
இந்தக் குறிப்பு, பள்ளி-கல்லூரி மாணவ மாணவியருக்கு மட்டும். (குறைந்தபட்சம் +2) அல்லது பள்ளி-கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு.
விமலாதித்த மாமல்லனின் விளக்கும் வெளிச்சமும் கதைத் தொகுப்பு, எழுத்துக் கலை கட்டுரைத் தொகுப்பு இரு நூல்களும் புதிய பதிப்பு காணவிருக்கின்றன.
தற்போதைய பதிப்பு கிட்டத்தட்ட விற்று முடிந்துவிட்ட நிலையில் இரு நூல்களிலும் சில பிரதிகள் மட்டும் அவரிடம் கைவசம் உள்ளன. அவற்றை நவீன இலக்கியத்தில் – அசலான இலக்கியத்தில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினருக்கு அன்பளிப்பாகத் தரவிருக்கிறார். (ஒருவருக்கு ஒரு புத்தகத்தின் ஒரு பிரதி மட்டும்.)
இலக்கியத்தில் ஆர்வமுள்ள / புத்தகம் வாங்க வசதியற்ற மாணவ மாணவியர் (அல்லது அவர்கள் சார்பாக அவர்தம் பெற்றோர்) மாமல்லனை வாட்சப்பில் தொடர்புகொண்டால் போதும். உங்களுக்குத் தபால் செலவுகூட இல்லாமல் அவரே அனுப்பி வைப்பார்.
தொடர்புகொள்ள வேண்டிய வாட்சப் எண்: 9551651212.
மாமல்லனைப் படிப்பதால் ஒரு லாபமும் இரண்டு இழப்புகளும உண்டு.
போலித்தனமற்ற, பாசாங்கற்ற, ஜோடனைகளற்ற, பொய்க்கலப்பில்லாத, உயர்தரமான, ஆக எளிமையான எழுத்து என்பது எப்படி இருக்கும் என்று அறிய முடிவது லாபம்.
இழப்புகள் பின்வருமாறு:
1. ஆகச் சிறந்த எழுத்து என்று இன்று சொல்லப்படும் பலவற்றின்மீது மதிப்பில்லாமல் போகும்.
2. எல்லாம் செய்ய முடிவது போல எழுதிப் பேர் வாங்கிவிடவும் முடியும் என்ற எண்ணம் இருந்தால் அது வடியும்.
தொழில்முறை எழுத்து, பொழுதுபோக்கு எழுத்து, சுமாரான எழுத்து, நல்ல எழுத்து, நன்றாக இல்லாத எழுத்து, பிரபல எழுத்து போன்ற வகையினம் தவிர, எழுத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்த ஒருவரைப் பயில்வதால் கலப்படமற்ற உயர்தரம் எதுவென எளிதில் அறிய முடியும். அதுதான் நல்ல இலக்கியங்களை நாடிச் செல்லச் சரியான வழி காட்டும்.
என் வகுப்புகளுக்கு வருவோருக்கு நான் மூன்று கட்டங்களாக நல்ல எழுத்தை அறிமுகப்படுத்துவேன்.
1. நல்ல எழுத்தாளர்களின் புத்தகங்கள்
2. சிறந்த புத்தகங்கள்
3. மாஸ்டர்களின் எழுத்து
மாமல்லன் மூன்றாவது பகுதியில் எப்போதும் வருபவர்.
மாணவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. பிரதிகள் கைவசம் உள்ளவரை மட்டுமே இந்த இலவசச் சேவை. எனவே ஆர்வமுள்ளோர் முந்துக.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.