இந்த வருடம் என்னை செமத்தியாக பெண்டு நிமிர்த்திய புத்தகம், ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு. பொதுவாக எத்தனை பெரிய புத்தகமாக இருந்தாலும் எடிட்டிங்கில் என்னிடம் இரண்டு மூன்று நாள்களுக்குமேல் நிற்காது. இந்தப் புத்தகம் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு என்னை இழுத்துக்கொண்டுவிட, வழக்கமான காரியங்கள் பலவற்றை இதனால் நிறுத்திவைக்க வேண்டியதானது. [இதற்கு முன்னால் அதிகநாள் எடிட் செய்த புத்தகம் அநீயின் ஹிந்துத்துவம் – ஓர் எளிய அறிமுகம். அதன் வத்திக்குச்சி சைஸுக்குப் பதினைந்து நாள் எடிட்டிங் என்பது அராஜகத்தின் உச்சம். ஆனால் அரவிந்தன் மாதிரி ஒரு அதிபயங்கர, ஹிந்துத்துவ அறிவுஜீவியின் எழுத்தைக் கண்ணில் க்ரூட் ஆயில் விட்டுக்கொண்டுதான் படித்தாக வேண்டியிருக்கிறது.]
ஏற்கெனவே வேறொரு காரணத்துக்காக நான் திராவிட இயக்க வரலாறு தொடர்பான புத்தகங்களைக் கொஞ்சம்போல் வாசித்திருக்கிறேன். கொஞ்சம் அடிப்படை தெரியும். தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் நெஞ்சுக்கு நீதி பாகங்கள் ஒன்றிரண்டையும் படித்திருக்கிறேன். ஆனால் என்னுடைய தலைமுறைக்குப் பிறகு அந்த இயக்கத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், பிளவுகள், அதன் அடிப்படைக் காரணங்கள் பற்றிய எழுத்துப் பதிவுகள் அதிகமில்லை என்று நினைக்கிறேன். [நெஞ்சுக்கு நீதியின் அடுத்த பாகங்களில் ஒருவேளை இருக்கலாம். நான் வாசிக்கவில்லை.] டி.எம். பார்த்தசாரதி, முரசொலி மாறனுடைய புத்தகங்களெல்லாம் என் அப்பா காலத்துக் கதையோடு முடிந்துவிடுகின்றன. இந்தப் புத்தகம்தான் முதல் முதலில் முழுமையான நூறாண்டு சரித்திரத்தைப் பேசுகிறது [1909 – 2009] என்ற வகையில் எனக்கு இது முக்கியமானதாகிறது.
ஒரு பத்திரிகையாளனாக முத்துக்குமாரின் நேர்மைமீது எனக்குச் சற்றும் சந்தேகம் கிடையாது என்றாலும் அவனுடைய குடும்பப் பின்னணி கொஞ்சம் கழகப் பின்னணி கொண்டது. அவன் பிறந்தபோது, குழந்தையை ஏந்துவதற்கு ஓடிச் சென்று அவனது தந்தை ஒரு கட்சிக்கொடியை எங்கிருந்தோ கொண்டு வந்த வரலாறு, கிழக்கு அலுவலகத்தில் ஒரு நாடோடிக் கதையாகிவிட்ட விஷயம். இப்படியொரு பாரம்பரியப் பெருமை கொண்டவன், நடுநிலையுடன் திராவிட இயக்க வரலாறு எழுத இயலுமா என்ற கேள்வி எங்கள் அலுவலகத்தில் பலருக்கு இருந்தது. ஆனால், ஓரிடத்தில்கூட சார்பெடுக்காமல், உணர்ச்சிவசப்படாமல் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த பெரும் வரலாற்றை அவன் நிதானம் தவறாமல் எழுதி முடித்திருக்கிறான். முந்தைய ஆசிரியர்கள் எடுத்துக் காட்டியிராத பல முக்கிய ஆவணங்களை, சம்பவங்களை, மிகப் பொருத்தமான இடங்களில் கவனமாகச் சேர்த்திருக்கிறான். கலைஞரைக் கூட, கலைஞர் என்று இந்நூல் குறிப்பிடுகிற இடம் மிகக் கடைசியில்தான் வருகிறது. பெரியார், வெறும் ராமசாமியாக இருந்து, நாயக்கராகி, ஈ.வெ.ராவாகி, பெரியாராகி, தந்தை பெரியாரானதை ஒவ்வொரு கட்டமாக கவனித்துப் புரிந்துகொள்வதன் ஊடாகவே அவர் வளர்த்த இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியை விளங்கிக்கொள்ள இயலும்.
பிராமணர் அல்லாதோர் சங்கமாகத் தொடங்கி, ஜஸ்டிஸ் கட்சி வழியே திராவிடர் கழகமாகி, பின்னர் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணத்தால் அண்ணா பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியது, பின்னர் அதில் உருவான சிக்கல்கள், பிளவுகள், கலைஞர்-எம்.ஜி.ஆர். காலம், எம்.ஜி.ஆருக்குப் பிந்தைய அ.தி.மு.கவின் உட்கட்சிப் பூசல்கள், ஜானகி காலம், ஜெயலலிதா காலம், தி.மு.கவிலிருந்து வைகோ பிரிந்தது, கலைஞர்-ஜெயலலிதா காலம் என்று இந்நூலில் ஒரு முழுமை இருக்கிறது. திராவிட நாடு கோரிக்கை, இந்தி எதிர்ப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து முக்கியத் தருணங்கள் குறித்தும் விரிவான அலசல் இருக்கிறது. சர்க்காரியா முதல் சமகால ஊழல்கள் வரையிலான ஒரு பாரம்பரியத்தின் வரலாறு இருக்கிறது. அனைத்துவித அவலங்களையும் மீறித் தமிழக மக்கள் எதனால் தொடர்ந்து திராவிட இயக்கங்களுக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்னும் வினாவுக்கான விடை, பல நீண்ட விசாரணைகளின்மூலம் கிடைக்கிறது.
இந்தப் பெரிய வரலாறில் என் ஆர்வத்தை மிகவும் கவர்ந்த விஷயம் ஒன்று உண்டு. அது, சில துணைப் பாத்திரங்களின் வார்ப்பு. பாரதிதாசன், நெடுஞ்செழியன், மதியழகன், ஈ.வெ.கி. சம்பத், எஸ்.டி.எஸ் போன்ற சில பெயர்கள் திராவிட இயக்க வரலாறில் எப்போதும் இடம்பெறுபவை. ஆனால் பெயர்களாக அல்லாமல் பாத்திரங்களாக இவர்கள் பெரிய அளவில் முதன்மையுற்றதில்லை.
முத்துக்குமாரின் புத்தகத்தில் இந்த இரண்டாம் வரிசைத் தலைவர்களின் உடல், மனம், ஆன்மா அனைத்தும் சுருக்கமாக – அதே சமயம் துல்லியமாக வெளிப்பட்டுவிடுகிறது.
பாரதிதாசனுக்கு நிதி கொடுக்கவேண்டும் என்று, பெரியாரையே எதிர்த்துக்கொண்டு அண்ணா முனைந்து வசூலித்து விழா எடுத்துச் சிறப்பிக்கிறார். அதே பாரதிதாசன், அதே அண்ணாவுக்கு எதிராகத் திரும்பி நின்று கோல் போடுகிற கட்டங்கள் மிகப்பெரிய நகைமுரண். சம்பத், மதியழகன் போன்றவர்களால் ஏன் கட்சியில் முன்னிலைக்கு வர முடியவில்லை என்ற கேள்விக்குப் பலரும் பல்வேறு விதமான பதில் சொல்லக்கூடும். இந்தப் புத்தகம், தலைமைக்கு வந்தவர்களை நுணுக்கமாக அணுகி அலசி, எந்தப் பண்பு அவர்களை அந்த இடத்துக்குக் கொண்டுவந்து நிறுத்தியது என்பதை மிக அநாயாசமாகச் சுட்டிக்காட்டிவிடுகிறது.
திராவிட இயக்க வரலாறு என்பது கிட்டத்தட்ட தமிழகத்தின் சமகால அரசியல் வரலாறு. இதை இந்தளவு நடுநிலைமையுடனும் எளிமையாகவும் சுவாரசியமாகவும் விளக்க இன்னொரு புத்தகம் இப்போதைக்குக் கிடையாது.
நேற்று இந்நூலின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. புத்தகக் கண்காட்சிக்குக் கண்டிப்பாக வந்துவிடும். [இரண்டு பாகங்கள். தலா 200 ரூபாய் விலை.]
கட்டுரைகளுக்கும், புத்தகங்களுக்கும், தமிழ்பேப்பரின் சிலபகுதிகளுக்கும் நீங்கள் வைக்கும் தலைப்புகள் மனதைக் கவர்கின்றன. தமிழ் பேப்பரில் வெளியாகும் ”தந்தை சொல்” பெயர் வைத்தலில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
தமிழனாய்ப் பிறந்த கொடுமைக்காக திராவிட இயக்கப் புத்தகங்களை வாசிக்க வேண்டிய கட்டாயத்தை நினைத்து வருந்துகிறேன். கிட்டத்தட்ட இஸ்லாமிய ராஜாக்கள் போல்தான் ஒருவரை ஒருவர் கீழே தள்ளி திராவிட இயக்கத் தலைவர்களும் உருவாகியிருக்கின்றனர். மலர் மன்னனின் தி.மு.க உருவானது ஏன்? திராவிட இயக்கங்கள் மற்றும் தலைவர்களைப் பற்றிய ஒரு சிறப்பான அறிமுகம். முத்துக்குமாரின் இந்தப் புத்தகம் என்ன சொல்கிறது எனவும் பார்க்கலாம். நல்ல பதிவு நன்றி பாரா 🙂
எனக்கே நபநபவா? கடவுளே.
சமகாலத்தில் அனைவரும் கண்டிப்பாக படித்து நம் திராவிட அரசியல்வாதிகளினை பற்றி தெரிந்து கொள்ள உதவும் அப்படின்னு சொல்றீங்க!
இரண்டு தொகுதிகளையும் ஒன்றுசேர்த்து, ஒரு லெதர் பவுண்ட் ஸ்பெஷல் வால்யூமாக இதுவும் வருமா? #தகவலுக்காக
[…] This post was mentioned on Twitter by Badri Seshadri and mugil முகில். mugil முகில் said: http://writerpara.com/paper/?p=1747 கொடியில் ஏந்தப்பட்ட குழந்தை ஆர். முத்துக்குமார் […]
இந்த புத்தகம் கலைஞரின் உதவியாளர் சண்முக நாதன் பார்வைக்கு எப்போதும் போகும் என்று ஆவலாய் இருக்கின்றேன். நீங்கள் இணைத்துள்ள வெளியீடுகளை முழுமையாக பார்த்தேன் படித்தேன் ரசித்தேன். என்னுடைய கல்லூரிப்பருவத்தில் உங்களைப் போன்ற பதிப்பக மக்கள் இருந்து இருந்தால் நன்றாக இருந்துருக்கமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
//அரவிந்தன் மாதிரி ஒரு அதிபயங்கர, ஹிந்துத்துவ அறிவுஜீவியின் எழுத்தைக் கண்ணில் க்ரூட் ஆயில் விட்டுக்கொண்டுதான் படித்தாக வேண்டியிருக்கிறது.//
அரவிந்தன் நீலகண்டனை ”அதிபயங்கர, ஹிந்துத்துவ அறிவுஜீவி” என்று வர்னிப்பது அதிகமாய்த் தெரியவில்லையா?
அதிபயங்கர…அடேங்கப்பா.. அவர் புத்தகத்தைபோலவே அவரும் ஒரு வத்திக்குச்சி
ஹிந்துத்துவ .. அவர் ஒரு நாஸ்திகர்..அவரைப்போய் ஹிந்துத்துவ கூட்டில் அடைக்கலாமா? நியாய அநியாயங்களை எழுதுவதால், அதிலும் இந்துத்துவத்துக்கே அதிகம் அநியாயம் நடப்பதால் அதன் நியாயங்களை எழுதுவதால் ஒருவர் ஹிந்துத்துவவாதியா?
அறிவுஜீவி .. இது ஒன்று மட்டும்தான் ஒத்துக்கொள்ளக்கூடியதாய் எழுதியிருக்கிறீர்கள்.
உங்களுக்கு சட்டைக்குள் என்ன இருக்கிறது என என்றைக்கு தேடப்போகிறார்களோ? இப்படியே தொடர்ந்து எழுதி வாருங்கள். அப்போதுதான் சட்டைக்குள் தேடமாட்டார்கள். 🙂
ஜெயக்குமார்: நாத்திகமும் ஹிந்துத்துவத்துக்குள் அடங்கும். அது ஒரு மதமாகவே இங்கு தழைத்திருக்கிறது. நாத்திக முனிவர்கள் உண்டு. சார்வாக மகரிஷி கேள்விப்பட்டதில்லையா?
அன்புள்ள பாரா, நாத்திகம் என எங்கள் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்கப் பட்டதெல்லாம் இந்துமதத்தை மட்டும் இழிவு செய்தல் மட்டுமே. சார்வாக மஹரிஷியுடனா இன்றைய நாத்திகர்களை ஒப்பிடுகிறீர்கள்? தனக்கு லாபம் தரும் என்றால் நாத்திகத்தையே தியாகம் செய்யும் உத்தமர்ர்கள்தான் இன்றைய நாத்திகர்கள். அரவிந்தன் நீலகண்டன் இன்றைய போலி நாத்திகர்களுடன் சேராத ஒரு தனி இனம்.
ஜெயக்குமார், நாத்திகம் குறித்துத் தனியேதான் பேசவேண்டும். இது சரியான இடமாக இராது. என்னைப் பொறுத்தவரை மூன்றுவிதமான நாத்திகம் புழக்கத்தில் உள்ளன இங்கே. சித்தாந்தமாக அதை அணுகிக் கடைப்பிடிப்போரின் நாத்திகம் ஒருவிதம். திராவிட நாத்திகம் இன்னொன்று. கம்யூனிச நாத்திகம் மூன்றாவது. இந்த மூன்றைக் குறித்தும் விரிவாக எழுதலாம். அரவிந்தனே எழுதுவார். கொஞ்சம் பொறுத்திருங்கள்.
//para says:
December 21, 2010 at 12:39 PM
எனக்கே நபநபவா? கடவுளே.//
:-)) தன் வினை தன்னைச் சுடும்..
//இரண்டு தொகுதிகளையும் ஒன்றுசேர்த்து, ஒரு லெதர் பவுண்ட் ஸ்பெஷல் வால்யூமாக இதுவும் வருமா? #தகவலுக்காக//
//என்னுடைய கல்லூரிப்பருவத்தில் உங்களைப் போன்ற பதிப்பக மக்கள் இருந்து இருந்தால் நன்றாக இருந்துருக்கமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. //
இந்த இருகருத்தையும் நான் வழிமொழிகிறேன்!
என்னை மாதிரி சென்னையை விட்டு வெளியில் வாழும் கிழக்கு ரசிகர்களுக்காக ONLINE ல யப்போ விற்பனைக்கு வரும்?
கண்டிப்பாக ஈழம் பத்தின செய்திகளை இருட்டடிப்பு செய்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
Dear Para…
Dont you think Rs 400/ is too much for commoners to buy this book?
This book has to reach as many households as possible in TN because of its central idea…
Can you reassess the price of book?
I do agree with ariyaluraaR…
// நெஞ்சுக்கு நீதியின் அடுத்த பாகங்களில் ஒருவேளை இருக்கலாம். நான் வாசிக்கவில்லை //
இருக்கிறது.