நகரம்

அச்சங்களில் இருந்து விடுபடல்

ஓர் ஆண்டு, உலகம் முழுவதையும் வீட்டுக்குள் அடங்கியிருக்க வைக்கும் என்று யாரும் எண்ணிப் பார்த்திருக்க முடியாது. 2020 ஜனவரி முதல் தேதி உலக மக்கள் எவ்வளவு நம்பிக்கையும் மகிழ்ச்சியுமாகப் புத்தாண்டு வாழ்த்து பரிமாறிக்கொண்டிருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன். அதற்கு முன்பே கொரோனா வைரஸ் சீனத்தில் பிறந்துவிட்டது என்றாலும் தகவல் பெரிதாக வெளியே வரவில்லை. புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முடிந்து மெதுவாக மாத இறுதியில்தான் மெல்ல மெல்ல விவரம் தெரியத் தொடங்கியது. கண் மூடித் திறக்கும் நேரத்தில் இத்தாலியில், ஸ்பெயினில், அமெரிக்காவில் ஏராளமான நோய்த் தொற்றுகள் கண்டறியப்பட்டன. எதிலும் எல்லோருக்கும் மேலே நிற்கவே எப்போதும் விரும்பும் அமெரிக்கா இதிலும் அனைவரையும் விஞ்சி மேலேறிச் சென்றது. இந்தியாவில் இக்கிருமித் தாக்கம் ஆரம்பத்தில் குறைவாகவே இருந்தது. நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்புகளின் தொடர்ச்சியாக இது மேலும் கட்டுப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு, அது இல்லை என்று ஆனதுதான் பெரும் சோகம். இதனை எழுதிக்கொண்டிருக்கும் இக்கணத்தில் (ஜூன் 6, 2020 – மாலை 5.59) தேசம் முழுவதிலுமாக 2,36,657 உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களும், தமிழகத்தில் மட்டும் 28,694 தொற்றாளர்களும் இருப்பதாக ஆரோக்கிய சேது செயலி சொல்கிறது.

கிருமியின் தாக்கத்தால் விளையும் மரணங்களைக் காட்டிலும் அது குறித்த எண்ணங்களும் அச்சமும் தருகிற மனச் சோர்வு கொடூரமானது என்பதை இந்நாள்களில் அனுபவபூர்வமாக அறிந்தேன். வாழ்வில் முன்னெப்போதும் அடைந்திராத அளவு மனச்சோர்வு கடந்த மூன்று மாதங்களில் அடிக்கடி ஏற்பட்டது. ஒருமுறை இறந்துவிடுவது அதைவிடப் பெரிய அவலமல்ல என்று திரும்பத் திரும்ப நினைத்தேன். இச்சோர்வில் இருந்து விடுபடுவதற்காக மட்டுமே இந்தப் புத்தகத்தை எழுதினேன்.

சென்னை நகரம், நான் பிறந்து வளர்ந்து, வாழும் இடம். சென்னையைத் தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்துகிறது. நான் சென்னையை விரும்புபவன். சென்னைக்காரன்.

இதனாலேயே இந்நகரம் நோய்த் தொற்று அச்சம் காரணமாக வேறொரு முகம் எடுத்தபோது அதை வியப்புடன் கூர்ந்து நோக்கினேன். பிழைக்க வந்த ஒவ்வொருவரும் இந்நகரத்தை விட்டு வெளியேறிவிட எப்படித் துடித்தார்கள் என்பதை நெருக்கமாகப் பார்த்தேன். ஒரு வாய்ப்புக் கிடைத்தபோது உயிரைக் கூட மதிக்காமல் முட்டி மோதிச் சென்று பேருந்துகளில் சொருகிக்கொண்ட காட்சிகளை என்றும் மறக்கமாட்டேன்.

ஏனெனில், நான் தப்பிச் செல்ல முடியாதவன். தப்பிச் செல்ல எனக்கு இடம் ஏதுமில்லை. இருந்தாலும் இல்லாது போனாலும் அது இந்நகரத்தில்தான். எனவே, நகரம் எனக்கு மகிழ்ச்சியான நினைவுகளைப் பரிசாகக் கொடுத்த தருணங்களை மட்டும் நினைவில் கோத்துப் பார்ப்பது இந்த நேரத்தில் சிறிது ஆறுதலாக இருக்கும் என்று தோன்றியது. ‘ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்’ அப்படித்தான் பிறந்தது.

இதனை தினமொரு அத்தியாயமாக முப்பது நாள்களுக்கு என் இணையத்தளத்தில் (writerpara.com) எழுதினேன். வாசக நண்பர்கள் அளித்த உற்சாகமும் வரவேற்பும் மகிழ்ச்சியளித்தது. ஒவ்வொரு அத்தியாயத்தின்போதும் ஒரு சிலராவது தமது இளமைக்கால நினைவு தூண்டப்பெற்று அதனை விரித்துப் பார்த்து நான்கு வரியேனும் எழுதியதைக் கண்டேன். ஒவ்வொருவர் வாழ்வும் ஒவ்வொரு விதம் என்றாலும் இந்நகரம் வஞ்சனையின்றி அனைவருக்கும் ஒரே முகத்தைத்தான் காட்டியிருக்கிறது என்பது புரிந்தது.

இதனை எழுதி நிறைவு செய்தபோது ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அனைத்துத் துறைகளும் வழக்கம் போல இயங்க ஆரம்பிக்கலாம் என்று சொன்னார்கள். கோயில்கள், வர்த்தக மையங்கள், திரையரங்குகள் அனைத்தும் திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது. எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது போல எண்ணிக்கொள்வது ஒரு பாவனை. ஆனால் வாழ்வே ஒரு பாவனைதானே? கிருமியுடன் வாழப் பழகிக்கொள்வோம் என்று இப்போது சொல்லத் தொடங்கியிருக்கிறது உலகம்.

இருத்தல் குறித்த அச்சமெல்லாம் சும்மா இருக்கும்போதுதான். எழுதிக்கொண்டிருக்கும்போது அப்படி ஒன்று எனக்கு இருப்பதில்லை. அதற்காகத்தான் இதனை எழுதினேன். அதற்காகத்தான் எப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இம்மாநகரில் என் முதல் நண்பனும் என்னை முழுதும் அறிந்தவனுமான ஆர். வெங்கடேஷுக்கு இதனை அன்புடன் சமர்ப்பணம் செய்கிறேன்.

பா. ராகவன்
ஜூன் 6, 2020

(ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் நூலுக்கு எழுதிய முன்னுரை)

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி