கிழக்கு ப்ளஸ் – 7

இருபத்தி ஐந்து ரூபாய். இதற்குமேல் இருபத்தி ஐந்து பைசா கூட விலை இருக்கக்கூடாது என்பதுதான் Prodigy தொடங்கியபோது நாங்கள் வகுத்துக்கொண்ட முதல் விதி.

சிறுவர்களும் குழந்தைகளும் வாங்கிப்படிக்க வேண்டும். என்றால், அவர்கள் வாங்கக்கூடிய விலையில் இருக்கவேண்டும். அது முடியாதபட்சத்தில் செய்யாமலேயே இருக்கலாம்.

இரண்டாவது, சிறுவர்களும் குழந்தைகளும் விரும்பக்கூடிய தரத்தில் புத்தகம் அமையவேண்டுமென்பது.

உண்மையில் கிழக்கு ஆரம்பிக்கும்போதுகூட நாங்கள் அத்தனை மெனக்கெடவில்லை. Prodigyயின் ஒவ்வொரு அம்சத்துக்கும் உயிரைவிட்டோம். முதலில் வழவழ தாளில் சற்றே பெரிய அளவில் முழுதும் வண்ணப்படங்களுடன் குழந்தைகளுக்கான படக்கதை வடிவிலான புத்தகங்களை வெளியிட்டோம். கதைப் புத்தகம் இல்லை. அறிவியல், பொது அறிவு, விளையாட்டு, விண்வெளி தொடர்பான புத்தகங்கள். தகவல்களைக் கதை வடிவில் கொடுக்கிற முயற்சி.

ஓவியர் பிள்ளை இந்த முயற்சியில் சிறப்பாக ஒத்துழைத்தார். இத்தகைய புத்தகங்களை எழுதுவது பெரிய விஷயமில்லை. உட்கார்ந்து ஒவ்வொரு வரிக்கும் உயிர் கொடுக்கும் படங்களை உருவாக்குவது மிகப்பெரிய சவால். இந்தப் புத்தகங்கள் மூலம் பிறந்த விக்கி, ரேவா என்னும் இரண்டு குழந்தைப் பாத்திரங்களுக்குப் புத்தகக் கண்காட்சியில் பிரம்மாண்டமான உருவங்கள் அளித்து கவனம் ஈர்த்தோம். இவை, தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒருசேர வெளிவந்தன.

2007 சென்னை புத்தகக் கண்காட்சியில் Prodigy புத்தகங்களுக்குக் கிடைத்த கவனம் எங்களை இந்த விஷயத்தில் மிகத் தீவிரமாகச் சிந்திக்கச் செய்தது. Prodigyயின் வடிவத்தைச் சுருக்கி, கையடக்கமான, உயர்தரமான தயாரிப்பில் இன்னும் பல கனமான விஷயங்களை எளிய வடிவில் வழங்குவதன்மூலம் எட்டிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகளை நெருங்க இயலும் என்று நினைத்தோம்.

படக்கதை வடிவிலான பெரிய அளவு புத்தகங்களை நிறுத்தும் உத்தேசமில்லை. கூடவே கையடக்கப் பதிப்புகளையும் வெளியிடும் உத்தேசமே இருந்தது. எக்காரணம் கொண்டும் கதைகள் வேண்டாம், ஆனால் கதைகளில் உள்ள சுவாரசியத்தைக் காட்டிலும் அதிக சுவாரசியத்துடன் தகவல்களைக் குழந்தைகளுக்குத் தரவேண்டும் என்று முடிவு செய்தோம்.

கோகுலத்திலிருந்து சுஜாதா வந்து சேர்ந்தார். குழந்தை இலக்கியத்துக்காகவே தன் வாழ்நாள் முழுதையும் அர்ப்பணித்தவரான திரு. ஹரிஹரன் என்கிற ‘ரேவதி’யிடம் பயின்றவர் அவர். Prodigy 80 பக்கப் புத்தகங்களுக்கான பணிகள் ஆரம்பமாயின. வாழ்க்கை வரலாறுகள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், தேச வரலாறுகள், புவியியல் என்று பல துறைகள் சார்ந்து புத்தகங்கள் கொண்டுவர உழைக்கத் தொடங்கினோம்.

Prodigyயின் ஆகப்பெரிய சவால் எளிமை மட்டும் இல்லை என்பது புரிந்துபோயிற்று. எழுத்தில் எளிமை, சுவாரசியம் என்பது ஒரு கிராஃப்ட். அது பழகினால் வந்துவிடும். ஆனால் பெரிய விஷயங்களைச் சுருக்கமாக விவரிப்பது மிகவும் சிரமமான காரியம். கிரவுன் 1/8 அளவில் எண்பது பக்கங்கள் என்பது மேலோட்டமான பார்வையில் போதுமான அளவாகவே தெரியும். உண்மையில் சுமார் 7500 சொற்களுக்குள் வித்தை காட்டுவது மிகவும் சிரமமானது. தகவல்கள் முழுமையாக இருக்கவேண்டும். சுவாரசியத்தில் குறைவு கூடாது. கதை வாசிக்கும் பாவனையில் சிறுவர்கள் படிக்கும்படி இருக்கும் அதே சமயம், செய்தி சரியாக உள்ளே இறங்கியாகவேண்டும். படித்து முடித்ததும் ‘அப்பாடா, முடிந்தது’ என்று நினைக்காமல், ‘ஐயோ முடிந்துவிட்டதே’ என்று நினைக்கவேண்டும். மிகச் சிறிய அளவேயாயினும் ஒரு பூரண வாசிப்பனுபவம் கைகூடவேண்டும்.

ஒரு நீண்ட கட்டுரை அளவேயான புத்தகங்கள்தான் இவை. அதற்குள் ஒரு முழு உலகைக் காட்டியாகவேண்டிய சவால் எங்களுக்கு இருந்தது. உற்சாகமாக ஏற்றுக்கொண்டோம்.

ஆனால் Prodigyயின் வடிவத்தையும் உள்ளடக்க சூட்சுமத்தையும் புரிந்துகொண்டு எழுதுவது எழுத்தாளர்களுக்கு அத்தனை எளிதாக இல்லை. மிகவும் திணறினார்கள். ஒரு எண்பது பக்க Prodigy எழுதுகிற நேரத்தில் இரண்டு பெரிய புத்தகங்களை எழுதி முடித்துவிடலாம் என்று தோன்றுமளவுக்கு அது வேலை வாங்கியது.

எனவே கிழக்கு ஆசிரியர் குழுவினரே இந்தப் பணியிலும் முதல் செங்கல்லை எடுத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அரசியல் மற்றும் மதம் தொடர்பான எளிய அறிமுக நூல்களை நானும் மருதனும் எழுதினோம். வரலாறு மற்றும் புவியியல், முகிலின் கைவண்ணத்தில் மிளிர்ந்தன. அமெரிக்க, ஐரோப்பியச் சாதனையாளர்களை, சிந்தனையாளர்களை எளிய முறையில் அறிமுகப்படுத்தும் பணியை பாலு சத்யா எடுத்துக்கொண்டார். ச.ந. கண்ணன் சினிமாக் கலை சார்ந்து புத்தகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். முத்துக்குமாரும் சொக்கனும் வாழ்க்கை வரலாறுகளை விறுவிறுப்பு குறையாத மொழியில் வழங்கத் தொடங்கினார்கள். சுஜாதாவுக்கு நுண் உயிரிகள் மீது ஆர்வம். இரண்டு கால்கள், இரண்டு கைகளுக்குமேல் ஏதாவது இருந்தால் மட்டுமே அவர் கவனிப்பார்.

Prodigyயின் அறிவியல் புத்தகங்களுக்கு ஒரு சரியான ஆரம்பமாக பத்ரியின் உலகம் / உயிர்கள் தோன்றிய கதை அமைந்தது. [இவற்றை ஆங்கிலத்தில் முதலில் எழுதிவிட்டு, மொழிபெயர்ப்பாக அல்லாமல் தமிழ் வடிவத்தில் மீண்டுமொருமுறை அவரே எழுதினார். இரு மொழிகளிலும் இது வெளியானது.] சிறுவர்களின் கல்வி சார்ந்த கனவுகளுக்கு வடிவம் கொடுக்கும் விதத்தில் டாக்டராவேன், இஞ்சினியர் ஆவேன், எம்.பி.ஏ. ஆவேன் என்று ஒரு வரிசை கொண்டுவந்தோம்.

எஸ்.எல்.வி. மூர்த்தி [நாங்கள் அவரை பி.எஸ்.எல்.வி. மூர்த்தி என்று அழைப்போம். அத்தனை வேகமான, துடிப்பான மனிதர்.] என்னும் ஒரு புதிய எழுத்தாளரை இங்கே நாங்கள் கண்டுபிடித்தோம். எம்.பி.ஏ. பட்டதாரியான மூர்த்தி, ‘மூர்த்தி அசோசியேட்ஸ்’ என்னும் நிறுவனத்தை நடத்திவருபவர். ராமகிருஷ்ண விஜயம் போன்ற பத்திரிகைகளில் சில எழுதியிருக்கிறார். ஆனால் எதுவும் அவரது முழுத் திறமையை வெளிக்காட்டுபவை அல்ல.

ச.ந. கண்ணன் கண்டுபிடித்து அழைத்து வந்த மூர்த்தி அடுத்தடுத்து எங்களுக்கு எழுதிய புத்தகங்கள் பிரமிக்கத்தக்க வகையில் தரத்துடன் அமைந்தன. கிழக்கிலும் அவர் சக்கைபோடு போடத் தொடங்கினார். அவரது புத்தகங்கள் வாசகர்களையும் அள்ளிக்கொண்டன. ஐம்பது வயதுக்கு மேல் தானொரு எழுத்தாளனாக அடையாளம் காணப்பட்டது பற்றி அவருக்கு வியப்பு. இத்தனை ஆண்டுகளாக ஒரு எழுத்தாளரை அடையாளம் தெரியாமலேயே இந்தத் துறை இருந்திருக்கிறது என்கிற அபத்தம்தான் எங்களுக்கு முதலில் உறைத்தது.

மூர்த்தியைப் போல் வேறு பல அடையாளம் தெரியாத, அதே சமயம் திறமை மிகுந்த எழுத்தாளர்களை Prodigyயின் மூலம் நாங்கள் கண்டடைந்தோம். கிழக்கு எழுத்தாளர்களே Prodigyக்கு எழுத மிகவும் விரும்பினார்கள். அந்தத் தோற்றத்துக்காகவே நானொரு புத்தகம் எழுத விரும்புகிறேன் என்று வள்ளியப்பன் அடிக்கடி கேட்பார்.

Prodigyக்கான முகப்புத்தோற்றத்தை வடிவமைக்க மிக அதிக அவகாசம் எடுத்துக்கொண்டேன். எளிமை அவசியம். அதே சமயம் மிகவும் Rich ஆக அந்த எளிமை வெளிப்பட வேண்டும் என்று நினைத்தேன். ஒரு லட்சம் புத்தகங்களுக்கு நடுவே ஒளித்துவைத்தாலும் Prodigy பளிச்சென்று கண்ணில் படும் பிராண்டாக இருக்கவேண்டும் என்று சத்யா விரும்பினார். விதவிதமாக யோசித்துக்கொண்டிருந்தேன்.

சொல்வதற்குச் சற்று வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் சொல்லியாகவேண்டும். ஒருநாள் பேருந்துப் பயணத்தில் வாயில் மாவாவை அடக்கிக்கொண்டு Edward Saidன் The Politics of Dispossession படித்தபடி ஜன்னலோர இருக்கையில் சாய்ந்திருந்தேன். சட்டென்று தும்மல் வந்துவிட்டது. எட்வர்ட் சயீதும் அன்று நான் அணிந்திருந்த வெள்ளைச் சட்டையும் என் எச்சிலில் குளிக்கவேண்டியதாகிவிட்டது.

மாவா கறை என்பது லேசில் போகக்கூடியதல்ல. கறையைவிட அசிங்கம் வாயிலிருந்து அது பீறிட்ட கணம். அருகிலிருந்தவர் அருவருப்புடன் பார்க்க, அவமானத்தில் மிகவும் சுருங்கிப் போனேன். அந்த ஒரு மணிநேரப் பயணம் முழுதும் என் வெள்ளைச் சட்டையின் நடு மையத்தில் ஆகியிருந்த சிவப்புக் கறையே என் மனத்தை ஆக்கிரமித்திருந்தது.

ஒருவழியாக அலுவலகம் வந்தடைந்து சட்டையைக் கழற்றிவிட்டு கிழக்கு டீஷர்ட் ஒன்றை வாங்கி அணிந்தபிறகுதான் சமநிலைக்கு வந்தேன்.

புதிய வெள்ளை டிஷர்ட்டை அணிந்த அந்த வினாடியே எனக்கு Prodigyக்கான அட்டை வண்ணம் உதித்துவிட்டது. வெள்ளை அட்டை. சிவப்பு அல்லது மெஜந்தா நிறத்தில் தலைப்புப் பட்டை. வேறெதுவும் வேண்டாம்.

சிவப்பைக் காட்டிலும் மெஜந்தாவுக்கு ஈர்க்கும் குணம் அதிகம், அதுவே இருக்கலாம் என்று எங்கள் தலைமை வடிவமைப்பாளர் குமரன் சொன்னார்.

வெள்ளை அட்டை; மெஜந்தா பட்டைநூறு புத்தகங்களுக்குமேல் Prodigy வெளியிட்டுவிட்டது. அதே வெள்ளை அட்டைதான். மெஜந்தா பட்டைதான். கண் பார்க்கக்கூடிய தொலைவு எதுவானாலும் அங்கே நீங்கள் இந்தப் புத்தகங்களில் எது ஒன்றையும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். 2008 ஜனவரி புத்தகக் கண்காட்சியில் Prodigyக்கென்று தனியே ஒரு ஸ்டால் எடுத்து டிஸ்பிளே செய்தபோது, வேறெந்த இண்டீரியர் அலங்காரங்களும் இல்லாமல், அந்தக் கடைக்கு, அங்கிருந்த புத்தகங்களே கொள்ளை எழிலை ஊட்டின.

அட்டைகள் ஆர்வத்துடன் நெருங்க மட்டுமே வைக்கும். புரட்டும் பக்கங்கள் ஈர்த்தால்தான் வாசகர்கள் உள்ளே நுழைவார்கள். எனவே ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு பேராவையும் உயிரோட்டமாக அமைக்கப் பாடுபட்டோம்.

விளைவு மகத்தானதாக இருந்தது. தொடங்கிய முதல் வருடம் கிழக்கு அடைந்த வெற்றியைக் காட்டிலும் Prodigy பெற்ற வெற்றி அதிகம். மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோரும் மற்றோரும் ஒன்று இரண்டாக அல்ல; பத்து இருபதாக மட்டுமே புத்தகங்களை வாங்கிச் செல்லத் தொடங்கினார்கள்.

மாணவர்களுக்காகவென்று நாங்கள் ஆரம்பித்த இம்ப்ரிண்ட் என்றாலும் பெரியவர்களும் Prodigy புத்தகங்களைப் பல்வேறு காரணங்களுக்காக மிகவும் விரும்பத் தொடங்கினார்கள். குறைந்த விலை, வேகமாகப் படித்துவிட முடிகிறது, காம்பேக்டாக இருக்கிறது என்று இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டது. Subject Clash வருமானால் இதன்மூலம் கிழக்கு புத்தகங்கள் அடிபடுமே என்று எங்கள் விற்பனையாளர்கள் கவலைப்பட்டார்கள்.

சுவாரசியமாக ஒரு Prodigy புத்தகத்தைப் படித்து முடிப்பவர்கள், அதனைக் காட்டிலும் அதிக தகவல்கள் இருக்குமென்று தெரிந்தால், அதனைக்காட்டிலும் இன்னும் விரிவாக இருக்கும் என்பது தெரிந்தால் அவசியம் கிழக்கு புத்தகங்களுக்கு வந்தே தீருவார்கள் என்று பத்ரி அடித்துச் சொன்னார்.

இத்தனைக்கும் கிழக்கில் வெளியான புத்தகங்களின் சுருக்கமான வடிவம் Prodigyயிலும் வெளியாகியிருப்பதென்பது மிகச் சொற்பம்தான். ஆனால் நம்ப முடியாத அளவுக்கு அது புதிய வாசகர்களைக் கிழக்குக்குக் கொண்டுவந்து சேர்த்தது!

விற்பனையிலும் வீச்சிலும் கிழக்கு புத்தகங்களுக்கு உள்ள பெரிய போட்டி யார் என்று வெளியே விதவிதமாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்தபோது உண்மையில் நாங்கள் ரகசியமாகச் சிரித்தோம். எங்களுக்கு மட்டுமே தெரியும்.

விற்பனையளவில் கிழக்கின் முதன்மையான போட்டியாளர் Prodigyதான்.

[தொடரும்]
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter