அநீ

நிகழ்தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவர், அரவிந்தன் நீலகண்டன். நமது அதிர்ஷ்டம், அவர் இணையத்தில் எழுதுவது. துரதிருஷ்டம், அவரை ஒரு ஹிந்துத்துவவாதியாக மட்டுமே பார்த்து, என்ன எழுதினாலும் திட்டித் தீர்க்க ஒரு பெருங்குழு இருப்பது.

பல சமயம் எனக்கு, இவர்களெல்லாம் படித்துவிட்டுத்தான் திட்டுகிறார்களா என்று சந்தேகமே வரும். ஏனெனில், போகிற போக்கில் பொத்தாம்பொதுவாக அரவிந்தன் எதுவும் எழுதுவதில்லை. தான் எழுதுகிற அனைத்துக்கும் அவர் தரப்புக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்காமல் ஒரு கட்டுரையையும் அவர் முடிக்கமாட்டார்.

அவர் எழுதுவதையெல்லாம் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதில்லை. ஏற்கவேண்டும் என்பதில்லை. கடைப்பிடிக்க-பின்பற்ற வேண்டுமென்பதில்லை. மறுக்கலாம், விமரிசிக்கலாம், கிழித்துக் குப்பையில் போடலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஜனநாயக தேசத்தில் இதற்கெல்லாம் ஒரு தடையும் கிடையாது.

ஆனால் தன் தரப்புக்கு அவர் வைக்கும் ஆதாரங்களைப் போல, எதிர்ப்பவர்களும் காட்டவேண்டுமல்லவா? எனக்குத் தெரிந்து, இன்றுவரை அரவிந்தன் எழுதும் அனைத்தையும் எதிர்க்கிற அனைவரும், தம் காரணங்களுக்கான நியாயங்களை, அதற்கான ஆதாரத் தரவுகளை முன்வைத்து ஒருமுறையும் பேசியதில்லை. குறைந்தபட்சம் அரவிந்தன் தொடர்ந்து எழுதும் தமிழ் பேப்பரில்.

அரவிந்தன் எழுதக்கூடாது. அவர் எழுதியதை நீ வெளியிடக்கூடாது. அப்படிச் செய்தால் நீ ஒரு ஹிந்துத்துவவாதி. உன் பத்திரிகை இன்னொரு தமிழ் ஹிந்து. தீர்ந்தது விஷயம்.

தமிழ் பேப்பரில் அரவிந்தனின் ஒவ்வொரு கட்டுரை வெளியாகும் நாளும் எனக்குத் திருநாள்தான். கட்டுரைக்கு அடியிலேயே வருகிற கமெண்டுகள் பெரிய விஷயமில்லை. தனிப்பட்ட முறையில் அவரையும் என்னையும் செம்மொழியின் அனைத்துச் சிறப்புகளையும் உள்ளடக்கிய சென்னைத் தமிழ் வசவுகளில் விளித்து வருகிற மின்னஞ்சல்களும், பெயர் சொல்லாமல் கூப்பிட்டுக் காதில் தேன் ஊற்றுகிற தொலைபேசி அழைப்புகளும் அனந்தம். முதல் ஒரு சில நாள்கள் எனக்கு ஒரு மாதிரி இருந்தாலும் விரைவில் அந்த அனுபவம் பழகிவிட்டது. ரசிக்கவும் ஆரம்பித்தேன்.

கருத்து என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதல்ல. அவரவர் நம்பிக்கைகள், அவரவர் ஈடுபாடுகள், அவரவர் பின்னணிகள், வளர்ப்பு, வார்ப்பு, வாசிப்பு அனைத்தும் சேர்ந்து ஒருவரது கருத்துகளைத் தீர்மானிக்கின்றன. நமக்குச் சரியென்று பட்டால் ஏற்பதும், தவறென்று தோன்றினால் ஏற்காமல் விடுவதும் நம் சுதந்தரம் சார்ந்தது. மாற்றுக்கருத்தை முன்வைக்கும்போது குறைந்தபட்ச நாகரிகம் கடைப்பிடிக்க வேண்டுமென்பது ஆதார விதி.

அங்கேதான் சிக்கல் வந்துவிடுகிறது. இதுதான் எனக்குப் புரிவதும் இல்லை.

நான் ஹிந்துத்துவவாதி இல்லை. என் வாழ்வில், நம்பிக்கைகளில் மதத்துக்குப் பெரிய இடம் கிடையாது. என் அனுமதி கேளாமல் என் பள்ளிக்கூட, கல்லூரி சர்டிஃபிகேட்டுகளில் வந்துவிட்ட ஒரு விஷயம் அது. அரவிந்தன் சொல்கிற பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. நாங்கள் இரண்டு பேரும் அநேகமாக தினசரி முரண்பட்டுச் சண்டை போட்டுக்கொள்கிறவர்கள். ஆனால் ஒரு போதும் எங்கள் உரையாடல்களில் வன்மம் எட்டிப்பார்த்ததில்லை. அவர் நம்பிக்கைகள் அவருக்கு. என்னுடையவை எனக்கு.

என்னுடைய ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம் மற்றும் மதம் நூலை எழுதி முடித்த மறுவினாடி அவருக்குத்தான் வாசிக்க அனுப்பினேன். அதை எடிட் செய்யவிருந்த முத்துக்குமாருக்குக் கூட அப்புறம்தான்.

படித்துவிட்டு போன் செய்தவர் சொன்ன முதல் வார்த்தை: ‘ரத்தம் கொதிக்குதய்யா.’

அவர் ஒப்புக்கொள்ளாத விஷயங்கள், ஒப்புக்கொள்ள முடியாத விஷயங்கள், ஒப்புக்கொள்ள விரும்பாத விஷயங்கள் என்னென்ன என்பது எனக்குத் தெரியும். அவர் ஒப்புக்கொள்ளாததாலேயே அவை தவறு என்று நம்புமளவுக்கு நான் மூடனுமல்ல; நான் அனைத்தையும் ஒப்புக்கொண்டு விடுவேன் என்று நம்புகிற அளவுக்கு அவர் குழந்தையுமல்ல.

இதைக் குறிப்பிடக் காரணம், கருத்து வேறுபாடுகள் துவேஷமாகத்தான் போய் முடியவேண்டும் என்பதில்லை என்பதைச் சுட்டவே.

அரவிந்தனிடமிருந்து நாம் பெறுவதற்கு நிறைய உள்ளன. குறிப்பாக, அவருடைய ஆழமான, மிக விசாலமான வாசிப்பு அனுபவம். இந்த மனிதர் எங்கிருந்து இத்தனை படிக்கிறார் என்று என்னால் ஒருபோதும் வியக்காமல் இருக்க முடிந்ததில்லை.

ஒரு சமயம் நாகர்கோயிலில் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மாடியில் ஒரு பெரிய ஹாலின் கதவைத் திறந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார். மூச்சடைத்துவிட்டது. தமிழகத்தின் எந்த ஒரு அரசு / தனியார் நூலகத்தில் உள்ள சிறந்த நூல்களின் சேகரத்தைக் காட்டிலும் அரவிந்தனின் நூலகம் சிறப்பானது என்று தயங்காமல் சொல்லுவேன். புராதனமான அறிவியல் பத்திரிகைகளின் தொகுப்புகள், என்சைக்ளோபீடியா வால்யூம்கள், ஹிந்துத்துவ, இஸ்லாமிய, கிறித்தவச் சிந்தனையாளர்களின் புத்தகங்கள், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் [நல்லவேளை, கவிதைத் தொகுப்புகள் கண்ணில் படவில்லை], வேளாண்மை தொடர்பான நூல்கள், மானுடவியல், வரலாறு, விஞ்ஞானம் என்று துறை வாரியாகப் புத்தகங்கள். தன் வாழ்நாள் சம்பாத்தியம் முழுதையும் ஒருவர் புத்தகங்கள் வாங்க மட்டுமே செலவிட்டாலொழிய அப்படியொரு நூலகம் அமைப்பது அசாத்தியம்.

ஒரு சார்லஸ் பேபேஜ் காலத்து கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு அத்தைப்பாட்டி பாக்கு இடிப்பது மாதிரி டைப் செய்துகொண்டும் வாசித்துக்கொண்டும் இடையிடையே போன் பேசிக்கொண்டும் இருந்தார்.

நமக்குப் பிடிக்காவிட்டால் என்ன? அதுவும் ஒரு சிந்தனைப் போக்கு என்று அறிய விரும்பக்கூடிய மனநிலை வாய்த்தவர்களுக்கு அரவிந்தனின் எழுத்துகள் ஒரு தங்கச் சுரங்கம். இதில் சந்தேகமே இல்லை. இன்றுவரை தமிழ் பேப்பரில் அதிகம் வாசிக்கப்படுகிற எழுத்தாளராக அவர்தான் இருக்கிறார். ஆயிரம் சொற்கள் கொண்ட ஒரு கட்டுரைக்குள் அவர் எத்தனை எத்தனை தகவல்களைக் கொண்டுவந்துவிடுகிறார்!

இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஆழி பெரிதையே எடுத்துக்கொள்ளுங்கள். சோமபானத்தை, வேதகால ரிஷிகளின் கடா மார்க் என்று நான் முன்பொருமுறை எழுதியதற்கு முற்றிலும் நேரெதிராக நிறுவும் முயற்சியில் என்னென்ன உதாரணங்கள், எங்கெங்கிருந்து கொடுக்கிறார் என்று கவனியுங்கள்.

சகஸ்ராதாரத்தில் ஊறும் ஆனந்த நீர், சந்திரனுடன் தொடர்புடைய சோமரசம் எனும் கருத்தாக்கம் பாரத சித்த மரபுகள் அனைத்திலும் காணப்படுவதாகும். வட இந்தியாவில் பிரபலமான நாத சித்த மரபின் முதன்மை சித்தரான கோரக்நாதரின் பாடல்களில் இறவா நிலை அளிக்கும் வானின் நீர் கேணியாக சோமம் சித்தரிக்கப்படுகிறது. கபீரின் பாடல்களில் இந்த சுவர்க்க கேணியின் அமுதத்தை ஹம்சம் அருந்துகிறது. அதர்வ வேதத்தில் இந்த சித்திரிப்பு வருகிறது. அப்பறவையின் தலையிலிருந்து அமுதம் வடிகிறது. (அதர்வ வேதம் IX.9.5) தமிழ் சித்த மரபிலும் இதை நாம் காணலாம். மிகவும் பிரபலமானது குதம்பைச் சித்தரின் பாடல்:

மாங்காய்ப் பாலுண்டு மலைமே லிருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி? குதம்பாய்!
தேங்காய்ப்பால் ஏதுக்கடி?

போகரும் ‘ஆக்கையா பொறியைந்தும் மடித்துத்தள்ளு/ ஆனந்தமதியமுதம் சிந்தும் சிந்தும்’ என்கிறார் (சிவயோகஞானம்).

நாலு வரியில் எத்தனை ரெஃபரன்ஸ் கொடுக்கிறார் என்பதைக் காட்டவே இதை இங்கே குறிப்பிடுகிறேன். கோரக்நாதரையும் கபீரையும் அதர்வ வேதத்தையும் நாம் எங்கே போய் எப்போது படிப்பது? அத்தனை பேரையும் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்தி பரேடு நடத்துவதும் நமக்கு சாத்தியமா?

எதற்குப் படிக்கவேண்டும் என்று கேட்டால், இக்கட்டுரையே அவசியமில்லை. அரவிந்தன், இந்தத் தலைமுறையின் மிக முக்கியமானதொரு சிந்தனையாளர். புத்தி விருத்தியில் நாட்டமுள்ளவர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய எழுத்தாளர் என்பது என் கருத்து.

அவருடைய தமிழ் பேப்பர் கட்டுரைகளின் தொகுப்பு ‘நம்பக்கூடாத கடவுள்’ என்ற தலைப்பில் இப்போது நூலாக வெளிவருகிறது. இணையத்துக்கு வெளியே உள்ள பெரும்பான்மைத் தமிழர்களுக்கும் அரவிந்தனைக் கொண்டு சேர்க்க நினைத்ததால் இதனைச் செய்தோம்.

அவரது மறுபக்கம் சுவாரசியமானது. பொதுவாக அவர் சங்கோஜி. எழுத்தில் தெரிகிற அரவிந்தனை நேரில் பார்த்தால் உங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். ஆள் எதற்கும் எளிதில் அகப்படமாட்டார். அப்படியே கிடைத்தாலும் அளந்துதான் பேசுவார். போனிலோ, சாட்டிலோ அவர் கிடைக்காத தருணங்களில் அவரை வரவழைக்க ஒரே வழிதான் உண்டு. எந்த மூலையிலாவது போய் ஹிந்துத்துவத்துக்கு எதிராக நாலு வரி எழுதி வைத்துவிட்டால் போதும். உடனே பொங்கியெழுந்து ஓடிவந்துவிடுவார். நேற்று பத்ரியின் இந்தப் பதிவுக்கு முதல் ஆளாக கமெண்ட் போட அவர் வரிந்துகட்டிக்கொண்டு ஓடிவந்ததை நினைத்து இப்போதுவரை சிரித்துக்கொண்டிருக்கிறேன். மருதன் என்ன எழுதினாலும் திட்டுவார். பொதுவில் இடதுசாரிகள்மீது அவருக்கு  ‘அன்பு’ அதிகம் என்பதே இதன் காரணம். அதே சமயம், ‘நான் முற்றிலும் வேறுபட்டாலும் ரோசா வசந்தின் கருத்துகள் எனக்கு முக்கியம்’ என்று சொல்லக்கூடியவர்.

அரவிந்தன் அப்படித்தான். சிந்திக்கவும் பகுத்து அறியவும் தெரிந்த, விசால மனம் படைத்த எல்லோருமே அப்படித்தான்.

Share

32 comments

  • எப்படி இவ்வளவு அழகாய் அறிமுகம் செய்ய முடிகிறது? நான் நேரில் சந்தித்த ஒரே அறிவுஜீவி அரவிந்தன் நீலகண்டன் மட்டுமே. அதே சங்கோஜி, ஆனால் எதைப்பற்றியும் தனக்கான ஒரு கருத்து வைத்திருப்பவர். இப்ப உங்களையும் இந்து கும்பலில் ஒருவர் எனச் சொல்வார்களோ? 🙂

  • உண்மையில் அவர் ஒரு வரம் தான் . நீங்கள் சொல்லித்தான் அவருக்கு எங்கே இருந்து இத்தனை தகவல்கள் கிடைகிறது என்பதை அறிந்துகொண்டேன் ஆனாலும் மனுஷன் சளைக்காமல் இத்தனை ஸ்ட்ரங்க எப்படி தாக்கு பிடிக்கராருனு அச்சிரியமா இருந்துச்சுங்க . நமது இப்போதைய சமுகத்தில் ஒரு பெரிய குறை பாடு உண்டு அது மாற்று சிந்தனையாளர்களை மட்டம் தட்டுவதும் அவர்களின் குரல்வளையை நெரிப்பதும் எதோ ஒரு முத்திரையை போகிறபோக்கில் குத்துவதும் . ஆனால் அதில் இருக்கும் விசியங்களை ஞனத்தை தேடிபார்க்க வேண்டும் என்றுயருகும் தோன்றுவதே இல்லை எனக்கு அவர்கள் எல்லாம் வெறும் மௌஸ் புரட்சியாளர்கள் என்று நான் வகை படுத்திவைதிருகிறேன் அவரும் அவர்களை அப்படித்தான் வகைபடுத்தி வைத்திருப்பார் என்று எண்ணுகிறேன் … என்னை நான் ஒரு இந்துவா வாதியாக காட்டிக்கொள்ள இவரும் ஒரு பெரிய காரணம் . உண்மையில் எங்களை போன்றவர்கள் அனைவரையும் இந்துத்துவா வாதிகள் என என்ன புரிதலில் எல்லோரும் விளிக்கிறார்கள் என்பதே . இந்து ஞனமார்க்கம் அதன் மரபு வழியில் புது வேதாந்திகள் என்று சொன்னால் கூட பரவயில்லை .( இங்கே வேதத்திற்கும் வேதந்ததிற்கும் வித்தியாசம் தெரியாத ஆட்கள் நிறையவே உண்டு )

  • அரவிந்தன் அவர்களின் அறிமுகமே எனக்கு தமிழ்ப் பேப்பரில்தான் கிடைத்தது. முதலில் புரிந்துக்கொள்ளச் சற்று சிரமமாக இருப்பினும் விரைவில் அவரது எழுத்து பழகிவிட்டது. நீங்கள் சொல்வதுப்போல் உண்மையில் அவர் ஒரு பெரிய ஆள்தான். இத்தனைப் படித்தவர் அடக்கமாக, “சங்கோஜி”யாக இருப்பது இயல்பே. நிறைகுடம் எப்போதும் தழும்பாது. புத்தக கண்காட்சிக்காக காத்திருக்கிறேன். என் விருப்ப பட்டியலில் அரவிந்தன் அவர்களின் புத்தகத்தினை சேர்த்துவிட்டேன்!

  • ஆகா! அ.நீ புத்தகம் வருகிறதா? வரட்டும், வரட்டும். தமிழ் பேப்பரில் அவருடைய தீவிர ரசிகன் நான். என்னதான் அங்கே படித்தாலும் புத்தகமாகப் படிக்கிற சுகமே தனி.

  • நீங்கள் சொல்லும் அனைத்தும் சத்தியம்! ஒருவரின் கருத்தை நாம் எத்தனை மதிக்கிறோம் என்பதை விட அந்த மனிதரை மதிப்பது முக்கியம்! அரசியலாக இருந்தாலும் சரி வீட்டுச் சண்டையானாலும் இதை பின்பற்றினால் போதும்.

    நானும் அச்சரியப்பட விஷயம் அவருடைய வாசிப்பு! அமேஸிங்!

  • நான் அவரை சந்தித்தது இல்லை. போனில் சாட்டில் பலமுறை உறையாடியிருக்கிறேன். இத்தகைய அறிவுஜீவி என்னிடம் கூட பேசுகிறாரே என்பதே எனக்கு பெருமைதான். அரவிந்தனை நண்பராக கிடைக்க்ப் பெற்றது எனக்கு இந்த வலைப்பதிவுகள் தந்த அரும் பெரும் கொடை.

  • ராகவன்,

    கற்றோரைக் கற்றோரே காமுறுவர். அரவிந்தன் பற்றிய சரியான புரிதல்.

    அரவிந்தனின் அடையாளமாகத் தெரியும் மேதா விலாசத்தையும் தாண்டிய ஒன்றுதான் அவரது வெற்றிகளின் மூலாதாரமாக இருக்கிறது. அது அறவுணர்வு.

    அறம் வெல்லும் என்று மெய்ப்பித்தலே அவர் வாழ்வாக இருக்கிறது.

  • பொதுவாக அரவிந்தன் நீலகண்டனின் எழுத்துக்கள் படிக்க கொஞ்சம் சிரமமாயிருக்கும். தமிழ் பேப்பரில் படிக்கும்படி எழுதுகிறார். நீங்கள் சொன்னபடி நிச்சயமாய் கவனிக்கவேண்டிய எழுத்தாளர்தான். ஆனால் நீங்கள் சொல்லும் “மாற்று கருத்து சொல்லும்போது கடைபிடிக்கவேண்டிய குறைந்தபட்ச நாகரிகம்” அவருக்கும் பொருந்தும். அரவிந்தன் நீலகண்டனின் பல மாற்று கருத்துகள் மோதல் மற்றும் தகறாறு தொனியில் இருப்பதை படித்திருக்கிறேன்.

  • அடக்கடவுளே! 🙁

    இந்த கட்டுரையை படித்து முடித்ததும் எனக்கே ‘கடவுள் நம்பிக்கை’ வந்துவிட்டது மாதிரி ஒரு ஃபீலிங் 🙂

    • லக்கி: கடவுள் நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? அரவிந்தன் ஒரு தீவிர நாத்திகர்.

  • //அடக்கடவுளே!

    இந்த கட்டுரையை படித்து முடித்ததும் எனக்கே ‘கடவுள் நம்பிக்கை’ வந்துவிட்டது மாதிரி ஒரு ஃபீலிங் //
    அரவிந்தன் நீலகண்டன் எழுதும் கட்டுரைகளை மட்டுமல்ல, அரவிந்தன் நீலகண்டனைப் பற்றி எழுதப்படும் கட்டுரைகளைக் கூடப் படித்துப் பார்க்காமல் பின்னூட்டமிடுகிறார்கள்.
    🙁

  • அரவிந்தன் நீலகண்டன் அடிப்படையில் ஓர் இந்துத்துவ அடிப்படைவாதி. இப்படி சொல்வதற்கு எழுத்தாளர் பாரா மன்னிக்க வேண்டும். இது லேபில் குத்துவதல்ல. அவருடையை சிந்தனையில் ஊற்றெடுத்துப் பீறிடும் எழுத்துக்களைக் கொண்டு வேறெந்த பிரிவிலும் அவரை அடக்க முடியாது.

    அவருடைய அணுகுமுறை எளிமையான சூத்திரத்துக்குள் அடங்கும். இந்துத்துவ அரசியல், இந்துமத ஆதரவு பிரச்சாரம், பெரியாரிய/திராவிட கம்யூனிச, மேற்கத்திய சிந்தனை, கிறித்தவ, இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரம் இரண்டையும் மூர்க்கத்தனமாக, ஆனால் அறிவுஜீவித்தனத்தொடு செய்வது. இந்துத்துவ சிந்தனைவாதிகள் ஏற்கனவே வேதாந்த மதம், புராணங்கள், வரலாறு, பண்பாடு என்று அனைத்தையும் கலந்து, உருட்டி ஊட்டி விடும் உருண்டையில் அறிவியலை கொஞ்சம் சேர்த்து உருட்டுவதே அரவிந்தனின் பங்களிப்பு.

    உலகில் எல்லா கேள்விகளுக்கும் — அறிவியல் உள்பட — வேதம், புராணம் அடங்கிய இந்துமத அறிவுச் சுரங்கத்தில் விடை இருக்கிறது என்பது தான் அரவிந்தன் தொடர்ந்து நிறுவ முயலுவது. பிற சிந்தனை மரபுகளில் சொல்லப்பட்டுள்ளவை அபத்தமானவை அல்லது இந்து ஞான மரபிலிருந்து கடன் வாங்கியது/திருடியது.

    ஏதேனும் ஒரு சொல் அல்லது கருத்தாக்கத்தை எடுத்துக்கொண்டு, சம்பந்தமில்லாமல் அறிவியல், இந்துமதம்/இந்துத்துவம், பெரியாரியம்/கம்யூனிசம்/ஆபிராமிய மதம் போன்றவற்றை இணைத்து முழங்காலுக்கும், மொட்டைத்தலைக்கும் முடிச்சு போட்டு, இறுதியில் “பார் இந்துஞானம் எவ்வளவு மேன்மையானது, பெரியாரியம்/கம்யூனிசம்/ஆபிராமிய மதம் போன்றவை அபத்தமானது” என்று பில்டப் கொடுப்பது.

    ஓர் உதாரணம்:
    தமிழ் பேப்பரில் எழுதிய ஆரம்பகால மாட்டுச் சாணம் பற்றிய கட்டுரையொன்றில் இந்துமதச் சடங்குகளில் மாட்டுச்சாணம், கோமியம் இவற்றை கலந்து புனிதத் தீர்த்தமாக குடிக்கும் முட்டாள்தனத்தை பெரியார் கிண்டலடித்ததை சாணத்தை இயற்கை உரமாகப் பயன்படுத்துவதை எதிர்ப்பதாகத் திரித்து பெரியார் இந்தியப் பாரம்பரிய அறிவுக்கு எதிரானவர் என்றவாறு அரவிந்தன் முடிச்சு போட்டிருப்பார். மாட்டுச்சாணத்தை வழிபடுவது, கோமியத்தைக் குடிப்பது பார்ப்பனிய இந்துமதச் சடங்கு. சாணத்தை உரமாகப் பயன்படுத்துவது வேதங்களை படிக்காத, வேதச் சடங்குகளை செய்யாத பாமர விவசாயிகளும் கடைபிடிக்கும் பட்டறிவு. இரண்டுக்கும் சம்பந்தமில்லை. முன்னதை பெரியார் மூட நம்பிக்கை என்று கருதினார். பெரியார் அதோடு பின்னைதையும் எதிர்ப்பது போன்ற மயக்கத்தை ஏற்படுத்தி இரண்டையும் இணைத்தது அரவிந்தனின் அறிவு நாணயமின்மை. அதைப்பற்றி அவருக்கு கவலையில்லை. அவருடைய அக்கறையெல்லாம் இந்துத்துவ அரசியல் பிரச்சாரம். அந்த அரசியலுக்கு தடையாக இருப்பதையெல்லாம் மூர்க்கத்தனமாக எதிர்ப்பது.

    அவருடைய அண்மைய சோமபானம்-ரசவாதம் கட்டுரைகள் BS. அவருக்கு பிடிக்குமென்றால் Holy CS என்று வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம்.

    அவருடைய சிந்தனையைச் சிலாகிப்பது ஜெயமோகன், பாரா போன்ற எழுத்தாளர்களும், பிற இந்து அடிப்படைவாத எழுத்தாளர்களும், இந்துப் பெருமையில் புல்லரித்துப் வாசகர்களும் தான். அரவிந்தனை கண்மூடித்தனமாக திட்டி, விமர்சித்து எழுதுபவர்களை பாரா வியக்கிறார். திட்டுபவர்கள் மட்டும் கண்மூடித்தனமாக திட்டுவதில்லை. புல்லரித்து எழுதுபவர்களும் அப்படித்தான். இங்கு கருத்து எழுதியிருப்பவர்களைப் பார்த்தாலே அது புரியும்.

    அரவிந்தனின் கல்விப்பின்னணியும், அறிவியல் ஆய்வுப் பின்னணியும் என்னவென்று தெரியவில்லை. “தான் எழுதுகிற அனைத்துக்கும் அவர் தரப்புக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்காமல் ஒரு கட்டுரையையும் அவர் முடிக்கமாட்டார்”. உண்மைதான். அவர் அளிக்கும் ஆதாரச் சுட்டிகள் பாதி pseudoscience என்ற வகையில் சேரும். Science என்ற வகைப்பாட்டுக்குள் வரும் நூல்களில் அதிகபட்சம் சில மேற்கோள்களை உருட்டி, புரட்டி தன் வாதத்திற்கு சாதகமாகப் பயன்படுத்தும் சாதுர்யம் அவருக்கு இருக்கிறது.

    துரதிர்ஷ்டவசமாக, இணையத்தில் இயங்கும் அறிவியல் பயிற்சி உடையவர்கள் – ரோசாவசந்த், அருள் செல்வன், பத்ரி, அருண் நரசிம்மன், கனடா வெங்கட் போன்றவர்கள் – எவரும் அரவிந்தன் எழுதும் அபத்த அறிவியலை மறுப்பதில்லை. அங்கீகரிப்பதுமில்லை. அவர்களுடைய அதிகபட்ச எதிர்வினை அந்த அபத்தங்களை மௌனமாக கடந்து சென்று, பிறவிஷயங்களை மட்டும் பேசுவது. அரவிந்தனும் அவர்களுடன் அறிவியலைத் தவிர்த்து சில அணுக்கமான விஷயங்களை மட்டுமே பேசுவார். ஆகையால் அரவிந்தனின் அபத்த அறிவியலுக்கு அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது.

    இடையிடையே தான் ஒரு இறைமறுப்பாளன், அறிவியலாளன் என்கிற பில்டப் வேறு. அரவிந்தன் இறைமறுப்பாளரா? ஆமாம். ஆபிராமிய மத இறைமறுப்பாளர் (இந்துமத இறைகளை மறுப்பதில்லை). அறிவியலாளரா? ஆமாம் அரவிந்தன் புனைவு அறிவியலாளர்.

    “நிகழ்தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவர், அரவிந்தன் நீலகண்டன்” என்கிறார். அரவிந்தன் நிகழ்தமிழின் snake oil merchant என்பது என் அபிப்ராயம். வாங்கி உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையிலும் தேய்த்துக்கொண்டால் எல்லாவித அறிவு வியாதிகளும் குணமாகும்.

  • ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி” என்றெல்லாம் நமக்கு நாமே உயர்வுநவிற்சி பண்ணிக்கொண்டு தமிழர்கள் இறுமாப்பு கொண்டிருந்தது ஒரு காலம். அதெல்லாம் போய்ப் பிறகு சமீப காலங்களில் அர்த்தமில்லாத எதுமை மோனை மேடைப் பேச்சுகளுக்கும், அடிதடி அரசியலுக்கும் தம்மைத் தாமே தரம் தாழ்த்திக்கொண்டிருப்பதும் நம் தமிழர்கள்தான். அதுவும் இணைய வசதிகள் கையெட்டும் தூரத்தில் வந்துவிட்டதால், கழிசடைகள் பின்னூட்டங்களில் தரம் தாழ்ந்து எழுதுவது, சம்பந்தமே இல்லாமல் எதையாவது பெனாத்துவது என்பதும் ஒருவிதமான மனோவியாதியே. யாரையாவது அசிங்கப்படுத்தவேண்டும் என்ற ஒரே குரூர நோக்கில் இவை எழுதப்படுபவை.

    இதெல்லாம் உங்களைப் போன்றவர்கள் அறியாததா? விட்டுத் தள்ளுங்கள்.

    “I may not agree with what you say, but I will defend to the death your right to say it.” என்று ஃப்ரஞ்ச் தத்துவஞானியும் ஆசிரியருமான வோல்டேர் சொன்னதை நாகரிகம் தெரிந்த யாருமே மறக்கக்கூடாது.

  • Before publishing them have you got his writings reviewed by experts/knowledgable persons.If not how can you assess the quality and accuracy of his articles.You may be a good editor.Dont confuse editing with a rigorous review by more than one person who knows the topics well enough to detect pseudo from real.I dont know mathematics or quantum physics.So I wont comment on his writings on that.But on some of the topics I know well, well enough to be a reviewer for journals I know that his knowledge is shallow and he does not have a good understanding of the issues.It is one thing to write something based on what one reads without claiming any expertise to pronounce verdicts or uttering the final word.It is another to come to quick conclusions with a shallow understanding and writing that as if one knows in and out of it.AN’s writings come in the second category.Unfortunately there are many like AN today in tamil and it is difficult to differentiate among them.AN is a right wing Hindutva writer while many others are leftists,communists or simply writers.Thats the difference.But otherwise in terms of intellectual quality and depth of understanding most of what gets published in tamil as non-fiction may not meet the standards of quality writing i.e. accuracy,good understanding,unbiased writing and making it clear to the reader about the limitations of that work.

    In one of the articles published in TP AN gives reference to a book published recently .I have read that book and I know that he has not bothered to understand it, if he has read it, a big IF.So I wont be fooled by that reference because I know that work whereas you will be amazed by such a reference. But I am not inclined to take his writings seriously.Nor would I recommend his work as something that should be read.In fact I have stopped reading non-fiction in Tamil or taking it seriously. If I really want to read about Veda I can find out what to read and whom to read.As a reader I have many options and not reading what AN writes is one of them :).

  • அரவிந்தன் நீலகண்டன் தன்னுடைய தேடல்கள் வாயிலாகவே நான் அவரை அறிகிறேன் !
    இந்தியத்துவம் ஒன்று இருக்கிறது அங்குதான் அவர் இருக்கிறார். கடவுள் பற்றி அவர் தேடல்கள் தான் அவருடைய தத்துவங்கள் பற்றிய எழுத்துக்கள்

    மிகப்பெரிய மடத்தனம் செய்பவர்கள் அவரை ஒரு ஹிந்துத்துவ வட்டத்தில் சிக்க வைத்து பார்கிறார்கள். காலம் கடந்து தவற விட்டவர்களின் பட்டியல் காந்தி பாரதி .. போன்றோரின் வரிசையில் சேராதிருக்க சமூகம் தான் விழிக்க வேண்டும்

    நன்றி,
    சஹ்ரிதயன்

  • rss அமைப்பு பாரத பண்பாட்டு அடிப்படையிலான ஒரு தேசிய அமைப்பு என்று சொல்பவர் தான் பாராவின் பார்வையில் மிகப்பெரும் சிந்தனையாலராம். ஒருவேளை குஜராத் கலவரம் நடந்த 2002 ல அரவிந்தன் பேப்பர் படிக்காம வேளாண்மை பத்தி அந்த தமிழத்தின் சிறந்த அவரது மொட்டை மாடி நூலஹதில் படித்து கொண்டிருந்திருப்பார். அதுனாலத்தான் இப்டியெல்லாம் உங்க ரெண்டு பேராலயும் எழுத முடியுது.

  • பா. ராகவன் எழுதியதற்கு ஆதாரம் வேண்டும் என்று கேட்பவர்கள் தமிழ் ஸ்கெப்டிக் மற்றும் டார்வின் மாய்ர் எழுதியதைப் படிக்கலாம். ராகவனுக்கு வேலை மிச்சம்.

  • எனக்கு அநீ எழுதுவதில் பெரிய அளவில் உடன்பாடு கிடையாது. அவர் பெரியாரை காயும் விதத்துக்கும் அவர் திராவிட இயக்கத்தார் முன்வைப்பதாக சொல்லும் வெறுப்புக்கும் ரொம்ப வித்தியாசம் தெரியவில்லை. பெரியாரின் இன-பார்வையை தவிர்த்து அநீ உருப்படியான பெரிய விமர்சனத்தை பெரியார் முன் வைத்துவிடவில்லை. பெரியாரின் ஒரே சறுக்கலான கீழ் வெண்மணி சம்பவ அறிக்கையை கூட அநீ கொடுக்கவில்லை அதை ரவி ஸ்ரீநிவாஸ் முன்வைத்தார்.

    ஆனால் இந்த விஷயத்தில் தமிழ் ஸ்கெப்டிக் விஷயங்களை புரியாமல் பேசுகிறார். பாரம்பரிய அறிவு பொதுவாக பண்பாடு கலந்தே இருக்கும். பண்பாட்டை ஒரேயடியாக ‘பார்ப்பன தந்திரம்’ என ஒதுக்கும் தவறை பெரியார் செய்துவிட்டார். பஞ்சகவ்யம் உட்கொள்வதும் மூடநம்பிக்கை அல்ல. அதற்கும் பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய இடம் உண்டு. தீவிர திகவான சித்த மருத்துவர்களே இதை சொல்லுவார்கள். இந்த இடத்தில் பெரியார் தடுமாறியிருக்கிறார். அதனை அநீ சரியாக பிடித்துவிட்டார். அவருக்கும் அவரது அரசியலுக்கும் அது வசதியாகிவிட்டது. இதை எப்படி எதிர்கொள்வது என்பதை சிந்திக்க வேண்டும்.

    அதே போல அறிவியலை ரோசாவசந்திடமும் பத்ரி சேஷாத்ரியிடமும் அநீ விவாதிப்பதில்லை என்பதும் தவறு. பத்ரி எழுதிய பிரபல அறிவியல் நூலின் சில பிழைகளை அநீ எடுத்துச்சொன்னார் என்றே நினைக்கிறேன். தமிழ்பேப்பரில் அநீ எழுதிய கட்டுரையை அவர் இங்கே http://shaseevanweblog.blogspot.com/2010/07/rozavasanth.html தமிழ்பேப்பரில் எழுதுவதற்கு முன்பே பேசியிருக்கிறார்.இங்கும் அறிவியல் அடிப்படையில் சாதி தவறு என்கிறார். http://roza-thuli.blogspot.com/2010/03/blog-post_15.html மனிதர் தெளிவாக இடது-வலது என வகைப்படுத்த முடியாத குழப்பமாகவே அவரது எடிட் செய்யப்படாத எழுத்தை போலவேதான் இருக்கிறார். அவரே கூட குழம்பிய நிலையில் இருக்கும் மனிதராக இருக்கலாம்.

    அநீ பொது அறிவியலையும் அளிக்கிறார். அதனுடன் கலந்து அவரது அரசியலையும் முன்வைக்கிறார். இதை ஓரளவு திறமையாகவே செய்கிறார். அவர் வைக்கும் அறிவியலை pseudo என்று எளிதாக ஒதுக்குவது அவர் தரப்பைதான் பலமாக்கும். அது pseudo அல்ல. இடதுசாரிகள் இதனை இன்னும் திறமையாக செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் இப்போது எங்கே தெரியவில்லை.

  • டார்வின்,

    //ஆனால் இந்த விஷயத்தில் தமிழ் ஸ்கெப்டிக் விஷயங்களை புரியாமல் பேசுகிறார். பாரம்பரிய அறிவு பொதுவாக பண்பாடு கலந்தே இருக்கும்//

    உங்கள் கூற்றை மாற்றிக் கூறுவேன்: “பண்பாட்டில் பாரம்பரிய அறிவு கலந்தே இருக்கும்”. ஆனால் பண்பாட்டில் கலந்திருப்பதெல்லாம் பாரம்பரிய அறிவு ஆகிவிடாது. பண்பாட்டில் அறிவும், நம்பிக்கைகளும் கலந்தே இருக்கும். மாட்டுச் சாணம் உரமாகப் பயன்படுத்தப்படுவது அறிவு. சாணத்தை வழிபடுவது, கோமியத்தை வேதியச் சடங்கு செய்யும்போது பருகுவது நம்பிக்கை.

    பெரியார் விமர்சித்திருந்தது பஞ்சகவ்யம் என்ற சாணி-கோமியம் கலவையை அருந்துவது பற்றி. சாணத்தை உரமாகப் பயன்படுத்துவதற்கு எதிராக பிரச்சாரம் செய்ததாகத் தெரியவில்லை. அரவிந்தன் சிலாகித்திருப்பது பஞ்சகவ்யம் இயற்கை உரமாகப் பயன்படுவதைப் பற்றிய “புதுக்கண்டுபிடிப்பு”. அரவிந்தன் பஞ்சகவ்யத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி எதுவும் எழுதவில்லை. ஒருவேளை, யாராவது ஒரு வெள்ளைக்காரர் ஒரு pseudoscience நூல் எழுதினால் அதைப் படித்து புதுக் கட்டுரை எழுதக்கூடும். ஆகவே இதில் பெரியார் தடுமாறவும் இல்லை. அரவிந்தன் சரியாகப் பிடிக்கவுமில்லை. அரவிந்தன் செய்திருப்பது வழக்கம்போல முழங்கால்-மொட்டைத்தலை முடிச்சு அரசியல்.

    “இதை எப்படி எதிர்கொள்வதென்று சிந்திக்க வேண்டும்” என்கிறீர்கள். இதைக்கிழித்து தோரணம் கட்டுவது பெரிய காரியமில்லை. நேரமும், ஆர்வமும், வளமும் உள்ளவர்கள் சாதாரணமாகச் செய்ய இயலும். மாற்றுத் தரப்பில் அரவிந்தன் மாதிரி இதை ஒரு முழு நேரத் தொழிலாகச் செய்தால் தான் உண்டு.

    //பஞ்சகவ்யம் உட்கொள்வதும் மூடநம்பிக்கை அல்ல. அதற்கும் பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய இடம் உண்டு. தீவிர திகவான சித்த மருத்துவர்களே இதை சொல்லுவார்கள்//

    என்னென்ன வியாதிகளை பஞ்சகவ்யம் குணப்படுத்தும் என்று உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன். சித்தமருத்துவம் இப்போது ஒரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வியாகவே சொல்லித்தரப்படுகிறது. அந்தப் படிப்பில்/பாடப்புத்தகத்தில் பஞ்சகவ்யம் பற்றி பாடம் ஏதேனும் இருந்தாலும் குறிப்பிடவும். சவாலாக அல்ல. ஆர்வத்தோடுதான் கேட்கிறேன். (தயவு செய்து வேதம், சித்தர் பாடல் என்று மேற்கோள் காட்ட வேண்டாம், நடைமுறையில் உள்ள நூல்களைக் கேட்கிறேன்).

    எனக்குத் தெரிந்து மாட்டுச் சாணியை, மருந்தாக அல்ல, ஒரு முதலுதவியாகப் பயன்படுத்துவது ஒரே ஒரு தருணத்தில் தான். கிராமங்களில், யாராவது தற்கொலைச் செய்துக்கொள்ள பாலிடால் போன்ற விஷத்தைக் குடித்துவிட்டால், அதை வெளியேற்ற, சாணியைக் கரைத்துப் புகட்டி வாந்தி எடுக்கவைப்பார்கள். இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். மற்றபடி பஞ்சகவ்யம் என்ற பொருளைச் அருந்துவது திவசம் போன்ற பார்ப்பனியச் சடங்குகளில் மட்டும் தான். அதை நோயாளிகளுக்கு மட்டும் கொடுப்பதில்லை. அந்த பாக்கியம், விருப்பமுள்ள எல்லோருக்கும் கிட்டும்.

    இப்போதைக்கு என்னைப் பொறுத்தவரை பஞ்சகவ்யம் ஒரு சடங்குப் பொருள். மருத்துவரீதியாக அதிகபட்சம் placebo ஆக வேண்டுமானால் இருக்கலாம் (ஒருவேளை நீங்கள் அளிக்கப்போகும் ஆதாரம் என் கருத்தை மாற்றலாம்). சகித்துக்கொள்பவர்கள் அருந்தலாம். அந்த சகிப்புத்தன்மையைத்தான் பெரியார் கேள்விக்குட்படுத்தியிருந்தார்.

    நீங்கள் எழுதியிருக்கும் பிறவிஷயங்களைக் குறித்தும், அதைவிட அரவிந்தனின் “அறிவியலை” விளக்கியும் எழுத ஆசையாகத் தான் இருக்கிறது. ஆனால் என்னுடைய தற்போதைய சூழ்நிலையில் செய்ய இயலாது. ஒருவேளை அரவிந்தன் நம்பாத கடவுள் விரைவில் அருள் புரிந்து என் நிலை மாறினால் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து செய்யும் உத்தேசம் உண்டு.

  • தமிழ் Septic,

    பஞ்சகவ்யம் என்றாலே கேவலப்படுத்தப்படும் சூழலில், மாட்டுச் சாணம் என்றாலே கேவலப்படுத்தப்படும் சூழலில் மாட்டுச் சாணத்தால் பலன் உண்டு என்று காட்டுவதே அரவிந்தனின் நோக்கம்.

    அதை மட்டும் ஏன் எழுத வேண்டும்?

    ஏனென்றால், ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அரவிந்தன் ஒன்றைக் குறித்து எழுதுவார். எதை எல்லாருக்கும் தெளிவாக நிறுவ முடியுமோ அதை மட்டும்தானே அரவிந்தனால் எழுத முடியும். மாட்டுச் சாணத்தால் பலன் இருப்பதை அனுபபூர்வமாக அறிந்தவர் என்பதாலும், தரவுகள் உள்ளவர் என்பதாலும் அது குறித்து எழுதியுள்ளார்.

    ஏன் பஞ்சகவ்யம் பற்றி எழுதக்கூடாது?

    ஆதாரங்கள் இல்லாத எதையும் அவர் எழுதுவதில்லை.

    பஞ்சகவ்யத்தால் பலன் உண்டு என்று நிறுவ ஏதேனும் ஆராய்ச்சி நடந்திருந்தால் அதை எழுத அரவிந்தனுக்குத் தயக்கமே கிடையாது. ஆனால், அது குறித்து ஆராய்ச்சி எதுவும் நடக்காத போது அதனால் பலனே கிடையாது என்று சொல்லுவது எந்த அளவு சரி என்ற கேள்வியைத்தான் அரவிந்தனின் கட்டுரை எழுப்புகிறது.

    அது தமிழ் புரிபவர்களுக்குப் புரியும். தமிழை சந்தேகப்படும் Skepticகளுக்கு எப்படிப் புரியும்?

  • களிமிகு கணபதி,

    தமிழ் Skeptic தமிழ் சூழலையே எந்த அளவு அறிந்தவர் என்பதே எனக்கு ஐயமாக இருக்கிறது. பஞ்சகவ்யத்தை விவசாயிகளிடம் ஒரு இயக்கமாகவே கொண்டு போய்கொண்டிருப்பவர் டாக்டர் நடராஜன். இவர் தான் பஞ்ச கவ்யத்தை எப்படி கண்டடைந்தேன் என்பதை விவரமாக எழுதியிருக்கிறார். சிவராத்திரி அன்று குருக்கள் கோவிலில் பஞ்சகவ்யம் கொடுக்கிறார். இவர் குருக்களிடம் இது எதற்கு என்கிறார். குருக்கள் ‘இது வந்த நோயை போக்கும் வரப் போகும் நோயை தடுக்கும்” என்கிறார். நடராஜன் இதனை ஏன் பயிர்களுக்கு தெளிக்க கூடாது என முயற்சி செய்கிறார். பஞ்சகவ்யத்தை நம்மாழ்வாரும் மருந்தாக பயன்படுத்தியிருக்கிறார். குமரி மாவட்டம் வந்திருந்த போது அவரே சொன்னார். யூட்யூபிலும் உள்ளது. பல சித்த மருத்துவ பயன்பாடுகளும் ஆயுர்வேத பயன்பாடுகளும் பஞ்சகவ்யத்துக்கு உண்டு. எந்த சித்த மருத்துவரைக் கேட்டாலும் இதை சொல்லுவார். நவீன மருத்துவ ஆராய்ச்சிகளும் செய்யப்படுகின்றன. ஒரு உதாரணம்: http://medind.nic.in/ibi/t03/i5/ibit03i5p308.pdf

    எனவே பஞ்சகவ்யத்தை உட்கொள்வது பிராம்மணீய மேலாதிக்கம் என்பது ஆழமில்லாத காலனிய புரிதல். அதனை ஈரோட்டை சேர்ந்த ஈவெரா செய்தார். அதனை தாண்டி அதே ஈரோட்டை சார்ந்த நாகராஜனால் கோவில் குருக்கள் தந்த பஞ்சகவ்யத்தை சிந்திக்க முடிந்தது. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நன்மை கிடைத்தது.ஈவெராவின் மூளைச்சுரப்பைக் காட்டிலும் கோமூத்திரத்தில் விஷயம் இருக்கிறது.

    அநீ

  • அரவிந்தன்,

    நான் தமிழ்நாட்டில், கால்நடைப் பொருளாதாரத்தையும், விவசாயத்தையும் நம்பியிருந்த ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் தான். கால்நடைப் பரமாரிப்பு முதல் கால்நடைகளின் கழிவுகள் எருவாகப் பயன்படுத்துப்படுவது வரை நடைமுறை அறிவு/அனுபவம் உண்டு. சாணம் மண்தரையை மெழுக, வரட்டியாகத் தட்டி அல்லது எருமுட்டையாக உருட்டி எரிபொருளாக, வயலுக்கு எருவாக பயன்படுத்துவது நன்றாகத் தெரியும். பசுக்கழிவுகள் மட்டுமல்ல பிற விலங்குகளின் கழிவுகளையும் உரமாகப் பயன்படுத்தமுடியும் (ஆட்டு மந்தையை உழவுக்கு முன் வயலில் கிடைபோடுவதும் இதே காரணத்துக்காகத் தான்). இது தலைமுறை, தலைமுறையாக விவசாயிகள் செய்துவருவது தான்.

    டாக்டர் நடராஜன் பஞ்சகவ்யத்தை “கண்டுபிடித்த” விவரம் இங்கு இருக்கிறது. ஏற்கனவே பிரேசில் நாட்டுக்காரர் ஒருவர் மாட்டுமூத்திரம்+பால்+நுண்ணுயிர்க் கலவையை விவசாயத்தில் பயன்படுத்தியதைக் குறிப்பிட்டிருக்கிறார். கோவிலில் குருக்கள் பஞ்சகவ்யம் “வந்த நோயைப் போக்கும். இனிவரும் நோயை வராமல் தடுக்கும்” என்று சொன்னதைக் கேட்டபோது முன்குறிப்பிட்ட கலவை நினைவுக்கு வந்திருக்கிறது. கவனிக்கவும், நடராஜன் ஒரு மருத்துவர். குருக்கள் சொன்ன “வேதவாக்கை” நம்பி அதை மருந்தாக யாருக்கும் கொடுக்கவில்லை. உரமாகத்தான் பயன்படுத்தியிருக்கிறார்.

    பஞ்சகவ்யம் என்பது பசுச்சாணி, பசுமூத்திரம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருட்களின் கலவை. பசு இந்து மதத்தில் புனிதமாகக் கருதப்படுவதால் பசுக்கழிவுகளும் கருதப்படுவதாகத் தெரிகிறது. கவனிக்கவும், எருது, எருமை, ஆடுகள் இவையெல்லாம் புனிதமல்ல. விவசாயத்தைப் பொறுத்தவரையில் அவற்றின் கழிவுகளும் நல்ல உரம் தான். (For that matter, any biodegradable organic waste can be a good manure). எருமைப்பாலும், ஆட்டுபாலும் கூட ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள் தான்.

    சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் என்னென்ன நோய்களை குணப்படுத்த பஞ்சகவ்யம் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டு சொல்லுங்களேன்.

    பஞ்சகவ்யத்தின் மருத்துவப் பண்புகளைப் பற்றி அறிந்துகொள்ள முன்பே Google scholar இல் தேடிப் பார்த்தேன். அதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரை தான் முதல் ஹிட் ஆக வரும். இது தவிர, இந்திய விஞ்ஞானிகளால் (இந்திய விஞ்ஞான சஞ்சிகைகளில்) அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியிடப்பட்ட இன்னும் சில கட்டுரைகளும் கிடைக்கும். இந்த ஆய்வின் முடிவுகள் பஞ்சகவ்யம் “வந்த நோயை போக்கி, வரும் நோயை தடுக்கும்” என்று நினைக்குமளவுக்கு இல்லை. இதுமட்டுமல்ல பசுமூத்திரத்தை distill செய்து அமெரிக்காவில் காப்புரிமை கூட வாங்கியிருக்கிறார்கள் சில இந்திய விஞ்ஞானிகள். பார்க்கலாம், அடுத்த சிலவருடங்களில் பஞ்சகவ்யம் மருத்துவத் துறையில் என்ன புரட்சியை ஏற்படுத்தப்போகிறதென்று.

    பஞ்சகவ்யத்தை உட்கொள்வதை ”பிராமணிய மேலாதிக்கமாக” யாரும் கருதவில்லை. இதெலென்ன மேலாதிக்கம் இருக்க முடியும்? இதை முட்டாள்தனமாகத் தான் பெரியார் கருதினார். விலங்குகளின் கழிவுகளை — அது புனிதப்பசுவின் கழிவாக இருந்தாலும் — உட்கொள்வதை நானும் அப்படித்தான் கருதுவேன் உருப்படியான ஆதாரங்கள் கிடைக்கும்வரை. இதெலென்ன ஆழமில்லாத காலனியப் புரிதல்? பெரியாருடைய அக்கறை சூத்திரர்களை விழிப்படையச் செய்வது தான். பிராமணர்கள் பசுக்கழிவுகளை உட்கொண்டு தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்குமென்று தோன்றவில்லை.

    மனித மூத்திரத்தில், எருது, எருமை, ஆட்டு மூத்திரங்களில் இல்லாத விசேஷம் பசுமூத்திரத்தில் இருக்கிறது என்று நம்புபவர்கள் தொடர்ந்து குடித்துக்கொண்டிருக்கலாம்.

  • முதலில் தமிழ் ஸ்க்ப்டிக் புரிந்து கொள்ளாத ஒரு விஷயமே பஞ்ச கவ்யம் என்பது அப்படியே மாட்டுக்கழிவல்ல என்பதைதான். விலங்குக்கழிவு பயன்பாடு எல்லா விவசாயத்திலும் உள்ள விசயம் என்பதை தெரிந்து கொள்ள ஒருவர் விவசாயக்குடும்பத்தில் பிறக்க வேண்டியது கூட இல்லை. ஆனால் பஞ்சகவ்யத்தை தயாரிக்க ஒரு முறை உள்ளது. அந்த முறை நம் பாரம்பரிய மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளன. அதனை நம் பாரம்பரிய மருத்துவர்கள் பொது ஆரோக்கியத்துக்கும் குறிப்பிட்ட சிகிச்சைகளில் ஒரு பகுதியாகவும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை விவசாயத்தில் பயன்படுத்துவது ஒரு புதிய முறை. அல்லது பாரம்பரிய அறிவை முன்னகர்த்தி விரிவுப்படுத்துதல். ஈரோடு நடராஜன் அதைத்தான் செய்தார். ஈவெரா பாணியில் “பிராம்மணன் சூத்திரனான நான் இன்னும் அடிமையாக இருப்பதை பரிசோதிக்க முயற்சிக்கிறானா” என்று அதனை விலக்கவில்லை. ஈரோடு நடராஜனின் வார்த்தைகளிலேயே சொல்கிறேன்: “(குருக்கள்) இரத்தினச்சுருக்கமாக ‘இது வந்த நோயைப் போக்கும்! இனிமேல் வரப்போகும் நோய்ய்களை வர விடாமல் தடுக்கும்’ என்று வெகு அழகாகச் சொன்னார். இப்பொழுது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. இது அவர் சொல்லவில்லை. எனை ஆட்கொண்ட அந்த ஈசனே அவர் உருவில் வந்து சொன்னார் என்றே இன்றும் நான் நம்புகிறேன்” இப்போது தமிழ் ஸெக்ப்டிக் இன்னொரு கேள்வியை எழுப்புகிறார். மருத்துவரான அவர் அதை பயிர்களில்தானே முயற்சி செய்தார்? ஏனென்றால் அவர் இயற்கை விவசாய ஆர்வலர். பல ஆண்டுகளாக இயற்கை விவசாயத்திலேயே தனது வாழ்க்கையை செலவிடுபவர். அதனால் அவர் தனது ஆராய்ச்சி ஆர்வம் கொண்ட புலத்தில் அதனை பயன்படுத்தினார்.

    பஞ்ச கவ்யம் பொது உடல் நலத்துக்காக இந்தியா முழுக்க ஏறக்குறைய எல்லா பாரம்பரிய மக்கள் குழுக்களிலும் உட்கொள்ளப்படும் ஒரு விசயம். பல இந்திய பாரம்பரிய மருத்துவ நூல்கள் அதன் பயன்பாடுகளைப் பேசுகின்றன. அது நம் வாழ்க்கைச் சடங்குகள் மூலமாக நம் வாழ்வில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில் சாதிய/இனரீதியிலான ஒரு சதியை ஈவெரா பார்க்கிறார். இந்த பார்வை நம் பாரம்பரிய அறிவை அறிவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்து முன்னெடுத்து செல்ல தடையாக உள்ளது என்கிறேன். இதற்கு தமிழ் ஸ்கெப்டிக் என்ன பதில் சொல்கிறார்? எங்காவது பஞ்சகவ்யத்தை உட்கொள்கிற பழக்கம் இருக்கிறதா பிராம்மணீய சடங்குகளைத் தவிர என்கிறார். இருக்கிறது. பல பாரம்பரிய மருந்துகளில் பஞ்சகவ்யம் ஒரு பகுதியாக உள்ளது. அதற்கு அறிவியல் ஆதாரம் உண்டா? அதெல்லாம் வெறும் placebo effect அல்லவா என்கிறார் திருவாளர்.ஸ்க்ப்டிக். இல்லை peer-reviewed journal இல் ஆராய்ச்சித்தாள் இருக்கிறது. பல பாரம்பரிய மருத்துவ நூல்கள், ஆரோக்கியத்துக்கான மருந்துகளில் பஞ்சகவ்யம் உள்ளது. எனவே அதனை நம் சடங்குகளில் இணைத்தது மூடநம்பிக்கை அல்ல என ஒரு ஆராய்ச்சித்தாளை உதாரணத்துக்கு காட்டுகிறேன். உடனே தமிழ் ஸெக்ப்டிக் சொல்கிறார்: ”நான் கூகில் ஸ்காலரில் தேடினேன். ஒன்றே ஒன்றுதானே இருக்கிறது.”

    இதற்கான பதிலையும் இதற்கு முன்னர் நான் சொன்ன பிறிதொரு விசயத்தையும் இணைத்தே சொல்கிறேன். தாங்கள் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சித்துறைகளில் இன்றைக்கு பஞ்சகவ்ய பயன்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர். உதாரணமாக சில ஆராய்ச்சித்தாள்கள்: International Journal of Poultry Science இல் வெளியான ஆராய்ச்சி: முழு ஆராய்ச்சித்தாளையும் இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். கோழிப்பண்ணை கோழிகளுக்கு பஞ்சகவ்யம் அளிப்பது குறித்து: http://www.pjbs.org/ijps/fin749.pdf
    இந்த ஆராய்ச்சித்தாளில் அதனை வந்தடைந்த வழிமுறையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை கவனியுங்கள்: Panchagavya is one such formulation mentioned in Ayurveda, which is prepared with five components derived from cow viz. milk, curd, ghee, urine and dung. These formulations were claimed to be useful against liver disorders, fever and inflammations and has hepatoprotective effect in toxicity induced rats (Achliya et al., 2003) and immunostimulant activity with herbs in rats (Fulzele et al., 2003). However, much work has not been carried out with panchagavya on bird’s performance. மனித மருத்துவத்திலிருந்து பறவை மருத்துவத்துக்கு முன்னகர்த்தி ஆராய்ச்சி செய்கிறார்கள் மதிவாணன் et al. அப்படியே இந்த ஆராய்ச்சியையும் பாருங்கள்: http://medind.nic.in/ibi/t03/i1/ibit03i1p51.pdf இங்கு பஞ்சகவ்ய மருந்து எப்படி என்னவிதத்தில் வேலை செய்கிறது என்பது ஆராயப்படுகிறது: இந்த ஆராய்ச்சித்தாளில் சொல்லப்படுகிற க்ருதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்த ஆயுர்வேத வைத்தியரிடமும் கிடைக்கும் மிகவும் பிரபல மருந்தாகும். (வேண்டுமானால் வழக்கமான நேர்மையின்மையுடன் தமிழ் ஸ்க்ப்டிக் இது மருந்துதானே இது நேரடி பஞ்சகவ்யம் அல்லவே என கூட வாதிடலாம். பாரம்பரிய வைத்தியர்கள் நகைப்பார்கள்.) ஆய்வுத்தாளின் முடிவை கவனியுங்கள்: “On the basis of the results obtained in the present study it can be concluded that HG has the potential to stimulate the cell-mediated immunity and it may be a potential candidate in several immuno-suppressed clinical conditions.” இது placebo effect என சொல்ல அசாத்திய முட்டாள்தனம் மட்டுமே வேண்டும். அதை விட அசாத்திய மூர்க்க முட்டாள்தனம் எனக்கு ஒரே ஒரு ஆராய்ச்சித்தாள்தான் கிடைத்தது என சொல்ல தேவைப்படும். மீண்டும் பழைய பிரச்சனைக்கே வருகிறேன். இங்கு நாம் காண்பதென்னவென்றால் ஒவ்வொரு ஆராய்ச்சித்தாளும் தன்னுடைய புலத்தில் பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி அதன் விளைவுகளை ஆராய்கிறது. பஞ்சகவ்யம் இந்த நாட்டின் பாரம்பரிய அறிவுச்செல்வம். இதனை உதாசீனப்படுத்தியது இதனை “பிராம்மணன் தனக்கு அடிமையாக சூத்திரன் இருக்கிறானா என கண்டுபிடிக்க பயன்படுத்திய கருவி” என்று ஈவெரா சொன்னது பகுத்தறிவின்மை. சமூகநீதிக்கும் பஞ்சகவ்யத்துக்கும் எதிர்மறை முடிச்சு போட்டது அறிவற்ற செயல். இதனால் நஷ்டம் நமக்குத்தான். இதை சொன்னால் புரிந்து கொள்ளமுடியாமல் பேசுவோரிடம் பேச ஏதுமில்லை. வேண்டுமானால் பஞ்சகவ்ய க்ருதம் மருந்தை ரெக்கமண்ட் செய்யலாம். மனநிலைபாதிப்புக்களை அது நிவர்த்தி செய்யும் என்பார்கள்.

  • // உடனே தமிழ் ஸெக்ப்டிக் சொல்கிறார்: ”நான் கூகில் ஸ்காலரில் தேடினேன். ஒன்றே ஒன்றுதானே இருக்கிறது.//

    இந்த வரியை இப்படி மாற்றிக்கொள்ளவும்: “நான் கூகில் ஸ்காலரில் தேடினேன்..இது தவிர, இந்திய விஞ்ஞானிகளால் (இந்திய விஞ்ஞான சஞ்சிகைகளில்) அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியிடப்பட்ட இன்னும் சில கட்டுரைகளும் கிடைக்கும். இந்த ஆய்வின் முடிவுகள் பஞ்சகவ்யம் “வந்த நோயை போக்கி, வரும் நோயை தடுக்கும்” என்று நினைக்குமளவுக்கு இல்லை…” ஆனால் ஆராய்ச்சிகள் இருக்கின்றன எனும் போது சொல்கிறார்: “அங்கொன்றும் இங்கொன்றுமாக” கூடவே அது வரும் நோயைத் தடுக்கும் என்பதாக தெரியவில்லையாம். ஆனால் இந்த ஆராய்ச்சித்தாளைப் பாருங்கள்: ”it may be a potential candidate in several immuno-suppressed clinical conditions” அதாவது பஞ்ச கவ்யம் சேர்த்து செய்யப்பட்ட ஆயுர்வேத மருந்து. அதாவது பாரம்பரியமாக பஞ்சகவ்யம் மதிக்கப்பட்டு வந்துள்ளது. நம் வாழ்வியல் சடங்குகளில் ஒரு பாகமாக இருந்து வந்துள்ளது. இதனை ஈவெரா “பிராம்மணன் தனக்கு அடிமையாக சூத்திரன் இருக்கிறானா என தெரிந்து கொள்ள கொடுக்கும் விசயம்” என்கிறார். ஆனால் ஆராய்ச்சிகள் பஞ்சகவ்யம் இயற்கை விவசாயம் முதல் ஆயுர்வேதம் வரை பயனளிக்கும் ஒரு விசயமாக இருப்பதை காட்டுகின்றன. ஆகவே ஈவெரா பஞ்சகவ்யத்தில் பார்ப்பன சதியை பார்த்தது பரிதாபத்துக்குரிய பகுத்தறிவின்மை.

    மேலும் தமிழ் ஸெப்டிக் கூறியுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பயன்படுத்த்ப்படும் ஒரு பஞ்சகவ்ய மருந்தையே அவருக்கு பரிந்துரைக்கிறேன். மருந்தின் பெயர்: மஹா பஞ்சகவ்வியம் க்ருதம் (சொல்லப்பட்ட நூல் சஹஸ்ர யோகம் உடன் குறிஞ்சி விளக்க உரையும்) கேட்கும் வியாதிகள்: குன்மம், பவுத்திரம் மட்டுமல்ல மனநோயும் மாறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பயன்படுத்தி பாருங்கள். சுகம் தெரிகிறதா பார்ப்போம். காமாலை மாற ஹரித்ராதி க்ருதம் – ஆனால் இதில் காமாலை பார்வை தீருமா என்று நிச்சயமாக சொல்லமுடியவில்லை. Any way all the best.

  • அரவிந்தன்,

    //மேலும் தமிழ் ஸெப்டிக் கூறியுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பயன்படுத்த்ப்படும் ஒரு பஞ்சகவ்ய மருந்தையே அவருக்கு பரிந்துரைக்கிறேன். மருந்தின் பெயர்: மஹா பஞ்சகவ்வியம் க்ருதம் (சொல்லப்பட்ட நூல் சஹஸ்ர யோகம் உடன் குறிஞ்சி விளக்க உரையும்) கேட்கும் வியாதிகள்: குன்மம், பவுத்திரம் மட்டுமல்ல மனநோயும் மாறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பயன்படுத்தி பாருங்கள். சுகம் தெரிகிறதா பார்ப்போம். காமாலை மாற ஹரித்ராதி க்ருதம் – ஆனால் இதில் காமாலை பார்வை தீருமா என்று நிச்சயமாக சொல்லமுடியவில்லை. Any way all the best//

    உங்களுடைய விஞ்ஞானப்பூர்வமான பரிந்துரைக்கு நன்றி. எனக்கு இந்த வியாதிகள் வரும்போது பயன்படுத்திப் பார்க்கிறேன். உங்கள் சிகிச்சையை தொடர்ந்து கடைபிடியுங்கள். என்றாவது ஒருநாள் நீங்கள் இந்த வியாதிகளிலிருந்து குணமடையலாம். இவற்றை நீங்கள் கண்டுபிடித்திருந்தால் அப்படியே இந்த கண்டுபிடிப்புகளுக்கும் பன்னாட்டு காப்புரிமை வாங்கிவிடுங்கள்.

    ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. darwin mayr சொன்னது போல உங்களுக்கு அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்துப் பகுத்தறியும் பயிற்சி இல்லை.

  • //ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. darwin mayr சொன்னது போல உங்களுக்கு அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்துப் பகுத்தறியும் பயிற்சி இல்லை//

    இங்கு நாம் அறிவியல் ஆராய்ச்சிக்கட்டுரைகளின் தரம் குறித்து பேசவில்லை. குறைந்த பட்ச தேடல் கூட இல்லாமல் ‘placebo effect’ என புறந்தள்ளும் தங்கள் மன-நோய் எனக்கு இல்லாதது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. மருந்து கேட்டது நீங்கள்.

  • அரவிந்தன்,

    மாற்று மதத்தினரை, உங்கள் அரசியலோடு ஒத்துப் போகாதவர்களை உங்களால் மரியாதையாக நடத்த முடியாது, உங்கள் கருத்துக்களோடு முரண்படுபவர்களோடு உங்களால் நாகரிகமாக பேச முடியாது என்று இன்னொரு முறை நிருபித்ததற்கு நன்றி. வெறுப்பரசியலின் பிரச்சாரகரான உங்களால் இப்படித்தான் பேச முடியும்.

    குறைந்தபட்சத் தேடல் என்பது உங்கள் அகராதியில் நம்பிக்கைகளை கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்வது தான் போலும். நான் எழுதிய இந்த எளிய தமிழைக் கூட புரிந்துகொள்ளுமளவுக்கு கூட சகிப்புத்தன்மை இல்லை. இது தான் நான் டார்வினுக்கு அளித்த பின்னூட்டத்தில் எழுதியிருந்தது: “மருத்துவரீதியாக அதிகபட்சம் placebo ஆக வேண்டுமானால் இருக்கலாம் (ஒருவேளை நீங்கள் அளிக்கப்போகும் ஆதாரம் என் கருத்தை மாற்றலாம்)”. அந்த ஆராய்ச்சிக்கட்டுரைகளின் முடிவுகள் கூட “..லாம், ..லாம்” தான். தீர்க்கமானதில்லை (நீங்கள் placebo குறித்து அளந்திருப்பது இன்னொரு கட்டுரை. அந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தியிருக்கும் ஒரே மாட்டுப் பொருள் நெய். மற்றதெல்லாம் மூலிகைகள். இதில் என் நேர்மையைக் குறித்து வேறு பேசுகிறீர்கள். கஷ்டகாலம்).

    உங்கள் பொறுமைக்கும், சகிப்புத்தன்மைக்கும் இன்னொரு எடுத்துக்காட்டு: அவசரமாக ”உடனே தமிழ் ஸெக்ப்டிக் சொல்கிறார்: ”நான் கூகில் ஸ்காலரில் தேடினேன். ஒன்றே ஒன்றுதானே இருக்கிறது.”” என்று misquote செய்து வன்மத்தை கக்கிவிட்டு, தவறை உணர்ந்த பிறகு அதுகுறித்து சிறு குற்றவுணர்வு கூட இல்லாமல் இன்னொரு பின்னூட்டத்தில் “இப்படி மாற்றிக்கொள்ளவும்” என்று மீண்டும் நான் எழுதியதை quote செய்கிறீர்கள்.

    நான் கேட்டிருந்தது என்னென்ன வியாதிகளை பஞ்சகவ்யம் குணப்படுத்தும் என்று. இன்னின்ன வியாதிகளுக்கு என்ன மருந்தென்று கேட்கவில்லை. எனக்கு வியாதிகள் வந்தால் ஆலோசனை பெற மருத்துவரைத் தான் நாடுவேன். போலிகளை அல்ல.

    வேற்று நாட்டினர், வேற்று மதத்தினர், மாற்று அரசியல்காரர்கள், மாற்று கருத்தினர் மீது நீங்கள் தொடர்ந்து உமிழும் அதே வன்மம், அதே வெறுப்பு, “உனக்கு மனநோய், மஞ்சள் காமாலை” தரத்திலான வசவுகள். சும்மா சொல்லக்கூடாது. பாரா சொன்னது மாதிரி உங்களுக்கு ரொம்ப விசாலமான மனது தான். உங்களோடு உரையாடுபவர்களுக்கு அதைவிட (உண்மையிலேயே) ரொம்ப விசாலமான மனதுதான் பாரா, ரோசா மாதிரி.

    உங்கள் பதில்களிலிருந்து பார்த்தால் மாட்டுச்சாணமும், மாட்டுமூத்திரமும் மனநோயாளிகளுக்குப் போலிருக்கிறது. அதைத் தான் பெரியார் சரியாக புரிந்துகொண்டார். மாட்டுக்கழிவுகளை உட்கொள்ளுமளவு நமக்கு மூளை கெட்டுப்போயிருக்கிறதா என்று நினைத்திருக்கிறார்.

    அடுத்து “சோமத் தாவர” ஆராய்ச்சிகளைப் பற்றி பேசலாம். அதுவும் ஒரு மனநோய் மருந்து தானே.

    மற்றவர்களுக்கு:
    சாதியம்-மாட்டு மூத்திரம் தொடர்பான ஒரு செய்தி.
    http://www.reuters.com/article/idUSSP32758320070423

  • அய்யா தமிழ் ஸ்கெப்டிக்

    நீர் என்ன வேண்டுமென்றாலும் திட்டுவீர் உருட்டல்காரன் புரட்டல் காரன் என்றெல்லாம் பேசுவீர், ஆனால் உம்மை சொன்னால் மட்டும் தொட்டால் சுருங்கி ஆகிவிடுவீரா? என்ன செய்வது உமக்கு உம்முடைய பாணியிலேதான் பதில் சொல்ல வேண்டியுள்ளது. அய்யா மீண்டும் மீண்டும் உளறுவது என நீர் கங்கணம் கட்டிக்கொண்டு பேசினால் அதை உளறல் என்று சொல்லாமல் என்ன சொல்வது. பஞ்சகவ்யம் என்றால் என்ன என்பதையே நீர் விளங்கிக்கொள்ளாமல் அது மூத்திரமும் சாணமும் மட்டுமே என சொன்னால் அதை என்னவென்று சொல்வது? மடத்தனம் என சொல்லாமல். காமாலைப்பார்வை என சொல்லாமல் அல்லது மனப்பிறழ்வு என சொல்லாமல். இதோ அந்த ஆராய்ச்சி தாளிலேயே தொடக்கத்தில் பஞ்சகவ்யம் என்பதை விளக்கியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அதனை பஞ்சகவ்ய அடிப்படையிலான மருந்து என்றிருக்கிறார்கள்: “Panchgavya is a term used in Ayurveda to describe the five important bovine products viz. milk, curd, ghee, urine and dung. These components are used either alone or in combination with other herbs for treatment of several diseases. Haridradi Ghrita (HG) is a panchgavya based polyherbal formulation claimed to have hepatoprotective and immunostimulant activity in traditional practices.” இதே கிருதம் மற்றொரு தயாரிப்பில் நெய்யும் பாலும் கலந்து செய்யப்படும் ஸஹஸ்ர யோகம் கேரளீய வைத்திய சாஸ்திரம் ஆகியவற்றில் அப்படித்தான். நீர் சொன்னதில்தான் எத்தனை பொய்கள்! முதலில் எந்த பாரம்பரிய மருத்துவ முறையிலும் பஞ்சகவ்யமே உட்கொள்ளப்படுவதில்லை என்று சொல்ல வேண்டியது (”எனக்குத் தெரிந்து மாட்டுச் சாணியை, மருந்தாக அல்ல, ஒரு முதலுதவியாகப் பயன்படுத்துவது ஒரே ஒரு தருணத்தில் தான். கிராமங்களில், யாராவது தற்கொலைச் செய்துக்கொள்ள பாலிடால் போன்ற விஷத்தைக் குடித்துவிட்டால், அதை வெளியேற்ற, சாணியைக் கரைத்துப் புகட்டி வாந்தி எடுக்கவைப்பார்கள். இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். மற்றபடி பஞ்சகவ்யம் என்ற பொருளைச் அருந்துவது திவசம் போன்ற பார்ப்பனியச் சடங்குகளில் மட்டும் தான். அதை நோயாளிகளுக்கு மட்டும் கொடுப்பதில்லை.”) இப்படி சொன்ன பிறகு இல்லை பஞ்சகவ்யம் வியாதிகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுவது உண்டு என்பதை பாரம்பரிய மருத்துவ நூல்களின் ஆதாரங்களின் அடிப்படையில் உணர்த்திய பிறகும் எவ்வித நாணமும் இல்லாமல் பேச எப்படி முடிகிறது? வெறுப்பின் அடிப்படையில் முதலில் இருந்தே பேசியது தமிழ் செக்ப்டிக்தான். எவ்வித ஆதாரத்தையும் எதிர்கொள்ள அடிப்படை நேர்மையும் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டியது. பிறகு அடுத்தவனை எதுவும் பேசலாம் ஆனால் தன்னை ஏதாவது சொல்லிவிட்டால் உடனே வந்துவிடும் சாமியாட்டம்.

  • Histomorphological evaluation of wound healing potential of cow urine in goats; Mishra R.1,2, Dass L.L.1,*, Sharma A. K.1, Singh K.K.1 1Department of Surgery and Radiology, College of Veterinary Science and Animal Husbandry, BAU, Ranchi-6 (Jharkhand), 2Dept. of Veterinary Surgery and Radiology, Apollo College of Veterinary Medicine, Jaipur (Rajasthan):
    Indian Journal of Veterinary Pathology
    Year : 2009, Volume : 33, Issue : 2

    // It was concluded that cow urine played an excellent role in healing process of surgical wounds when used orally and synergistic effects are added with topical application in goats.//

    இது பஞ்சகவ்யம் இல்லை. கோமூத்திரம். http://www.indianjournals.com/ijor.aspx?target=ijor:ijvp&volume=33&issue=2&article=019

  • அரவிந்தன்,

    1. மாற்றுக்கருத்துள்ளவர்கள் எளிய தமிழில் எழுதினாலும் அதை புரிந்துகொள்ளும் பொறுமை உங்களுக்கில்லை. நான் தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் (அ) ”எனக்குத் தெரிந்து” என்று தெரிந்தவற்றை தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன், (ஆ) தெரியாதவற்றைக் குறித்து அறிந்துகொள்ள கேட்டிருக்கிறேன், இணையத்தில் தேடிக் கண்டதைச் சொல்லி இருக்கிறேன் (இ) புதுவிஷயங்களின் அடிப்படையில் கருத்தை மாற்றிக்கொள்ளலாம் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன். கருத்துக்களை அப்போது அறிந்துள்ளவற்றை வைத்துதான் உருவாக்க முடியும். புதுவிஷயங்களை அறிந்துகொள்ளும்போது கருத்துக்களை மாற்றிக்கொள்ள முடியும். முன்முடிவுகளை உருவாக்கிக்கொண்டு அதற்கேற்றபடி வாதங்களை அடுக்க முனைந்தால் “காச் மூச்” என்று கத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். ரத்தம் கொதிக்கும்.

    2. போன பின்னூட்டத்தில் என்ன சாமியாட்டத்தைக் கண்டீர்கள் எனத் தெரியவில்லை. நான் எழுதியது உங்கள் அணுகுமுறையை சுட்டிக்காட்ட. நீங்கள்தான் உங்களுக்குப் பிடித்த சிவதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள். பாரா சரியாகத் தான் சொல்லியிருக்கிறார், “எந்த மூலையிலாவது போய் ஹிந்துத்துவத்துக்கு எதிராக நாலு வரி எழுதி வைத்துவிட்டால் போதும். உடனே பொங்கியெழுந்து ஓடிவந்துவிடுவார்”.

    3. “சில மேற்கோள்களை உருட்டி, புரட்டி தன் வாதத்திற்கு சாதகமாகப் பயன்படுத்தும் சாதுர்யம் அவருக்கு இருக்கிறது” என்று நான் எழுதியதை உங்கள் பின்னூட்டங்களிலேயே நிரூபித்திருக்கிறீர்கள்.

    4. என்னை நீங்கள் மனநோயாளி, முட்டாள், மடையன், காமாலைக்கண்ணன் என்றெல்லாம் குறிப்பிடுவதால் நான் அப்படியாகிவிடுவேன் என்ற பயமெல்லாம் இல்லை. ஆனாலும் நீங்கள் தொடர்ந்து சாபமிட முயற்சிக்கலாம்.

  • தமிழ் ஸ்கெப்டிக்,

    நீங்கள் சொல்லியிருப்பதுடன் சொல்லிவிட்டு திரும்ப சொல்லவிட்டதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் பொய் சொல்லியிருக்கிறீர்கள். உதாரணமாக : “உலகில் எல்லா கேள்விகளுக்கும் — அறிவியல் உள்பட — வேதம், புராணம் அடங்கிய இந்துமத அறிவுச் சுரங்கத்தில் விடை இருக்கிறது என்பது தான் அரவிந்தன் தொடர்ந்து நிறுவ முயலுவது” என்கிறீர்கள். என்னுடைய எழுத்துக்களில் எங்காவது உலகில் எல்லா கேள்விகளுக்கும் இந்து மத அறிவுச்சுரங்கத்தில் விடை இருக்கிறது என்றோ அப்படி பொருள் படவோ எழுதியுள்ளதில்லை. உங்களுடைய நிலைபாடு “எனக்குத் தெரிந்து மாட்டுச் சாணியை, மருந்தாக அல்ல, ஒரு முதலுதவியாகப் பயன்படுத்துவது ஒரே ஒரு தருணத்தில் தான். கிராமங்களில், யாராவது தற்கொலைச் செய்துக்கொள்ள பாலிடால் போன்ற விஷத்தைக் குடித்துவிட்டால், அதை வெளியேற்ற, சாணியைக் கரைத்துப் புகட்டி வாந்தி எடுக்கவைப்பார்கள். இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். மற்றபடி பஞ்சகவ்யம் என்ற பொருளைச் அருந்துவது திவசம் போன்ற பார்ப்பனியச் சடங்குகளில் மட்டும் தான்.” சரி இப்போது அது தவறு என்பது நிரூபணமாகி திரி இத்தனை ஓடி விட்டது. உங்கள் நிலைபாடு தவறு என எங்கே திருத்தியிருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. இந்த அடிப்படை நேர்மை கூட இல்லாமல் ”வெறுப்பரசியல்” குறித்து பேசுவது நேர்மையின்மையோடான முட்டாள்தனம். “ நீங்கள் மனநோயாளி, முட்டாள், மடையன், காமாலைக்கண்ணன் என்றெல்லாம் குறிப்பிடுவதால் நான் அப்படியாகிவிடுவேன் என்ற பயமெல்லாம் இல்லை. ஆனாலும் நீங்கள் தொடர்ந்து சாபமிட முயற்சிக்கலாம்” சாபம் கொடுக்க நான் ஆளில்லை. அதோடு அப்படியெல்லாம் நான் சாபமிட்டு நீர் ஆகிவிடமாட்டீர் அய்யா. முட்டாள்தனம் இருப்பதையும் உம் நிலைபாடு மூர்க்க முட்டாள்தனமாக இருப்பதையும் நீர் நிரூபித்திருக்கிறீர். நேர்மையின்மையை வக்கீல் சாதுரியத்துடன் மறைக்க வார்த்தை ஜாலம் மட்டுமே செய்ய தெரிந்தவர் என்பதையும் நிரூபித்திருக்கிறீர். பஞ்சகவ்யம் என்பதன் வரையறை கூட தெரியாமல் உளறியதன் மூலம் காமாலை கண் என்பதையும் நிரூபித்திருக்கிறீர்: எனவே ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறீர். இதற்கு மேல் இதில் சொல்ல எனக்கு எதுவும் இல்லை.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி