நகரம்

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27

மௌபரீஸ் ரோடு என்று சென்னையில் ஒரு சாலை இருந்ததைக் குறித்து கண்ணதாசனின் வனவாசத்தில்தான் முதலில் அறிந்தேன். ஒரே அத்தியாயத்தில் இரண்டு மூன்று இடங்களில் கண்ணதாசன் அந்தச் சாலையைப் பற்றி அதில் எழுதியிருப்பார். முதல் முதலில் சென்னைக்கு வந்து இறங்கியதும் மௌபரீஸ் ரோடில் இருந்த சக்தி காரியாலயத்துக்குச் சென்றது பற்றியும் அங்கே தனது பழைய நண்பர் வலம்புரி சோமனாதனைச் சந்தித்தது பற்றியும் ஓரிடத்தில். ஒரு ரிக்‌ஷாக்காரன் அவரை மௌபரீஸ் ரோடில் ஏற்றிக்கொண்டு விலைமாது ஒருத்தியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றது குறித்து இன்னோர் இடத்தில். மௌண்ட் ரோடில் இருந்த பசட்டோ ஓட்டலில் மது அருந்திவிட்டு நண்பர்களுடன் மௌபரீஸ் ரோடுக்கு ஆளுக்கொரு ரிக்‌ஷாவில் வந்தது குறித்து வேறொரு இடத்தில். (‘நான்கு ரிக்‌ஷாக்கள் பாதையிலே, அதில் நான்கு பேர் போதையிலே.’)

ஒரு பழக்கம் இருந்தது. எந்தப் புத்தகத்திலாவது எந்த இடத்தைக் குறித்தாவது யாராவது எழுதி, அது கவர்ந்துவிட்டால் உடனே அங்கு போய்வரத் தோன்றும். மோகமுள் படித்தபோது கும்பகோணத்துக்குப் போய்த் திரிந்திருக்கிறேன். மவே சிவகுமாரின் வேடந்தாங்கல் வாசித்துவிட்டு நெய்வேலிக்குச் சென்று நாளெல்லாம் அலைந்துவிட்டு, பெரும் பசியுடன் வடலூருக்குச் சென்று சத்திய ஞான சபையில் தரும சாப்பாடு சாப்பிட்டேன். புளிய மரத்தின் கதையின்போது நாகர்கோயில். கல்லுக்குள் ஈரம் வாசித்து முடித்ததும் திருநெல்வேலி சிந்துபூந்துறை. 18-19 வயதில் இப்படிச் சுற்றிய ஊர்கள் பல. பின்னர் சில காலம் கழித்து ஒரே ஒருமுறை ஒரு நாவலால் தூண்டப்பட்டு ஓரிடத்தைத் தேடிச் சென்றது விஷ்ணுபுரத்தின்போது நிகழ்ந்தது. திருவட்டாறு.

வனவாசத்தை முதல் முதலில் படித்தபோது என் வயது பதினாறு. அப்போது எனக்கு டிடிகே சாலைதான் அவர் சொல்லும் மௌபரீஸ் சாலை என்று தெரியாது. என் தந்தையிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, அன்றே டிடிகே சாலைக்கு ஒரு சுற்றுலா செல்லும் ஆர்வத்துடன் கிளம்பினேன். போட் கிளப் சாலை தொடங்கும் இடத்தில் இருந்து ம்யூசிக் அகடமி வரை நிதானமாக வேடிக்கை பார்த்தபடி நடந்தேன். சென்னையின் மரங்கள் அடர்ந்த மிகச் சில சாலைகளுள் அது ஒன்று. இன்றும் அதன் மிச்சம் சிலவற்றைப் பார்க்க முடியும். 1986ம் வருடம் இன்னும் நிறையவே மரங்கள் இருந்தன. அப்படியானால் கண்ணதாசன், சக்தி காரியாலயத்தில் வந்திறங்கிய நாளில் அந்தச் சாலை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன்.

1960 – 65 வரையிலுமே மௌபரீஸ் சாலையில் ஏராளமான ஆலமரங்கள் இருந்திருக்கின்றன. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் முதல் அக்கவுண்டண்டாக நியமிக்கப்பட்ட ஆங்கிலேய அதிகாரி ஜார்ஜ் மௌபரே என்பவர் இந்தச் சாலையில் 105 ஏக்கர் பரப்பளவில் ஒரு தோட்ட பங்களா கட்டி வசித்திருக்கிறார். அதுதான் பின்னாளில் அடையாறு கிளப் ஆனது. பதினெட்டாம் நூற்றாண்டில் மௌபரே பங்களா கட்டிய நாளில் இருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பது வருடங்கள் வரை இந்தச் சாலையில் மரங்களைத் தவிர வேறொன்றும் கிடையாது. மிகவும் சொற்பமான கட்டடங்களே இருந்திருக்கின்றன. பிறகு படிப்படியாக மரங்கள் குறைந்து கட்டடங்கள் அதிகரிக்கத் தொடங்கின. கண்ணதாசன் சென்னைக்கு வந்த காலத்தில் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் போகத் தொடங்கியிருந்தன. நான் மௌபரீஸ் சாலையைத் தேடிக்கொண்டு சென்றபோது இரு சக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் பேருந்துகளும் ஆக்கிரமித்திருந்தன.

இப்போதுகூடத் தோன்றும். அத்தனைக் குறுகலான சாலையில் எதற்கு அவ்வளவு போக்குவரத்து? இன்றைக்கு டிடிகே சாலையில் ஒரு மேம்பாலம் இருக்கிறது. ஆனாலும் பாலத்தின்மீது போக்குவரத்து அவ்வளவாக இருக்காது. கீழேதான் நெரிசல் அம்மும். கம்பெனிகள், கடைகள், உணவகங்கள், கண்காட்சி அரங்குகள், கச்சேரி நடக்கும் சபாக்கள் இவ்வளவுக்கும் இடையே வீடுகளும் உண்டு. நகரின் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் அந்தச் சாலை ஒரு காலக்கட்டத்தில் தீவிரமான இலக்கிய நாட்டம் கொண்டவர்களின் சரணாலயமாகவும் விளங்கியது. கணையாழி அங்கிருந்துதான் அப்போது வந்துகொண்டிருந்தது.

1989ம் ஆண்டு என்று நினைக்கிறேன். ஓரிரு வருடங்களாகத் தேடிக்கொண்டிருந்த கணையாழி பத்திரிகையை முதல் முதலாக கிண்டி ரயில்வே ஸ்டேஷன் புத்தகக் கடையில் பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கி அங்கேயே அமர்ந்து வரி விடாமல் படித்து முடித்தேன். நான் படித்த அந்த முதல் இதழில் ஃபிர்தௌஸ் ராஜகுமாரன் என்பவர் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. நாம் எப்போது கணையாழியில் எழுதுவோம் என்று அந்தக் கணம் முதல் ஏங்கத் தொடங்கினேன். ஓராண்டு முயற்சிக்குப் பிறகு அது நடந்தது. என் கதை ஒன்றைப் பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் கடிதம் எழுதியிருந்த கஸ்தூரி ரங்கன் அவர்கள், நேரில் அலுவலகத்துக்கு வரும்படி அதில் குறிப்பிட்டிருந்தார்.

கண்ணதாசன் எத்தகைய உணர்வுடன் அந்தச் சாலைக்கு முதல் முதலில் வந்திருப்பார் என்று அன்று என்னால் உணர முடிந்தது. எதிர்காலம் குறித்த மிகப்பெரிய நம்பிக்கையும் கனவும் லட்சிய வெறியும் முட்டி மோத, கணையாழி அலுவலகத்தில் ஆசிரியரைச் சந்தித்தேன். அறிமுகப்படுத்திக்கொண்டதும், ‘பத்தொம்பது வயசுன்னு சொல்லியிருந்திங்க. கதைய படிச்சதும் அது உண்மையாத்தான் இருக்குமான்னு நேர்ல கூப்ட்டுப் பாத்துடலாம்னு தோணித்து. அதான் வரச் சொன்னேன்’ என்று சொன்னார். அது இன்னும் மகிழ்ச்சியளித்தது. ‘தொடர்ந்து எழுதுங்க’ என்று சொன்னார்.

அன்று முதல் ஒவ்வொரு மாதமும் அவரைப் பார்க்கவும் இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் டிடிகே சாலைக்குப் போகத் தொடங்கினேன். கஸ்தூரி ரங்கன் வீட்டுக்குப் பக்கத்து வீடுதான் சீனிவாச காந்தி நிலையம். மாதம் ஒரு கூட்டம். ஒவ்வொரு மாதமும் பத்திரிகைகளில் வெளியான கதைகளில் சிறந்த சிலவற்றைக் குறித்துப் பேசி, இறுதியில் ஒரு கதையை அம்மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்வு செய்வார்கள். இது நடந்ததும் யாராவது ஒருவர் ஏதேனும் ஒரு பொருளில் சிறிது நேரம் பேசுவார். நிகழ்ச்சி முடிவில் கேள்வி பதிலுக்கு நேரம் இருக்கும். அப்படிப்பட்ட இலக்கியக் கூட்டங்கள் இன்று வழக்கொழிந்துவிட்டன. அன்று அக்கூட்டங்களுக்கு கஸ்தூரி ரங்கன், இந்திரா பார்த்தசாரதி இருவரும் தவறாமல் வருவார்கள். அசோகமித்திரன் வருவார். கவிஞர் வைத்தீஸ்வரன் வருவார். திருப்பூர் கிருஷ்ணன் வருவார். சென்னையில் இருந்தால் வெங்கட் சாமிநாதன் கண்டிப்பாக வருவார். மொழிபெயர்ப்பாளர் சௌரி வருவார். அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தால் அவ்வளவு அன்பாகப் பழகுவார்கள். எழுத்துக்குப் புதியவர்களை ஊக்குவிப்பதை ஒரு கடமையாகச் செய்த தலைமுறை அது. ஒருமுறை எம்.வி. வெங்கட்ராம் வந்திருந்தார். கஸ்தூரி ரங்கன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்த, கணையாழியில் வெளியான என் சிறுகதையை அவர் நினைவுகூர்ந்து பேசவும், எனக்குத் தலை சுற்றிக் கிறுகிறுத்துவிட்டது.

அப்போதெல்லாம் இலக்கியச் சிந்தனைத் தேர்வில் இடம் பெறுவதற்காகவே ஒவ்வொரு மாதமும் ஏழெட்டுக் கதைகள் எழுதுவேன். எந்த மாதத்திலாவது ஒரு கதை பிரசுரமாகியிருந்தால் அம்மாதக் கூட்டத்துக்கு மாலை ஐந்து மணிக்கே போய் உட்கார்ந்துவிடுவேன். என் கதையைப் பற்றி இன்று சொல்வார்களா, சிறந்த கதையாக அது தேர்வாகுமா என்று தவித்துக்கொண்டிருப்பேன். மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்வானால் அது ஆண்டுத் தொகுப்பில் இடம் பெறும். அந்தத் தொகுப்பின் சிறந்த ஒரு கதைக்கு விழா வைத்துப் பரிசளிப்பார்கள். தொண்ணூறுகளின் எழுத்துத் தலைமுறை அந்தப் பரவச அனுபவத்தை எண்ணிக் கனவு காணாமல் இருந்திருக்கவே முடியாது.

பொத்தி வைத்த பூந்தோட்டம் என்ற கதை முதல் முதலில் அப்படி எனக்கு இலக்கியச் சிந்தனையில் தேர்வானது. அலிடாலியா ராஜாமணி அந்தக் கதையை அப்போது தேர்வு செய்திருந்தார். பின்னாளில் எவ்வளவோ தேர்வுகள், எத்தனையோ பரிசுகள். ஆனால் அன்று அந்தச் சிறுகதைக்குப் பெற்ற ஐம்பது ரூபாய்ப் பரிசுக்கு நிகரே சொல்ல முடியாது.

டிடிகே சாலை என்றால் எனக்கு கஸ்தூரி ரங்கன், இந்திரா பார்த்தசாரதி, இலக்கியச் சிந்தனை. அவ்வளவுதான். இபா ஒரு சமயம் அமெரிக்காவில் இருந்து திரும்பியிருந்த விவரம் கேள்விப்பட்டு அவரைப் பார்த்துவிட்டு வர நானும் ஆர். வெங்கடேஷும் கிளம்பினோம். அன்றைக்குச் சென்னையில் பெரிய மழை. டிடிகே சாலையில் கணுக்காலுக்கு மேல் நீர் ததும்பி ஓடிக்கொண்டிருந்தது. தொப்பலாக நனைந்தபடி நாங்கள் இபா குடியிருந்த அபார்ட்மெண்ட்டின் வாசலுக்குச் சென்று அழைப்பு மணியை அழுத்தினோம். அது மதிய நேரம். உறங்கிக்கொண்டிருந்தவர், உறக்கம் கலைந்து எழுந்து வந்து கதவைத் திறந்தது மிகவும் சங்கடமாகிவிட்டது. தொந்தரவுக்கு மன்னிப்புக் கேட்டபோது இபா சொன்னார், ‘இதுக்கு எதுக்கு மன்னிப்பு? இப்படி யாராவது எதிர்பாக்காத நேரத்துல வந்து தொந்தரவு பண்ணணும்னுதானே அமெரிக்காலேருந்து கெளம்பி வந்தேன்?’

எல்லா இடங்களும் மனிதர்களால் ஆனவை. மகத்தான மனிதர்களால் சில இடங்கள் நினைவில் நிரந்தரமாகிவிடுகின்றன.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி