அந்தப் புத்தகக் கண்காட்சியை மறக்கமுடியாது. கிழக்கு ஆரம்பிப்பதற்கு முந்தைய வருட சென்னை புத்தகக் கண்காட்சி.
நானும் பத்ரியும் கூட்டத்தில் நீந்தியபடி ஒவ்வொரு கடையாக நகர்ந்துகொண்டே இருக்கிறோம். புத்தி முழுக்க விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய புத்தகங்களின் மீதுதான். என்னென்ன வகைகள், என்னென்ன விதங்கள், யார் யார் எழுத்தாளர்கள், லே அவுட் எப்படி, பேகேஜிங் எப்படி, எப்படி விற்கிறது, எதை எடுக்கிறார்கள், எதை வெறுக்கிறார்கள், எது அதிகம் பில்லிங்குக்குப் போகிறது.
கவனித்துக்கொண்டே போகிறோம். காலச்சுவடு, உயிர்மை, தமிழினி போன்ற இலக்கியப் பதிப்பாளர்களின் புத்தகங்கள் தவிர, பிற துறை சார்ந்த எந்த ஒரு புத்தகமும் பார்க்கத் தரமாக இல்லை. வண்ணங்களை வாரி இறைத்த மேலட்டை. கண்ணை உறுத்தும் கொட்டை எழுத்துகள். பொருந்தாத அளவுகள். பின் அட்டைகள் மேலும் மோசம். பெரும்பாலான புத்தகங்களின் பின்னட்டைகள் நூறு சதவீத மஞ்சள் பூசியிருந்தன. உட்புறத் தாள்கள் நூலுக்கு நூல் மாறுபட்டிருந்தன. ஒரே புத்தகத்தில் இருவேறு விதமான ஜி.எஸ்.எம். தாள்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. பாதி புத்தகம் வெண்மையாகவும் மீதி நேச்சுரல் ஷேட் எனப்படும் சற்றே பழுப்புக் கலந்த வெண்மை உடுத்தியும் காணப்பட்டன.
தேவை ஒழுங்கு என்று சொல்லிக்கொண்டோம். கடைகளில் புத்தகங்களை அடுக்கும் விதம் கலவரமூட்டக்கூடியதாக இருந்தது. விற்பனையாளர்களின் பேச்சு அதனைக்காட்டிலும். விற்கிற புத்தகங்கள் எது ஒன்றும் விற்பனையாளர்கள் அல்லது மார்க்கெடிங் பணியாளர்களின் திறமையால் விற்கப்படுவதில்லை. அதது அதனதன் விதிப்படி விலைபோய்க்கொண்டிருந்தன. அன்று சுமார் அரைமணி நேரம் புத்தகங்களை எப்படியெல்லாம் சந்தைப்படுத்தலாம் என்பது குறித்து பத்ரி பேசிய வார்த்தைகள் இன்றைக்கும் எனக்கு நினைவில் இருக்கின்றன. புத்தகத் துறை குறித்து எனக்கு எப்படி அப்போது எதுவும் தெரியாதோ, பத்ரிக்கும் அதேபோலத்தான். எனக்காவது புத்தகம் எழுதுவது பற்றிய அடிப்படை தெரியும். எழுத்தாளர்கள் என்னும் இனத்தவரைப் பற்றித் தெரியும். ஒரு புத்தகம் எப்படி உருவாகிறது என்கிற அடிப்படை தெரியும். பத்ரிக்கு அப்போது இதெல்லாம் அறவே தெரியாது. அவர் ஒரு நல்ல வாசகர். அவ்வளவுதான்.
ஆனால் கற்பனை இருந்தது. தறிகெட்டுப் போகவிடாமல் அதனை ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவரும் தேர்ச்சி அவருக்கு உண்டு. கற்பனையைச் செயலில் வார்க்கிற விஷயத்தில் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்வது அவருடைய சிறப்பம்சம். எனக்கு அப்போது சத்யாவைத் தெரியாது. பத்ரியைக் காட்டிலும் மார்க்கெடிங் போன்ற நுணுக்கங்களில் அவர் மிகுந்த தேர்ச்சி கொண்டவர் என்பதெல்லாம் அறவே தெரியாது.
அந்தப் புத்தகக் கண்காட்சியின் இறுதியில், நாங்கள் தொடங்கவிருக்கும் பதிப்பு நிறுவனத்தில் எடிட்டோரியலைப் போலவே மார்க்கெடிங் பிரிவும் முக்கிய இடம் வகிக்கும் என்பதை மட்டும் உறுதி செய்துகொண்டோம்.
இரண்டு பேர் எடிட்டோரியல் பிரிவுடன் கிழக்கு தொடங்கப்பட்டு முதல் பதினாறு புத்தகங்கள் வெளியானபோது, சேகர் என்கிற ஒரே ஒரு சேல்ஸ்மேன் நியமிக்கப்பட்டார். குறிப்பிட்ட சில புத்தகக் கடைகளின் முகவரிகளை எடுத்துக்கொண்டு எங்களுடைய முதல் செட் புத்தகங்களுடன் அவர் புறப்பட்டார். டாலர் தேசம் அச்சானதும் ஐம்பது பிரதிகளை எடுத்துக்கொண்டு நானும் பத்ரியுமே கோயமுத்தூருக்குக் கிளம்பினோம்.
விஜயா வேலாயுதம் எங்களை வரவேற்றார். பெரிய புத்தகம். நிறைய விலை. எப்படி விற்கும் என்று தெரியவில்லை. நீங்கள் உதவவேண்டும். அன்புடன் கேட்டுக்கொண்டோம்.
வேலாயுதம் புத்தகத்தைப் பார்த்தார். என்னைப் பார்த்தார். ‘ரிப்போர்ட்டர்ல படிச்சிருக்கேன்’ என்று சொன்னார்.
‘நல்லா போகுமா சார்?’
‘எவ்ளோ கொண்டுவந்திருக்கிங்க?’
‘அம்பது காப்பி.’
‘அப்படியே உள்ள கொண்டாந்து வெச்சிருங்க.’ என்று சொன்னார். சந்தோஷமாக இருந்தது. அந்த சந்தோஷம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்று அடுத்தவாரமே அவர் நிரூபித்தார். கோயமுத்தூரிலிருந்து போன் வந்தது. காப்பி தீர்ந்துவிட்டது. உடனே மேலும் அனுப்பவும்.
Take off அங்கே தொடங்கியது.
ஒரு சில மாதங்களில் எங்களுக்குப் புரிந்துவிட்டது. மக்களுக்குப் புத்தகங்கள் வேண்டும். நிச்சயம் வேண்டும். உபயோகமான புத்தகங்கள் தரமான தயாரிப்பில் வருமானால் விலை ஒரு பொருட்டல்ல அவர்களுக்கு. புத்தகம் விற்காது என்பது ஒரு மாயை. ஒரு தோற்ற மயக்கம். அல்லது ஆகிவந்த பொய். திட்டமிட்டுப் பரப்பட்ட புரட்டு. நல்ல புத்தகம் கண்டிப்பாக விற்கும். ஏராளமாக விற்கும். கொள்ளை கொள்ளையாக விற்கும். இதில் சந்தேகமே இல்லை.
எங்களுடைய சேல்ஸ் டீம் பெருகத் தொடங்கியது. தமிழகம் முழுதும் கிழக்கு விற்பனையாளர்கள் என்பது எங்களின் முதல் இலக்காக இருந்தது. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ஒரு கிழக்கு புத்தகக் கடை என்னும் கனவை பத்ரி விதைத்தார். விற்பனை மற்றும் மார்க்கெடிங் பிரிவு மேலாளராக, புன்னகையையும் குங்குமப்பொட்டையும் உடுத்திய கிருஷ்ணமூர்த்தி வந்து சேர்ந்தபிறகு கனவுகள் மேலும் விரிவடையத் தொடங்கின. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியையும் தீபாவளி உற்சாகத்துடன் அணுகினோம்.
கிழக்கு டீ ஷர்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் வருடம் சென்னை கண்காட்சியில் நாங்கள் அனைவரும் வெள்ளை டீ ஷர்ட்டுடன் வளையவந்தபோது, ‘சேச்சே.. என்னாய்யா அசிங்கமா எல்லாரும் இப்படி உடுத்திக்கிட்டு வந்திருக்காங்க?’ என்று ஒரு பிரபல பதிப்பாளர் என் காதுபடக் கேட்டார். எங்களில் சிலர் அரை டிராயருடன் வளையவந்தது பலருக்கு மேலும் அருவருப்பை உண்டுபண்ணியது. அது ஒரு சௌகரியம் என்பதை எளிதில் மறந்தார்கள். எங்களது தோற்றமும் பரபரப்பும் ஆர்வமும் வேகமும் அவர்களுக்கு ஆர்வக்கோளாறாக மட்டுமே தெரிந்தது.
ஆனால் பத்து நாள் கண்காட்சியின் முடிவில் நாங்கள் பெற்ற பிரபலம், விற்பனை, பெயர் அனைத்தும் அனைவருக்கும் வெட்டவெளிச்சமானது. வியந்தார்கள். நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதை எங்களுக்குப் பிரத்தியட்சமாக உணர்த்திய கண்காட்சி அது.
இன்றைக்குப் பல பதிப்பகங்கள் தங்கள் பிராண்டைப் பிரபலப்படுத்தும் டீ ஷர்ட்டுகளைத் தம் ஊழியர்களுக்கு அளிக்கின்றன. பிட் நோட்டீஸ் குடுத்து குப்பையாக்காதிங்க என்று சத்தம் போட்டவர்கள் கத்தை கத்தையாக மார்க்கெடிங் மெட்டீரியல்களுடன்தான் கண்காட்சிகளுக்கு வருகிறார்கள். என்னாய்யா அட்டை போடறாங்க? பெரிய இங்கிலீஷ்காரன் கம்பெனின்னு நெனப்பு என்றவர்கள் எங்கள் அட்டைப்படங்களை அப்படியே நகலெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். தலைப்பு, இம்ப்ரிண்ட் ஸ்டைல், பின்னட்டை வாசகங்களில் நாங்கள் கடைப்பிடிக்கும் பாணி அனைத்தையும் அப்படியே, அப்படியே அடியொற்றத் தொடங்கினார்கள்.
எங்களுடைய சச்சின் டெண்டுல்கர் புத்தகம் சந்தையில் விற்பனையான வேகம் கண்டு மிரண்டவர்கள் உடனுக்குடன் நூறு சச்சின் டெண்டுல்கர்களை உற்பத்தி செய்தார்கள். அம்பானியைப் பார்த்ததும் ஆளுக்கொரு அம்பானி. நாராயண மூர்த்தி வந்ததும் அவருக்கும் பத்து அவதாரங்கள். எழுத்து முறை, அத்தியாயத் தலைப்புகளில்கூட பாதிப்புகள் கண்டோம். ஒரு பதிப்பகம் இன்றைக்குவரை நாங்கள் வெளியிடும் ஒவ்வொரு புத்தகத்துக்கும் நகல் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. அச்சும் அமைப்பும் துளி மாறாது.
டூப்ளிகேட்களால் எங்களது புத்தகங்களின் விற்பனை குறையுமோ என்று முதலில் சந்தேகப்பட்டேன். இல்லை. மக்களுக்குப் போலிகளை அடையாளம் காண்பது ஓர் எளிய கலையாகவே இருக்கிறது. தவிரவும் துரத்தி வருபவர்கள் நெருங்கமுடியாதபடி எங்கள் வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டே போவது ஒரு சிறந்த பொழுதுபோக்காகவும் உள்ளது.
NHMன் மார்க்கெடிங் மற்றும் சேல்ஸ் பிரிவு இன்றைக்கு எங்களுடைய எடிட்டோரியலைக் காட்டிலும் பெரிது. நான் கண்ணால்கூடப் பார்த்திராத பலபேர் தமிழகத்திலும் கேரளத்திலும் துடிப்புடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். சத்யா அவர்களை கவனித்துக்கொள்கிறார். அவ்வப்போது எக்ஸெல் ஃபைல்களில் கோடுகளால் கோலம் போட்டு அவர் காட்டும் எண்களும் அவற்றின் ஏற்ற இறக்கங்களும் பொதுவாக எனக்குப் புரிவதில்லை. பத்ரிக்கும் அநேகமாகப் புரியாது என்றுதான் நினைக்கிறேன். உருவாக்குவதைத் தவிர வேறு சிந்தனை எங்களுக்குக் கிடையாது. உருவாக்கியவற்றுக்கான சந்தையை உண்டாக்குவது தவிர அவர்களுக்கும் வேறு சிந்தனை கிடையாது.
இதனால்தான் பத்து நூறு புத்தகக் கடைகள் மட்டுமே இருந்த மாநிலத்தில் பெட்டிக்கடைகள் தொடங்கி, மருந்துக் கடைகள் வரை எங்களுடைய புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. புத்தகக் கடைகளில்தான் புத்தகம் இருக்கவேண்டுமா என்ன? டீக்கடைகளில் தினத்தந்தி இருக்கிறதே, ஏன் புத்தகம் இருக்கக்கூடாது? நாங்கள் ஹோட்டல்களைக் குறிவைத்தோம். கோயில்களைக் குறிவைத்தோம். மளிகைக்கடைகளை கவனித்தோம். வெற்றிலை பாக்குக் கடைகளைக்கூட விட்டுவைக்கவில்லை.
இதற்கும் ஆரம்பத்தில் பலத்த கிண்டல் கேலிகள் இருந்தன. ஆனாலும் இது ஒரு கதவு திறக்கிற விஷயம். திறந்த கதவு வழியே இன்று பலபேர் பயன்பெறத்தான் செய்கிறார்கள். தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள புடைவைக் கடைகளிலும் பாத்திரக் கடைகளிலும் பலசரக்குக் க்டைகளிலும் கிழக்கு, வரம், நலம் புத்தகங்களைப் பார்த்து வியப்படைந்து பலபேர் எனக்கு போன் செய்து சொல்லியிருக்கிறார்கள். பிரமாதமான உத்தி. எப்படி உங்களுக்குத் தோன்றியது? எப்படி அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்?
கற்பனைக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடிய சரியான இளைஞர்கள் அமைந்ததுதான் இதில் முக்கியமான விஷயம். நந்தகுமார் என்று ஓர் இளைஞர் எங்களிடம் இருக்கிறார். மார்க்கெடிங் பிரிவில் பணியாற்றுபவர். புத்தகக் கண்காட்சிகளில் அவர் வேலை பார்க்கும் விதத்தை மிகக் கூர்மையாக நான் கவனித்திருக்கிறேன். எப்படிப்பட்ட சிடுமூஞ்சிகளாக இருந்தாலும் இரண்டு நிமிடங்களில் பேசி, சரி செய்துவிடுவார். என்ன பேசுவார் என்று தெரியாது. குரல் வெளியே வரவேவராது. ரகசியம் போலத்தான் பேசுவார். ஆனால் காரியம் முடிந்துவிடும். எங்களுடைய சேல்ஸ் மேனேஜர் மணிவண்ணனை நான் வருஷத்துக்கு நாலைந்து முறை பார்த்தால் அதிகம். எப்போதும் களத்தில் இருப்பவர். அசப்பில் எல்.டி.டி.ஈ. பிரபாகரன் மாதிரி இருப்பார். துடிப்பு என்றால் அப்படியொரு துடிப்பு. திடீரென்று மாநிலத்தின் ஏதேனுமொரு மூலையிலிருந்தபடி போன் செய்வார். ‘சார், கள்ளக்குறிச்சிக்கு வந்தேன்.. இங்க பலபேர் ஹிட்லர் பத்தி போட்டிருக்கிங்களான்னு கேக்கறாங்க சார். திருச்சில இருக்கேன். சே குவேரா சூப்பரா போகுதுசார் இங்க. லஷ்மி மிட்டல் கொஞ்சம் டல்லடிக்குது சார். அட்டைல கொஞ்சம் சேஞ்ச் பண்ணா நல்லா இருக்கும்னு தோணுது…’
பேசக் கிடைத்த சந்தர்ப்பங்களில் இப்படி மட்டுமே அவர் பேசிப் பார்த்திருக்கிறேன். புத்தகத்தைத் தவிர இன்னொன்றைப் பற்றி இவர்கள் சிந்திப்பதுகூட இல்லையா என்று பலமுறை வியந்திருக்கிறேன். கோவையில் இருக்கும் எங்களுடைய பிரதிநிதி சுப்பிரமணியன், என்னைக்காட்டிலும் எங்கள் புத்தகங்களில் தரோவாக இருப்பவர். வாசகர் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லத் தயாராக இருக்கவேண்டும் என்பதற்காக, விற்பனைக்கு அனுப்பப்படும் புத்தகத்தை முதலில் தான் படித்துவிட்டுத்தான் சப்ளை செய்யவே ஆரம்பிக்கிறார். சமயத்தில் எனக்கே வெட்கமாக இருக்கும். நான் முழுதும் படித்திராத எங்களுடைய புத்தகங்கள் பல உண்டு. பல புத்தகங்களைப் பிற எடிட்டர்கள் பார்த்து அனுப்பியிருக்க, அவை பிரசுரமாகி பல காலம் கழித்து நான் படித்த அனுபவம் நிறைய உண்டு. ஆனால் இந்த கோவை விற்பனை அதிகாரி அனைத்துப் புத்தகங்களும் வெளியாகும் வேகத்தில் படித்துத் தீர்த்துவிடுகிறார். ஆர்வம்!
இன்றைக்கு ப்ராடிஜி வேன் தமிழகமெங்கும் ஓடத் தொடங்கியிருக்கிறது. வரவேற்பு அமோகமாக இருக்கிறது. நாளை இது கிழக்கு, வரம், நலம், இந்தியன் ரைட்டிங், ஆக்சிஜன், புலரி என்று அனைத்துக்கும் பரவும். இன்னும் பல நூதனங்கள் அறிமுகமாகும். மேலும் பல விற்பனை, சந்தைப் படுத்தும் பிரதிநிதிகள் வருவார்கள். இன்னும் பல இம்ப்ரிண்டுகளும் அப்போது அறிமுகமாகியிருக்கும்.
ஒரு விஷயம். எதுவும் புதிதில்லை. என்.சி.பி.எச். ஓடவிடாத வண்டியை நாங்கள் ஓட்டிவிடவில்லை. ஏற்கெனவே முன்னோர்கள் செய்தவைதான். துணி பேனரில் விளம்பரம் எழுதி கடைவாசலில் வைத்த பதிப்பாளர்களை அறிவேன். இன்றைக்கு நாங்கள் வினைல் போர்டில் செய்வது ஒன்றுதான் வித்தியாசம். சுதேசமித்திரன் புத்தக ஸ்டால்கள் சாதிக்காத எதையும் எங்களுடைய வித்லோகா சாதித்துவிடவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் பல மூளைகள் ஒருங்கிணைந்து யோசித்து, தீவிரத்துடன் தொடர்ச்சியாக செயல்படுத்தும்போது விளைவுகள் அழகாக அமைந்துவிடுகின்றன, அவ்வளவுதான்.
[தொடரும்]முந்தைய அத்தியாயங்களை வாசிக்க இங்கு செல்லவும்.
கிட்டத்தட்ட இதே விஷயம்தான். நேற்றைய Mint இதழில் வெளியாகியிருக்கும் என்.எச்.எம். குறித்த கட்டுரை ஒன்று இங்கே.