ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 29

மனக்கொந்தளிப்பு அதிகம் இருக்க வேண்டும். அல்லது, சிறிது சிறிதாக நிறைய தவறுகள் செய்திருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாவிட்டால் எதிலிருந்தாவது தப்பிப்பதற்கு மனம் தொடர்ந்து குறுக்கு வழிகளைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும். ஞானத்தேடல் என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் ஒரு தனி மனிதன் சன்னியாசத்தை விரும்புவதற்கு இந்த மூன்று காரணங்கள்தாம் இருக்க முடியும் என்பது என் அபிப்பிராயம். ஒரு காலக்கட்டத்தில் என்னிடம் இந்த மூன்று பிரச்னைகளுமே இருந்தன. நான் சரியில்லை என்ற குற்ற உணர்வே என்னைச் சரி செய்யும் காரணியாகப் பின்னணியில் வேலை பார்த்துக்கொண்டிருப்பதை அறியாமல், என்னைச் சரி செய்ய யாராவது கிடைப்பார்களா என்று நிறைய அலைந்திருக்கிறேன். பல சித்தர்கள், சன்னியாசிகள், மடாதிபதிகளுடன் பழகிய, சுற்றித் திரிந்த காலங்களில் பெற்ற அனுபவங்களில் சிலவற்றை யதியில் எழுதினேன். என்னை அறியாமல்கூட அதில் எழுதிவிடக் கூடாது என்று கவனமாக இருந்தது மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்துடன் எனக்கு இருந்த தொடர்பினைப் பற்றி.

மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் ஒரு விதத்தில் எனக்கு என் தந்தையைப் போன்றது. இது சிறிது உணர்ச்சிவசப்பட்டுச் சொல்வது போலத் தோன்றலாம். ஆனால் அப்படியல்ல. எதையுமே நேரடியாக போதிக்காமல், மௌனமாக உணரச் செய்து இந்த உலகில் எதையும் சமாளித்து வாழக் கற்றுக் கொடுத்தவர் என் தந்தை. மடமும் எனக்கு அதையே செய்தது.

விவேகானந்தர் 1893ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். சென்னையில் ராமகிருஷ்ண இயக்கத்தைப் பரவச் செய்ய முடிவு செய்துகொண்டு போனதும், சுவாமி ராமகிருஷ்ணானந்தர் என்பவரை அனுப்பிவைத்தார். அவரும் ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்களுள் ஒருவர். முதலில் திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில் இருந்து ராமகிருஷ்ண இயக்கம் செயல்பட ஆரம்பித்தது. பிறகு ஐஸ் ஹவுஸில் சில காலம் இயங்கியது. அதன்பின் கொண்டைய செட்டியார் என்பவர் மைலாப்பூரில் இருந்த தனது நிலத்தை அளிக்க, தற்போதுள்ள ராமகிருஷ்ண மடம் அங்கே உருவாகத் தொடங்கியது.

1986 முதல் நான் மடத்துக்குப் போய்க்கொண்டிருந்த நாள்களில் சுவாமி தபஸ்யானந்தா அங்கே தலைவராக இருந்தார். அவர் சுவாமி சிவானந்தரின் சீடர். இந்தியத் தத்துவங்களிலும் மேலைத் தத்துவங்களிலும் பெரும் பண்டிதர். ராமகிருஷ்ணானந்தரைக் குறித்த அவரது நூல், ஒரு வாழ்க்கை வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு உதாரணம். இதெல்லாம் பின்னாளில் நான் படித்தும் பழகியும் அறிந்தவை. முதல் முதலில் அவரைச் சந்தித்த உடனேயே, ‘நான் துறவியாக முடிவு செய்திருக்கிறேன். என்னை மடத்தில் சேர்த்துக்கொண்டு தீட்சை கொடுங்கள்’ என்று கேட்டேன். அவர் சிரிக்கவோ, கோபப்படவோ இல்லை. ‘அப்படியா? மிக்க மகிழ்ச்சி. ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் புத்தகத்தை மட்டும் முழுதாக ஒருமுறை படித்துவிட்டு வந்துவிடு’ என்று சொன்னார்.

நான் அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுச் சென்றபோது பேசிய அரை மணி நேரத்தில் பெரும்பாலும் அந்தப் புத்தகத்தைக் குறித்துத்தான் பேசினேன். எப்போது தீட்சை தருவீர்கள் என்று கேட்கவில்லை. அவரேதான் அந்தப் பேச்சை எடுத்தார். ‘என்றைக்காவது இறைவனைக் காண நினைத்து மனமுருகி அழுதிருக்கிறாயா?’

யோசித்துப் பார்த்தேன். இல்லை என்று உறுதியாகத் தோன்றியது.

‘பெரிதாகத் துன்பம் வராத எப்போதாவது இறைவனை நினைவுகூர்ந்து நன்றி சொல்லியிருக்கிறாயா?’

இதற்கும் இல்லை என்றுதான் பதில் சொன்னேன்.

‘பரவாயில்லை. இன்னொரு கேள்விக்கு பதில் சொல். உன் கையில் எவ்வளவு பணம் இருக்கிறது?’

நான் என் சட்டைப் பையில் இருந்த பணத்தை எடுத்து அவர் எதிரே எண்ணினேன். ஆறு ரூபாய் இருந்த நினைவு.

‘நீ இப்போது இங்கிருந்து வீட்டுக்குப் போக எவ்வளவு செலவாகும்?’

‘இரண்டு ரூபாய் ஐம்பது காசுகள் போதும்’ என்று சொன்னேன்.

‘மடத்துக்கு எதிர்ப்புறம் ஒரு பிச்சைக்காரன் இருப்பான். அவனிடம் இந்த ஆறு ரூபாய்களையும் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வீட்டுக்கு உன்னால் நடந்து போக முடியுமா?’

சிறிது யோசித்தேன். அவரிடம் பொய்யாக எதையும் சொல்லக்கூடாது என்று தோன்றியது. எனவே, ‘அநேகமாகச் செய்ய மாட்டேன்’ என்று சொன்னேன்.

இப்போது அவர் புன்னகை செய்தார். நான் உண்மையைச் சொன்னதற்காக என்னைப் பாராட்டினார். எதற்காகத் துறவு கொள்ள விரும்புகிறேன் என்று கேட்டார். அப்போது என்ன பதில் சொன்னேன் என்று சரியாக நினைவில்லை. ஆனால் உண்மையிலேயே பரமஹம்சரின் வாழ்வையும் போதனைகளையும் படித்துவிட்டு மனத்துக்குள் பக்தனாகியிருந்தேன். ஒரு துறவி வாழ்க்கைக்கு இறைவன் என்னைத் தேர்ந்தெடுத்திருப்பதால்தான் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்று நினைத்தேன். இதைத்தான் அவரிடம் வேறு விதமாகச் சொல்லியிருக்க வேண்டும்.

‘என்ன படிக்கிறாய்?’ என்று கேட்டார். சொன்னேன்.

‘போதவே போதாது. டிப்ளமோ முடித்துவிட்டு நீ அண்ணா யூனிவர்சிடியில் சேர்ந்து பி.ஈ படிக்க வேண்டும். எம்.ஈ என்று இன்னொரு மேற்படிப்பு இருக்கிறது. பிறகு அதைப் படிக்க வேண்டும். முடித்துவிட்டு என்னை வந்து பார்’ என்று சொன்னார்.

துறவி ஆவதற்கு எம்.ஈ எதற்கு என்று கேட்டேன். ‘இங்கே உள்ள துறவிகள் ஒவ்வொருவரும் என்னென்ன படித்திருக்கிறார்கள் என்று விசாரித்துப் பார்’ என்று சொன்னார். அங்கே மருத்துவர் இருந்தார். பொறியியல் வல்லுனர் இருந்தர். கணக்காளர் இருந்தார். தத்துவ இயலில் முனைவர் பட்டம் பெற்றவர் இருந்தார். இன்னும் என்னென்னவோ பெரிய படிப்புகள் படித்தவர்கள் எளிய காவி உடை அணிந்து வெறுங்காலுடன் நடமாடிக்கொண்டிருந்தார்கள்.

அவர் அன்று சொன்னதுதான். ‘அடையாத எதையும் துறப்பது எப்படி?’

மடத்தில் இருந்த நூலகத்துக்கு அப்போது யதாத்மானந்தர் என்பவர் பொறுப்பாளராக இருந்தார். சுவாமிஜி என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி, ‘பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று மட்டும் சொன்னார். நான் படிக்கவும் பயிலவும் தொடங்கியது அங்கேதான். அநேகமாக தினமும் அப்போதெல்லாம் மாலை வேளைகளில் மடத்துக்குச் சென்றுவிடுவேன். ராமகிருஷ்ணருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நேரே நூலகத்துக்குச் சென்று எதையாவது எடுத்து வைத்துக்கொண்டு படிக்கத் தொடங்குவேன். சில சமயம் அங்குள்ள புத்தகங்களை தூசு தட்டி அடுக்கி வைப்பேன். சற்றேறக்குறைய என் வயதை ஒத்த சிலர் அப்போது மயிலாப்பூர் மடத்தில் பிரம்மச்சாரிகளாக, பயிற்சி நிலைத் துறவிகளாக இருந்தார்கள். அவர்களெல்லாம் எதை அடைந்து பின் துறந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்ன பிரச்னை என்றால் தபஸ்யானந்தரிடம் அதிகப்பிரசங்கித்தனமாகக் கேள்வி கேட்கத் தோன்றவே தோன்றாது. அவரது ஆளுமை அத்தகையது. ஏதோ காரணத்தால் இவர் நம்மை ஏற்க மறுக்கிறார்; ஏற்கும்படி ஒரு நாள் அவருக்கு இறைக் கட்டளை வரும் என்று நினைத்துக்கொள்வேன்.

அன்றைக்குச் சென்னை நகரில் பல மீனவர் குப்பங்களில், இதர ஹவுசிங் போர்ட் குடியிருப்புப் பகுதிகளில் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவிகள் சிறுவர்களுக்கு மாலை நேரங்களில் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். கோயில் சீரமைப்புப் பணிகள், அன்னதானப் பணிகள், ஆதரவற்றோருக்கான பல நலத்திட்டப் பணிகள், மருத்துவ முகாம்கள் அமைதியாக நடந்துகொண்டிருக்கும். சென்னை நகரில் அந்தளவு அடித்தட்டு மக்களுடன் நெருங்கிப் பழகிய இன்னொரு ஆன்மிக இயக்கம் கிடையாது.

1991 வரையிலுமே எனக்கு ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து சன்னியாசியாகிவிட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இத்தனைக்கும் அப்போது மடத்தில் இருந்த அத்தனைப் பேரையும் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் கடைசி வரை அது மட்டும் நடக்கவில்லை.

‘நீ உன் பாடங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் படிக்கிறாய். அநேகமாகக் கதை எழுதும் எழுத்தாளனாகப் போவாய். அல்லது மேடைப் பேச்சாளன் ஆகிவிடுவாய்’ என்று சுவாமிஜி ஒரு சமயம் சொன்னார்.

முதலாவது நடந்தது.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!