கிழக்கு ப்ளஸ் – 8

புத்தகம் என்று பேசத் தொடங்கும்போதே பத்து மொழிகள் என்று முடிவு செய்துவிட்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் NHM. என்றைக்கு முடியும், எப்படி முடியும் என்றெல்லாம் அதிகம் நாங்கள் கவலைப்படவில்லை. எப்படியும் முடியும் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. புத்தகங்களைப் பொறுத்த அளவில், சரியான எடிட்டர்கள் அமையும்போது எந்த மொழிக்கும் செல்லமுடியும். என்னவேண்டுமானாலும் செய்யவும் முடியும். இதுதான் அடிப்படை. இது ஒன்றுதான் முக்கியம். [பத்திரிகைகளுக்கும் இதேதான்.] இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் தெளிவாக இருந்தோம்.

ஏனெனில் நல்ல புத்தகங்களை எழுதக்கூடிய எழுத்தாளர்களைக் கண்டுபிடிப்பதுதான் இந்தத் துறையில் இருக்கிற ஆகப்பெரிய சவால். அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதும் பணியின் அனைத்துக் கட்டங்களிலும் கூடவே இருந்து விழிப்புடன் கவனிப்பதும் திருத்தங்கள் செய்வதும் எழுதி முடித்த பிரதியை மதிப்பிடுவதும் தேவையானவற்றைச் சேர்த்து, தேவையற்றதைக் களைந்து ஒழுங்கு செய்வதும் மட்டுமே புத்தகப் பதிப்புப் பணியில் கடுமையான பகுதிகள். தகுதிமிக்க எடிட்டர்களை நாம் கண்டுபிடித்துவிட்டால் போதும். சரியான நூலாசிரியர்களை அவர்கள் உருவாக்கிவிடுவார்கள். அல்லது தேடிக்கொண்டுவந்துவிடுவார்கள்.

ஆங்கில பதிப்புப் பிரிவான Indian Writing மற்றும் Oxygenக்கு ராம் நாராயணையும் மலையாள பதிப்புப் பிரிவு ‘புலரி’க்கு சுகுமாரனையும் நாங்கள் பெற்றது இந்த வகையில் – அதிர்ஷ்டம் என்று சொல்லமாட்டேன். எங்கள் சாதனை அது. ராம் நாராயண் முன்னாள் கிரிக்கெட்டர். ரஞ்சிக் கோப்பைகளுக்காக ஹைதராபாத் அணிக்கு விளையாடிவிட்டு இதழியல் ஆர்வத்தால் ஆங்கில நாளிதழ் உலகுக்குள் சென்றவர். எழுத்து மற்றும் எடிட்டிங் துறையில் நீண்ட அனுபவம் அவருக்கு உண்டு. சுகுமாரன், ஒரு நவீன கவிஞராகப் பெற்றிருக்கும் அடையாளம் மிகப் பெரிது. உண்மையில் அவர் ஒரு தேர்ந்த எடிட்டர் என்பதை இந்தக் கவிஞர் பிம்பம் பெரிதும் மறைத்தே வந்துள்ளது. அவர் குங்குமம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். சன் டிவி மலையாளத்தில் சேனல் தொடங்கியபோது அதன் செய்தி ஆசிரியராகப் பணியாற்றத் திருவனந்தபுரம் சென்றவர். சூர்யா நியூஸ் என்னும் குழந்தை, அவர் பெற்றது.

நாளைக்கு நாங்கள் தெலுங்குக்குச் செல்வோம். ஹிந்திக்குச் செல்வோம். வங்காளத்துக்குச் செல்வோம். மராத்திக்குச் செல்வோம். உர்தூவுக்குச் செல்வோம். கன்னடத்துக்குச் செல்வோம். வாய்ப்பிருந்தால் ஹீப்ரு, இட்டிஷ் மொழிகளுக்குக் கூடச் செல்லத் தடையில்லை. முதல் தேவை, சரியான எடிட்டர்கள்.

NHMமின் முதல் பதிப்புகளைத் தமிழில் தொடங்கியதால் எங்களுக்கு இங்கே எடிட்டர்களைக் கண்டுபிடிப்பது அத்தனை சிரமமாக இல்லை. பிற மொழிகளுக்குச் செல்லும்போதுதான் அதன் சவால் புரியும்.

எடிட்டர்கள் மிகவும் முக்கியம். ஏனெனில் இங்கு சரியான எழுத்தாளர்கள் குறைவு. சற்றே மிகை என்று தோன்றலாம். ஒரு வேகத்தில் அப்படியான எழுத்தாளர்கள் இல்லை என்றுகூடச் சொல்லிவிடலாம். பெரிய தவறு கிடையாது. கதைகளும் கவிதைகளும் எழுதுவதற்கு ஆயிரம் பேர் உண்டு. ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து உழைத்து நூலை உருவாக்கக்கூடியவர்களைக் கண்டடைவது அத்தனை சிரமமான பணி.

வெளிப்படையாகச் சொல்வதென்றால், பதிப்பகம் என்று தொடங்கி நாங்கள் பலமுறை தோல்வி கண்ட ஒரே விஷயம் இதுதான். சரியான எழுத்தாளர்கள். சிலருக்கு ஆரம்ப வேகம் இருக்கும். சிலர் பாதிவழி வரை உடன் வருவார்கள். சிலர் ஒன்றைச் செய்து முடித்தவுடன் ஓய்வு பெற்றுவிடுவார்கள். வேறு சிலர் ஒன்றையே வாழ்நாள் முழுதும் செய்துகொண்டும் இருப்பார்கள். பிரசுரமான புத்தகங்கள், பிரபலமான எழுத்தாளர்களை மட்டுமே உலகம் அறியும். தொடங்கிய நாளாக இன்னும் கர்ப்பத்தில் இருப்பவை / இருப்பவர் குறித்து எங்கள் எடிட்டர்கள் மட்டுமே அறிவார்கள்.

அடிப்படை என்னவென்றால் மிகக் கடுமையான உழைப்பைக் கோரும் துறை இது. ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து, விஷயம் சார்ந்து ஆய்வு மேற்கொண்டு, தகவல்கள் திரட்டி, தொகுத்து, அதை சுவாரசியமாக எழுத்தில் கொண்டு வருவதும் எடிட்டர்கள் திருப்தியுறும்வரை அதன்மீது இடைவிடாது உழைப்பதும் திரும்பத்திரும்பத் திருத்தங்கள் மேற்கொள்ளத் தயங்காதிருப்பதும் மாற்றங்களுக்கும் தலைகீழ் மாற்றங்களுக்கும் அயற்சியடையாமல் ஈடுகொடுப்பதும் எளிதல்ல. எங்களுடைய சில முக்கியமான புத்தகங்கள் (உதா: அள்ள அள்ளப் பணம், லஷ்மி மிட்டல், பில் கேட்ஸ், மு.க., ) ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் திரும்பத் திரும்ப எழுதப் பட்டவை. பலமுறை திரும்பத் திரும்ப எடிட் செய்யப்பட்டவை. அச்சான பிறகும் மறு எடிட்டிங்குக்கு உட்பட்டவை. பிரசுரமாகி நான்காண்டுகளுக்கு மேல் ஆனபிறகு, இன்றைக்கும் மறு வாசிப்பில் மாற்றி எழுதப்படவேண்டும் என்று நாங்கள் எடுத்து வைத்திருக்கும் புத்தகங்கள் பல. குமுதத்தில் தொடராக வெளியாகி, மிகப் பிரபலமாகப் பேசப்பட்டு, இன்றுவரை பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்றும் தீர்ந்துவிட்ட என்னுடைய ‘பாக். ஒரு புதிரின் சரிதம்’ – வாசகர்களுக்கு என்னதான் பரம திருப்தியளித்தாலும் என்னளவில் சரியாக அமையாததொரு புத்தகமே. ரீரைட் செய்யத்தான் போகிறேன். அதற்காகச் சில வருடங்களாக உழைத்துக்கொண்டும் இருக்கிறேன்.

இதில் வெட்கப்படவோ அவமானப்படவோ எதுவுமில்லை. இது ஒரு பயிற்சி. இடைவிடாது மேற்கொள்ளப்படவேண்டிய பயிற்சி. மருத்துவர்களும் வழக்கறிஞர்களும் மட்டுமல்ல. எழுத்தாளர்களும் ‘பிராக்டிஸ்’தான் செய்கிறார்கள் என்பதைப் பெரும்பாலும் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. தாளில் அல்லது நோட்பேடில் கைவைத்து ஒன்றை உருவாக்கிவிட்டால், உடனே அது சாகாவரம் பெற்றுவிடுவதில்லை. சாகாவரம் பெற்றது என்று எதுவுமில்லை. எல்லா பிரதிகளிலும் திருத்தங்களுக்கு இடமிருக்கிறது. எல்லா பிரதிகளும் மேம்பாட்டுக்காக எப்போதும் காத்திருக்கின்றன.

இது புரியக்கூடிய எழுத்தாளர்கள் தமிழில் மிகவும் குறைவு. எடிட்டர்களைக் கசாப்புக் கடைக்காரர்களாகக் கருதுவோர் அநேகம். வருத்தப்படுவதுதவிர வேறு வழியில்லை. ‘டாலர் தேசம்’ தொடராக வெளியாகி, பெரிய பாராட்டுகளையெல்லாம் பெற்று நூல் வடிவத்துக்குத் தயாரானபோது எங்கள் எடிட்டர்களுள் ஒருவரான பார்த்தசாரதி அதன் ப்ரூஃபில் மொழி சார்ந்து திருத்தங்கள் செய்தார். ஏற்கெனவே ஒருமுறை எடிட் செய்யப்பட்ட பிரதிதான் அது. ஆயினும் பக்கத்துக்குப் பக்கம் கிழித்துத் தோரணம் கட்டினார்.

ஆயினும் சௌந்தர்ய லஹரியைச் சென்னைத் தமிழில் வாசிப்பதுபோல் இருக்கிறது என்று எஸ்.வி. ராஜதுரை அதற்கு விமரிசனம் எழுதினார். அவர் அதனைக் குற்றச்சாட்டாகவே முன்வைத்திருப்பினும், என் நோக்கமே அதுதான் என்பதால் பரம சந்தோஷமாகிவிட்டது. அமெரிக்காவைக் குறித்துப் பாமரர்களும் குழப்பமில்லாமல் அறிந்துகொள்ளும் விதத்தில் ஒரு புத்தகம் என்பதுதான் திட்டம். இலக்கியத் தரமான மொழியில் – அல்லது அரசியல் புத்தகங்களுக்கேயான நட்டு போல்ட்டுகள் போட்ட மொழியிலும் அதனை எழுதியிருக்கலாம். முடியாது, தெரியாது என்பதல்ல. கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். ஒரு புத்தகத்தின் ஆகப்பெரிய நோக்கம், அதற்கான அத்தனை வாசகர்களையும் ஒருத்தர் விடாமல் அது சென்றடைவது. மொழியும் உத்திகளும் தொடர்புகொள்ளலுக்கான கருவிகள் மட்டுமே. இதே புத்தகம் நாளைக்கு இன்னொரு மொழிக்குச் செல்லுமானால் இந்த மொழியில் நான் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் அதில் இறந்துவிடும். கொண்டுசெல்லப்படும் மொழிக்கான வாசனையை அது ஏற்றாக வேண்டியிருக்கும். ஏற்கத்தான் வேண்டும். இதில் வருத்தம் கொள்ள எதுவுமில்லை.

டாலர் தேசத்துக்கும் நிலமெல்லாம் ரத்தத்துக்கும் இடையே மொழி சார்ந்து நிறைய வித்தியாசங்களை நீங்கள் காணமுடியும். நூலின் உள்ளடக்கமே அதன் மொழியைத் தீர்மானிக்கிறது. நிலமெல்லாம் ரத்தம், ஒரு புத்தகமாக வடிவமைக்கப்பட்டு, அதன்பிறகு தொடராக எழுதப்பட்டது. இதன் மொழி குறித்து நானும் பத்ரியும் பேசி முடிவு செய்தபிறகே ரிப்போர்ட்டரில் எழுத ஆரம்பித்தேன். அதில் ஜாலங்கள் இருக்காது. அந்தப் பிராந்தியத்தின் அரசியல் மற்றும் இருப்பியல் தகிப்பை அப்படியே சொற்களின்மீது ஏற்றும் மாபெரும் பணி இருந்தது. ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் கவனம் செலுத்தவேண்டியிருந்தது. சில அத்தியாயங்களை ஏழெட்டு முறைகூடத் திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறேன். நிலமெல்லாம் ரத்தத்தின் முதல் அத்தியாயத்தை மட்டும் பதினாறு முறை திரும்ப எழுதியிருக்கிறேன். நானாக மாற்றி எழுதியது பதிமூன்று முறை. ரிப்போர்ட்டர் ஆசிரியர் இளங்கோவன் மாற்றச் சொன்னது இரண்டு முறை. நூல் வடிவம் கொண்டபோது இன்னொரு முறையும் திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டியிருந்தது.

இந்த உழைப்புக்கு இங்கே எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் தயாராக இல்லை என்பதுதான் விஷயம். கைவைத்துவிட்டாலே காவியம்தான். குறை சொல்வதல்ல நோக்கம். இதன் கஷ்டங்கள் அப்படி. தேவைகள் அப்படி. எஸ்.பொ. ஒரு சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார். எழுத்து ஊழியம். சத்தியமான வார்த்தை. இது ஊழியம்தான். எழுத்துக்குச் சித்தாள் வேலை செய்யத் தயாராக இருந்தால் மட்டுமே இதில் சாதனைகள் சாத்தியம். எழுத்து மேஸ்திரிகளுக்கு இங்கே இடமில்லை.

[தொடரும்]

முந்தைய அத்தியாயங்களை வாசிக்க இங்கு செல்லவும். 

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter