ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 28

சென்னை போன்ற பெரிய நகரங்களில் விலைவாசி உயர்வை உணவகங்களைக் கொண்டு கண்டறிய இயலாது. விலைவாசி அவ்வளவாக உயராத காலங்களிலும் சிறிய அளவிலாவது விலை வித்தியாசங்களைக் காட்டிக்கொண்டே இருப்பார்கள். எனவே விலைவாசி உயர்வின்போது உணவுப் பொருள்களின் விலையேற்றம் அவ்வளவாக அதிர்ச்சி தராது என்பது இதன் பின்னணியில் உள்ள உளவியல். காய்கறிகளின் விலை – குறிப்பாக வெங்காய விலை உயரும்போது நாளிதழ்களில் அது செய்தியாக வரும். அப்போது ஓட்டலுக்குச் சாப்பிடச் செல்லும் ஒருவர் எப்போதும் ஆகிற செலவில் இரண்டு ரூபாய் கூடுதலாக ஆகியிருந்தால் அதைப் பொருட்படுத்த மாட்டார். ஏனெனில் வெங்காய விலை உயர்வைக் குறித்து அவர் அன்று காலை தினசரியில் படித்திருப்பார். ஆனால் உண்மையில் என்ன நடக்கும் என்றால், அவர் எதிர்பார்த்துச் சென்றது போல விலை ஏறியிருக்காது. முதல் வாரம் அவர் சாப்பிட்டபோது என்ன விலை இருந்ததோ, அதுவேதான் இருக்கும். இது ஒரு வாடிக்கையாளருக்கு மிகுந்த நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும். ஆனால் அந்த இரண்டு ரூபாய் விலையேற்றம் என்பது ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டு, படிப்படியாக செயல்படுத்தப்பட்டிருக்கும் என்பது அவருக்குத் தெரியாது. மேலும் ஒரு மாதம் கழித்து, விலை சிறிது குறையத் தொடங்கும்போது உணவுப் பொருள்களின் விலை சிறிது ஏறும். என்றோ ஏறியிருக்கவேண்டிய விலை இப்போதுதான் ஏறுகிறது என்று வாடிக்கையாளர் சமாதானம் கொள்வார். அது அடுத்த விலையேற்ற நடவடிக்கைக்கு முன்னோட்டம் என்பது அவருக்குத் தெரியாது. பெரு நகரங்களில் சாப்பாட்டுச் செலவு கட்டுக்கடங்காமல் போவதன் பின்னணியை இங்கிருந்துதான் ஆராயத் தொடங்கவேண்டும்.

எனக்கு நினைவு தெரிந்து சரவண பவனில் ஐந்து ரூபாய்க்குக் காப்பி சாப்பிட்டிருக்கிறேன். இன்று அங்கே ஒரு காப்பியின் விலை நாற்பது ரூபாய். இரண்டு இட்லி முப்பத்தேழு ரூபாய். தோசையின் விலை ஐம்பது ரூபாய். மதியச் சாப்பாடு 115 ரூபாய்.

சரவண பவனை ஓர் எளிய புரிதலுக்காகச் சொன்னேன். ஒவ்வொரு உணவகமும் அதனதன் அந்தஸ்துக்கு ஏற்ப இப்படித்தான் விலைகளைத் தீர்மானிக்கின்றன. வசதி உள்ளவர்கள், விலை குறித்த பெரிய விமரிசனம் இல்லாதவர்கள் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் எண்ணிச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களால் அது இயலாது. அவர்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட உயர்விலை அச்சுறுத்தல்கள் இல்லாத மெஸ்கள்தாம் புகலிடம்.

எனக்கு ஓட்டல்களில் சாப்பிடுவதைவிட மெஸ்களில் சாப்பிடுவது பிடிக்கும். விலை மட்டுமல்ல காரணம். சென்னையில் பல பெரிய உணவகங்களைவிட மெஸ்களில் உணவின் தரம் நன்றாக இருக்கும். இந்த இடத்தில் உடனடியாக ஒன்றைச் சொல்லிவிடத் தோன்றுகிறது. தரம் நன்றாக இருக்கும் வரைதான் மெஸ்கள் உயிருடன் இருக்கும். தரம் போய்விட்டால் மெஸ்கள் நீடிக்காது. (தரம் போன பின்பும் சரவண பவன் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருப்பதைக் காணலாம்.)

தி நகர் நடேசன் பூங்காவின் பின்புறம் கவிஞர் கண்ணதாசன் வீட்டு வாசலில் அவரது மகள் ஒரு மெஸ் நடத்துவார். கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் அநேகமாக வாரம் இரண்டு மூன்று முறையாவது அங்கே போய்ச் சாப்பிடுவேன். மாலைச் சிற்றுண்டி அவ்வளவு நன்றாக இருக்கும். இஷ்டத்துக்கு என்னென்னவோ சாப்பிட்டுவிட்டு இறுதியில் கணக்குப் போட்டுப் பணம் கொடுக்கும்போது இருபது ரூபாய்க்கு மேல் போகாது. சாப்பிட்ட பண்டங்களின் ருசி அப்போது இன்னும் அதிகரித்தாற்போலத் தோன்றும்.

கண்ணதாசன் மெஸ்ஸின் அதே ருசியைக் கோடம்பாக்கம் குரு மெஸ்ஸில் சில வருடங்களுக்கு முன்னர் கண்டேன். (சில வருடங்களுக்கு முன்புதான். இப்போது சகிக்க முடியாத தரத்துக்குப் போய்விட்டார்கள். மூடும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். கோடம்பாக்கத்தில் மட்டும் இதுவரை ஏழு மெஸ்கள் மூடப்பட்ட சரித்திரம் அறிவேன்.) அலுவலகத்தில் தங்கிவிடுகிற நாள்களில் காலைச் சிற்றுண்டியைப் பெரும்பாலும் குருவில்தான் சாப்பிடுவேன். இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு கல் தோசை அல்லது பூரி கிழங்கு அல்லது பொங்கல் சாப்பிட்டுவிட்டு முப்பது ரூபாய் கொடுத்திருக்கிறேன். ஒரே ஒரு சாம்பார், சட்னிதான் இருக்கும். எல்லாவற்றுக்கும் அதுதான். ஆனாலும் ருசி பிரமாதமாக இருக்கும். வெகு காலம் கழித்து குருவில் வடை கறி அறிமுகப்படுத்தினார்கள். தொட்டுக்கொள்ள வடைகறி வேண்டுமென்றால் தனியே பதினைந்து ரூபாய். சிறிய பிளாஸ்டிக் கப்பில் கொண்டு வந்து வைப்பார்கள். அநேகமாக குருவின் பொற்காலம் அப்போதுதான் முடிவடைய ஆரம்பித்தது என்று நினைக்கிறேன்.

எல்டாம்ஸ் சாலை கிழக்கு அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது கோடைக் காலங்களில் அலுவலக நேரத்தை மாற்றிவிடுவோம். காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை. வெயிலுக்கு முன்னால் யோசிப்பது, எழுதுவது, எடிட் செய்வது போன்ற பணிகள் சிறப்பாக நடக்கும். பதினொரு மணிக்கு மேல் என்னதான் குளிர் சாதன அறை என்றாலும் மனம் வேலையில் நிற்காது.

அந்த நாள்களில் மைலாப்பூர் ஜன்னல் மெஸ், பாரதி மெஸ், ராயர் மெஸ் என்று நாளொரு மெஸ்ஸில் இருந்து காலைச் சிற்றுண்டி வாங்கி வருவோம். சமயத்தில் அந்தச் சிற்றுண்டி அனுபவத்தை மேலும் சிறப்பிக்க, சைதாப்பேட்டை மாரி ஓட்டலில் இருந்து வடைகறி மட்டும் தருவிப்போம். கிழக்கு நண்பர்கள் வேலையில் செலுத்திய அதே தீவிரத்தை இம்மாதிரி சங்கதிகளிலும் காட்டுவார்கள்.

இந்த மெஸ்களுக்கென்று நிரந்தர வாடிக்கையாளர்களும் ரசிகர்களும் காலம்தோறும் இருப்பார்கள். மெஸ் முதலாளிகளிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் எல்லோருமே ஒரே போல, இது ஒரு வியாபாரமே என்றாலும் சேவையும் சேர்ந்தது என்று சொல்வார்கள். பெரிய உணவகங்களுடன் ஒப்பிட்டு அவர்களுடைய விலை விகிதங்கள் குறைவாக இருப்பதை அறிந்து நாமும் ஒப்புக்கொள்வோம். உண்மையில் விலையோ ருசியோ மட்டுமல்ல. மெஸ் நடத்துபவர்கள் தமது வாடிக்கையாளர்களிடம் காட்டுகிற அன்னியோன்னியமும் நட்புணர்வுமே மக்களைத் திரும்பத் திரும்ப அங்கே செல்ல வைக்கின்றன.

மேன்ஷன்களிலும் அறைகளிலும் தங்கி வேலை பார்க்கும், வேலை தேடும் இளைஞர்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பார்க்கலாம். சென்னையின் ஆகச் சிறந்த உணவகம் எதுவென்றால், உடனே ஏதாவது ஒரு ஆந்திரா மெஸ்ஸைச் சொல்வார்கள். சென்னைக்கு ‘அன்லிமிடெட் உணவு’ என்னும் கலாசாரத்தை முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள்தாம். எவ்வளவு பணம் செலவழிக்கிறோம் என்பதல்ல; உண்பதில், முழு நிறைவு கிடைக்கிறதா என்பதுதான் உணவுத் தொழிலின் வெற்றி சூட்சுமம்.

என் நண்பர் ஒருவர் பல வருடங்களாகக் கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சிலர் அறையில் தங்கியிருக்கிறார். சினிமாவில் அவர் ஓர் இணை இயக்குநர். தனக்கான தனி வாய்ப்புக்காகப் போராடிக்கொண்டிருப்பவர். கையில் காசு இருந்தாலும் சரி. இல்லாது போனாலும் சரி. ஒரு குறிப்பிட்ட தள்ளுவண்டி மெஸ்ஸில்தான் அவர் உணவு உட்கொள்வது வழக்கம். அங்கே இட்லி ஒரு ரூபாய். தோசை மூன்று ரூபாய். மதிய உணவு ஒரு பிளேட் பத்து ரூபாய். பொருளாதாரக் காரணங்களால்தான் அவர் அங்கே சாப்பிடுகிறார் என்றாலும் ருசி முக்கியமல்லவா? இதைக் கேட்டால் அவர் எப்போதும் சொல்லும் பதில் ஒன்றுதான். ‘அவ்வளவா நல்லா இருக்காதுதான். ஆனா ஒரு நாள் போகலன்னாலும் மறுநாள் நேத்து ஏன் வரல, உடம்பு கிடம்பு சரியில்லியா, டாக்டர பாத்தியா, கஷாயம் வெச்சித் தரவான்னு அந்தம்மா அக்கறையா கேக்கும். சிட்டிக்கு வந்து பதினாலு வருசமாச்சு. எனக்குன்னு ஒருத்தங்க இருக்காங்கன்னு நினைக்க வெச்சிடுறாங்கல்ல? அவ்ளதான்’ என்பார்.

திருவல்லிக்கேணி மெஸ்கள், மைலாப்பூர் மெஸ்கள், மாம்பலம் மெஸ்கள், நங்கைநல்லூர் மெஸ்கள், வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம், விருகம்பாக்கம் பகுதி மெஸ்கள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாகக் கவனித்தால், ஒவ்வொரு மெஸ்ஸிலும் ஏதாவது ஒரு பலகாரம் அவர்கள் பெயர் சொல்லும் தரத்தில் இருக்கும். ஒன்றுதான்! அந்த ஒன்றில் செலுத்தும் கவனமே அவர்களை நீடித்திருக்கச் செய்கிறது.

முன்பெல்லாம் தமிழகத்தின் பல ஊர்களில் படிக்கவோ வேலை பார்க்கவோ செல்லும் திருமணமாகாத இளைஞர்கள் யாராவது ஒருவர் வீட்டில் தங்கிக்கொண்டு, மாதம் இவ்வளவு என்று சாப்பாட்டுக்குத் தனியே பேசிக்கொண்டு வாழ்ந்ததன் தொடர்ச்சியாகத்தான் மெஸ்கள் உருவாகியிருக்க வேண்டும். பிறகு பாரம்பரிய உணவகங்கள். அதன்பின் நவ நாகரிக ஓட்டல்கள். இன்று ஸொமாட்டோ, ஊபர் ஈட்ஸ் போன்ற டோர் டெலிவரி நிறுவனங்கள் மூலமாக மட்டும் உணவு வழங்கும் விரிச்சுவல் மெஸ்கள் ஏராளமாக உருவாகிவிட்டன. இங்கெல்லாம் போய் உட்கார்ந்து சாப்பிட முடியாது. அதற்கெல்லாம் இடம் இருக்காது. வீடுகளில் தயார் செய்து, ஆன்லைன் ஆர்டர்களின் பேரில் தாயுள்ளத்தை சிந்தாமல் பேக் செய்து அனுப்பிவைக்கிறார்கள்.

கோடம்பாக்கத்தில் என் அலுவலகம் இருக்கும் வீதியில் மட்டும் இத்தகைய ஆன்லைன் உணவகங்கள் மூன்று உள்ளன. அந்த வீதியில் வசிக்கும் யாரும் அங்கே சாப்பிட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் எங்கெங்கிருந்தோ இரு சக்கர வாகனதாரிகள் வந்து பார்சல் வாங்கிப் போய்க்கொண்டே இருப்பார்கள். பக்கத்து வீட்டுக்காரர் ருசி பார்க்க விரும்பினாலும் செயலி மூலம்தான் ஆணையிட வேண்டும்.

காலம் கனகச்சிதமாகத் தன்னை மாற்றிக்கொண்டே இருக்கிறது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி