ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 30

நகரம் என்பது மண் அல்ல. நகரம் என்பது மனிதர்களும் அல்ல. நகரம் என்பது நினைவுகள். நகரம் அல்லாத பிராந்தியங்களில் வசிப்பவர்களுக்கு மண்ணும் மனிதர்களும் முக்கியமாகத் தெரிவார்கள். நகரவாசிகளுக்கு நினைவுகள் மட்டுமே நெடுந்துணை. ஏனெனில் இங்கே வந்து போகிறவர்கள் மிகுதி. நிலைத்திருப்போர் ஒப்பீட்டளவில் குறைவானவர்கள். மண்ணின் மக்கள் என்போர் அதனினும் குறைவு. ஒரு விதத்தில் நானும் வந்தேறி வம்சம்தான். என் தாத்தாக்கள் சென்னைக்குக் குடி வந்ததால் இங்கு பிறந்து வளர்ந்தேனே தவிர, பல தலைமுறைகளாக இங்கேயே உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவனல்ல. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் சென்னையில் உள்ள மீனவர் சமூகத்தினரையும் ஆதி திராவிடர் சமூகத்தினரையும் தவிர வேறு யாரையும் இம்மண்ணின் மக்கள் என்று சொல்லிவிட முடியாது. காலம்தோறும் நகர வாழ்க்கை விடுக்கும் சவால்களை அவர்கள் அளவுக்கு நம்மால் எதிர்கொண்டு வெல்லவும் முடியாது. சுனாமி வந்போது, பெருமழைக் காலங்களின்போது, குடிசைகள் பற்றி எரிந்தபோது, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்போதெல்லாம் நகர்ப்புறவாசிகள் யாரை விடவும் அவர்களே துரிதமாக மீண்டு வெளியே வருவார்கள். பல முறை இதனை நேரில் கண்டிருக்கிறேன்.

இருபது வருடங்களுக்கு முன்பு குமுதம் ஜங்ஷனில் ஒரு சிறுகதை எழுதினேன். தோல்வியுற்ற ஒருவன் தற்கொலை செய்துகொள்வதன் பொருட்டு, மெரினா கடற்கரைக்குச் சென்று கரப்பான்பூச்சி மருந்தைக் குடித்துவிட்டுப் படுப்பான். அங்கே ஒரு குறி சொல்லும் கிழவிக்கும் அவனுக்கும் இடையில் நிகழும் உரையாடலாக அது விரியும். அந்தக் கதை உண்மையில் என் நண்பர் ஒருவருக்கு நடந்த அனுபவம். நிஜத்தில் அவள் குறி சொல்பவள் அல்ல. ஒரு மீனவக் கிழவி. நண்பர் அன்று அதிர்ஷ்டவசமாக இறக்கவில்லை. இன்றுவரை அந்தக் கிழவியைக் ‘கடலம்மை’ என்று சொல்லி மானசீகமாக வழிபட்டுக்கொண்டிருக்கிறார். வீட்டில் உண்பதற்கு எதுவுமே இல்லாமல், கையில் ஒரு ரூபாய்ப் பணம்கூட இல்லாமல் ஆறு நாள்களாகத் தன்னால் வாழ்ந்துகொண்டிருக்க முடிகிறது என்று அந்தக் கிழவி சொல்லியிருக்கிறார். திருடாமல், ஏமாற்றாமல், பொய் சொல்லாமல், பிச்சை எடுக்காமல், முக்கியமாக – கௌரவத்துக்கு எந்த பங்கமும் ஏற்படாமல், ஆதரவுக்கு யாருமற்ற தன்னால் எப்படிப் பல்லாண்டுகளாக வாழ முடிந்து வந்திருக்கிறது என்று விளக்கியிருக்கிறார். ‘சாவு ஒரு சாதனையே இல்ல தம்பி. வாழ்ந்து பாரு. அப்ப தெரியும்’ என்று அந்தக் கிழவி சொன்னதை நண்பர் என்னிடம் சொன்னார். கதையிலும் அதை வைத்திருந்தேன். ஒரு சிறிய தோல்விக்கு மனம் உடைந்து தற்கொலை செய்துகொள்ளப் போன நண்பர் அன்று வெட்கப்பட்டுத் திரும்பி வந்தார். பிறகு முட்டி மோதி மேலேறி நல்ல வேலை, பெரிய சம்பளம், குடும்பம், குழந்தைகள் என்று மகிழ்ச்சியாக வாழத் தொடங்கிவிட்டார். யாரையும் சென்னை வாழவைக்கும் என்று பொதுவாகச் சொல்லப்படுவதற்கு இதுவெல்லாம்தான் அடிப்படை.

1988ம் ஆண்டு கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் உக்கிரமாக எழுத ஆரம்பித்தேன். அவை எதுவுமே நன்றாக எழுதப்பட்டதல்ல என்று இப்போது உணர்கிறேன். ஆனால் அன்று நான் எழுதிய அனைத்தும் எனக்கு உலகத்தரமான கதைகள். அவற்றைப் பிரசுரிக்காத பத்திரிகைகள் அனைத்துமே திட்டமிட்டு என்னை வளரவிடாமல் செய்கின்றன என்று நினைத்தேன். அந்த மனநிலையை விளக்கவே முடியாது. எப்போதும் பொங்கிக்கொண்டே இருப்பேன். யாரைக் கண்டாலும் எரிச்சல் வரும். உலகம் முழுவதும் எதிரிகளும் துரோகிகளுமே நிறைந்திருப்பதாகத் தோன்றும்.

அப்போது கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்த கல்கி அலுவலகத்துக்கு ஒரு நாள் சென்றேன். ஆசிரியரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டு, உதவி ஆசிரியர் பி.எஸ். மணியைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.

‘என்ன விஷயம்?’ என்று அவர் கேட்டார்.

‘மூணு மாசத்துல ஆறு கதை அனுப்பினேன் சார். நீங்க ஆறையும் திருப்பி அனுப்பிட்டிங்க.’

‘அடுத்தது கொண்டு வந்திருக்கிங்களா?’

‘பேசுவிங்க சார். நீங்க இருக்கற இடம் உங்கள அப்படி பேச வெக்குது. ஒரு நாள் இல்ல ஒரு நாள் உங்க சீட்டுக்கு நான் வந்து உக்காரலன்னா எம்பேர் ராகவன் இல்ல. என் எழுத்து என்னை இங்க கொண்டு வந்து சேர்க்கும் பாருங்க சார்.’

‘நல்லா வாங்க. நானே கூப்ட்டு உக்கார வெப்பேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

இது நடந்தபோது வாரம் ஒரு நாளாவது புரசைவாக்கத்தில் இருந்த குமுதம் அலுவலகத்துக்கும் போய்க்கொண்டிருந்தேன். கல்கியிலாவது உள்ளே சென்று உதவி ஆசிரியரிடம் பேச முடிந்தது. குமுதத்தில் காம்பவுண்டு சுவரைத் தாண்டி உள்ளே போக முடியாது. எத்தனை விதமாக கெஞ்சிப் பார்த்தாலும் அங்குள்ள வாட்ச்மேன் உள்ளே போக அனுமதிக்க மாட்டார். ‘வர சொல்லியிருக்காங்க சார்’ என்று சொல்லிப் பார்த்தாலும், ‘யாருன்னு சொல்லுப்பா. போன் பண்ணி கேக்கறேன்’ என்பார்.

இப்போது உள்ள அளவுக்குப் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அன்று அவ்வளவு கட்டடங்கள் கிடையாது. குமுதம் அலுவலகத்துக்கு எதிரே காலி நிலம் ஒன்று இருந்தது. ஒரு விளக்குக் கம்பம் இருக்கும். அதன்பின்னால் குவியலாகக் குப்பை கொட்டியிருப்பார்கள். நாய்கள் படுத்திருக்கும். நான் அந்தக் கம்பத்தில் சாய்ந்துகொண்டு குமுதம் அலுவலகத்தைப் பார்த்தபடி சிறிது நேரம் நிற்பேன். பிறகு திரும்பிவிடுவேன். அடுத்த வாரம் மீண்டும் செல்வேன். இது பல மாதங்கள் நடந்தது. இறுதிவரை அந்தக் காவலாளி என்னை உள்ளே விடவில்லை. ஒருநாள் அப்படிக் கம்பத்தின் அருகே நின்றபடி சுய இரக்கத்துக்கு ஆட்பட்டு வாய்விட்டுச் சொன்னேன். ‘ஒருநாள் இல்ல ஒருநாள் இதே குமுதம் என்னைக் கூப்பிடும். கூப்பிட வைப்பேன்.’

இரண்டுமே நடந்தது.

சொல்ல நினைத்தது இதுதான். உள்ளூர்க்காரனா, வெளியூர்க்காரனா என்ற பாகுபாடே இல்லை. சரியாக முட்டி மோதுபவனை இந்நகரம் வாழவைக்காதிருந்ததில்லை.

இதை எழுதலாம் என்ற எண்ணம் வந்தபோது உண்மையில் எதையுமே எழுத முடியுமா என்று தெரியாத சூழ்நிலையில்தான் இருந்தேன். மார்ச் 17, 2020 அன்று விரைவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிடும்; கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை என்று எல்லோரும் சொன்னார்கள். படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிடும் என்று தெரிந்தது. அதிகபட்சம் இரண்டு நாள்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என்று அனைத்துத் தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லப்பட்டது. மூன்று நாள் இரவு பகலாக எழுதி, முடிந்தவரை எடுத்து முடித்த காட்சிகள் மார்ச் மாத இறுதி வரை ஒளிபரப்பானது. அதற்கு முன்னதாகவே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வேலை என்று எதுவுமில்லாத சூழ்நிலை உண்டானது. மொத்த நாளையும் படிப்பதிலும் எழுதுவதிலும் கழிக்கலாம் என்ற எண்ணம் ஒரு புறம் மகிழ்ச்சியளித்தது. ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை. எதைச் செய்ய நினைத்தாலும் உடனே கிருமியைக் குறித்த எண்ணம் மேலோங்கி வந்தது. செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் கிருமி மட்டுமே பேசுபொருளாக இருந்தது. இதற்கு முந்தைய கிருமி எதுவும் தராத அச்சத்தை இந்தக் கிருமி அளித்திருப்பது நியாயமானதுதானா அல்லது இது ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்டதா என்று புரியவில்லை. எதுவானாலும், கிருமி செயல்பட விடாமல் அடித்தது என்பதை மறுக்க முடியாது.

வலுக்கட்டாயமாக அந்த நினைவில் இருந்து என்னை வெளியே இழுத்துப் போட ஏதாவது ஒரு கட்டுப்பாடு வேண்டியிருந்தது. கிருமியின் கோரப்பிடியில் நகரம் சிக்கிக்கொண்டு தவிக்கும் சூழல் தரும் பதற்றத்தை எதிர்கொள்ள, இதே நகரம் எனக்களித்த அர்த்தமுள்ள அனுபவங்களை மட்டும் விரித்துப் பார்ப்பதென்று முடிவு செய்தேன். எழுத ஆரம்பித்தபோது பதற்றம் வெகுவாகக் குறைந்து போனது.

எத்தனையோ கடினமான காலங்களைக் கடந்து வந்திருக்கிறோம். இதுவும் கடந்துதான் போகப்போகிறது. ஆனால் இந்தக் காலக்கட்டம் அளித்த அச்சமும் பதற்றமும் எளிதில் மறக்கக்கூடியதல்ல. இந்நாள்களின் ஒவ்வொரு கணத்தையும் ஒரு கடைசி வரித் திருப்பம் போல எப்படி இந்த இயற்கை வடிவமைத்திருக்கும் என்று வியந்துகொண்டே இருந்தேன்.

ஒரு சம்பவம். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி சரியாக இரண்டு மாதங்களுக்கு நான் எங்குமே செல்லவில்லை. வாரம் ஒருநாள் கறிகாய் வாங்குவதற்காகக் கடை வீதிக்கு மட்டும் செல்வேன். அதிகபட்சம் அரை மணி நேரம். வாங்கி வந்ததும் தலையோடு கால் குளித்துவிட்டால் கிருமியும் பாவமும் அழிந்துவிடும் என்று நம்பிக்கை. நான்காவது ஊரடங்குத் தளர்வு அறிவிக்கப்பட்ட மறுநாள் கோடம்பாக்கத்தில் உள்ள என் அலுவலகத்துக்குச் சென்றேன். ஒரு பகல் பொழுது மட்டும் அங்கே இருந்துவிட்டு மாலை வீடு வந்து சேர்ந்தேன். அடுத்த நாள் செய்தி வந்தது. அந்த அபார்ட்மெண்டில் எனக்கு அடுத்த வீட்டில் வசிப்பவருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்கு நான் அதிர்ச்சி அடைய வேண்டுமா? சிரிக்க வேண்டுமா?

இந்த உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே உள்ள ஒரு சௌகரியம் எனக்குண்டு. எழுதுபவன் எழுதிக்கொண்டிருக்கும்போது அவனுக்குத் துயரம் என்ற ஒன்று கிடையாது. இதை நிறைவு செய்யும் இந்தக் கணத்தில் அதை மீண்டும் உணர்கிறேன். முப்பது நாள்களும் நான் துயரமற்றிருந்தேன்.

(முற்றும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி