யுத்தம் ஏன் உதவாது?

நேற்று நான் எழுதிய ஒரு குறிப்பு உண்டாக்கியிருக்கும் அதிர்வுகளையும் சலனங்களையும் மாற்று / எதிர் கருத்துகளையும் இன்று முழுமையாக வாசித்தேன். அரவிந்தன் நீலகண்டன் அன்ஃபிரண்ட் செய்துவிட்டுப் போய்விட்டார். என்னை விடுங்கள்; நான் வெளியாள். என் கவலையெல்லாம் இப்படிக் கருத்து வேறுபாடு வரும்போது அவர் மனைவி என்ன பாடு படவேண்டியிருக்கும் என்பதே. பொதுவில் சமூகம் சகிப்புத்தன்மையை இழந்து வருகிறது. அதைவிட அபாயம், தேசியம் என்னும் கருத்தாக்கத்துக்கு ஹிந்துத்துவவாதிகள் கொள்ளும் விளக்கம் திகைப்பூட்டுகிறது.

சிறிதும் சந்தேகமின்றி நானொரு தேசியவாதி. எனக்கு என் தேசத்தைப் பிடிக்கும். இதன் அமைப்பின் அத்தனைக் குறை நிறைகளுடன் சேர்த்தே நான் என் தேசத்தை நேசிக்கிறேன். பிரிவினைப் பேச்சு – எந்த வடிவில் வருமானாலும் அதனை எதிர்க்கிறேன். பிரிவினையைத் தூண்டும் எந்த அரை டிக்கெட் அரசியல்வாதிகளின் மீதும் எனக்குச் சிறிதும் மதிப்பில்லை. ஆனால் எனது தேசிய நேசம் என்பது ஒருபோதும் தீவிர ஹிந்துத்துவர்களின் நேசத்துடன் பொருந்திப் போவதில்லை.

யுத்தம் குறித்து. பாகிஸ்தான் ஒரு தீவிரவாத ஊக்குவிப்பு தேசம் என்பதில் சந்தேகமில்லை. எங்கெல்லாம் அடிப்படைவாதம் மேலோங்கி வளர்கிறதோ அங்கெல்லாம் தீவிரவாதம் தலையெடுக்கவே செய்யும். மத அடிப்படைவாதம் சென்று சேரும் இடம் தீவிரவாதம் மட்டுமே. தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் எல்லை தாண்டும் தீவிரவாதத்தை சம்பந்தப்பட்ட இரு தேசங்களின் அரசுகள்தான் பேசி சரி செய்ய இயலும். பாகிஸ்தானைப் பொறுத்தவரை அரசு / தீவிரவாத இயக்கங்கள் / உளவுத்துறை என்பது ஒருங்கிணைந்து செயல்படும் ஓர் அமைப்பு. அத்தேசத்தைக் குறித்து ஓரளவு ஊன்றிப் படித்தவன், தொடர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். நவாஸோ, பேனசிரோ, முஷாரஃபோ, இன்றைய இம்ரானோ இவர்களுக்கு முந்தைய காலத்துத் தலைவர்களோ ராணுவ அதிகாரிகளோ – தொடக்கம் முதலே இந்த ஏற்பாட்டுக்கு மிகவும் பழகிவிட்டவர்கள். உள்நாட்டு / உள்கட்டுமான வளர்ச்சி என்பதை விஸ்தரிக்க முடியாத சூழ்நிலையில், பெரும்பாலும் கடனில் வாழுகிற ஒரு தேசம் மக்களின் கோபத்தை அரசிடம் இருந்து விலக்கி வேறு பக்கம் திருப்ப 1948 முதல் அவர்கள் காஷ்மீரை ஒரு எட்டாக்கனியாக முன்வைத்து ஏசு வந்தே விடுவார் என்கிற பிரசாரத்தைப் போல, காஷ்மீர் நமக்குத்தான் என்று கூறி வந்திருக்கிறார்கள். இனி வரும் தலைமுறை இதனை மாற்றிப் பேசும் என்று எதிர்பார்க்க இயலாது.

இன்னொன்று, மத்தியக் கிழக்கின் அனைத்து மத அடிப்படைவாத / தீவிரவாத இயக்கங்களுடனும் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இயக்கங்கள் தொடர்புள்ளவை. இந்த இயக்கங்கள் அனைத்தும் பாக். உளவுத்துறையின் அரவணைப்பில் வளர்பவை. உளவுத்துறையே அங்கு உண்மையான ஆட்சியாளர்கள். முன்சொன்ன தலைவர்கள் அனைவரும் உளவுத்துறை அவ்வப்போது தேர்ந்தெடுத்து ஷோ கேஸில் வைத்த முகங்கள் மட்டுமே.

மதத்தை முன்னிறுத்தி ஆளும்போது இம்மாதிரியான இடர்பாடுகளைத் தவிர்க்கவே இயலாது. ஒரு முஸ்லிம் தேசமாக பகிரங்கமாக அறிவித்துக்கொண்டு செயல்படும்போது அடிப்படைவாதிகளை அரவணைத்தே போயாகவேண்டும். இது விதி. மாற்ற இயலாதது.

காஷ்மீரில் பாக். தீவிரவாத இயக்கம் ஊடுருவியதும் வெடிபொருள்களைப் பயன்படுத்தி இந்திய ஜவான்களைக் கொன்றதும், பதிலுக்கு இந்திய வீரர்கள் பாக். தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதும் நடந்திருக்க வேண்டாத சம்பவங்கள்தாம். ஆனால் நடந்துவிட்டது. ஒரு போரைத் தொடங்கி, பாகிஸ்தானை முற்றிலுமாக அழித்து நாசமாக்கிவிடுவதன் மூலம் இந்தப் பிரச்னையை இனி நிரந்தரமாகத் தீர்த்துவிட முடியும் என்று நம்புவதைத்தான் நான் மறுக்கிறேன். இதே போன்றதொரு தீவிரவாதத் தாக்குதலைத்தான் 9/11 அன்று அல் காயிதா அமெரிக்காவில் மேற்கொண்டது. பதிலுக்கு அமெரிக்கா ஆப்கன் மீது படையெடுத்தது. பெரும்பாலான உலக நாடுகள் தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்க யுத்தத்தில் அதன் பக்கம் நின்றன. கடும் யுத்தம். தாலிபன்கள் அழிக்கப்பட்டார்கள். ஒசாமா செத்துப் போனார். அல் காயிதாவின் ஆட்டம் குறைந்தது. நல்ல விஷயம்தான். ஆனால் இன்றுவரை ஆப்கன் மீண்டு எழவில்லை. ஆப்கனில் வசிக்கும் அத்தனைப் பேருமே அல் காயிதாக்காரர்களும் தாலிபன்காரர்களும்தானா? தாலிபன்களால் அனுபவித்த துயரங்களைக் காட்டிலும் அம்மக்கள் இன்றுவரை அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள். ஒரு போரின் விளைவு, தோற்கும் தேசத்தை சர்வநாசமாக்கிவிடுவதை சரித்திரம்தோறும் பார்த்து வந்திருக்கிறோம். இயக்கங்களும் அரசாங்கங்களும் மேற்கொள்ளும் கோர நடவடிக்கைகளுக்கு அப்பாவி மக்களின் வாழ்வை பலி கொடுப்பது எப்படி நியாயமாகும்?

எண்ணெய்ப் பொருளாதாரத்தின் ஏகபோகச் சக்கரவர்த்தியாகும் வெறி ஒன்றே அமெரிக்காவை இராக் மீது படையெடுக்க வைத்தது. கொடுங்கோலாட்சி புரிந்த சதாம் செத்தார். ஆனால் அமெரிக்கா முன்வைத்த தீவிரவாத ஒழிப்பு என்னும் பிரகடனம் நிறைவேற்றப்பட்டதா? இங்கே ஒரு அல் காயிதாவை அடக்கினால் அங்கே ஒரு ஐ.எஸ் உருவாகிவிடுகிறது. இன்றுவரை சிரியாவில் யுத்தச் சத்தம் ஓய்ந்தபாடில்லை. மக்களின் அன்றாட வாழ்வு, கல்வி, வேலைவாய்ப்புகள், பொருளாதாரம் அனைத்தும் சின்னாபின்னமாகிவிடுகின்றன. யுத்தங்கள் அமைதியை உண்டாக்குவதில்லை. அகதிகளை மட்டும்தான் உண்டாக்குகின்றன.

ஒரு பேச்சுக்கு இந்தியா, பாகிஸ்தான்மீது போர் தொடுக்கிறது என்று வைத்துக்கொண்டால் கண்டிப்பாக அந்த யுத்தத்தில் இந்தியா வெல்லும். இதில் சந்தேகமில்லை. ஆனால் நிச்சயமாகத் தீவிரவாதத்தை அது அடியோடு வேரறுக்கும் என்று சொல்ல இயலாது. வேறு வடிவில் இன்னும் உக்கிரமாக அதை வளர்க்கத்தான் யுத்தம் உதவும். ஏனெனில் எழுபதாண்டுக் காலமாக எதிரி தேசமாகச் சொல்லிச் சொல்லி உருவேற்றப்பட்ட மக்கள் யுத்தத்தின் காரணத்தையும் விளைவையும் அலசி ஆராய்ந்து தமது தவறுகளை உணர்ந்து மாற்றிக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம். பாலஸ்தீன் சிக்கலைப் போலவே காஷ்மீர் சிக்கலையும் இக்காலம் உடனடியாகத் தீர்த்து வைக்க வாய்ப்பில்லை. ஏனெனில், தேசம் என்பது அரசியல்வாதிகள் மட்டுமல்ல. ஆனால் துரதிருஷ்டவசமாக அரசியல்வாதிகளே முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள்.

நிரந்தரமாகத் தீர்க்க இயலாத சிக்கல்களைத் தாற்காலிக அமைதிப் பேச்சுகளின்மூலம் தீர்ப்பது அல்லது உக்கிரத்தைத் தணிப்பது என்பதே பக்குவப்பட்ட தலைவர்கள் செய்யக்கூடிய செயலாகும். மாட்டிக்கொண்ட அபிநந்தனை விடுவித்து அனுப்பிவைப்பதன் மூலம் இம்ரான் கான் ஒன்றும் உடனடி உலக உத்தமர் ஆகிவிடப் போவதில்லை. ஆனால் இப்போதைக்கு நாங்கள் யுத்தத்தில் ஆர்வம் செலுத்தத் தயாரில்லை என்ற மறைமுக அறிவிப்பு அதில் உள்ளது. ஒருவேளை இன்னும் பலமான யுத்தத்துக்கான ஆயத்தங்களுக்கு அவர்களுக்கு அவகாசம் தேவைப்படலாம். அதற்காகவும் இதனைச் செய்யலாம். ஜெனிவா ஒப்பந்தம் எல்லாம் சும்மா. அபிநந்தன் பிடிபட்ட விடியோவை வெளியிடாமல் இருந்திருந்தால் அங்கேயே கதையை முடித்துப் புதைத்துவிட்டிருப்பார்கள். அப்படி ஒருவர் சிக்கவேயில்லை என்றும் சொல்லிவிட இயலும். ஆனாலும் இம்ரான் அதனைச் செய்யவில்லை.

நிரந்தர அமைதிக்கான வாய்ப்பு உடனடியாகக் கூடாத பட்சத்தில் இத்தகு தாற்காலிக நன்னடவடிக்கைகள் மூலம்தான் அனைத்தையும் கடந்தாக வேண்டும். ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பாகிஸ்தான் இன்னும் எத்தனை நூறாண்டுகள் கடந்தாலும் மாறாது, வளராது, இப்படியேதான் என்றும் இருக்கும். இந்திய ஆட்சியாளர்கள் உண்மையிலேயே அதன் ஆட்டத்தையும் கொட்டத்தையும் அடக்கிவைக்க விரும்பினால் நட்பு நாடுகளின் துணையுடன் வலுவான பொருளாதாரத் தடைகளைத் திணித்து நாலாபுறங்களில் இருந்தும் நெருக்கடி தந்துதான் அடக்கப் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் விஷயத்தில் பலனளிக்கக்கூடியது ராஜதந்திர அரசியல் மட்டுமே. ஃபேஸ்புக் யுத்த கோஷங்கள் எல்லாம் பத்து காசுக்குப் பெறாது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter