விருதகிரியைவிடக் கொடுமையான ஒரு விஷயம் உலகில் உண்டு. புத்தம்புதிதாக ஒருத்தரைக் கண்டுபிடித்து, ஒரு சப்ஜெக்ட் தீர்மானித்து, அவரை ஓர் உருப்படியான புத்தகம் எழுத வைப்பது. ஒவ்வொரு வருடமும் குறைந்தது பதினைந்து முதல் இருபது பேரிடமாவது நான் இந்த விளையாட்டை விளையாடுகிறேன். என்னைத் தோற்கடிப்பதில் அளப்பரிய ஆர்வம் கொண்ட நல்லன்பர்கள், சொல்லி சொல்லி அழவைத்து பதில் விளையாட்டு விளையாடுவார்கள். நானும் நிறுத்துவதில்லை, அவர்களும் விடுவதில்லை. இது ஒரு கிழக்கு காஃபி டாஃபி.
ஆனால் அபூர்வமாகச் சிலர் கற்பூரமாக அமைந்துவிடுவதுண்டு. சொல்லித்தரவே வேண்டாம். பெரிய முயற்சிகள் வேண்டாம். கொஞ்சம் அங்கே இங்கே தட்டிச் சரிசெய்தால் போதும், நானொரு சிற்பம் என்று எழுந்து நிற்கும் மாமல்லைக் கலைக்கற்கள்.
இந்த வருடம் கிழக்கில் அறிமுகமாகியிருக்கும் அப்படியொரு நல்ல எழுத்தாளர் பாலா ஜெயராமன். பாலாவை எனக்குப் பரிச்சயம் கிடையாது. அவர் ஒரு தமிழ் விக்கிபீடியாக்காரர் என்னும் அளவில் கொஞ்சம் பயம் மட்டும் இருந்தது. எனக்குத் தமிழ் விக்கிபீடியாவின் தமிழுக்கும் ஜெர்மானிய, இசுப்பானிய, இத்தாலிய மொழிகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என்றொரு அபிப்பிராயம் உண்டு. உண்மையில், இந்த மனிதரின் தமிழ் எப்படி இருக்கப்போகிறதோ என்கிற அச்சத்துடன்தான் அவருடைய முதல் புத்தகமான கடல் கொள்ளையர் வரலாறை ஆரம்பித்தேன். ஆனால் அவர் புத்தகம் எழுத ஆரம்பிப்பதற்கு முன்னால் அனுப்பிய அத்தியாயச் சுருக்க அட்டவணையிலேயே தெரிந்துவிட்டது. கலப்படமில்லாத, சுத்தமான, அதே சமயம் வாசிப்பு சுவாரசியத்துக்கு ஊறு செய்யாத மொழி அவருடையது. தவிரவும் நிறையப் படிக்கிற மனிதர். எழுத்தைக் கூர்மையாக்க, படிப்பினைப் போல் சிறந்த உபாயம் வேறில்லை.
பாலாவின் கடல் கொள்ளையர் வரலாறு, இந்த வருடம் நான் ரசித்த புத்தகங்களுள் ஒன்றாகிப் போனது. புதிய களம். புதிய தகவல்கள். சரித்திரமும் சாகசமும் கைகோக்கும் வரலாறு. எடுத்தால் வைக்கமுடியாத விறுவிறுப்புடன் ஓடுகிற புஸ்தகம். இதைப் படித்த சூட்டில்தான் அவரை உடனே தமிழ் பேப்பரில் வில்லாதிவில்லன் எழுதச் சொன்னேன். நல்ல நான் – ஃபிக்ஷன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.
பாலாவின் ‘அணுகுண்டின் அரசியல் வரலாறு’, புத்தகக் கண்காட்சிக்கு வரப்போகிற அவருடைய இரண்டாவது புத்தகம். அடுத்த வருடம் நான் மிக அதிகம் எதிர்பார்க்கிற எழுத்தாளர்களுள் பாலா முக்கியமானவராகிறார்.
இரண்டாவது நபர், கே.ஜி. ஜவார்லால். இப்படி ஒரு எழுத்தாளர் இணையத்தில் இருக்கிறார், படித்துப் பாருங்கள் என்று எனக்கு இவரை அறிமுகப்படுத்தியது சொக்கன். ஓசூரில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த ஜவார்லாலை நான் அழைத்த நேரம், அவர் வி.ஆர்.எஸ். வாங்கிக்கொண்டு சென்னைக்கு இடம் பெயரத் தயாராகிக்கொண்டிருந்தார். எழுதுவதில் அவருக்கு இருந்த கட்டுக்கடங்காத ஆர்வம்தான் அவருடைய வி.ஆர்.எஸ்ஸுக்குக் காரணம் என்று தெரிந்தது. இசையமைப்பாளராகவேண்டும் என்று கூட ஓர் உபரி ஆர்வம் அவருக்கு இருந்தது. முதல் சந்திப்பில் அவர் இசையமைத்த பாட்டு ஒன்றை எனக்குப் போட்டுக்காட்டி எப்படி இருக்கிறது என்று கேட்டார். ‘நன்றாக எழுதுகிறீர்கள், கொஞ்சம் மெனக்கெட்டால் ரொம்ப நல்ல எழுத்தாளராக உங்களால் வரமுடியும்’ என்று மிக நேரடியாக பதில் சொன்னேன்.
புரிந்துகொண்டுவிட்டார் என்று நினைக்கிறேன். அவருடைய ஜென் கதைகள் புத்தகமும் திருக்குறள் வழியே உருப்படு புத்தகமும் எழுதப்பட்ட கால அவகாசம் அறிந்தால் வாய் பிளப்பீர்கள். வேகமாக எழுதுவது, தரமான எழுத்துக்கு எந்த இடைஞ்சலும் தராது என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஜவார்லால். சரளமான, அழகான மொழி. சொல்ல வரும் விஷயத்தைச் சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொல்லும் பாங்கு. முந்திரித் தூவலாக முறுவல் வரச்செய்யும் நகைச்சுவை. ஜவார்லாலின் ‘உருப்படு’, திருக்குறளை ஒரு சுயமுன்னேற்ற நூலாக மறு அறிமுகம் செய்யும் புத்தகம். தமிழின் முதல் சோம. வள்ளியப்பன் திருவள்ளுவர்தான் என்று சொல்கிறது இது. படிப்பதற்கு ரொம்ப ஜாலியாக இருந்தது.
அடுத்தவர் கலையரசன். எனக்கு இவருடன் பரிச்சயம் கிடையாது. படித்ததும் கிடையாது. வலையுலகில் இவருடைய எழுத்தைப் படித்து, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கை நிலை குறித்த ஒரு புத்தகத்துக்காகப் பேசிக்கொண்டிருந்தது, மருதன். அந்தப் புத்தகம் எழுதப்பட்டுக்கொண்டிருந்தபோதுகூட எனக்குத் தெரியாது. எடிட்டிங்கில் இருந்ததையும் அறியேன். முழுக்க முடித்த பிறகு மருதன் எனக்கு அகதி வாழ்க்கை நூலின் பிடிஎஃப்பை அனுப்பிப் பார்க்கச் சொன்னான்.
இதுவரை சரியாகப் பேசப்படாத ஒரு வாழ்வின் சரியான, நேர்த்தியான, உண்மையான பதிவாக அந்த நூல் இருந்தது. கலையரசன், தமது சுய அனுபவங்களின் அடிப்படையில் எழுதியிருப்பது இந்நூலின் மிகப்பெரிய பலம். கலையரசன் இன்னொரு புத்தகமும் எழுதியிருக்கிறார் என்பது இதை எழுதிக்கொண்டிருக்கும்போதுதான் எனக்குத் தெரியும்.
அப்புறம், சஞ்சீவியின் பேய் என்சைக்ளோபீடியா. நீங்கள் பழைய பாக்யா வாசகராக இருப்பீர்களானால் சஞ்சீவியைத் தெரிந்திருக்கும். ஒரு நவீன பி.டி. சாமியாக அவருக்கு அங்கே ஒரு ஸ்பெஷல் வாசகர் வட்டம் இருந்தது. இவரையும் இந்தாண்டு, கிழக்குக்கு எழுத அழைத்து வந்தது மருதன் தான். அவரது ஹோம் கிரவுண்டான பேய் குறித்தே எழுத வைக்க முடிவு செய்தோம். ஆனால் வெறும் பேய்க் கதைகளாக அல்லாமல், பேய்களைக் குறித்த ஒரு குட்டி என்சைக்ளோபீடியா மாதிரி செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம். கதைகள், நம்பிக்கைகள், அறிவியல், உளவியல் நான்கும் கலந்த இந்த நூல், கிழக்கின் பாணிக்குச் சற்றே புதிது.
இந்தப் புத்தகத்தை எடிட் செய்யச் சொல்லி முகிலிடம் கொடுத்திருந்தபோது, அப்போதுதான் அவனுக்குத் திருமணமாகியிருந்தது. இப்படியெல்லாம் ஒரு சிறுவனை இம்சிக்கலாமா என்று அந்தராத்மா குடைச்சல் கொடுக்காமல் இல்லை. ஆனாலும் அந்தப் புத்தகத்துக்கு வேண்டிய அழகை அவனால்தான் கொடுக்க முடியும் என்று நம்பினேன். இதுவும் கண்காட்சிக்கு வருகிறது. படித்துவிட்டுச் சொல்லுங்கள்.
கட்டக்கடைசியாக என் ஜிகிரி தோஸ்துகள். வலைப்பதிவிலும் ட்விட்டரிலும் பல்லாண்டு காலமாக மொக்கை போட்டுக்கொண்டிருந்த பெனாத்தலை ஒரு வழியாக இந்த வருடம் ராம்சுரேஷ் ஆக்கி, சீவக சிந்தாமணியை நாவல் வடிவில் எழுத வைத்தேன். கையோடு பிரபல வாரப் பத்திரிகைகளில் சிறுகதைகள், உலகப்பிரசித்தி பெற்ற 😉 தமிழ் பேப்பரில் ஒரு தொடர்கதை, சூடு குறையாமல் இன்னொரு சூப்பர் நாவல் [கூடிய சீக்கிரம் வரப்போகிறது.] என்று மனிதர் பொளந்து கட்டிக்கொண்டிருக்கிறார். சீவக சிந்தாமணி மாதிரி பல சிடுக்குகள் கொண்ட ஒரு மகாப்பெரிய காவியத்தை மாசநாவல் வாசிக்கிற மாதிரி வாசிக்க வைக்க முடியும் என்பதே நம்புவதற்குச் சற்று கஷ்டமான விஷயம். [முன்னர் குறிப்பிட்ட ஜவார்லால் இந்த வரிசையில் இந்த வருடம் எழுதிய இன்னொரு புத்தகம், நாவல் வடிவில் சிலப்பதிகாரம்.]
சுரேஷின் பலம், அவருடைய வெளிப்பாட்டு முறையும் பிரச்னையில்லாத தமிழும். வெகுஜன வாசிப்புத் தளத்தில் புனைவின்மீது ஆர்வம் செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துகொண்டிருக்கும்போது, சுரேஷ் போன்ற புதிய ஸ்டைலிஸ்டுகளால் மட்டுமே இந்த சேதாரத்தின் சதவீதத்தைக் குறைக்க முடியும் என்பது என் நம்பிக்கை.
கொத்தனாரின் ஈசியா எழுதலாம் வெண்பா பற்றி நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஒரு தோழமை மிக்க, மடிசஞ்சித்தனம் இல்லாத, நவீன தமிழ் வாத்தியார் கிடைத்ததற்குத் தமிழ் சமூகம் அவருக்குக் கிடா வெட்டி சாராயம் படைத்து நன்றி சொல்லவேண்டும். ‘இந்த வருஷம் உங்களுக்கு மூணு ஸ்டாலாமே? பத்துமாய்யா? என் புக்வேற இருக்குது?’ என்று இரண்டு நாள் முன்பு கேட்டார். இந்த நக்கலும் நகைச்சுவை உணர்வும் தமிழ் வாத்தியார் உலகம் அறியாதவை.
எழுதுவது சுலபமான விஷயம். நன்றாக எழுதுவது கொஞ்சம் கஷ்டம். ஒரு புத்தகமாக உருவம் கொடுத்து உட்கார்ந்து முழு மூச்சாக எழுதி முடிப்பது பேஜார். இதனால்தான் ஆர்வமுடன் ஆரம்பிக்கிற பலபேர் பாதி வழியில் காணாமல் போய்விடுகிறார்கள். நான் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு ஆர்வமுடன் வருகிறவர்களுள் ஒருவர்கூட இன்னும் நான் விரும்பக்கூடிய ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கவில்லை. [சென்ற வருடம் வகுப்புக்கு வந்தவர்களுள் ஒருவர் மட்டும் தமது முதல் புத்தகத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார். ஆனால் வெளியாகக் கொஞ்சம் நாளாகும். வரும்போது, அவரைப் பற்றியும் அவருடைய புத்தகத்தைப் பற்றியும் எழுதுகிறேன்.]
புத்தகம் எழுதத் திறமை மட்டும் போதாது. உழைப்பு அவசியம். மேலே சொன்ன திறமையும் உழைப்பும் மிக்க புதிய எழுத்தாளர்களுக்கு உங்களுடைய வாழ்த்துகளைச் சொல்லுங்கள். முதல் இரவு, முதல் குழந்தை மாதிரிதான், முதல் புத்தகமும், அது காணும் முதல் புத்தகக் கண்காட்சியும்கூட.
இந்த வருடம் அல்லது 2011 பயிற்சி வகுப்பு எப்போது என்பதை அறியத்தந்தால் பலருக்கும் பயன்படக்கூடிய தகவலினை கேட்ட பெருமை என்னைச்சாரும்! 🙂
அனைவருக்கும் வாழ்த்துகள் !
//நக்கலும் நகைச்சுவை உணர்வும் தமிழ் வாத்தியார் உலகம் அறியாதவை//
விளக்கம் கேட்டா நம்மள சிரிக்கவைச்சுட்டு சிந்திக்கவைப்பாரு – இது நபநப கேட்டகிரியில் வராது
அத்தனை புத்தகங்களையும் ஓடிச்சென்று படிக்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள். ஒரு சந்தேகம். தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். கிழக்குப் பதிப்பகம் வெளியிடும் அனைத்து புத்தகங்களினையும் நீங்கள் படித்துவிட்டுதான் வெளியிடுவீர்களா? ஒரு புத்தகத்தினை படிக்க எத்தனை நேரம் எடுத்துகொள்வீர்கள்?
நிச்சயமாக அனைத்துப் புத்தகங்களையும் நான் படிப்பதில்லை. ஆனால் பெரும்பாலானவற்றைப் படித்துவிடுகிறேன் – அச்சான பிறகாவது. கிழக்கில் பல எடிட்டர்கள் இருக்கிறார்கள். பிரித்துக்கொண்டுதான் வேலை பார்ப்பார்கள். மிக முக்கியமான புத்தகங்களை, பிரச்னைக்குரிய புத்தகங்களை, அவசியம் நான் கைவைத்தே தீரவேண்டும் என்று கோரும் புத்தகங்களை நான் எடிட் செய்கிறேன். மற்றவற்றைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டுவிடுவேன். எழுதவைப்பதுதான் கஷ்டமே தவிர, படிப்பதல்ல. அது எனக்கு ஓர் இன்பமான பணி.
// உலகப்பிரசித்தி பெற்ற 😉 தமிழ் பேப்பரில் ஒரு தொடர்கதை, //
தலீவா அரசியலுக்கு வர முழு தகுதி இருக்கு!
தலீவா நீ அரசியலுக்கு வா!!
மேலவையும் உனக்கே!!!
மந்திரி பதவியும் உனக்கே!!!
இப்போதே வாங்க வேண்டிய புஸ்தகப்பட்டியல் தயாரிக்க ஆரம்பித்துவிட்டேன்.
//அப்புறம், சஞ்சீவியின் பேய் என்சைக்ளோபீடியா. நீங்கள் பழைய பாக்யா வாசகராக இருப்பீர்களானால் சஞ்சீவியைத் தெரிந்திருக்கும்//
புஸ்தகத்தின் பெயரே “பேய் என்சைக்ளோபீடியா”வா? அல்லது வேறு பெயரா?
// ஒரு தமிழ் விக்கிபீடியாக்காரர் என்னும் அளவில் கொஞ்சம் பயம் மட்டும் இருந்தது. எனக்குத் தமிழ் விக்கிபீடியாவின் தமிழுக்கும் ஜெர்மானிய, இசுப்பானிய, இத்தாலிய மொழிகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என்றொரு அபிப்பிராயம் உண்டு.//
ஏன் இந்த கொல வெறி ?
“சோடாபாட்டில்” ஓர் அபார விக்கியர்.அவர் சிறந்த எழுத்தாளராக என் வாழ்த்துக்கள்.
//எனக்குத் தமிழ் விக்கிபீடியாவின் தமிழுக்கும் ஜெர்மானிய, இசுப்பானிய, இத்தாலிய மொழிகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என்றொரு அபிப்பிராயம் உண்டு.// தப்பான அபிப்பிராயம். உங்களுக்கு இது எப்படி வந்ததுன்னு தெரியலை. ஸ்னாநம் செய்துவிட்டு என்பதற்கு பதில் குளித்துவிட்டு என்றும் செகண்ட் என்பதற்கு பதில் விநாடி என்றும் எழுதச்சொன்னால் இப்படிதான் பலர் நினைப்பார்கள் நீங்களுமாமாமாமாமாஆஆ.. பாலா (சோடாபாட்டில்)அற்புதமாக எழுதக்கூடியவர், அவரை வரலாற்று தொடர் எழுதச்சொல்லுங்க.
பாரா! 33% கேட்கவில்லை. ஒன்று ரெண்டு கூட இல்லையே, தேடிப் பார்த்து ஏமாந்தேன்
உஷா மாமி, நான் என்ன செய்ய? பெண்கள் எழுதுவதற்காக உழைக்க முன் வருவதில்லை. அவர்கள் ரொம்ப சோம்பேறியாக இருக்கிறார்கள் என்று சொன்னால் அடிக்க வருவீர்கள். உங்கள் வலைப்பதிவில் குறிப்பிட்டிருப்பதுபோல் குடும்பப் பணிகள் அவர்களுக்குக் கோடி இருக்கின்றன என்பதை ஒப்புக்கொண்டுவிடுவதே என் சௌக்கியத்துக்கு நல்லது. சென்ற வருடம் நான் நடத்திய பயிற்சி வகுப்புக்கு ஒரே ஒரு சகோதரி [மலர்வனம் லஷ்மி] வந்திருந்தார். இதோ புறப்பட்டுப் போய் எழுத ஆரம்பிக்கிறேன் என்று ஜான்சி ராணி மாதிரிதான் கிளம்பிப் போனார். சரி, சமூகத்துக்கு நம்மால் ஒரு பெண் எழுத்தாளர் கிடைத்துவிடுவது உறுதி என்று இருமாப்புடன் இருந்தேன். ஆனால் அதன்பின் ஆளையே காணோம். இது என் தப்பா? கடந்த இரு வருடங்களாகக் கிழக்கில் மருதன் சில புதிய பெண் எழுத்தாளர்களைத் தொடர்ந்து எழுதவைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார். இன்னும் ஒன்றும் தேறியதாக எனக்குத் தெரியவில்லை. 33 என்ன, 333 சதம் கொடுக்கவும் நான் தயார். எழுத யார் தயார்?
குறும்பன்: என். சொக்கன் என்றொரு எழுத்தாளர் இருக்கிறார். அநேகமாகத் தமிழில் அனைத்துப் பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதுகிறவர். கிழக்கில் அவருடைய எழுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்தப் பெயரில் வந்துள்ளன. பத்து வருடங்களுக்குமேலாக இந்தப் பெயரில்தான் அவர் எழுதுகிறார். ஆனால் தமிழ் விக்கிபீடியா மட்டும் அவரை நா.சொக்கன் என்று குறிப்பிடுகிறது. இதென்ன அபத்தம்? ஒருவருடைய பெயரை மாற்றிச் சொல்ல இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எங்கிருந்து வருகிறது இந்தத் திமிர்த்தனம்? தமிழ்ப் பற்று என்பது தமிழ்ப் பைத்தியமாகும்போது இம்மாதிரி விபரீதங்கள் விளைவது தவிர்க்க முடியாது. ஆனால் இந்தப் பைத்தியக்காரத்தனங்களையெல்லாம் சகித்துக்கொண்டிருக்க இயலாது. ஒரு நீண்ட கட்டுரை எழுத நேரமும் மனமும் இருந்தால் தமிழ் விக்கிபீடியாவின் அனைத்து அபத்தங்களையும் என்னால் பட்டியலிட முடியும். பிறகொரு சமயம் முயற்சி செய்கிறேன்.
தன்யனானேன் ஸ்வாமி! வசிஷ்டர் வாயால் ப்ரும்ம ரிஷி!!சாஹித்ய அகாடமி வாங்கின சந்தோஷம்!!!
http:kgjawarlal.wordpress.com
எங்க போனாலும் சொக்கன் தொல்லை விடாது போலிருக்கு, சொக்கா இதற்கு ஒரு வழி சொல்லுப்பா 🙂 . என். சொக்கனை நா. சொக்கன் என்று தலைப்பில் குறிப்பிட்டது தவறு என்றால் அதன் பேச்சு பக்கத்தில் குறிப்பிடலாமே. விக்கிப்பீடியா என்பது தனி நபருக்கு உரியது அல்ல. மாற்று கருத்து உடையவர்கள் குறிப்பிட்ட கட்டுரையின் பேச்சு பக்கத்தில் உரையாடலாம். அதில் ஏற்படும் முடிவுக்கு தக்கபடி மாற்றம் செய்யப்படுகிறது. கருத்துன்னு இருந்தா அதற்கு மாற்று சிலரிடம் இருக்கத்தானே செய்யும். நீங்கள் அபத்தமென கருதும் த.வியின் அபத்தங்களை பட்டியலிடுங்கள். முடிந்தால் குறிப்பிட்ட கட்டுரையின் பேச்சு பக்கத்தில் குறிப்பிடுங்கள்.
குறும்பன்: நல்ல கதையாக இருக்கிறதே? என் பெயரை எப்படி உச்சரிக்கவேண்டும், எழுதவேண்டும் என்று பேசி முடிவு செய்ய இவர்கள் யார்? இதில் கருத்து, மாற்றுக்கருத்துகள் எங்கே வருகின்றன? பெயர் என்பது ஒரு நபரின் தனிப்பட்ட, முதல் அடையாளம். பிறப்புச் சான்றிதழில் இருந்து உடன் வருவது. அதை உங்கள் இஷ்டத்துக்கு நீங்கள் மாற்றிக்கொண்டு, பிறகு பேசி விவாதித்து முடிவு காணலாம் என்பது கட்டப்பஞ்சாயத்தைவிடக் கேவலமாக அல்லவா உள்ளது?
Agree with para to an extent, but the problem in tamil wikipedia is due to lack of participation from all sections of people. Typically i see 2 sets of people. One who join the bandwagon of “tamil purists”, others who leave away ta. wikipedia for ever. Unlike English wiki where diversity is a norm and that creates a better environment and hence better policies, tamil wikipedia needs more participation to have better policies, otherwise they will be skewed in the eyes of few people. The only way to change is to participate.
@para : There was a famous controversy in en.wikipedia, even jimmy wales'(the guy in banner ad these days, founder) birthday was edited by community and his word never got into main page. That explains the cultural difference of an system like wikipedia.Its truly community driven.
பாரா சார், பெண்ணுரிமைப் போராளியும், பழம் பெரும் ப்லாகரும், இலக்கிய வானில் பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருபவருமான உஷாக்காவின் சோக காவியத்தைப் படித்த பின்னும் கூட நீங்கள் இப்படி நக்கலடிப்பது ரொம்பப் பெரிய சோகம். :(((((
நிற்க, உஷா தன் பதிவில் குறிப்பிட்டிருப்பது போலவெல்லாம் நான் ஒன்றும் சம்சார சாகரத்தில் தத்தளிக்கவில்லை என்றாலும் கூட, கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டிருந்தாலும், மும்மரமாக டிவி பார்ப்பது போல போக்கு காட்டி விட்டு, அசந்த நேரத்தில் மாடிப்படிக்கு போட்டிருக்கும் கதவை எப்படியோ லாவகமாகத் திறந்து கொண்டு விறு விறுவென ஏறி படிகளின் உச்சியில் நின்று கொண்டு இறங்கத் தெரியாத பயத்தால் திடீரென வீறிட்டு அழும் ஒரே ஒரு மகா சுறுசுறுப்பான பிரச்சனையை ஃபுல் டைமாக சமாளித்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே எனது ஒரே ஒரு சமாளிஃபிகேஷன். இன்னும் ஒரு வருடத்துக்கும் சேர்த்து அட்வான்ஸ் மன்னிப்பு கொடுத்துருங்க ப்ளீஸ்.
பாரா:- சொக்கா மன்னிக்க 🙂 நா. சொக்கனை ந. சொக்கன் என்று எழுதியிருந்தால் அது மாபெரும் தவறு. அப்படி யாராவது எழுதியிருந்தாலும் (விக்கியில்)தப்பில்லை அதை நாம் மாற்ற முடியும். சில பேர் தவறுதலாக அவ்வாறு எழுதியிருக்கலாம் நா. சொக்கன் என்று நன்றாக தெரிந்தவர் அதை மாற்றலாம் அது தான் விக்கி. கட்டுரையின் உள்ளே “என். சொக்கன் (பிறப்பு: ஜனவரி 17, 1977) என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.” என்று தானே உள்ளது. தெரிந்தால் தலைப்பில் தமிழில் Initial வைப்பது என்பது த.வியின் கொள்கை. அக்கொள்கை தவறெனில் அது பற்றி கலந்துரையாடனும் கட்டப்பஞ்சாயத்து, திமிர்த்தனம் என்பதெல்லாம் அதிகம். அப்புறம் நீதிமன்றத்தில் தண்டமா வழக்கு போட்டாகூட நாம தான் அங்கு வழக்கறிஞர் வைத்து வாதாடனும். அந்த காசு நமக்கு கிடைக்காது என்பதே என் புரிதல்.
நா. சொக்கன் (N. சொக்கன்) என்பதை சிலர் வெறும் “சொக்கன்” என்று தன் வலைப்பதிவில் எழுதியுள்ளார்கள். அது அவர்கள் வலைப்பதிவு அவர்களாக மாற்றினால் தான் உண்டு. விக்கி அப்படியல்லவே. த.விக்கிக்கு பங்களிக்க வாருங்கள், த.விக்கியின் பன்முகத்தன்மை அதிகரிக்க உதவுங்கள்.