தக வடிவமே கொள்ளாத ஒரு தொகுப்பை நான் புத்தகமாகக் கொண்டு வருவது இதுவே முதல் முறை என்பது. உட்கார்ந்து ஒரு வாரம் மெனக்கெட்டால் Format செய்துவிட முடியும்தான். சுத்தமாக நேரமில்லை என்பதால் அதைச் செய்யாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் தோன்றியது. வடிவமற்ற வடிவமே ஏன் இதன் வடிவமாக இருந்துவிட்டுப் போகக்கூடாது?
ஒரு புத்தகத்துக்கான இலக்கணச் சட்டங்களுக்குள் இது அடங்கவில்லையே தவிர, இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் தன்னளவில் முழுமையானவையே. வெஜ் பேலியோ உணவு முறையை நான் பயிலவும் பழகவும் தொடங்கிய நாள் முதல் 28 கிலோ எடை குறைத்தது வரை சந்தித்த சவால்களையும் எதிர்கொண்ட விதத்தையும் இதில் விவரித்திருக்கிறேன். நான் அறிவியல் தெரிந்தவனோ, மருத்துவம் அறிந்தவனோ, உணவுத்துறை நிபுணனோ, டயட்டீஷியனோ அல்ல. எல்லாமே சுயநலன் கருதிக் கேட்டறிந்ததும் படித்துத் தெளிந்ததும்தான். எனக்குப் பலன் கொடுத்த ஓர் உணவு முறை பிற குண்டர் குலத் தோன்றல்களுக்கும் உதவட்டுமே என்ற எண்ணத்திலேயே இக்கட்டுரைகளை எழுதினேன்.
மின் நூலாக இன்றும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருக்கும் இது, இப்போது அச்சு நூலாகவும் வெளிவருகிறது.
இந்த வருடம் புத்தகக் காட்சியில் வெளிவருகிற என்னுடைய நான்காவது நூல் இது.
வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள் | விலை ரூ. 100 | கிழக்கு பதிப்பகம்
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.