எழுத்தாளர்களின் ராயல்டி

முன்னர் சாரு. இப்போது ஜெயமோகன். இரண்டு முக்கியமான எழுத்தாளர்கள் தமது புத்தகங்களின் விற்பனை குறித்தும், கிடைக்கும் ராயல்டி பற்றியும் மனம் திறந்து எழுதியிருக்கிறார்கள். [ஆக, இந்தக் கிசுகிசுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை, இந்த இரு எழுத்தாளர்களைப் பொருத்த அளவில் பொய்யானது என்பது உறுதியாகிறது.]

ஆண்டிறுதியில் இவர்கள் நடத்தும் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு முண்டியடிக்கிற கூட்டம், நிகழ்ச்சிக்குக் கிடைக்கிற முக்கியத்துவம், கவனம், மீடியா பிரபலம் அனைத்தும் வியப்பளிக்கின்றன. முன்னதாக வருடம் முழுவதும் இந்த எழுத்தாளர்களின் இணையத்தளங்களை வாசித்து, ரசித்துவரும் வாசகர்களையும் [லட்சங்களைத் தாண்டிவிட்டதாக சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களே சொல்லியிருக்கிறார்கள்.  அதில் பலபேர் இந்தியா, இலங்கை, மலேயா, சிங்கப்பூரையெல்லாம் தாண்டி ஜப்பான், உகாண்டா, பாபுவா நியூகினியாவிலெல்லாம் இருப்பவர்கள்] அவர்களில் பலர் பக்கம் பக்கமாக எழுதும் கடிதங்களையும்  இன்னபிறவற்றையும், இவர்கள் குறிப்பிடுகிற ராயல்டி தொகையையும் ஒரு நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்கிற வாசகர்கள் குழப்பமடைவது நிச்சயம்.

அத்தனை வாசகர்களுமே வடை, போண்டா, கேசரிக்காக விழாக்களுக்குச் செல்வதில்லை என்பது உண்மையானால், விழாவுக்குப் போகிற சில நூறு பேராவது புத்தகம் வாங்கமாட்டார்களா? [ஆயிரம் பேர் வந்ததாகச் சாரு எழுதியிருந்ததை ஒட்டி.] வருடம் முழுவதும் புத்தகம் வாங்கிக்கொண்டிருக்க முடியாது என்பதை ஒப்புக்கொண்டாலும், ஆடிக்கொன்று, அமாவாசைக்கொன்று என்றேனும் இந்த வெளிநாட்டு வாசகர்கள் தமது அபிமான எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கிப் படிக்க நினைக்கமாட்டார்களா? ஆறோ, ஏழோ எத்தனையோ கோடித் தமிழர்கள் உள்ள இடத்தில் – லட்சக்கணக்கில் வாசிக்கிறவர்கள் இருப்பது உறுதியாகத் தெரியும் நிலையில் – வெறும் ஆயிரம் புத்தகங்கள் செலாவணியாவது சிரமமா?

ஜெயமோகன் நாற்பத்திரண்டு புத்தகங்கள் எழுதியிருப்பதாகச் சொல்கிறார். எனக்கு இதில் வியப்பில்லை. இதற்காக ஒருத்தரைப் பேய், பிசாசு என்றெல்லாம் உயர்வு நவின்று அங்கலாய்க்க வேண்டியதுமில்லை. திட்டமிட்டு, தினசரி ஒழுங்காக வேலை செய்தால் இது சாத்தியமே. இந்த நாற்பத்திரண்டில் பத்து புத்தகங்கள் ஹிட் என்றால்கூட அவருக்குக் குறைந்தபட்சம் ஆண்டுதோறும் ஐம்பதாயிரம் ராயல்டி வரவேண்டும். [ தோராயமாக ஒரு புத்தகம் 100 ரூபாய் விலை என்றும், ஒரு ஹிட் என்பது குறைந்தபட்சம் 500 பிரதிகள் என்றும் வைத்துக்கொண்டு, பத்து சதவீதத்துக்குக் கணக்கிட்டு, குத்துமதிப்பிட்டது.] ஆனால் அவர் சொல்லும் பதினாலாயிரத்தை நோக்க, இந்த ஐந்நூறிலும் நான்கிலொரு பாகம்கூட வரவில்லை என்றாகிறது.

தமிழ்நாட்டில் நல்ல எழுத்துக்கு இதுதான் மதிப்பா? நான் நம்பவில்லை. பல்வேறு பதிப்பு நிறுவனங்களில் தங்கள் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்கும் சில தீவிர படைப்பாளிகளின் சில புத்தகங்களை நாங்கள் கிழக்கு பதிப்பகத்தின்மூலம் கடந்த சில வருடங்களாக வெளியிட்டுவருகிறோம்.  ஓரளவு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எங்களால் தொடர்ந்து வெளியிடப்படும் அந்த எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கான வருட ராயல்டி, ஜெயமோகன் குறிப்பிடும் தொகையைவிட நிச்சயமாக அதிகம். இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஒப்பீட்டளவில் தமிழ் வாசகர்கள் மத்தியில் படைப்பிலக்கியத்துக்கான வரவேற்பு குறைவுதான். தீவிர அறிவுத்தளத்தில் செயல்படும் படைப்பாளிகளை ஒதுங்கி நின்று சேவித்துவிட்டுப் போய்விடுகிற மனோபாவம் எப்போதுமிருப்பது என்றாலும், இத்தனை மோசமடைந்திருக்கிறது என்றறியும்போது அதிர்ச்சியாகவே உள்ளது. சாரு, ஜெயமோகன் இருவருமே நான் மதிக்கும் படைப்பாளிகள். கருத்து வேறுபாடு இருந்தாலும்  அதைத் தாண்டி ரசிக்கச் செய்யும் எழுத்து அவர்களுடையது. இருவருடனும் முற்றிலும் முரண்படுகிறவர்கள்கூட, வாசிக்காமல் நிராகரித்துவிட்டுப் போகமாட்டார்கள். தினசரி வேள்விபோல் எழுதிக்குவிக்கும் இத்தகைய எழுத்தாளர்களின் புத்தக விஷயத்தில் காலே அரைக்கால் சதவீத மனச்சாட்சியுடன்கூட நடந்துகொள்ள யாரும் முன்வரத் தயாரில்லை என்பதறிய வருத்தமாகவே உள்ளது.

இதனோடு ஒப்பிட்டால் என்னை மாதிரி, மருதன்முத்துக்குமார் மாதிரி அரசியல் எழுதுகிறவர்களும், சொக்கன்,   ச.ந. கண்ணன் மாதிரி வாழ்க்கை வரலாறு எழுதுகிறவர்களும், முகில் மாதிரி வரலாறு எழுதுகிறவர்களும் எவ்வளவோ தேவலை என்று நினைக்கத் தோன்றுகிறது. [தமிழ் நூல்களை வாங்கிப் படிப்போர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்னும் ஜெயமோகனின் தரப்பை மறுக்கிறேன். இலக்கியம் வாசிப்போர் மட்டுமே குறைவு.]

புனைவல்லாத புத்தகங்களில் சமையல், சோதிடம்தான் விற்கும் என்று மாமாதாத்தாக்கள் சொல்லிக்கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. தீவிரமான நாட்டு நடப்புகளையும், தொழில்நுட்பத்தையும் அறிவியலையும், பிசினஸ் சார்ந்த புத்தகங்களையும், நிர்வாகவியலையும் இன்னபிறவற்றையும் வாசிக்க, பல்லாயிரக்கணக்கில் வாசகர்கள் தயாராகவே இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் பல்லாயிரம் இல்லாது போனாலும் அனைத்துக்கும் ஒரு சில ஆயிரங்களாவது கண்டிப்பாக உண்டு. மனச்சோர்வு கொள்ளத்தக்க வகையிலான ராயல்டி ஒருபோதும் இவர்களுக்கு வருவதில்லை. கண்டிப்பாக எனக்கோ, முன்குறிப்பிட்ட பிற கிழக்கு எழுத்தாளர்களுக்கோ இல்லை. ஒழுங்காக வருமான வரி கட்டுகிறோம் என்பதால் இதனை வெளிப்படையாகச் சொல்வதில் அச்சமும் இல்லை.

படைப்பின் ஆகப்பெரிய விளைவு ராயல்டிதானா என்பதல்ல. இந்தக் குறைந்தபட்ச மகிழ்ச்சியைக் கூட ஒரு படைப்பாளனுக்குத் தரத் தயாரில்லாத வாசகர்கள் எதற்கு? ஜெயமோகனுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் சாருவுக்கும் மாங்கு மாங்கென்று பக்கம் பக்கமாகக் கடிதம் எழுதுகிற வாசகர்களைப் போல் எங்களில் யாருக்கும், யாரும் கடிதங்கள் எழுதுவதில்லை. எப்போதாவது கடிதங்கள் வரும். அடுத்து என்ன புத்தகம் என்று கேட்டு. ஆனால், இந்தக் கடிதம் எழுதாத வாசகர்கள் யாரும் காசு கொடுத்துப் புத்தகம் வாங்கத் தவறுவதில்லை. வருடம்தோறும் நியாயமான அளவில் புத்தக விற்பனை அதிகரிக்காமலும் இல்லை.

உண்மையான வாசகர்கள் கடிதம் எழுதிக்கொண்டிருப்பதில்லை என்பதுதான் இதில் நான் பெற்ற செய்தி. என் மதிப்புக்குரிய நண்பர்களுக்கும் அத்தகைய கடிதம் எழுதாத வாசகர்கள் நிறைய சேர எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.

ராயல்டி குறித்து பத்ரி 1 | ராயல்டி குறித்து பத்ரி 2

Share

19 comments

  • முன்பு பாலகுமாரனுக்கு இப்படி கடிதங்கள் குவியும், அவரும் அவரது நாவல்களின் முதல் பத்து பக்கத்துக்கு அவற்றை வெளியிடுவார். அதைப் பார்த்து இன்னும் பத்து பேர் கடிதம் எழுதுவார்கள். ஜெயமோகனுக்கும், சாருவுக்கும் கடிதம் எழுதும் பலரும் அவர்களது தளத்தில் தங்கள் கடிதங்கள் வெளியிடப்படுவதால் மேன்மேலும் கடிதங்களை எழுதிக் குவிக்கிறார்கள்.

  • காரணம் நீங்கள் மேற்குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளர்கள் எழுதும் வரலாறு, அரசியல், அறிவியல் என்பவை கூடுமான வரை தகவல்கள் (டேட்டா) பெரும்பாலும் நிஜம் அல்லது நிஜத்துக்கு மிக அருகிலிருப்பவை. இன்னும் சரியாய் சொன்னால் அவை பொதுவாய் விவாதத்துக்கு அப்பாற்பட்டவை. அதனால் அவற்றில் கடிதங்கள் மூலம் பரிமாறிக்கொள்ள கணிசமான சங்கதிகள் ஏதுமில்லை. ஆனால் சாரு, ஜெமோ போன்றவர்கள் ஒரு கருத்தை (தாட்) முன்வைக்கிறார்கள். அவை பெரும்பாலும் விவாதத்துக்குரியனவாக இருக்கின்றன. அத்னாலேயே அவைகளுக்கு எதிர்த்தும் ஆதரித்தும் மடல்கள் குவிகின்றன.

    உண்மையான வாசகர்கள் கடிதம் எழுதிக்கொண்டிருப்பதில்லை என்று நீங்கள் சொல்வதிலிருந்து நான் சற்று மாறுபடுகிறேன். அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்போது இருவருக்குமே நான் எழுதியிருக்கிறேன். அதே போல் அவர்கள் இருவரின் புத்த‌கங்களையும் (கிட்ட்தட்ட அச்சிலிருக்கும் எல்லாவற்றுமே) வாங்கித் தான் படித்திருக்கிறேன். இன்னொரு விஷயம் பாராவின் எழுத்துக்கும், சாருவின் எழுத்துக்குமான வாசகர் வட்டம் மிகவும் வேறுபட்டது. எந்தவொரு மொழியையும் போல தீவிர எழுத்துக்கான வட்டம் இங்கு சிறியது. அத‌னாலேயே சாரு, ஜெமோவின் விற்பனை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கிறது என நினைக்கிறேன்.

    தவிர நிறையப்பேர் “அது தான் தளத்திலேயே படித்தாகி விட்டதே. புத்தகம் எதற்கு?” என்று தான் நினைக்கிறார்கள்.

    • சிஎஸ்கே, நீங்கள் கடிதமும் எழுதி, காசு கொடுத்துப் புத்தகமும் வாங்கிப் படிப்பது பற்றி சந்தோஷம். விதிவிலக்குகள் எல்லா இடங்களிலும் உண்டு. [அதுகூட இல்லாமலா அந்தப் பதினாலாயிரம்?] ஆனால் இணையத்திலேயே எல்லோரும் படித்துவிடுகிறார்கள் என்பதுபோல் நீங்கள் கூறியிருக்கும் வரிகள் எனக்கு ஏற்புடையவையல்ல. இணையத்தில் தொடர்ந்து வாசிப்பவர்கள் மிஞ்சிப்போனால் இரண்டாயிரம் பேர்கூட இருக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். என் வினா ஆறு கோடி பேருக்கானது.

  • //ஜெயமோகனுக்கும், சாருவுக்கும் கடிதம் எழுதும் பலரும் அவர்களது தளத்தில் தங்கள் கடிதங்கள் வெளியிடப்படுவதால் மேன்மேலும் கடிதங்களை எழுதிக் குவிக்கிறார்கள்.// KVR சொல்லும் இவ்விஷயம் நூற்றுக்கு நூறு உண்மை

  • நீங்க சொல்றதெல்லாம் இருக்கட்டும். இதையும் தாண்டி இன்னொரு மேட்டர் இருக்கு.

    Accounting Transparency!

    சாரு, ஜெயமோகன் புத்தகங்களின் பதிப்பாளர்கள் விற்கப்படும் புத்தகக் கணக்கை சரியாக காட்டி, அதற்கான ராயல்டியை ஒழுங்காக வழங்குகிறார்களா?

  • ஜெமோவை விட எனக்கு ராயல்டி அதிகமாக கிடைக்கிறது என்கிற ஒரு விஷயத்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை 🙁

  • Today there are many ways to spend money and books is just one of them.
    For 400 rs i can get cd/dvd of 2 films and that can be enjoyed with the whole family.why should i waste even 200 rs or 100 rs to buy a non-fiction book in tamil about whose quality i am not sure of.I would spend rs 300 or 400 or even more to know about cyber-security and cyber-crime by buying a book from a reputed publisher or by an expert than spending rs 100 or less to buy a book based on the series published in kumudam reporter.The same is applicable for books by many others. i read economist, and many magazines in english including reports,books etc.A regular reader of FT and Economist will laugh at the knowledge of most tamil writers on international affairs or international economics.A serious student of film history and philosophy will know that (s)he knows better than Charu on these.
    so what is so great about these books written in tamil.they may matter to tamils who have no knowledge of english.For those who know and have money to spend there are better options than reading in tamil or buying tamil books. I would prefer to spend Rs 3000 as membership fee in British Council per year than buying books in Tamil. I wont mind spending 800rs to buy a novel by amitav ghosh or a book by ram guha or nandy but would think twice or thrice to spend the same money on tamil books including fiction. Because if one is used to reading the excellent books in english one finds even the so called excellent books in tamil are below the mediocre level. A m.a student in jnu or delhi university who has interest in music and film is likely to be more knowledgable about global music and film than most writers in tamil.so when charu writes about this in tamil it is like sivaji ganesan trying to speak as a call center employee. In other words there are many Tamils who do not need 99% of the books published in Tamil and they would spend books in English or French but would think thrice before buying books in Tamil. I dont need them just as I dont need Arasan Soap or Anil Semia.

  • ‘உண்மையான வாசகர்கள் கடிதம் எழுதிக்கொண்டிருப்பதில்லை என்பதுதான் இதில் நான் பெற்ற செய்தி. என் மதிப்புக்குரிய நண்பர்களுக்கும் அத்தகைய கடிதம் எழுதாத வாசகர்கள் நிறைய சேர எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்

    Perhaps you dont write to yourself in different names and publish that in the website as letters from readers 🙂

  • டெல்லி தாழ்ந்த நாய் சொல்வதை நான் கடுமையாக வழிமொழிகிறேன். சூப்பர் டெல்லி நாய் நல்லா சொன்னீங்க! நாம நூறு ரூவா இருந்தா ஏதாவது பாரின் பொறை இல்லாட்டி வர்க்கி பீஸா பன்னு வாங்கி தின்னுட்டு அலையறத விட்டுட்டு தமிழ் பொஸ்தகம் வாங்கி படிச்சு நேரத்த வீணாக்குவமா?

  • //Today there are many ways to spend money and books is just one of them.
    For 400 rs i can get cd/dvd of 2 films and that can be enjoyed with the whole family.why should i waste even 200 rs or 100 rs to buy a non-fiction book in tamil about whose quality i am not sure of.I would spend rs 300 or 400 or even more to know about cyber-security and cyber-crime by buying a book from a reputed publisher or by an expert than spending rs 100 or less to buy a book based on the series published in kumudam reporter.The same is applicable for books by many others. i read economist, and many magazines in english including reports,books etc.A regular reader of FT and Economist will laugh at the knowledge of most tamil writers on international affairs or international economics.A serious student of film history and philosophy will know that (s)he knows better than Charu on these.//

    டெல்லி குறைந்த நாய் பின்னிட்டீங்க 🙂

    300, 400 ரூவாய்க்கு சிடியோ, டிவிடியோ வாங்கிப் பார்க்காம, அதைவிட ‘குஜாலான’ விஷயங்களை இன்னும் குறைந்த செலவுலேயே செஞ்சி நீங்க செம்ம ‘மஜா’வா இருந்துக்க முடியும் 🙂

  • ஜெயமோகன் தனது ஆதங்களைச் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. ஆனால் இந்த ராயல்டி விஷயத்தில் அவர் மிகத் தெளிவாக இருக்கிறார். தனது புத்தகங்கள் இவ்வளவுதான் விற்கும் என்று ஒரு கணக்கீடும் வைத்திருக்கிறார். (ஆனால் அதையும் தாண்டி விற்கும் என்பதுதான் உண்மை)

    ஆனால் சாரு இந்த கடிதம் எழுதும் வாசகர்களை நம்பி ஏமாறுகிறார். சாருவைப் பொய்யாகப் பாராட்டி நாலு வரி எழுதி கோபால கிருஷ்ணன், குனியமுத்தூர், கோவை என்று பெயர் போட்டால் கூட நம்பி வெளியிட்டு விடுகிறார். இந்த விஷயத்தில் சாரு ஒரு மகா மகா அப்பாவி.

    இந்த ஜால்ரா/கடிதம் வாசகர்கள் சாரு அல்லது ஜெயமோகனைப் பயன்படுத்தி தங்களை அறிவுஜீவிகளாக அல்லது தாங்களும் எல்லாம் அறிந்த எழுத்தாளர்களாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். மற்றபடி பெரும்பாலான இந்த கோஷ்டிகள் இவர்கள் மூலம் தாங்கள் சுய ஆதாயம் பெறுவது, தங்களை முன்னிறுத்துவது, அல்லது பெரிய எழுத்தாளர் பிம்பத்தைக் காண்பித்து தாங்களும் ஓரிரண்டு புத்தகங்களை எழுதி எழுத்தாளர்களாவது என்ற திட்டத்தில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    இதில் ஜெயமோகன் நிறைய உஷாரானவர். அவர் வெளியிடும் கடிதங்கள் எல்லாம் பார்த்தால் அவர் புத்தகங்களைப் படித்த வாசகர்கள் அல்லது அவரது படைப்பை விமர்சிக்கும், கேள்வி கேட்கும் வாசகர்களாகத் தான் இருக்கும்.

    ஆனால் அப்பாவி சாருவுக்குப் பாருங்கள். எக்ஸிஸ்டென்ஷியலும் பேன்சி பனியனும் என்ன ஒரு அற்புதமான நாவல். எந்த ஜால்ராவாவது அது குறித்து விரிவாக விமர்சித்திருப்பார்களா? சும்மானாத்துக்கும் தாங்களும் லிஸ்டில் வருவதற்காக ஜீரோ டிகிரி பற்றி எழுதியிருப்பார்கள். அதெல்லாம் சும்மா ஜால்ரா விமர்சனம்தான்.

    ஆக எழுத்தாளர்கள் தங்களுக்கு வரும் கடிதங்களை வைத்து வாசக மனோபாவனையை எடை போடக் கூடாது என்ற ரீதியில் பாரா சொன்னது மிக மிகச் சரி.

    சாருவின் வெளியீட்டு விழாவுக்கு வந்த வாசகர்களில் ஆளுக்கு ஓரிரண்டு புத்தகங்கள் வாங்கியிருந்தால் கூட 1000 புத்தகங்களுக்கு மேல் விற்பனையாகியிருக்குமே நடந்ததா?

    புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருபவர்கள் எல்லாம் (பெரும்பாலும்) சும்மா வேடிக்கை பார்க்கத்தான் வருகிறார்கள் என்பது எனது கருத்து.

    இந்த லொள்ளு வேண்டாம் என்றுதான் யுவன் வெளியீட்டு விழாவே வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

    உண்மையான நல்ல வாசகன் எப்போதாவதுதான் மனம் நெகிழ்ந்து கடிதம் எழுதுவான். மற்றபடி அவன் தனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் புத்தகத்தை எப்போதும் தேடிக் கொண்டே இருப்பான் என்பதுதான் உண்மை.

    இறுதியாக ஒன்று, நியூஹாரிசன் மீடியா ஒரு பிரபல, மூத்த எழுத்தாளருக்கு ராயல்டியை அளித்த போது அவர் அப்படியே அசந்து போய் விட்டார். எனக்கா… எனக்கா இவ்வளவு பணமும் என்று வியப்பில் அவர் வருவோர், போவோரிடம் எல்லாம் அதைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

    காரணம், ராயல்டி விஷயத்தில் கிழக்கில் எந்த ஒளிவுமறைவும் எல்லாமல் எல்லாம் வெளிப்படையாக இருக்கிறது. அந்த ஆண்டு இறுதிவரை எத்தனை பிரதிகள் வெளியாகின, விற்பனை ஆகின, வருமானம் எவ்வளவு உட்பட எல்லாம் கம்ப்யூட்டர் சீட்டாக வந்து விடுகிறது.

    எத்தனை பதிப்பகங்கள் இந்த அளவிற்கு, வெளிப்படையாக, நேர்மையாக நடந்து கொள்கின்றன என்பது மில்லியன் டாலர் கேள்வி.

    எழுத்தாளர்களுக்கு சிலபதிப்பாளர்கள் நெருங்கிய நண்பராகவும் இருப்பதால் வெளிப்படையாக பணம் பற்றிப் பேசுவதும் கௌரவக் குறைவு. கொடுத்தத்தை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

    நேற்று எழுத்தாளரான கிருஷ்ணசாமிக்கே (யுவகிருஷ்ணா) கடந்த 35 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் ஜெமோவை விட அதிக ராயல்டி கிடைக்கிறது என்றால்…. நான் என்னத்தைச் சொல்ல….

    எங்கோ தப்பு இருக்கிறது. அம்புட்டுதேன்….சொல்ல முடியும்.

    மனசு கேக்கல. அதான் நீண்ட பதிவாப் போட்டுட்டேன், இந்த ராவுல. மன்னிச்சுக்கங்க சாமி ஐயாக்களா…

  • //இறுதியாக ஒன்று, நியூஹாரிசன் மீடியா ஒரு பிரபல, மூத்த எழுத்தாளருக்கு ராயல்டியை அளித்த போது அவர் அப்படியே அசந்து போய் விட்டார். எனக்கா… எனக்கா இவ்வளவு பணமும் என்று வியப்பில் அவர் வருவோர், போவோரிடம் எல்லாம் அதைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார். //

    ஆங்… சொல்ல மறந்துட்டேன். அதுநாள் வரைக்கும் அந்த மாதிரி ஒரு பெரிய தொகையை அவர் வாழ்நாளிலே பார்த்ததே இல்லை. அவர் எழுத்துக்குக் கிடைச்சதும் இல்லை. அதுதான் முக்கிய காரணம். ஏன்னா அவரு புத்தகத்துக்கெல்லாம் சன்மானமா (கவனிங்க.. ராயல்டி எல்லாம் இல்ல… சன்மானம் தான்) பதிப்பாளர் முடிஞ்சப்போ ஏதோ கொஞ்சம் தருவாரு. ஆயிரம்.. இரண்டாயிரம்ங்கறதுதான் அவரோட பெரிய சன்மானத் தொகையே..

    இப்படித் தான் போயிட்டிருக்கு இந்த பதிப்புலகம். நேசமுடன் வெங்கடேஷ் இதுபத்தி எதுனா எழுதினா ரொம்ப நல்லா இருக்கும்.

  • உங்கள் கட்டுரைக்கான ஜெயமோகனின் எதிர்வினையை பார்த்தீர்களா? இங்கே: http://www.jeyamohan.in/?p=5727. இது பற்றி நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? அவரது தளத்தில் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட துவங்கியுள்ளதற்கும் இதற்கும் தொடர்பு உண்டென்று கருதுகின்றீர்களா?

    • திரு சதீஷ், எனக்கு சுட்டிகள் அநாவசியம். நான் ஜெயமோகன் எழுதுவதைத் தவறாமல் வாசிப்பவன். இதையும் கண்டேன். ஆனால் அவர் குறிப்பிட்டிருப்பதுபோல் என் கட்டுரை அனுதாபம் தெரிவிக்கவில்லை. என் நோக்கம் நிச்சயம் அதுவல்ல. போலி வாசகர்கள் மீதான கோபமும் கண்டனமுமே அதன் சாரம். மற்றபடி அவரது தளத்தில் வாசகர் கருத்துகளுக்கான பெட்டிக் கதவு திறந்திருப்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை. இதுநாள் வரை அவர் வேலை மெனக்கெட்டு ஒவ்வொரு கடிதத்தையும் தனியே எடுத்துப் போட்டு பப்ளிஷ் செய்துகொண்டிருந்தார். இனி அந்த வேலை அவருக்கு மிச்சம். அவ்வளவே.

  • //நேற்று எழுத்தாளரான கிருஷ்ணசாமிக்கே (யுவகிருஷ்ணா) கடந்த 35 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் ஜெமோவை விட அதிக ராயல்டி கிடைக்கிறது என்றால்…. நான் என்னத்தைச் சொல்ல….//

    சாரே! நான் கிருஷ்ணசாமி இல்லை. கிருஷ்ணகுமாராக்கும்…

    இங்கே என்னுடைய பின்னூட்டம் எனக்கேற்பட்ட அதிர்ச்சியின் அடிப்படையில் போடப்பட்டதே தவிர, வேறெந்த உள்நோக்கத்தோடும் இல்லை.

    இக்கட்டுரையின் ஆதார சுருதியாய், “எழுத்தாளர்களின் பிம்பம் மெய்யானதா அல்லது பதிப்பகங்கள் எழுத்தாளர்களை சுரண்டுகிறதா?” என்ற கேள்விகளாய் எடுத்துக் கொள்கிறேன்.

  • எழுத்தாளர்களுக்கு மாஞ்சு மாஞ்சு கடுதாசி எழுதற வாசகர்கள் அப்புறம் இருக்கட்டும். எனக்கு இப்போ ஒரு தலை போற சந்தேகம் – பாரா எழுதின இந்த போஸ்டோட சுட்டிய ஜெமோக்கு அனுப்பி ஒருத்தர் இது பத்தி என்ன நினைக்கறீங்கன்னு கேக்கறார். அதுக்கு அவர் சொல்ற பதிலோட சுட்டிய இங்க போட்டு ஒருத்தர் இது பத்தி என்ன நினைக்கறீங்கன்னு கேக்கறார்.

    நான் தெரியாமத்தான் கேக்கறேன், எதுக்குங்க இந்த தூது? இணையத்துல எழுதறவங்க தன்னை பத்தி மத்தவங்க எழுதினத தானே தேடி படிக்க முடியாத/ விரும்பாதவங்களா இருப்பாங்களா என்ன?அவங்களுக்கா பதில் சொல்லணும்னு தோணினா தானே எதிர்வினை செஞ்சுட்டு போறாங்க. அதை விட்டுட்டு வேலை மெனக்கெட்டு எதுக்கு அடுத்தவங்க வாய பிடுங்கணும்?

    போயும் போயும் இலக்கியத்துக்காக காசை செலவழிக்கணுமான்னு கணக்கு பாக்கும் டில்லிக்கார அய்யா மாதிரியான சிக்கனவாதிகளுக்கு நடுவுல காசை விடவும் உசந்த நேரத்தை இது போன்ற வேலைகளுக்கு உபயோகிக்கும் மகானுபாவர்களை பார்த்தால் எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருக்குங்கோ. :))))

    அப்புறம் சுரேஷ் சக்ரவர்த்தி சொல்வதில் இன்னொரு விஷயத்தையும் சேக்க விரும்பறேன். சாரு கடிதங்களை வெளியிடுவதோடு இல்லாமல் ஒரு வாசகரோடு கடிதம் மூலம் நடத்தின விவாதங்களை ஒரு புத்தகமாவே இந்த முறை கொண்டு வந்திருக்கார்(மலாவி என்றொரு தேசம்). இனி சாருவின் இன்பாக்ஸ் ரொம்பி வழிய இன்னொரு காரணம். மெய்யாலுமே சாரு அப்பாவிதான் போல.. 🙂

    டில்லிக்காரருக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் புரியல போல – எழுத படிக்கத் தெரிஞ்ச அத்தனை பேரும் ஏன் புத்தகம் வாங்கலைன்னு இங்க யாரும் கேள்வி எழுப்பலை. எல்லோருக்கும் புத்தகங்களைக் காட்டிலும் வேற வேற முன்னுரிமைகள் இருக்கலாம். அல்லது நேரடியா ஆங்கிலத்துல புத்தகங்கள் படிச்சு தங்களோட அறிவை விருத்தி செஞ்சுக்கிட்டாலே போதும்னு நினைச்சுக்கலாம். கேவலம் தமிழ் புத்தகங்கள் எல்லாம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா தப்பேயில்ல்லை. ஆனா இந்த (ஆங்கில எழுத்தாளர்களுக்கு இணையான)அறிவில்லாத இலக்கியவாதிகளோட இணைய எழுத்துக்களை(ஒசில கிடைக்கறதை) மட்டும் படிச்சுட்டு, அவங்களோட இன்பாக்சை ரொப்பற அளவுக்கு பெரிய பெரிய இலக்கிய விவாதங்களைத் தொடரும் அறிவுஜீவிகள் கூட(இதுல பாதிக்கும் மேற்பட்டோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள், நிச்சயமா புத்தக விலை அவங்க அடிப்படைத் தேவைகளையோ ஏன் ஆடம்பர செலவுகளையோ கூட பாதிக்கப் போறது இல்லை) ஏன் புத்தகம் வாங்கறதில்லை, அப்படி வாங்கினா அந்த இலக்கியவாதிகளின் நிலமை இப்படி சோர்வு தராப்போல இருக்காதேன்னுதான் எல்லோரும் புலம்பறாங்க.

    ஒன்னு நீங்க இந்த இலக்கியவாதிகள்/எழுத்தாளர்கள் எல்லாம் உங்க தகுதிக்கு கீழானவங்கன்னு நினைச்சால், சுத்தமா படிக்கவே கூடாது. ஆனா இந்த மட்டமான எழுத்துக்களை ஓசில கிடைச்சா மட்டும் படிப்பேன், படிச்சுட்டு அவங்க நேரத்தையும் கொல்ற அளவு விவாதம் எல்லாம் பண்ணுவேன். ஆனா அவங்களோட உழைப்புக்கு தகுந்த கூலிய கொடுக்கறதுன்னா மட்டும் என்னோட காசோட மதிப்பை பத்தி பேசுவேன்னு சொல்றது அயோக்கியத்தனம்.

    நீங்க அரசன் சோப்போ இல்லை அணில் சேமியாவோ வாங்க வேண்டாம்தான். டவ் சோப்பும், பாஸ்தாவும் போதும்னா அத்தோட நிப்பாட்டணும். பக்கத்து நாடார் கடைக்கு அரசன் சோப்பும், அணில் சேமியாவும் தர சாம்பிள் பாக்கெட்ட மட்டும் அமுக்கிட்டு, இதையெல்லாம் மனுசன் வாங்குவானான்ற மாதிரி கமெண்டும் அடிக்கறது எந்த ஊர் நியாயத்துல சேத்தி?

    கல்கியோட ஏட்டிக்கு போட்டி கட்டுரைத் தொகுதியில் ஒரு கட்டுரைல மகாத்மா தன் சுய சரிதைய வெளியிடும் உரிமைய ஒரு வெளிநாட்டு கம்பெனிக்கு கொடுத்ததை ஆதரிச்சு கல்கி ஒரு கட்டுரை எழுதியிருப்பார். எவ்வளவோ கௌரவம் பாக்கறவங்களும் கூட புத்தகங்களை மட்டும் கூசாம ஒசில படிக்க நினைக்கற மனோபாவத்தை அதுல புட்டு புட்டு வச்சிருப்பார். நகைச்சுவை சொட்ட சொட்ட எழுதியிருந்தாலும் அதன் பின்னால் உள்ள அலுப்பு நன்றாகவே தெரியும். அட்லீஸ்ட் வெகுஜன/உபயோக எழுத்து துறைக்காவது அதிலிருந்து இன்றைக்கு விடிவு கிடைத்திருப்பது குறித்து நாம் மகிழ வேண்டும்.

    இன்னும் ஒரு தலைமுறை கழித்தேனும் இலக்கிய எழுத்துக்களுக்கும் இந்த சாபவிமோசனம் கிடைக்கும் என்று நம்புவோமாக…

    பி.கு: பாரா ஐயா, ரொம்ப நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும். தனி பதிவா என்னோட ப்லாகில் இதை போடலாம்னுதான் முதல்ல நினைச்சேன். அப்புறம் அதோட சுட்டிய இங்க யாராச்சும் கொண்டு வந்து தர வேண்டியிருக்கும், அந்த சிரமம் அவங்களுக்கு வேணாமேன்னுதான் இங்கயே எல்லாத்தையும் கொட்டிட்டேன். பொறுத்தருள்க. 🙂

  • புத்தகம் எழுதி அதிக ராயல்டி பெறுவது எப்படி, ஏமாற்றும் பதிப்பாளர்களை கையாள்வது எப்படி போன்ற தலைப்புகளில் கிழக்கு புத்தகங்கள் வெளியிடலாமே :). எழுத்தாளர்கள் அவற்றை வாங்கினால் கூட விற்பனை பல ஆயிரக்கணக்கில் இருக்குமே :).

  • லஷ்மி, எழுத்தாளர்களின் சோர்வை போக்க நீங்கள் ஹார்லிக்ஸ்,போர்ன்விட்டாவோ அல்லது உயர்ரக மதுவோ வாங்கி அனுப்பலாம் :). கோவாவின் பெனி கூட வாங்கி அனுப்பலாம் :).

    “நீங்க அரசன் சோப்போ இல்லை அணில் சேமியாவோ வாங்க வேண்டாம்தான். டவ் சோப்பும், பாஸ்தாவும் போதும்னா அத்தோட நிப்பாட்டணும். பக்கத்து நாடார் கடைக்கு அரசன் சோப்பும், அணில் சேமியாவும் தர சாம்பிள் பாக்கெட்ட மட்டும் அமுக்கிட்டு, இதையெல்லாம் மனுசன் வாங்குவானான்ற மாதிரி கமெண்டும் அடிக்கறது எந்த ஊர் நியாயத்துல சேத்தி?”

    அதற்குப் பெயர் கருத்துரிமை.இந்த இலக்கியவாதிகள் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் உளறுவது எந்த அளவு சரியோ அதை விட அதிக நியாயம் கொண்டது நான்
    எழுதியது. நான் ஒன்றும் இலக்கிய நூல்களை ஜெராக்ஸ்
    செய்து மலிவு விலையில் விற்று யார் பிழைப்பிலும்
    மண்ணள்ளி போடவில்லையே. புத்தகங்களை இலவ்சமாகக்
    கொடுங்கள் என்று சொல்லவில்லையே. தங்கள் இணையதளங்களை pay site ஆக மாற்ற வேண்டாம்
    என்று யார் சொன்னது.அப்படி செய்து பார்த்தால் எத்தனை
    பேர் பணம் கட்டி படிக்கிறார்கள் என்பது தெரிந்து விடும்.
    முடிந்தால் உங்களால் இயன்ற அளவிற்கு புத்தகம வாங்கி இலக்கியவாதிகளின் சோர்வினைப் போக்க உதவுங்கள்.

    ஒசியில் புத்தகம் படிப்பதில் என்ன தவறு என்று எனக்குத்
    தெரியவில்லை. புத்தகங்கள், இசைக்கோவைகள் -இவைகளை
    ஒருவொருக்குவர் கொடுத்துதவுதில் என்ன தவறு இருக்க
    முடியும். அரசு நூலகங்களை அமைத்து புத்தகங்களை படிக்க உதவுகிறதே.அந்த நூலகங்களில் ஒரு சிறு தொகைதானே உறுப்பினராக வசூலிக்கிறார்கள்.
    அமெரிக்காவில் கவுண்டி நூலகங்களில் அந்தத் தொகை
    கூட கிடையாது, நூல்கள்,விடியோக்கள், டிவிடிகள், திரை/இசை சிடிக்கள் எல்லாம் கிடைக்கும்- அங்கு பயன்படுத்த,வீட்டிற்கு எடுத்துச் சென்று கேட்க/பார்க்க/படிக்க. தமிழக அரசு நூலக ஆணைக்குழு
    மூலம் ஆண்டு தோறும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு
    நூற்களை வாங்குகிறது.அது யார் பணம், மக்களின் வரிப்பணம். அதன் ஒரு பகுதி இந்த எழுத்தாளர்களுக்கு கிடைக்கிறதா இல்லையா. பல்கலைகழகங்களில் பெரிய
    நூலகங்கள் எதற்காக இருக்கின்றன. ஏன் பாடப்புத்தகங்களையும் மாணவர்களுக்கு கடன்
    தருகிறார்கள். ஏன் உன்னால் 2000 ரூபாய் செலவழித்து
    புத்தகம் வாங்க முடியாதா என்று பல்கலைகழகம்
    கேட்பதில்லை.

    ஒபன் சோர்ஸ், பிரி ஸாப்ட்வேர்களை உருவாக்க எத்தனையோ தொழில் நுட்பவ வல்லுனர்கள்/பொறியாளர்கல் தங்கள் உழைப்பு, நேரம்,
    திறனைத் தருகிறீர்கள்.அவர்க்கு அதனால் வணிகரீதியாக
    பலன் இல்லை, யாரும் அதற்காக மணிக்கு 100 $ டாலர்
    தருவதில்லை.மணிக்கு அதை விட அதிகம் சம்பாதிப்போரே ஒரு ஆர்வத்தில், பொது நன்மைக்காக அத்தகையவற்றை
    உருவாக்க உழைக்கிறார்கள்.அவர்கள் புலம்புவதில்லை,
    மூக்கால் கண்ணீர் சிந்துவதில்லை. எத்தனையோ வழக்கறிஞர்கள் ஏழைகளுக்கு இலவசமாக வாதாடுகிறார்கள்
    அல்லது பொது நல வழக்குகளில் பைசா பெற்றுக்கொள்ளாமல் வாதாடுகிறார்கள்.அவர்கள் மணிக்கு
    ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடியும். தங்கள் ஒய்வு நேரத்தை சமூக நலனுக்காக செலவழிக்கும் பலர் இருக்கிறார்கள்.அவர்கள் அனாதை விடுதிகளுக்கும்,
    மருத்துவமனைகளுக்கும் சென்று இயன்றதை செய்கிறார்கள்.
    அவர்கள் யாரும் இப்படி புலம்புவதாகத் தெரியவில்லை.
    பல ஆடிட்டர்கள்/சார்ட்ட அக்கொண்ட்ண்ட்கள் இலவச
    சேவை செய்கிறார்கள் லாப நோக்க அமைப்புகள்,
    தொழிற்சங்கங்களுக்கு. இப்படி பலர் இலவசமாக
    அறிவை, உழைப்பை தருவது சாதாரணமாக நடக்கிறது
    இந்த சமூகத்தில்.அதில் 99% வெளியே தெரியவே தெரியாது.

    இந்த எழுத்தாளர்களில் 99% அரசு வேலையில் இருப்பார்கள் அல்லது பென்ஷன் பெறுபவர்களாக இருப்பார்கள். எனவே அவர்கள் வ்றுமைக்கோட்டிற்கு கீழ் இருந்து கொண்டு இலக்கிய சேவை செய்வதில்லை. ஷோபா டேயின் புத்தகம் அமிதவ் கோஷின் புத்தகத்தை விட அதிகம் விற்கிறது. அதற்காக அமிதவ் கோஷ் எங்கும் புலம்பி, சமூகத்தை சபித்ததாக தெரியவில்லை
    .
    எழுத்தாள் பொம்மைகள் சமூக கோபுரத்தை தாங்குவதில்லை. சமூகம்தான் அவர்களையும், என்னையும் தாங்குகிறது. தமிழ் எழுத்தாளர்கள் பலரின் பிரச்சினை அவர்கள் எதிர்பார்க்கும் வகையில் கோடம்பாக்கம்
    அவர்களை தாங்குவதில்லை :).

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி