புத்தக அறிமுகம்

யுத்த காண்டம்

வினுலா என்னிடம் எழுதக் கற்றுக்கொள்வதற்காக வந்தார். வகுப்புக் காலத்தில் அவர் எதையும் பேசிக் கேட்டதில்லை. ஒன்றிரண்டு அசைன்மெண்டுகளைத் திருப்தியாகச் செய்ததால் மெட்ராஸ் பேப்பரில் எழுதச் சொன்னேன். ஒன்றிரண்டுதான் அதிலும் எழுதியிருப்பார். அந்தச் சமயத்தில் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியது. மற்ற அனைத்தையும் மறந்து, அதைக் கவனிக்கச் சொல்லிவிட்டு வேறு வேலைகளில் மூழ்கிவிட்டேன்.
ஒரு சரியான பத்திரிகையாளர் என்பவர் எப்படி இருப்பார் என்பதை இம்மாதிரித் தருணங்களில்தான் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும். நான் அவருக்கு முன்கதை, பின்கதை எதையும் சொல்லவில்லை. எந்த ரெஃபரன்ஸும் சுட்டிக்காட்டவில்லை. புத்தகங்கள் சிபாரிசு செய்யவில்லை. போரைக் கவனி. அவ்வளவுதான்.
ஆனால் அவர் எழுதியது கிட்டத்தட்ட இரு தேசங்களின் உறவு மற்றும் பிரிவின் முழுமையான சரித்திரம். உக்ரைனை எடுத்து விழுங்குவதற்கு ரஷ்யா முன்வைக்கும் நியாயங்களையும் தனது தனித்துவத்தை இழந்துவிடக் கூடாது என்பதற்காகத் தன் சரித்திரம் முழுதும் உக்ரைன் எப்படியெல்லாம் போராடி மீண்டெழுந்து வந்திருக்கிறது என்பதையும் அடித்தளமாகப் போட்டு இந்தக் குரூரமான, சுயநலம் மிக்க, நூறு சதவீதம் அயோக்கியத்தனம் பொருந்திய படையெடுப்பின் பின்னணியில் ஒரே ஒரு சிறிய நியாயமும் இல்லாததைத் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக் காட்டிவிட்டார்.
விறுவிறுப்பும் அழுத்தமும் கூர்மையும் மிக்க வினுலாவின் எழுத்து, இந்த ஆண்டு என்னைக் கவர்ந்த சிலவற்றுள் ஒன்று. இந்தப் புத்தகம் அளித்த நம்பிக்கையில்தான் அவரை உடனடியாகத் ‘திறக்க முடியாத கோட்டை’யை ஆரம்பிக்கச் சொன்னேன். ஒரு வகையில் அது ‘யுத்த காண்ட’த்தின் தொடர்ச்சி. இன்னொரு வகையில் அதன் தோற்றுவாய்.
சென்னை புத்தகக் காட்சியில் ஜீரோ டிகிரி அரங்கில் வினுலாவின் ‘யுத்த காண்டம்’ கிடைக்கும். இப்போதே வாசிக்க விரும்பினால் இங்கே சென்று வாங்கி வாசிக்கலாம்.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி