கிழக்கு ப்ளஸ் – 6

முதல் வருடம் ஐம்பது புத்தகங்கள். இரண்டாம் வருடம் இன்னொரு ஐம்பது. இடைப்பட்ட எழுநூறு தினங்களில் சுமார் ஐந்தாறு புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று வந்தோம். அனுபவம்.

நானும் பத்ரியும் பொதுவாக புத்தகக் கண்காட்சியில் அப்போதெல்லாம் உட்காருகிற வழக்கம் இல்லை. எங்கள் ஸ்டாலில் அநேகமாக இருக்கவே மாட்டோம். ஆளுக்கொரு திசை பிரித்துக்கொண்டு மற்றக் கடைகளில்தான் சுற்றிக்கொண்டிருப்போம். மிகப்பெரிய பதிப்பாளர்கள் முதல் சிறு வெளியீட்டாளர்கள் வரை அனைவருடைய புத்தகங்களையும் கவனிப்போம். ஒவ்வொரு டைட்டிலையும் குறித்துக்கொள்வோம். கவுண்ட்டர் அருகே கால் கடுக்க நின்று, எந்த டைட்டில் எத்தனை பேரால் அதிகம் விரும்பப்படுகிறது என்று பார்ப்போம். சம்பந்தப்பட்ட புத்தகத்தை நின்றவாக்கிலேயே முழுதும் புரட்டுவேன்.

எந்த அம்சம் மக்களைக் கவருகிறது என்பதை அறிவதற்கு அது அவசியமாக இருந்தது. பிரபல ஆசிரியர், கவர்ச்சிகரமான தலைப்பு, நூல் அடக்கத்தின் அவசியம் அல்லது தேவை, மக்களின் ஆர்வம் போகிற டிரெண்ட் என்று ஒவ்வொரு அம்சமாகப் பொருத்திப் பார்ப்பது வழக்கம். கொள்கையளவில் ஜோதிடம், வாஸ்து, எண் கணிதம் போன்ற துறைகள் சார்ந்து நாங்கள் பிரசுரிப்பதில்லை என்று நிறுவனம் தொடங்குவதற்கு முன்னமே முடிவு செய்திருந்தபடியால் அவற்றை ஒதுக்கிவிடுவோம். [சமையல் புத்தகங்களில் விருப்பம் இருக்கிறது. ஆனால் இங்கே தயாரிக்கப்படும் இத்தகைய புத்தகங்களைப் போல் நம்முடையதும் இருந்தால் உணவின்மீதான விருப்பமே போய்விடும் என்கிற அச்சமும் இருக்கிறது. மனத்தில் இருக்கும் உருவம் இன்னும் எங்களுக்குச் செயலில் பிடிபடவில்லை.]

அப்படி கவனித்துக்கொண்டிருந்தபோதுதான் பக்தி மற்றும் மருத்துவத் துறைகள் சார்ந்து புத்தகங்கள் கொண்டுவரும் எண்ணம் உறுதிப்பட்டது.

அநேகமாகத் தொண்ணூறு சதவீத தமிழ் பதிப்பாளர்கள் ஆன்மிகப் புத்தகங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் அவர்களது எண்ணிக்கையைக் காட்டிலும் சொற்பமாக மருத்துவ நூல்கள் இருக்கின்றன. ஆனால் இந்த இரு துறைகள் சார்ந்தும் தேவை மிக அதிகம். இரு துறைகளிலுமே இருக்கிற புத்தகங்களின் தரம் வெகு சாதாரணம்.

ஆகவே நாங்கள் வரம் மற்றும் நலம் வெளியீடுகளைத் தொடங்கினோம். குமுதத்திலிருந்து விலகி, குங்குமத்தில் பணியாற்றுவதற்காகச் சென்றுகொண்டிருந்த வாசுதேவைத் தற்செயலாக ஒரு தொலைபேசி அழைப்பில் பிடித்தேன்.

‘என்னடா பண்ற?’

‘இன்னிக்கி குங்குமம் போறேன் தலைவா. ராவ் வரசொல்லியிருக்கார். நாளைலேருந்து ஜாயின் பண்ணிடுவேன்னு நினைக்கறேன். குங்குமம் ஆபீஸ் வாசல்லேருந்துதான் பேசறேன்.’

அதுதான் நேரம். வாசுதேவ் என்கிற சிவகுமாரின் ஒரு பரிமாணம் மட்டுமே பத்திரிகைத் துறைக்குத் தெரியும். நகைச்சுவை எழுதுவான். அபாரமாக எழுதுவான். அவனளவுக்கு நகைச்சுவையாக சிந்திக்கவும் எழுதவும் தெரிந்தவர்கள் தமிழகத்தில் அநேகமாகக் கிடையாது. இதனை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். பத்திரிகை உலகில் அநேகமாக யாருக்குமே கைவராத ஜோக் எடிட்டிங் என்னும் துறையில் அவன் ஒரு மாஸ்டர். படு திராபை ஜோக்குகளையும் விழுந்து விழுந்து சிரிக்கத்தக்க விதத்தில் மாற்றக்கூடியவன்.

இன்னொரு பரிமாணமும் உண்டு அவனுக்கு. ஆன்மிகம். படித்தவன். வேதங்களிலிருந்து பக்தி இலக்கியம் வரை சகலமும் தெரிந்தவன். ஆகமம் படித்தவன். பத்திரிகைக் காட்டுக்கு வருவதற்கு முன்னால் சில கோயில் கும்பாபிஷேகங்கள் வரை நடத்தியவன். அப்பழுக்கில்லாத ஆன்மிகவாதி.

‘அட்ரஸ் சொல்றேன். நோட் பண்ணிக்கோ. 16. கற்பகாம்பாள் நகர். மயிலாப்பூர். ராவ பாக்கறதுக்கு முன்ன அப்படியே இங்க ஒருநடை வந்துட்டுப் போ. நீ இப்ப நிக்கற கச்சேரி ரோடுலேருந்து பக்கம்தான்’

அன்றைக்கே வாசுதேவ் NHMல் சேருவது உறுதியானது. எனவே மாலை அவனோடு நானும் புறப்பட்டு குங்குமம் சென்று ராவைச் சந்தித்து விஷயத்தைச் சொல்லி, இவனை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

வாசுதேவ் விகடன் மாணவன். பல்லாண்டுகாலம் அங்கே ராவிடமும் மதனிடமும் பயின்றவன். ஒரு ஜோக் எழுதுவதைக் கூட கும்பாபிஷேகம் செய்யும் அக்கறையுடன் செய்யக்கூடியவன். குமுதத்தில் நான் பணியாற்றியபோது அங்கே நட்பானவன். நாங்கள் தொடங்க நினைத்த ஆன்மிகப் பதிப்புக்கு அவனை ஆசிரியராக நியமித்தோம். அரை நிஜாரைத் தவிர பிறிதொன்றைக் கனவிலும் நினைத்தறியாத ஜென்மங்கள் நிறைந்த எங்கள் அலுவலகத்தில் முதல்முதலாகத் தழையத் தழைய வேட்டி கட்டிய பஞ்சகச்ச பாகவதர்களும் வெற்றிலை சீவல் வித்தகர்களும் சமஸ்கிருதப் பண்டிதர்களும் வரத் தொடங்கினார்கள்.

ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தோம். ஆன்மிகப் புத்தகம்தான் என்றாலும் அழகுத் தமிழுக்கும் பழகு தமிழுக்கும் பழுது நேரக்கூடாது. கனமான விஷயங்களை நயமான மொழியில் மட்டுமே தருவது. எளிமை. இனிமை. பல்லை உடைக்கும் பாஷை கிடையாது. சமஸ்கிருத பயமுறுத்தல்கள் வேண்டாம்.

வாசுதேவின் பணி சவால் மிக்கதாக இருந்தது. ஆன்மிகம் எழுதத் தெரிந்த அத்தனை பேருடைய மொழியும் நாங்கள் நிராகரிக்கக்கூடியதாக மட்டுமே இருந்தது. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அவன் ‘மொழிபெயர்க்க’வேண்டியதாகவே அமைந்தது. இதுபற்றிய விமரிசனங்கள் எழுந்தபோது அவன் கூப்பிட்டு உட்காரவைத்து வக்கணையாகப் பேசுவான். வாசுதேவிடம் பத்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தால் பிறகு அவனைத் திட்டத் தோன்றாது. அவன் சொல்வதெல்லாம் சரி, அவன் சொல்வதுதான் சரி என்று தீர்மானமாகத் தோன்றும். நாவில் சரஸ்வதியை குத்தகைக்குக் குடியமர்த்தியிருப்பவன் அவன்.

எங்கள் நிறுவனம் ஆரம்பித்ததன் காரணம், வகுத்துக்கொண்டிருந்த கொள்கைகள், செல்கிற பாதை, அடைய நினைக்கும் தொலைவு அனைத்தைக் குறித்தும் அவனுடன் ஆரம்பத்திலேயே நான் விரிவாகப் பேசியபடியால் எளிதில் அவனால் ஒன்றிவிட முடிந்தது.

பார்க்கத் தரமில்லாத பக்திப் புத்தகங்கள் குவிந்திருக்கும் களத்தில் இன்றைக்குக் கண்ணில் ஒற்றிக்கொள்ளக்கூடிய விதத்தில் எங்களுடைய வரம் பிரிவு, நூல்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. உமா சம்பத் என்றொரு துணை ஆசிரியர். பத்திரிகைத் துறையில் மிக நீண்டகால அனுபவம் பெற்றவர். எழுதத் தெரியும். எடிட் செய்யத் தெரியும். லே அவுட் தெரியும். லெட்டரிங் ஆர்ட்டும் அறிந்தவர். குமுதத்திலிருந்து வந்து சேர்ந்த அவரிடம் மூன்று முக்கியப் பொறுப்புகளை அளித்தோம்.

‘பண்டிதர்கள் வேண்டாம். பண்டித மொழி வேண்டாம். ஆனால் ராமாயணமும் மகாபாரதமும் பாகவதமும் வேண்டும். விறுவிறுவிறுவென்று ஒரு நாவல் படிக்கிற சுவாரசியம் கூடிவரவேண்டும். காவியச் சுவையும் சேரவேண்டும். பக்தி உணர்வில் பழுது இருக்கக்கூடாது. புழக்கத்தில் இருக்கும் ராமாயண, பாரத, பாகவத நூல்களின் அத்தியாய வரிசைகளையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள். உங்கள் இஷ்டத்துக்குக் காலத்தைப் புரட்டிப் போட்டுக்கொள்ளலாம். ஆனால் வாசித்து முடிக்கும்போது பரிபூரண முழுமையின் லயம் கூடவேண்டும்.’

தயவுசெய்து மிகை என்று நினைக்காதீர்கள். இன்றைக்கு வாசிக்கக் கிடைக்கும் எந்த ஒரு இதிகாசத் தமிழ் வடிவங்களைக் காட்டிலும் சம்பத்தின் புத்தகங்கள் சிறப்பானவை. படித்துப் பார்த்தால் அதன் அருமை விளங்கும்.

வரம் செயல்படத் தொடங்கிய நாளாக இன்றுவரை அதற்கான வரவேற்பு அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. விற்பனையின் வேறொரு புதிய சாளரத்தை எங்களுக்குத் திறந்து அறிமுகப்படுத்திய இம்ப்ரிண்ட் அது. தனி நபர்கள் கடைகளில் புத்தகம் வாங்குவதல்ல; அப்படி வாங்கிச் சென்று படித்து ரசித்த ‘வரம்’ வெளியீடுகளை மொத்தமாக வாங்கி, திருமணம் போன்ற விசேஷங்களில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி அன்பளிப்பாகக் கிடைத்து, படித்ததை ரசிப்பவர்கள் அட்ரஸ் தேடி நேரில் வந்து வேறென்ன இருக்கிறது என்று தவறாமல் கேட்கிறார்கள்.

இந்த வெற்றி அளித்த உத்வேகம், ‘நலம்’ தொடங்கியபோது இன்னும் ஆர்வம் தந்தது. ஆரம்பத்திலேயே நலம் வெளியீடுகளின் ஆசிரியர்கள், மருத்துவர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். நூற்றுக்கணக்கான டாக்டர்களைச் சந்தித்து அவரவர் துறை சார்ந்து புத்தகம் எழுதக் கேட்டுக்கொண்டோம்.

இரண்டு பிரச்னைகள் இருந்தன. மருத்துவர்களுக்கு எழுதுவது கஷ்டம். மருத்துவர்களுக்கு நேரம் ஒரு பெரிய பிரச்னை.

இரண்டையும் பார்த்தசாரதி சமாளிக்கவேண்டியிருந்தது. அவர்கள் கூப்பிடும் சமயத்திலெல்லாம் போய் உட்கார்ந்து பேச வைத்துப் பதிவு செய்து, எழுத்தில் மாற்றி, மறுபடியும் எடுத்துச் சென்று காட்டி திருத்தங்கள் செய்து, வடிவம் கொடுத்து, ஆதாரங்களைச் சரிபார்த்து, உரிய படங்கள் சேர்த்து, அச்சுக்குப் போகுமுன் மீண்டும் ஒருமுறை டாக்டருடன் உட்கார்ந்து பேசி இறுதி செய்து – அது ஒரு வேள்வி.

பார்த்தசாரதியைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அவரது தலைமையில் இயங்கும் நலம் பிரிவு இன்றைக்குத் தமிழில் தரமான மருத்துவ நூல்களை வெளியிடும் ஒரே பதிப்பு அமைப்பு. அங்கிருந்து வெளிவரும் எந்தப் புத்தகத்தையும் – எடுத்துப் பார்க்கும் மக்கள் வைத்துவிட்டுப் போவதில்லை.

இந்த வெற்றிகள் சந்தோஷமளித்தாலும் எங்களுக்குத் தொடக்ககாலத்திலிருந்தே உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்த ஓர் எண்ணம் இன்னும் செயல்பட ஆரம்பிக்காமல் உள்ளதே என்கிற உறுத்தல் இருந்தது. குழந்தைகளுக்கான ஒரு பிரத்தியேகப் பதிப்பு.

தமிழிலா? விற்கவே விற்காது என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள். தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு ஆங்கிலப் புத்தகங்களை மட்டுமே வாங்கித் தருவது வழக்கம் என்று சொன்னார்கள். குழந்தைகள் பத்திரிகைகளே மிகக் குறைவாகத்தான் விற்கின்றன என்று கணக்கு காட்டப்பட்டது.

எங்களுக்கு மொழி ஒரு பிரச்னையே இல்லை. தொடக்கத்திலிருந்தே ஆங்கிலம் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் நாம் புத்தகங்கள் வெளியிடவேண்டும் என்றுதான் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் குழந்தைகளுக்கான ஒரு பதிப்பைத் தொடங்கும்போது, வியாபாரக் காரணங்களுக்காகத் தமிழை நீக்கிவிட்டு ஆங்கிலத்தில் அதனைத் தொடங்க மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

என்ன ஆனாலும் பிரச்னையில்லை என்று முடிவு செய்துதான் Prodigyயைத் தொடங்கினோம்.

கணிப்புகள் பொய்த்தன. சொல்லப்போனால் சந்தையின் தேவைக்கு ஏற்ப எங்களால் சப்ளை செய்ய முடியாமல் போய்விடுமோ என்கிற அளவுக்கு மலைப்பேற்படுத்தியது  அதன் விற்பனை வேகம்.

[தொடரும்]

முந்தைய அத்தியாயங்களை வாசிக்க இங்கு செல்லவும். 

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!