அஞ்சலி

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி

இங்கு லிங்க் கொடுத்த ஐபிஎன் லைவ் வீடியோ வேலை செய்யவில்லை. இனி அது வேலை செய்தும் உபயோகமில்லை.

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்தார் என்று சற்றுமுன் செய்தி வந்திருக்கிறது.

அவரோடு பயணம் செய்த நால்வரும் உயிர் இழந்திருக்கிறார்கள். மோசமான விபத்து. கர்னூலுக்கு எழுபது கிலோமீட்டர் தொலைவில் ருத்ரகுண்டா மலைப்பகுதியில் நிகழ்ந்திருக்கிறது. நேற்று காலை தொடங்கி ஒரு முழுநாள் தேடி இப்போது விபத்து நடந்திருப்பதையும் இறந்தவர் உடல்களையும்கண்டுபிடித்திருக்கிறார்கள். மோசமான வானிலை, கடும் மழை, தகவல் தொடர்புகளற்ற வனப்பகுதி எனப்பல காரணங்கள்.

ஆந்திர மாநிலத்தில் பன்னெடுங்காலம் கோலோச்சிய தெலுகு தேசம் கட்சியை அகற்றிவிட்டுக் காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமரச் செய்தவர் ராஜசேகர ரெட்டி. திறமையான நிர்வாகி என்று சொல்லப்பட்டவர்.

அவரது மரணம் ஆந்திர காங்கிரசுக்கு மிகப்பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை.

Share

8 comments

  • நான் ஹைதராபாதில் வேலை செய்தபோது, சந்திரபாபு நாயுடு ராஜ்ஜியம்தான். அவரைப்பற்றி மீடியா உருவாக்கிய பிம்பம் + நாங்களும் அப்போதுதான் ஐடி துறைக்குள் நுழைந்திருந்தோம் என்பதால் அவர்மீது ஏற்பட்ட பிரம்மிப்பு சேர்ந்து, நாயுடுவை யாராலும் ஜெயிக்கமுடியாது என்று நினைத்துக்கொண்டிருந்தோம்.

    அடுத்து வந்த தேர்தலில் நாயுடுவை வொய்.எஸ்.ஆர். கட்சி ஓட ஓட விரட்டியபோது, எங்களுக்கு அது நம்பமுடியாத ஆச்சர்யமாக இருந்தது. யார்ய்யா இந்த ஆள் என்று நிமிர்ந்து பார்த்தோம்.

    அதன்பிறகு, நாயுடு தோல்வியைத் தாங்கமுடியாமல், தன்னுடைய எதிர்க்கட்சிப் பணிகளைக்கூடச் சரிவர நிறைவேற்றமுடியாமல் மக்கள் மதிப்பில் ரொம்பத் தாழ்ந்துபோனார், அவருடைய குடைச்சல்களைத் தாங்கிக்கொண்டு வொய்.எஸ்.ஆர். ஐந்து வருடம் ஆட்சி நடத்தியதே பெரிய விஷயம்தான்.

    சென்ற தேர்தலின்போது, ஆந்திரா நண்பர்கள் எல்லோரும் அடித்துச் சொன்னார்கள், ‘மறுபடி வொய்.எஸ்.ஆர்.தான் ஜெயிப்பார், காரணம் நாயுடுவோட சொதப்பல்கள் இல்லை, நிஜமாவே அவர் மாநிலத்துக்கு நிறைய செஞ்சிருக்கார் – ஹைதராபாத் நகரவாசிகளுக்குமட்டுமின்றி, எல்லாருக்கும்’

    இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது – வொய்.எஸ்.ஆர். ராஜ்ஜியத்தில் நான் ஆந்திராவில் வாழ்ந்ததில்லை, ஆனால் அவர் மரணம் மிகவும் வருத்தம் தருகிறது, நிறையத் திட்டங்களோடும் கனவுகளோடும் வாழ்ந்த மனிதர் என்பதாலும், இப்படி ஓர் அகால மரணம், அதுவும் இத்தனை மோசமானவகையில் அவருக்கு நேர்ந்திருக்கவேண்டாம் என்பதாலும்.

    RIP YSR!

    – என். சொக்கன்,
    பெங்களூர்.

  • பேரிழப்பு என்பதில் சந்தேகமே இல்லை. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறதுபாரா. அன்னாரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்வோம்.

  • என்.வி.என்.சோமுவின் விபத்து மரணத்துக்குப் பிறகு கடும் அதிர்ச்சியை தந்திருக்கும் மரணம் 🙁

  • ஆமாம் இது மிக மிக வருத்தமான செய்திதான். இந்த தேர்தலில், சிரஞ்சீவி, சந்திரபாபு இவர்களுக்கு இடையே கடுமையான போட்டியில் இவர் வெற்றி பெற்றது மிகப் பெரிய விசயம்.

    நீண்ட காலம் எதிர்கட்சி தலைவராக இருந்து, மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை நிறுவியவர். சொக்கன் சொன்னது போல ஆந்திராவில் நடுத்தர மக்கள் அனைவருக்கும் நிறைய செய்து இருக்கிறார் என்று எனது தெலுங்கு நண்பர்கள் பலர் சொன்னார்கள்.

    இன்னும் 5 ஆண்டுகள் இருந்து இருந்தால் மேலும் ஆந்திராவிற்கு பல நல்லது செய்து இருப்பார்!

    காலம் அவரை பறித்து கொண்டது. அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

    மயிலாடுதுறை சிவா…

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி