ஓர் எழுத்தாளன் எவ்வாறு உருவாகிறான் என்று எளிதில் சொல்ல முடியாது. எல்லோருக்கும் சொல்ல விஷயங்கள் உண்டு. எல்லோரும் ஏதோ வகையில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். கடிதங்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதுகிறோம், பத்திரிகைகளுக்கு அனுப்புகிறோம், வலைப்பதிவுகள் எழுதுகிறோம், டிவியில், சாத்தியமுள்ள அனைத்து ஊடக முறைகளையும் பயன்படுத்துகிறோம். ஆனால் எழுதுபவர் என்கிற படியிலிருந்து எழுத்தாளர் என்னும் படிக்குச் செல்வது ஒரு கட்டம்.
பெரிய கஷ்டம் ஒன்றுமில்லை. ஆனால் அதிகம் உழைப்பு தேவைப்படுகிற கட்டம். நாங்கள், கிழக்கு தொடங்கியபோது புதிய எழுத்தாளர்களைக் கண்டுபிடிப்பது, உருவாக்குவது என்னும் இரண்டு செயல்திட்டங்களை முதன்மையாக வைத்துக்கொண்டோம். தமிழில் கதை, கவிதை எழுத வீதிக்குப் பத்து பேர் உண்டு. ஆனால் திட்டமிட்டு, மன முனைப்புடன் உருப்படியாக ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிய ஆய்வு மேற்கொண்டு ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கக்கூடிய வல்லமை மிகச் சிலருக்கு மட்டுமே இருந்தது.
அதைச் சரியாகச் செய்ய முடிந்துவிடுகிறவர்களுக்குக் கதை, கவிதை எழுதுவது ஒரு பெரிய விஷயமாக இருப்பதில்லை என்பதையும் பார்த்தேன். நமக்கு எளிதாக வரக்கூடிய கலைகளுக்கு அப்பால் முனைந்து மேற்கொள்ளக்கூடிய முயற்சி அளிக்கும் திருப்தி என்று ஒன்று இருக்கிறது. அதில் ஆர்வமுள்ளவர்கள் வெகு சீக்கிரம் எழுத்தாளர்களாகிவிட முடியும்.
கதை, கவிதை மட்டுமல்ல. எழுத்தின் அத்தனை சாலைகளிலும் அவர்களால் சவாரி மேற்கொள்ள முடியும்.
முன்பு இத்தகைய கதையல்லாத எழுத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு உபயோகமாக ஆண்டுக்கொருமுறை பயிற்சி வகுப்புகள் நடத்தினோம். சென்ற வருடம்கூட அப்படியொரு பயிற்சி முகாம் – சற்றே வேறு வடிவில் நடத்தப்பட்டது. இந்த முகாம்களுக்கு அப்பாலும் சில தனிப்பட்ட வகுப்புகளை நாங்கள் நடத்துவதுண்டு. பெரும்பாலும் எங்களுடைய எழுத்தாளர்கள் அதில் கலந்துகொள்வார்கள். அல்லது எங்களுக்கு எழுத விரும்புகிறவர்கள்.
இந்த வகுப்புகளால் நிச்சயம் ஒருவர் எழுத்தாளராகிவிட முடியுமா என்பதல்ல. எதுவுமே சொல்லிக்கொடுப்பதன்மூலம் மட்டும் முழுத்தேர்ச்சி அளித்துவிடாது. ஆனால் ஓர் அடிப்படை உந்துதலுக்கு இது அவசியம் உதவும் என்று கருதுகிறேன். இம்மாதிரி பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு, பிறகு தீவிரமாக எழுதத் தொடங்கி கிழக்கில் புத்தகம் எழுதியவர்கள் உண்டு. வருடம்தோறும் குறைந்தது ஐந்தாறு பேரையாவது புதிய எழுத்தாளர்களாக அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறோம். அவரவர் ஆர்வம், அக்கறை, திறமையின் அடிப்படையில் மேலே செல்கிறார்கள்.
சென்றவருடம் கிழக்கு எழுத்தாளராக அறிமுகமான யுவ கிருஷ்ணா இந்த வருடம் ஒரு பத்திரிகையாளர். மூச்சுவிட நேரமின்றி சுழன்று சுழன்று எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார். நிர்வாகவியல், மனித வளம் தொடர்பாக எங்களுக்கு எழுத ஆரம்பித்த எஸ்.எல்.வி. மூர்த்தி இன்று அத்துறை மாணவர்களின் விருப்பத்துக்குரிய பயிற்சியாளர். சோம. வள்ளியப்பனும் சொக்கனும் ராம்கியும் மருதனும் முகிலும் மற்ற பலரும் பல தளங்களுக்குப் பரவி, சுறுசுறுப்பாகத் தொடர்ந்து எழுதி வருவது பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. [இவர்களில் பலபேரிடமிருந்து சிறுகதை மற்றும் கவிதையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்ற நியாயமான பெருமிதமும் உண்டு.]
இந்த வருடமும் சில புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிறோம். அவர்கள் மூலம் சில புதிய புத்தக வகைப்பிரிவுகளையும்.
புஷ்பா ரமணி என்ற வழக்கறிஞர் ‘விவாகரத்து’ குறித்த புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயத்துக்கு சமூக ரீதியில் இருக்கும் தடைகள், பிரச்னைகள், சிக்கல்கள், விவாகரத்து நடைமுறையில் உள்ள சட்ட நுணுக்கங்கள், விதி முறைகள், வழிமுறைகள் என்று அனைத்தைப் பற்றியும் மிகத் தெளிவாக விவரிக்கும் புத்தகம் இது. ஆண்களைவிடப் பெண்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய புத்தகம்.
காப்புரிமை [ பேடண்ட்] குறித்து எஸ்.பி. சொக்கலிங்கம் எழுதியிருக்கும் புத்தகமும் இதே மாதிரி முக்கியத்துவம் வாய்ந்ததே. சி போட்டு ஒரு சுழி சுழித்தால் காப்பிரைட் என்று தெரியும். காப்புரிமை என்றால் அது என்னவோ அமெரிக்காக்காரர்கள் அவ்வப்போது வாங்கி பீரோவில் வைத்துக்கொள்கிற விஷயம் என்பது போலத்தான் இங்கே பெரும்பாலும் நினைத்திருக்கிறார்கள். காப்புரிமை பற்றிய அனைத்து விவரங்களையும் இந்நூல் எளிமையாக, சுவாரசியமாகத் தருகிறது.
சதீஷ் கிருஷ்ண மூர்த்தியின் விளம்பர மாயாஜாலம், சரவண கார்த்திகேயனின் சந்திரயான், சரவணா ராஜேந்திரனின் தாராவி, சிவசேனா பற்றிய புத்தகங்கள் இந்த வருடப் புதிய அறிமுகங்கள்.
என் தனிப்பட்ட சந்தோஷம், அநேகமாக வாரம் ஒருவராவது எழுத்தாளனாகவேண்டும் என்ற ஆர்வமுடன் எங்கள் அலுவலகத்துக்கு வந்து உட்கார்ந்து கொஞ்சநேரம் பேசிவிட்டுச் செல்கிறார்கள். எந்தத் துறையைச் சேர்ந்தவரானாலும் எல்லோரிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கிறது. எல்லோரிடமும் ஆர்வமும் அக்கறையும் இருக்கிறது. எல்லோருக்கும் ஏதோ ஒன்று பற்றி நிறைய தெரிந்திருக்கிறது. எழுதவேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். நேற்றைக்கு என் நண்பர் கணேஷ் சந்திரா திடீரென்று கூப்பிட்டு ஒரு மேடை நாடகம் எழுதியிருக்கிறேன், படியுங்கள் என்றார். முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சமாளித்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கியபோது, அமெச்சூர் மேடை நாடக ஃபார்முலாவைச் சரியாகப் புரிந்துகொண்டு அதே விகித நகைச்சுவை, அதே விகித கடி, அதே விகித கதை, அதே விகிதத் திருப்பங்கள், அதே மாதிரி ஓர் இறுதி சஸ்பென்ஸ் என்று அடி பிசகாது முயற்சி செய்திருக்கிறார். காவியம் என்று பொய் சொல்ல மாட்டேன். ஆனால் கணேஷுக்குள் ஒரு நல்ல நாடக எழுத்தாளர் நிச்சயம் இருப்பது தெரிந்தது. ஒழுங்கான, முறையான பயிற்சி, திரும்பத் திரும்ப எழுதுதல், சலிக்காமல் எழுதிக்கொண்டே இருத்தல் மூலம் இதில் மேம்பட்ட நிலையை அடைய இயலும்.
எழுத்தாளன் என்பவன் பிறப்பவனில்லை. முனைப்பின் மூலமும் முயற்சிகளின்மூலமும் அடையும் நிலையே அது.
// [இவர்களில் பலபேரிடமிருந்து சிறுகதை மற்றும் கவிதையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்ற நியாயமான பெருமிதமும் உண்டு.]//
i like it.
ஒரு சந்தேகம், எழுத்துச் சோம்பேறிகளை என்ன செய்விங்க? அவங்களுக்கு ஒரு தனி பட்டறை நடத்தக்கூடாதா? மொத டிக்கட்டு எனக்குன்னு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை 😉
அன்புள்ள ராஜா, ஒரு தீர்மானமுடன் உற்றோமேயாவோம் உமக்கேநாம் ஆட்செய்வோமென்று எழுத முடிவு செய்து வந்துவிட்டால், சோம்பேறித்தனம் இல்லாது போய்விடும். அது இருக்கிறவரை எழுத்தாளனாவது என்பது சற்றும் சாத்தியமில்லாத செயல். என் இடத்தில் சோம்பேறித்தனம் என்னும் பேச்சுக்கு இடமில்லை. அன்றைய சொக்கன் முதல் நேற்றைய யுவ கிருஷ்ணா வரை விசாரித்துப் பார்க்கலாம். எழுதத் தொடங்கியபிறகு சோம்பலுக்கு இடம் கொடுத்தால் என்ன நேரும் என்று அழகாக விளக்குவார்கள்.
//எழுத்தாளன் என்பவன் பிறப்பவனில்லை. முனைப்பின் மூலமும் முயற்சிகளின்மூலமும் அடையும் நிலையே அது.// இது இப்போ நமக்கு 1331 குறள்
/ஒழுங்கான, முறையான பயிற்சி, திரும்பத் திரும்ப எழுதுதல், சலிக்காமல் எழுதிக்கொண்டே இருத்தல் /
சத்தியமான வார்த்தைகள்!
நன்றி பா.ரா !
பயனுள்ள பதிவு.. எங்களை போல கத்துகுட்டிகளுக்கு ஊக்கமளிக்கிறது..
புது எழுத்தாளர்களை வெளிச்சத்தில் கொண்டு வந்து ஒரு தளம் அமைத்து கொடுக்கும் உங்களுக்கும், கிழக்கு பதிப்பகத்திற்க்கும் என் வாழ்த்தும் நன்றியும்..
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
பி.கு : இந்த புதிய மறுமொழி பதிவு பகுதி நன்றாக இருக்கிறது..
>முனைப்பின் மூலமும் முயற்சிகளின்மூலமும் அடையும் நிலையே அது<
இந்த விஷயம் எழுத்தாளர்களுக்கு தெரியுமா?
யானைமுகத்தானுக்கு வாழ்த்துகள்!!
//எழுத்தாளன் என்பவன் பிறப்பவனில்லை. முனைப்பின் மூலமும் முயற்சிகளின்மூலமும் அடையும் நிலையே அது.// – எங்களை மாதிரி இப்பத்தான் கிறுக்கி பாக்க ஆரம்பிச்சிருக்கறவங்களுக்கு படிக்க ரொம்ப உற்சாகமா இருக்கு. ஆனா பாத்துங்க, கொம்பு முளைச்ச எழுத்தாள சிகாமணிகள் யாரும் வந்து உங்களை முட்டிற போறாங்க. :)))))
பாரா,
நீங்கள் உருவாக்கிய எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும்போது ஒரு தாயின் பெருமிதம் தெரிகிறது. குட். ஆனால் நீங்கள் அளித்த லிஸ்டில் வாசகனாகிய எனக்கு, கிழக்கின் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படித்தவன் என்ற முறையில் சிறந்த எழுத்தாளராகத் தெரிவது சொக்கன் மட்டுமே. சொல்ல வந்ததை, தெளிவாகக் குழப்பமில்லாமல், மிகச் சரியாக வாசகன் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய நடையில் அவர் தருவது பாராட்டுக்குரியது. அப்புறம் நீங்கள் சொல்லாமல் விட்ட பா. தீனதயாளன். அற்புதமான எழுத்து இவருடையது. விவரங்களை சேகரித்து, அதை பல இடங்களிலும் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டு பலரைச் சந்தித்து ஆய்வு செய்து அவர் உருவாக்கியிருக்கும் புத்தகங்கள் காலம் கடந்து நிற்கக் கூடியவை. அருமையான ஆவணப்படுத்துதல்கள் அவர் செய்வது. அவருக்கு ஒரு சபாஷ்.
ராம்கி, முகில்..?? . மருதனுடைய எழுத்துக்கள் என்னைக் கவரவில்லை. அவை ரொம்ப “சூடாக” இருக்கின்றன என்பது என் கருத்து. அதிலும் ஒருவித சார்பு நிலை தெரிகிறது. எழுத்தாளன் நடுநிலைமையோடு இருக்க வேண்டும். அவனுடைய தனிப்பட்ட கருத்துக்கள் எழுத்தில் வரவே கூடாது. ஆனால் மருதன், கண்ணன் ஆகியோர் எழுத்துக்கள் அப்படி இல்லையே!
//சென்றவருடம் கிழக்கு எழுத்தாளராக அறிமுகமான யுவ கிருஷ்ணா இந்த வருடம் ஒரு பத்திரிகையாளர். மூச்சுவிட நேரமின்றி சுழன்று சுழன்று எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்//
நல்லது. ஆனால் கிழக்கில் எழுதித் தான் யுவா பத்திரிகையாளராக ஆகவில்லை. அவர் ஏற்கனவே ஒரு தின இதழில் பணியாற்றி நல்ல அனுபவம் பெற்றவர். விளம்பர வடிவமைப்பிலும் தேர்ந்தவர். மிக சுறுசுறுப்பானவர் அவரை கிழக்கு பயன்படுத்திக் கொண்டது அவ்வளவுதான்.. யுவகிருஷ்ணா இன்னும் வளர வேண்டியவர். தனது தனிப்பட்ட சார்புநிலைகள் எழுத்தில் வராமல் பார்த்துக் கொண்டால் அவர் இன்னும் உயர்வது நிச்சயம்.
அதுசரி ஹரன் பிரசன்னாவை ஏன் எழுதச் சொல்லவில்லை? கவிதைத் தொகுப்போடு நிறுத்தி விட்டீர்களே ஐயா, அவர் நன்றாக, நகைச்சுவையாக (உள் குத்தோடு) எழுதுவாரே. இன்னும் எனக்குப் பிடித்த கிழக்கு ஸ்டார்கள் யாரென்றால் – நாகூர் ரூமி மற்றும் உமா சம்பத்.
இவையெல்லாம் என் தனிப்பட்ட கருத்துக்கள். தோன்றியது. சொல்லிவிட்டேன். அவ்வளவுதான். யாரையும் குறை சொல்வது நோக்கமல்ல.
ஒரு எழுத்தாளனை வெற்றிகரமான எழுத்தாளன் என்பதை அவனது படைப்புகள் மட்டுமல்ல; வாசகர்களும் தான் தீர்மானிக்கிறார்கள் இல்லையா?
எல்லோருக்கும் வாழ்த்துகள்.
//இவர்களில் பலபேரிடமிருந்து சிறுகதை மற்றும் கவிதையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்ற நியாயமான பெருமிதமும் உண்டு//
எத்தனை ஜெயமோகன்களை, எத்தனை சாருநிவேதித்தாக்களை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கிறீர்கள் 🙁
[…] இந்த மற்றும் இந்த பதிவுகளை படிக்கும் போது […]
[…] இந்த மற்றும் இந்த பதிவுகளை படிக்கும் போது […]