இறவான்

இறவான் – சுரேஷ் பவானி

“பொறாமை! தான் வாழும் காலத்தில் தன்னை விஞ்சும் ஒருவன் வந்துவிடக்கூடாது என்று நினைத்துவிட்டான். நீங்களே சொல்லுங்கள். ஒரு நல்ல கலைஞன் அப்படி நினைப்பானா? கலை என்பது தெய்வம் அல்லவா? கலைஞன் என்பவன் தெய்வத்தின் ஆராதகன் அல்லவா?”

கத்தினான் அவன். காகிதங்களை கிழித்தெறிந்தான் அவன். தீயிட்டும் கொளுத்தினான் அவன். பிறகு முகம் கழுவி டீயொன்றும் குடித்தான் அவன்.

அவன் யாரென்று உங்களுக்குத் தெரியும். தெரியுமென்றால் அவன் பெயரை மட்டுமே நீங்கள் அறிவீர்கள். அவன் அடையாளத்தை அல்ல. அவனின் அடையாளம் என்பது இந்த பெயரும்கூட அல்ல. இசை!

இசை எனும் பெயரில் ஆங்காங்கே ஓசைகளை மட்டுமே கேட்டு கொண்டிருக்கும் உங்கள் காதுகளின் ஓரங்களில் திடீரென மெல்லிய குளிர்ச்சியை உணர்கிறீர்களா? அந்த குளிர்ச்சி மூளைக்குப் பரவி, பின் உங்கள் இதயத்தின் அடியாழத்தில் குடியேறுகிறதா? அங்கேயே நீங்கா நினைவாக தங்கிவிடுகிறதா? யோசிக்கவே வேண்டாம். அதுதான் தெய்வீக இசை. அதுதான் அவன். கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன். காலத்தால் அலைக்கழிக்கப்பட்டவன். ஓ, வசந்த ராஜா!

நமக்கெல்லாம் நம் வடிவம் தெரியும். அவனுக்கோ வடிவம் கடந்து, அவனுடைய வரலாறும் தெரிகிறது. அந்த வரலாற்று பாதையின் நீட்சியில் அவனுக்கென ஓரிடம் காத்திருக்கிறது. அதை அடையப் போராடுகிறான். அவர்கள் நிரூபணம் கேட்கிறார்கள். அவன் மனம் துடிக்கிறது. அவர்களின் மதம் தடுக்கிறது. என்ன செய்வது? அவர்கள் அனைவரும் சராசரிகள் மட்டுமே. அவன் சராசரிக்கும் மேலே.

நமக்கெல்லாம் கருவிகளிலிருந்து பிறக்கும் இசையைத் தெரியும். அவனோ இசையாகவே பிறந்தவன். அவனுக்கு குரலை இசையாக்கவும் தெரியும். அந்த குரலுக்காக இசையை காக்க வைக்கவும் அவனால் முடியும். காலங்கள் கடந்த நிலையில் கதவுகளைத் தட்டுகிறாள் அவள். கண்களால் ஆனவள். தேன் சுமந்த ரோஜா!

நாமெல்லாம் இசையைக் கேட்கிறோம். பல நேரங்களில் ரசிக்கிறோம். சில நேரங்களில் கண்ணீரால் கரைகிறோம். அந்த நொடியில் உடலை விட்டு வெளியேறுகிறோம். உள்ளத்தையும் விட்டு கூட.

ஆனால், அந்த இசையையே தவமாக்கிக் கொண்டவனைப் பற்றி நாம் அறிந்ததில்லை. இசையாகவே வாழ்பவனைப் பற்றி அறிந்ததும் இல்லை. நம்மால் அது முடிவதில்லை. நிச்சயமாக நாமெல்லாம் சராசரிகள் தான். ஆனால் அவன் மேதையல்ல. மேதைக்கும் மேலே கடவுளுக்கு அருகில் வைக்கப்பட்டவன்.

அவன் வாழ்வில் காதல் உண்டு. காலம் உண்டு. காலம் தந்துவிட்ட காயங்களும் உண்டு. மது உண்டு. மங்கை உண்டு. ஆனால் அவன் போதையில் இல்லை. ஏனென்றால் போதை என்பது அவனிடமிருந்து பிறப்பது.

அவனைப் பற்றி அறிந்து கொள்ள ராகங்கள் தேவையில்லை. தாளங்கள் தேவையில்லை. இசை குறித்த அடிப்படை அறிவு ஏதும் தேவையில்லை. நிச்சயமாக, எனக்கும் இதெல்லாம் கிடையாது. அதெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான். அவன் வாழ்வு நமக்கு சொல்லித் தரும்.

அவனைப் பற்றிய அனைத்தையும் இங்கே நான் சொல்லிவிடவில்லை. எல்லாவற்றையும் சொல்லிவிடுவதைவிட, சொற்களை மறைத்து வைப்பதில் ஓர் ஆனந்தம்.

அவனைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கும் தருணத்தில் நீங்கள் இருப்பீர்கள். உங்களோடு அவனும் இருப்பான். அவன் எதிரே இறைவனும் இருப்பார். இருவருக்கும் இடையே இசை மட்டுமே நிரம்பியிருக்கும்.

அந்த இசையும் அற்றுப் போகும் தருணத்தில் அவனோடு மேகக் கூட்டங்களில் மிதந்து கொண்டிருப்பீர்கள், என்னைப் போலவே.
அப்போது உங்களுக்கு புரியக் கூடும், உடன் இருப்பவன் இறவான் என்று.

– ரா. சுரேஷ் பவானி

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி