அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். சிறுகதை கேட்டு இரு வாரங்கள் முன்பு நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றேன். இத்துடன் ஒரு கதை இணைத்திருக்கிறேன். பிரசுரிக்க இயலாது என்று கருதுவீர்களானால் திருப்பி அனுப்பிவிடலாம். உடன், போதிய தபால் தலை ஒட்டப்பட்ட கவர் உள்ளது. தங்கள் அன்புள்ள…
புதிய அல்லது அறிமுக எழுத்தாளர்களிடம் எந்தப் பத்திரிகையும் கதை கேட்டுக் கடிதம் எழுதாது. பிரபலங்களிடம் மட்டும்தான். தவிரவும் கேட்டு வாங்கப்படும் கதைகள் எத்தனை கந்தரகோலமாக இருந்தாலும் தட்டி கொட்டி சரி செய்து அவசியம் பிரசுரிக்கப்பட்டுவிடும் என்பதுதான் தமிழ் வார இதழ் மரபு. இது சூடாமணிக்கும் தெரியும். ஆனாலும் அவர் அப்படித்தான். கடைசிவரை மாறவில்லை. அவரது பணிவு, அகங்காரமின்மை, எழுத்தில் அவர் கடைப்பிடித்த நம்பமுடியாத உயர் ஒழுக்க நெறிகள் ஆகியவற்றை வேறு யாரிடமும் காண முடியாது.
எனக்குத் தெரிந்து கல்கியில் நான் இருந்த எட்டாண்டு காலத்தில் அவர் எழுதிய எந்தச் சிறுகதையும் சராசரி – சுமார் என்று சொல்லத்தக்க தரத்தில் இருந்ததாக நினைவில்லை. நல்ல கதை என்று எங்களுக்குள் பேசிக்கொண்டால் அது குறைந்தபட்சக் கருத்து. பெரும்பாலும் அற்புதம் என்றுதான் சொல்லத்தோன்றும். அங்கே எனக்கு சீனியராக இருந்த இளங்கோவன், கதை எழுதும் ஒவ்வொருவருக்கும் சொல்லும் போதனை இதுதான்:’சூடாமணி மாதிரி எழுதப்பாருய்யா. வரலன்னா, எழுதாத.’
சிறுகதையின் ஆகப்பெரிய சவாலான வடிவக் கச்சிதம் அவரிடம் வெகு இயல்பாகக் கூடியிருந்தது. சற்றுப் பழமையான மொழிநடைதான். ஆனாலும் நாலு வரிக்குள் கதை நம்மை உள்ளே இழுத்துவிடும். செயற்கையான உச்சக்கட்டங்கள் இல்லாத இயல்பான படைப்பாக நெஞ்சில் நிறையும், விரியும்.
சூடாமணியை அவரது சிறுகதைகள் மூலம் மட்டுமே நான் அறிவேன். அநேகமாக அனைவருமே அப்படித்தான் அறிவார்கள் என்று நினைக்கிறேன். அவர் பொது இடங்களுக்கு, இலக்கியக் கூட்டங்களுக்கு வந்து பார்த்ததில்லை. பேட்டிகள் தந்ததில்லை. புகைப்படம் தரமாட்டார். அவர் வீட்டுக்கும் மிக நெருக்கமான ஒரு சில நண்பர்கள்தவிர யாரும் போயிருக்க முடியாது.
தான் என்பது தன் படைப்பு மட்டுமே என்று வாழ்ந்தவர். எழுத்தில் அவரது ஒரே நோக்கம், எழுத்து நேர்த்தி மட்டுமே. ஒருபோதும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமலேயே வாழ்ந்தவர்.
ஒருமுறையாவது நேரில் பார்க்க நான் ஆசைப்பட்ட நபர்களுள் சூடாமணியும் ஒருவர். தொலைபேசியில் மட்டுமே அவருடன் பேசிப்பழக்கம். கிழக்கு தொடங்கியபிறகு, சிறுகதை கேட்பது என்னும் பணி இல்லாது போய்விட்டதால் அந்தத் தொடர்பும் நின்றுவிட்டது.
இனி கேட்டாலும் கொடுக்க அவரில்லை. இன்று அதிகாலை 12.45க்கு அவர் காலமானார் என்று திருப்பூர் கிருஷ்ணன் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். ரொம்ப துக்கமாக இருக்கிறது.
🙁
அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
சூடாமணி தன் வீட்டில் உள்ள பழைய புத்தகங்களை எல்லாம் எனக்கு ஒரு முறை கொடுத்தார். அதில் சிவகாமியின் சபதம் ஆரம்பக் கட்டத்தின் கல்கியில் வரையப்பட்ட படங்களும் உள்ளன.linocut சித்திரங்கள்.
சூடாமணியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அவரது நெருங்கிய நெடுநாள் சினேகிதி M.S.ராஜலக்ஷ்மி.
purasaiwalkam- kelly’s அருகே அவர் வீடு.
அவர் பழக்கவும் இனியவர், பரண்ட்க வாசிப்பு அனுபவம் உள்ளவர்.
ஆழ்ந்த இரங்கல்கள் !
🙁
தலை சிறந்த எழுத்தாளர். படித்த பிறகு, கதை வந்து, வந்து போகும். பிறகு நிலைத்து நின்று விடும். எனக்கு விசனம். இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேந்
60-களுன் கதைசொல்லிகள் என்றால் முதலில் நினைவில் வரும் பெயர் சூடாமணிதான். பள்ளிப்பருவ காலத்திலிருந்து கல்லூரியில் இலக்கியப் பாதை மாறும்வரை அவருடைய எல்லாக் கதைகளையும் படித்திருக்கிறேன். அவருடைய முதல் சிறுகதைத் தொகுதியில் ஓர் அபூர்வமான புகைப்படம் உண்டு என்பார் திருப்பூர் கிருஷ்ணன் – சூடாமணியில் இளம் வயது புகைப்படம்.
அவர் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்
இந்தச் செய்தி அறிந்து வருந்துகிறேன். அமுதசுரபியில் இருந்தபோது, அவரிடம் தொலைபேசியில் பேசி, கதை கேட்டுப் பெற்று வெளியிட்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டது போலவே, ‘பிரசுரிக்க இயலாவிடில் திருப்பி அனுப்புங்கள்’ என ஒவ்வொரு முறையும் எழுதுவார். ‘தமிழில் எழுதப்படும் உலகச் சிறுகதை’ என ஆர்.சூடாமணியின் கதைகளைத் திருப்பூர் கிருஷ்ணன் புகழ்வார். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
ஆர். சூடாமணியின் நாகலிங்க மரம் என்னும் சிறுகதை எந்தத் தொகுப்பில் உள்ளது என்று தெரிந்து சொல்ல முடியுமா? தெரிந்தால்,
அவர் ஞாபகார்த்தமாக வலையேற்றுவேன்.
நன்றி,
நா. கணேசன்
எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.
நா. கணேசன் சொன்ன கதையின் பெயர் நாகலிங்க மரமா இல்லை நாகலிங்கப்பூக்களா?
தொண்ணூறுகளில் தில்லி தூர்தர்ஷனுக்காக 26 இந்தியப்பெண் எழுத்தாளர்களின் ஒரு கதையை ஹிந்தியில் நாடக ஆக்கம் செய்தார் சர்தார்ஜியான பாபி பேதி (இவர் தான் அருந்ததிராயின் எலக்ட்ரிக் மூன், மங்கள் பாண்டே போன்ற படங்களுக்கு தயாரிப்பாளர்). அதற்கு தமிழில் நான் தேர்ந்தெடுத்த ஒரு கதை ஆர் சூடாமணியின் நாகலிங்க மரம்/பூக்கள். அதற்கான சம்மதத்தை என்னிடம் சொல்லி வாங்கித்தரச்சொன்னார் பேதி. அவரது சென்னை விலாசம் தேடிப்பிடித்து போட்ட கடிதத்துக்கு நான்கு நாட்களில் அனுமதியளித்தார் சூடாமணி.
தில்லியில் என் வீட்டில் நடந்த படப்பிடிப்பில், என் மனைவி மகளுடன் நானும் நடித்தது ஞாபகம் வருகிறது. 26 நிமிஷங்களில் இழுவையில்லாத கச்சிதமான ஒலிபரப்புகள். மஹாஸ்வேதா தேவி,அம்ருதா ப்ரீதம் போன்றவர்களின் 26 கதைகளும் அந்தவரிசையில் வந்தன. தில்லி தூர்தர்ஷன் அவைகளை ஆர்க்கைவில் காப்பாற்றி வருவதாக கேள்விப்பட்டேன்.
பாரதி மணி
தமிழ் இலக்கிய உலகில் ஆர்.சூடாமணிக்கு முக்கியமானதோரிடமுண்டு. ஆரவாரமில்லாமல், அமைதியாக ஆனால் தொடர்ச்சியாக எழுதி வந்தவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதுமாற்றல் மிக்க படைப்பாளி. ஒரு காலத்தில் கல்கியில் இவரது சிறுகதைகள் அதிகம் வெளிவந்தததாக ஞாபகம். ‘அழியாச்சுடர்கள்’ வலைப்பதிவில் இவரது சிறுகதைகளான ‘இணைப்பறவை’, ‘பூமாலை’ ஆகியவை பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. பெண்படைப்பாளிகளில் தவிர்க்கப்பட முடியாதவர். இவரைப் பற்றியும், இவரது படைப்புகள் பற்றியும் விரிவான ஆய்வுகளும், வாசிப்புகளும் செய்வதவசியம். அதுவே நாம் இவருக்குச் செய்யக்கூடிய முறையான அஞ்சலியாகவிருக்க முடியும்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்!
[…] பா. ராகவன் அவருக்கு ஒரு நல்ல அஞ்சலி எழுதி இருக்கிறார். பேராசிரியை எம்.ஏ. […]
may her soul rest in peace.she was a classy writer…
சூடாமணி – ந.வினோத்குமார், படம் : எம்.உசேன்
”அவள் விரிவு, அவள் முழுமை, அவள் பெருக்கம் – அவற் றைப் பிறப்பு உரிமைகளா கக் கேட்கும் முதிர்ச்சியல்லவா அவளுடை யது? அவளை எதிலும் அடைக்க முடியாது. தளைப்படுத்த முடியாது. அவள் ஒரு சுதந்திர ஜீவன். சிறையும் விடுதலையும் நாமாக ஆக்கிக்கொள்வதுதானே? அவள் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஜீவன்!’
– எழுத்தாளர் ஆர்.சூடாமணி எழுதிய ‘நான்காம் ஆசிரமம்’ கதையின் வரிகள் இவை. கிட்டத்தட்ட அவரும் இப்படியாகத்தான் வாழ்ந்தவர். சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மூலம் எழுத்துலகில் தனக்கென அழுத்தமான தடம் பதித்தவர் சூடாமணி. சிறு வயதில் தாக்கிய அம்மை நோயின் பாதிப்பு, கை, கால்களின் எலும்பு வளர்ச்சியைப் பாதித்திருக்கிறது. அந்தப் பாதிப்பு குறித்த கேள்விகளையும் பார்வைகளையும் எதிர்கொள்ளத் தயங்கி, வீடெனும் கூட்டுக்கு உள்ளேயே தன் உலகை அமைத்துக் கொண்டவர் சூடாமணி. ஆனால், அவர் படைத்த சிறுகதைகள் மனித மனத்தின் விசித்திரங்கள் மீது எல்லை கடந்து ஊடுருவி வெளிச்சம் பாய்ச்சின!
img: சூடாமணி பாரதி
சிறுகதை, ஓவியம் மீது ஆர்வம்கொண்டு இருந்த சூடாமணி, தான் இறப்பதற்கு முன் 10 கோடி மதிப்பு உள்ள சொத்துகளைத் தானமாக வழங்கி இருக்கிறார். அவருடைய 4.5 கோடி மதிப்பு உள்ள வீடு மற்றும்வம்சா வழியாக வந்த சுமார் 6 கோடி மதிப்பு உள்ள சொத்துகளை, ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் விடுதி, ராமகிருஷ்ணா மடத்தின் மருத்துவமனை, வி.ஹெச்.எஸ். ஆகிய அமைப்புகளுக்குத் தானமாகக் கொடுக்கச் சொல்லி உயில் எழுதிவைத்து இருக்கிறார். இந்தச் சொத்துக்களின் விற்பனை மற்றும் விநியோகத்தின் பொறுப்புகளை நீதிபதி சந்துருவின் மனைவி பேராசிரியர் பாரதியிடம் ஒப்படைத்திருந்தார் சூடாமணி. 2010-ல் சூடாமணி இறந்த பிறகு, வீட்டை விற்றுக் கிடைத்த 4.5 கோடியை 2011-ல் மூன்று அமைப்புகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்கிய பாரதி, 6 கோடியை கடந்த வாரம் சம்பந்தப்பட்ட நிறுவனங் களுக்கு வழங்கினார்.
சூடாமணியுடன் தனக்கு இருந்த நெருக்கம்பற்றி மனம் திறந்து பேசினார் பாரதி. ”25 வருஷங்களுக்கு முன்னாடி நான் ‘கல்கி’யில் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, சூடாமணியம்மா கதைகள் எழுதி அனுப்பு வாங்க. கதைக் கட்டுக்குள்ளேயே ஒரு கவரும் வெச்சு அனுப்புவாங்க. ஒருவேளை கதை நல்லா இல்லைன்னா திருப்பி அனுப்பும் சிரமத்தை நமக்கு கொடுக்கக் கூடாதுனு அப்படிப் பண்ணுவாங்க. அவங்களோட ஒவ்வொரு கதை வந்ததும் படிச்சிட்டு, ‘ரொம்ப நல்லா இருந்தது’னு உடனே நான் தொலைபேசியில் பாராட்டுவேன். அப்படித்தான் சூடாமணியம்மா எனக்குப் பழக்கம்!
வீட்ல வெச்சே சூடாமணியம்மாவுக்கு அவங்க அம்மா கனகவல்லி, படிப்பு, ஓவியம் சொல்லிக் கொடுத்தாங்க. வீடே பள்ளி என ஆன பிறகு, எப்பவும் வாசிச் சுட்டே இருப்பாங்க சூடாமணியம்மா. நிறைய எழுத ஆரம்பிச்சாங்க. அவங்க முதல் கதை ‘பரிசு விமர்சனம்’ 1954-ல் வெளியாச்சு. விகடனில் முத்திரைக் கதை கள்ல அவங்க கதை வந்திருக்கு.
நல்ல செல்வச் செழிப்பான குடும்பப் பின்னணியில் வளர்ந்தாலும், காந்திய வழியில் வாழ்ந்தாங்க சூடாமணியம்மா. சகோதரிகள் மூணு பேர் இறந்த பிறகு, அவங்க தனி மனுஷியாகிட்டாங்க. எழுத்து, புத்தகங் கள்தான் அவங்களுக்குத் துணையா இருந்துச்சு. அவங்க அம்மா கனகவல்லியிடம் இருந்த நெட்டிலிங்கம் மர சரஸ்வதி சிலைதான் எப்பவும் அவங்களுக்குத் துணை. வீட்டில் இருந்து மெரினாவுக்கு காரில் பயணம்… காருக்குள் உட்கார்ந்துக்கிட்டே கடற்கரையை ரசிப்பது… இதுதான் அவங்களோட ஒரே பொழுதுபோக்கு.
2006-ல் இந்த உயிலை எழுதினாங்க சூடாமணியம்மா. அப்பவே எனக்கு இந்த சரஸ்வதி சிலையையும் பரிசாக் கொடுத்துட்டாங்க!
அம்மா என்னை நம்பி ஒப்படைச்ச பொறுப்பை முடிச்சிட்டேன். ஆனா, இதோடு என் வேலை முடியலை. அவங்ககிட்ட இருந்த புத்தகங்களை ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்துக்குக் கொடுத்துட்டோம். அவங்களைப்பத்தி ஓர் ஆவணப் படம் எடுத்திருக்கேன். அவங்க எழுதின மொத்தக் கதைகளையும் ஒரே தொகுப்பாக் கொண்டுவரும் எண்ணம் இருக்கு.
சூடாமணியம்மா வரைஞ்ச ஓவியங்களை சில மாதங்களுக்கு முன்னாடி காட்சிக்கு வெச்சிருந்தோம். அந்த ஓவியங்களின் விற்பனை மூலம் வரும் தொகையையும் நல்ல காரியங்களுக்குச் செலவழிக்கலாம்னு நினைச்சோம். ஆனா, ‘1950-60கள் காலகட்டத்தில் பெண்கள் வரைந்த ஓவியங்கள்னு எதுவுமே இல்லை. இவங்க வரைந்த ஓவியங்கள் எல்லாம் ‘ஆர்க்கியாலஜிக்கல் வேல்யூ’ கொண்டவை. இவை எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டியவை. வித்துடாதீங்க’னு சொன்னாங்க ஆர்ட் கேலரியைச் சேர்ந்த ஓவிய ரசிகர்கள். அதனால, இப்போ அவங்க ஓவியங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இருக்கோம்.
சூடாமணியம்மா தானம் கொடுத்த தொகை, மாணவர்களின் படிப்பு, தொழு நோயாளிகளுக்கான சிகிச்சை, நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அறைனு நல்ல காரியங்களுக்குப் பயன்படுது. இன்னும் பல நல்ல விஷயங்களுக்குப் பயன்படும். ‘நீயே என் உலகம்’னு ஒரு கதை எழுதினாங்க சூடாமணியம்மா. அதில் நாயகன், ‘நான் சமர்த்தனான வியாபாரி. பெரும் செல்வத்தைக் கொடுத்து ஏழைகளின் புன்னகையை வாங்கி இருக்கிறேன்’னு ஒரு இடத்தில் சொல்வான். சூடாமணியம்மாவும் அப்படித்தான்!”
[…] குறிப்பு சூடாமணியைப் பற்றி அனுத்தமா பா.ரா.வின் அஞ்சலி விமலா ரமணியின் அஞ்சலி எம்.ஏ. […]
I used to read her short stories from my school days. I came to know her life
only after her passing away. I felt severe pain in my heart and even now whenever I recall. I do think in me her memories as in when at my leisure and while doing so TEARS COME OVER MY… My life as a Medic feel so similar to her
life and am facing the same problems (I FEEL SO…METHINKS SO) The severity can only be known by the concerned person. I do recall her memories as MY MOTHER.
May her soul rest in peace. Umar Basha