2023 ஆம் ஆண்டுக்கென ஐந்து திட்டங்களை வகுத்திருந்தேன். மார்ச் தொடங்கி அக்டோபருக்குள் நிறைவு செய்துவிட வசதியாக அன்றாடம் என்னென்ன / எவ்வளவு எழுத வேண்டும், எப்போது என்னென்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் மிகவும் கவனமாகக் கணக்கிட்டு திட்ட கமிஷன் துணைத் தலைவரைப் போலச் செயல்பட்டேன். இயல்பாகவே ரிஷப ராசி என்பதனாலா, சனிதசை கேது புக்தி என்கிற தனிச் சிறப்புக் காரணத்தாலா என்று தெரியவில்லை. நான் போட்ட ஐந்து திட்டங்களையும் என்னப்பன் தூக்கிக் கடாசிவிட்டுப் புதிதாக இரண்டு விஷயங்களைக் கையில் எடுக்க வைத்தான்.
1. மணிப்பூர் கலவரம்.
2. கணை ஏவு காலம் (நிலமெல்லாம் ரத்தம் – பாகம் 2)
கடந்த ஏழு மாதங்களில் இந்த இரண்டு புத்தகங்களும் என்னை முழுதாக எடுத்து விழுங்கின. இவற்றைத் தவிர வேறு எதையும் சிந்திக்கக் கூட முடியவில்லை. ஒவ்வொரு நாளும் குறைந்தது பதினாறு முதல் பதினெட்டு மணி நேரம் இவற்றுடன் இருந்தேன். இரண்டுமே அரசியல். இரண்டுமே வரலாற்றுப் பின்னணியுடன் விவரிக்கப்பட வேண்டியவை. இரண்டுமே ஆளும் தரப்பால் அவதிக்குள்ளான நிலங்கள். இரண்டிலுமே பாதிக்கப்பட்டவர்களின் குரலைப் பொருட்படுத்த யாருமற்ற அவலம்.
மணிப்பூர் கலவரம் எழுதி நிறைவு செய்து, சிறிய இடைவெளிகூட இல்லாமல் கணை ஏவு காலத்துக்கு வேலை செய்ய வேண்டியிருந்தது. தவிர, அது தினசரித் தொடராகவும் வரவேண்டி இருந்தது. இது நிலமெல்லாம் ரத்தத்தின் இரண்டாம் பாகம் என்பதால் அந்தச் சரித்திரத்தைப் படித்தறிந்த அத்தனை வாசகர்களும் இதனைப் படிப்பார்கள். புதிய வாசகர்களுக்குப் பின்னணியைச் சொல்லப் போய் அது இவர்களுக்குக் கூறியது கூறலாக இருந்துவிடக் கூடாது என்பதால் இரண்டாயிரமாவது ஆண்டு வரையிலான சரித்திரத்தைத் தொடருக்குள்ளேயே பெட்டிச் செய்திகளாகச் சுருட்டி வைத்து, கடந்த இருபத்து மூன்றாண்டுக் கால வரலாற்றினை மட்டும் விரித்துப் பேச வேண்டியிருந்தது. சிறிது சிரமம்தான். ஆனால் சுவாரசியமாக இருந்தது.
தவறிக்கூட எந்தப் பக்கமும் சாயாமல், உண்மைக்கு மட்டும் விசுவாசமாக இருந்து, சாத்தியமான அதிகபட்ச நேர்மையை இந்தப் புத்தகங்களுக்குத் தர வேண்டும் என்பது தவிர வேறு விருப்பம் இருக்கவில்லை. எழுதி நிறைவு செய்தபோது நினைத்ததைச் செய்திருப்பதாகவே தோன்றியது.
இந்த வருடம் இந்த இரண்டு புத்தகங்கள்தாம். மணிப்பூர் கலவரம் எழுத்து பிரசுர வெளியீடு. ஜீரோ டிகிரி அரங்கில் எனது மற்ற அனைத்துப் புத்தகங்களுடன் இதுவும் கிடைக்கும். கணை ஏவு காலத்தை, அதனைத் தொடராக வெளியிட்ட இந்து தமிழ் திசையே புத்தகமாகவும் வெளியிடுகிறது. எனவே அது இந்து தமிழ் திசை அரங்கில் கிடைக்கும்.