இதை எங்கே தொடங்குவது என்றே தெரியவில்லை. ஒரு அபாரமான படைப்பை வாசித்துமுடித்தபிறகு உடனே வந்து ஒட்டிக்கொள்ளும் ஒரு அந்தகாரத்தனிமைதான் இந்த நள்ளிரவில் என்னைச்சூழ்ந்திருக்கிறது.
ஆசிரியர் பா.ராகவனின் இறவான் நாவல் ஒரு காவியம். அதற்கு மேல் ஏதேனும் சிறந்த வார்த்தை இருந்தாலும் போட்டுக்கொள்ளுங்கள். நான் உணர்ச்சிவசப்படவில்லை, முகஸ்துதி செய்யவில்லை, இதன் உள்ளடக்கம் சொல்லும் சப்டெக்ஸ்ட் சாதாரணமானதல்ல. அதனைப்படித்துத்தெளியும்போது உள்மனதில் உருவாகும் ஒளி சொல்லும், இது ஒரு காவியமேயென.
இறவான் எனும் இந்த கிளாசிக் யாரைப்பற்றியது? ஒரு இசை மேதை, ஒரு யூதன், ஆப்ரஹாம் ஹராரி, எட்வின் ஜோசஃப், சந்தானப்ப்ரியன் என மூன்று பெயர்களைக்கொண்ட பெரும் மேதையின் கதை என்று ஒற்றை வரியில் கடந்துவிடக்கூடியதல்ல. நாயகபாவம் மட்டுமே கொண்ட வாழ்க்கை வரலாறோ, வந்தான், வென்றான் வகையறா வெற்றிக்கொடி கட்டு கதையுமல்ல. இது அதற்கும் மேலே, எல்லாவற்றிற்கும் மேலே, சொல்லப்போனால் இதை கதை என்ற வகைமைக்குள் அடக்குவதையே ஆப்ரஹாம் ஹராரி விரும்பமாட்டான்.
ஒரு மேதையின் மனம் எவ்விதம் இயங்குகிறது என்பது மானுடம் சந்தித்திக்கொண்டிருக்கும் சவாலான கேள்விகளுள் ஒன்று. அங்ஙனம் அதன் இலக்கணத்தை மீறாமல் வாழ்ந்த ஒரு இசை மேதையை மேதையின் மனத்தை தொடரும் கதை.
“இசை உனக்குத்தெரியுமா” என்ற கேள்விக்கு அவன் அளிக்கும் விடை, “அது எனக்கு வரும் என்பது”. ஆம், அப்படித்தான் அவனுக்குள் இறை இசையை வர வைத்திருக்கிறது. “நான் மேதைக்கு சற்று மேலே, இறைவனுக்கு அருகே” என்று தன்னைத்தானே கற்பிதம் செய்துகொள்கிறான்.
தொட்ட வாத்தியத்தையெல்லாம் பத்து நிமிடங்களுக்குள் இசைக்கவைக்கும் கெட்டிக்காரனாய் சிறுவயதிலிருந்து வளர்கிறான். அவனுக்குள் பாசம் இருக்கிறது, காதல் இருக்கிறது, காமம் கரைபுரண்டோடுகிறது. தன் ஆதியைத்தெரிந்து கொண்ட அவன், ஏதோ ஒரு புதிய அந்தத்தைத்தேடுகிறான். அவனின் தேடல்களின் நியாயம் அவனுக்கு மட்டுமே புரிந்திருக்கிறது.
இஸ்ரேலுக்குப்போவது, சிறுவயதில் தான் சந்தித்த அல்லது சந்திததுபோல் உணர்ந்த ஆஹீர் பைரவி பாடிய நீள்விழிகள் கொண்ட பெண்ணைத்தேடுவது, பின்பு சிம்பொனி எழுதி பெர்லினுக்குப்போவது என அவனுக்கு இலக்குகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஆனால் தன் ஆன்மிக பலத்தால் அதை சிருஷ்டித்துக்கொள்கிற கதாபாத்திரம் அவன். ”வாழ்வுக்கு ஒரு தாளகதி உண்டு, அதில்தான் அனைத்தும் இயங்கியாக வேண்டும்” என்று இறை அவனுக்குக்கு அளிக்கும் அசரீரியை மேற்கொண்டு, அதன்படியே தன் தேடல்களை தகவமைத்துக்கொள்கிறான். இவற்றை அவன் மேதமை கொண்ட மனத்தோடு எங்ஙனம் கடந்துசெல்கிறான் என்பது நாவலின் மையம்.
இந்த நாவல் யாரைப்பற்றியது என்று விசாரணை செய்துகொண்டேதான் படிக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் என் அற்ப மனம் அத்தகையது. எதையேனும் எவற்றின் மீலாவது ஏற்றியபடியே பயணித்தால், பயணம் லகுவாகுமே என்று. எனக்குத்தெரிந்த எல்லா இசை மேதைகளையின் பெயர்களையும் ஆப்ரஹாம் ஹராரியின் மேல் ஒத்திசைத்துப்பார்த்திருதேன். ஆனால் அவர்களிள் பெரும்பாலோனோரை பா.ராகவனே நாவலுக்குள் இழுத்து, “இவன் அவனில்லைடா மவனே” என்று நம்மை பாதை மாற்றுகிறார்.
இளையராஜா, ரஃபி, சுதா ரகு நாதன், பப்பி லஹரி, ஃபெலிக்ஸ் மெண்டல்ஷான், மாதுரி தீட்சித் ஆகியோர் துணைக்கதாபாத்திரங்களாக அவரவர் பெயரிலேயே வந்து செல்கிறார்கள். ஓ வசந்த ராஜா, கஸ்தூரி திலகம், ஆஹீர் பைரவி, நந்த நந்தன மீரா பஜன், ஃபெலிக்ஸ் மெண்டல்ஷனின் சாங்க்ஸ் வித்தவுட் வோர்ட்ஸ், சுதா ரகுநாதனின் நடபைரவி என விதவிதமான இசையும் நாவல் முழுக்க தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.
ஜானவி என்றொரு பெண்பாத்திரம் இருக்கிறது. ஆப்ரஹாம் ஹராரி என்கிற எட்வின் ஜோசஃபின் தோழி. அவன் மேதமையைப்புரிந்து கொண்டு அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் அவனோடு இருந்து, என்றேனும் ஒரு நாள் அவனை இந்த உலகம் கொண்டாடும் என்று காத்திருப்பவள். ”ஏழெட்டு கணவன்களை எதிரே வைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கும் சுகத்தை உனக்கு புரியவைக்கமுடியாது” என்று தன் தாளக்கருவிகளைச்சொல்லும் அற்புத பாத்திரம் அது. உலகம் ஒவ்வாவிடினும், ஒவ்வொரு மேதைக்கும் இப்படி ஒரு ஜானவி வாய்த்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
இந்த நாவலின் நடை பா.ராவிற்கே புதியது என்று எனக்குத்தோன்றியது . அவரின் வழக்கமான தொட்டால் வழுக்கிக்கொண்டு சொல்லும் நடையை சற்றே நிறுத்தி, இன்னொரு புதிய மொழியை, புதிய நடையை அவனுக்காக கைக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தையும் சற்றே நிதானத்துடன், பின்னணியில் ஆங்காங்கே அவர் சொல்லியிருக்கும் இசையுடனேயே கடந்து வந்தேன் எத்தனை அற்புத அனுபவம் அது.
இந்த நாவலில் வரும் இசையை மட்டுமே ஒரு ப்ளேலிஸ்ட்டாக்கி வைத்திருக்கிறேன் (முதல் கமெண்ட்). அதில் குழைத்திருக்கும் கலவை போன்றதுதான் நாம் கேட்டுக்கொண்டிருக்கும் இசை. ஆனால் ஆப்ரஹாம் ஹராரி என்கிற எட்வின் ஜோசஃபிற்கு அது அதற்கெல்லாம் பல கோடி மைல்களுக்கு மேலே இறைவனுக்கு சற்றே அருகில் இருக்கிற இன்னொரு இறைமை. அதைத்தேடி அவன் மேற்கொள்ளும் பயணத்தை வாசித்து அனுபவியுங்கள். தவறவிடக்கூடாத நாவல் இது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.