சூடாமணி விகாரத்தின் தலைமைப் பிக்கு யார்?

நான் திரும்பத் திரும்ப வாசிக்க விரும்பும் புத்தகங்களுள் ஒன்று பொன்னியின் செல்வன். சினிமாவில் இருப்பவர்கள், சினிமாவின்மீது ஈர்ப்பு இருப்பவர்கள் இரு தரப்புக்கும் இது ஒரு விசேஷமான கதை. லட்சக்கணக்கான வாசகர்கள் தலைமுறை தலைமுறையாக ரசித்துவரும் படைப்பு என்பது உண்மையே. ஆனால் சினிமா பிரியர்களுக்கு இது ஒரு தீராத வியப்பளிக்கும் கதை. காரணம், இதைவிடச் சிக்கலான ஒரு கதையை, இதைவிட நேர்த்தியாகத் திரைக்கதை வடிவில் இன்னொருத்தர் இன்றுவரை எழுதவில்லை என்பதுதான். பொன்னியின் செல்வன், தன்னளவில் ஒரு மிகச் சரியான திரைக்கதைதான் என்பது என் தீர்மானம். அதை நாவல் என்றும், நெடுங்கதை என்றும் பெருங்கதை என்றும் காவியம் என்றும் யார் என்ன சொன்னாலும் சரி. எனக்கு அது ஒரு திரைக்கதை நூல்.

இந்தக் கதையை மணி ரத்னம் இப்போது சினிமாவாக எடுக்கப்போகிறார் என்றும் ஜெயமோகன் அதற்கு எழுதிக்கொண்டிருக்கிறார் என்றும் கேள்விப்பட்டேன். அவர்கள் என்னை மன்னிக்கத்தான் வேண்டும். விஷயம் தெரிந்ததும் முதலில் சிரித்துவிட்டேன். ஏனென்றால் எனக்குத் தெரிந்து நான் கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் அநேகமாக உத்தராயணத்துக்கு ஒருத்தர், தட்சிணாயனத்துக்கு ஒருத்தர் கிராவிடம் வந்து பொன்னியின் செல்வனைப் படமெடுக்கப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவர் புன்னகை மன்னர். யாருக்கும் மறுப்புச் சொல்ல மாட்டார். ஒருத்தரிடம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்தம் போட்டு வைப்பார். கண்டிப்பாக அந்த ஒப்பந்தக் காலம் காலாவதியாகும். பிறகு அதைத்தூக்கி இன்னொருத்தருக்குக் கொடுப்பார். கமலஹாசனில் ஆரம்பித்து எத்தனையெத்தனையோ பேர் இம்முயற்சியைத் தொடங்கிப் பாதியில் விட்டிருக்கிறார்கள்.

பிறகு சிலர் தொலைக்காட்சித் தொடராக எடுப்பதற்கு முயற்சி செய்து பார்த்தார்கள். அதுவும் நடந்தமாதிரி தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் யாரும் படமெடுக்கப்போவதில்லை என்று தெரிந்துவிட்டது. ஒரு நல்ல நாள் பார்த்து கலைஞர் கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கினார். அதன்பிறகு தமிழ்நாட்டின் தொண்ணூற்றொன்பதே முக்கால் சதவீதப் பதிப்பாளர்கள் (இப்போது கிழக்கு உள்பட) பாய்ந்து பாய்ந்து அவரது நாவல்களைப் பதிப்பித்தார்கள். கல்கி யாரையும் ஏமாற்றவில்லை. மலிவுப் பதிப்பென்றாலும் விற்பார். நூலகப் பதிப்பென்றாலும் விற்பார். நடுவாந்தரப் பதிப்பென்றாலும் நன்றாகவே விற்பார்.

கல்கியெல்லாம் இலக்கியவாதியே இல்லை, வெறும் கமர்ஷியல் ரைட்டர், காலத்தின்முன் நிற்கமாட்டார்; என்று கச்சை கட்டிக்கொண்டு தொடை தட்டிய கோஷ்டிகளெல்லாம் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கல்கி சௌக்கியமாகத் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உட்கார்ந்திருக்கிறார். தமிழ் எழுத்துலகில் ஏகபோகச் சக்கரவர்த்தி என்றால் அவர்தான். அவரளவு வாசிக்கப்பட்டவர்களும் இல்லை, நேசிக்கப்பட்டவர்களும் இல்லை. [என் அப்பா ஓய்வுக்குப் பின் தனது அசகாய சேமிப்பில் கஷ்டப்பட்டு ஒரு ஃப்ளாட் வாங்கி அதற்கு ஆசை ஆசையாகக் கல்கி என்றே பெயர் வைத்தார்!]

நான் குறைந்தது ஆறு முறை பொன்னியின் செல்வனைப் படித்திருக்கிறேன். இரு வருட இடைவெளிகளில் படிப்பது வழக்கம். நூற்றுக்கணக்கான சஸ்பென்ஸ்களையும் ஏராளமான உறவுச் சிக்கல்களையும் உள்ளடக்கிய கதை அது. கதாநாயகனின் முடிவற்ற மிக நீண்ட பயணங்களின் ஊடாக ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை ஆண்டவர்களின் கதை சொல்லப்படும். கதையில் ஆங்காங்கே விழுந்துகொண்டே போகும் பிரும்ம முடிச்சுகளை ஓரிடத்தில்கூடத் தோற்காமல் ஒவ்வொன்றாக வெகு அநாயாசமாக அவிழ்ப்பார் கல்கி.

நம்ப முடியாத அளவுக்குப் பெரிய கேன்வாஸை எடுத்துக்கொண்டு எழுதும்போது கடைப்பிடிக்கவேண்டிய உத்திகள் என்னென்ன என்பதைப் பொன்னியின் செல்வனைப் படித்தே நான் கற்றேன். குமுதம் ரிப்போர்ட்டரில் நான் எழுதிய டாலர் தேசம் தொடரில் அவரது இரண்டு உத்திகளை இன்னும் சற்று நவீனப்படுத்தி, அபுனைவின் சாத்தியங்களுக்கு ஏற்ப மறுவடிவம் அளித்துப் பயன்படுத்தியிருக்கிறேன். [இரு வேறு களங்களில், வேறு வேறு காலக்கட்டங்களில் நடைபெறும் ஒரேவிதமான சம்பவங்களை ஒன்றோடொன்று கலந்ததுபோல் எழுதுவது எப்படி என்பது ஒன்று. பிரதான விஷயத்திலிருந்து விலகி, கிளைக்கதையில் வெகுதூரம் போக நேரும்போது திரும்பவும் ராஜபாட்டைக்கு சிராய்ப்பு இல்லாமல் வந்து சேர்வது எப்படி என்பது மற்றொன்று.]

பொன்னியின் செல்வனை அதே நீள அகலங்களுடன் படமெடுப்பதென்றால் கட்டாது. அதை மூன்று மூன்றரை மணி நேரத்துக்குள் சுருக்குவதென்றால் எவையெவையெல்லாம் வெட்டுப்படும் என்று நான் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன். பார்க்கலாம் மணிரத்னம் என்ன செய்கிறாரென்று.

சமீபத்தில் திரும்பவும் பொன்னியின் செல்வனைப் படிக்க ஆரம்பித்து கடைசி பாகத்தின் கடைசி நூறு பக்கங்களில் இப்போது நிற்கிறேன். திடீரென்று ஏடாகூடமாக ஓர் எண்ணம் தோன்றியது. சமகால அரசியல்வாதிகளில் யார் யார் எந்தெந்தப் பாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருக்கக்கூடும் என்று யோசித்துப் பார்த்ததில் இப்படியொரு பட்டியல் தேறியது. ஒரே ஒரு கதாபாத்திரத்துக்கு மட்டும் எத்தனை யோசித்தும் யாரும் அகப்படவில்லை. இனி பட்டியல்:

சுந்தர சோழச் சக்கரவர்த்தி – கலைஞர். அனிருத்த பிரம்மராயர் – ஆற்காடு வீராசாமி. ஆழ்வார்க்கடியான் – துரைமுருகன். ஆதித்த கரிகாலன் – அழகிரி. அருண்மொழி வர்மன் – ஸ்டாலின். குந்தவை – கனிமொழி. பெரிய பழுவேட்டரையர் – கலாநிதி  மாறன். சின்ன பழுவேட்டரையர் – தயாநிதி மாறன். நந்தினி – ஜெயலலிதா. வானதி – தமிழச்சி தங்கபாண்டியன். கொடும்பாளூர் பூதி விக்கிரமகேசரி – வீரமணி. குடந்தை ஜோதிடர் – சோ. தேவராளன் – ராமதாஸ். மதுராந்தகத்தேவர் – ஈவிகேஎஸ் இளங்கோவன். கந்தமாறன் – டாக்டர் அன்புமணி. நாகப்பட்டிணம் சூடாமணி விகாரத் தலைமைப் பிக்கு – பிரணாப் முகர்ஜி.

வந்தியத்தேவன் – அதான் சொன்னேனே, யாரும் இன்னும் அகப்பட்டபாடில்லை.

Share

40 comments

  • ஏன் இவரை மட்டும் விடுவானேன்? வந்தியத்தேவன் – விஜயகாந்த் 🙂

  • மணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன் ” முயற்சியினைக் குறித்து நேற்று இரவு தான் நண்பர்களுடனும் குடும்பத்தாருடனும் பேசிக் கொண்டிருந்தேன். இந்தக் காவியத்தை 3 மணி நேரப் படமாக மாற்றுவது எத்தனை ரிஸ்க் என எல்லோரும் சொன்னார்கள். அதே போல கல்கி சமைத்த அந்த பாத்திரங்களுக்கு நிகராக இப்போது திரை நட்சத்திரங்கள் யாருமில்லையே என்ற வருத்தமும் எங்கள் உரையாடலில் இருந்தது.

    தினமும் மாலை மணிரத்னம் வீட்டு வழியாகத்தான் ஆபிசிலிருந்து இல்லம் திரும்புவேன். “மணி வேண்டாம் பொன்னியின் செல்வனை விட்டுடுங்கோ” என சொல்லனும்னு ஆசை

    கதையில் நிலவறை, இருட்டு , ஒற்றை விளக்கு, பந்த நெருப்பின் வெளிச்சம் என தனக்கு நிறைய ஆப்பர்ச்சூனிட்டி இருப்பதாக மணி நினைத்திருக்கலாம்

    பாரா சார்,

    கதாபாத்திரங்களுக்கு உங்கள் செலக்ஷன் சூப்ப்ப்ப்பர்..

  • நீங்கள் என்ன இப்படி கூறுகிறீர்கள்? வந்தியத்தேவன் நம்ம ஆ.ராசாவேதான்னு ஒருத்தர் எழுதியிருந்தாரே. ஆனால் எப்படி எனக்கூற மறுத்து விட்டார். நீங்கள் ஊகிக்க முடியுமா? :))))))))))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  • Ravidaasan – Subramaniaswamy

    poonguzhali – Premalatha vijayakanth

    pinakabaani – Sarathkumar

    pallavan paarthibendiran – Thiruma

    Sembian MaaDevi – Thayaalu ammal

  • Dondu Sir – Ranagalamaana pathil…at first I didn’t get. Theraatha koottamappaa!!!

  • “கல்கியெல்லாம் இலக்கியவாதியே இல்லை, வெறும் கமர்ஷியல் ரைட்டர், காலத்தின்முன் நிற்கமாட்டார்;…”

    இதைப்பற்றிய என்னுடைய கருத்தைக் கூற விரும்புகிறேன்.
    ஆமாம். “பொன்னியின் செல்வன்” பலரால் வாசிக்கப்பட்டதுதான். பலரைக் கவர்ந்ததுதான். அதில் சிறிதும் ஐயமே இல்லை. என்னையும் கூட. ஆமாம் காலங்கடந்து நிற்பவைதான். சந்தேகமே இல்லை. இவைகளைக் கொண்டு சிறந்த இலக்கியம் என்று சொல்லிவிட முடியுமா?

    சற்று உணர்ச்சிவசப்படாமல் சிந்திப்போம்.

    பொன்னியின் செல்வனைப் படித்துவிட்டு வாசகர்கள் என்ன செய்வார்கள்?. கல்கியின் மற்ற படைப்புகளைப் படிக்கத் துவங்குவார்கள். வெறித்தனமாக படிப்பார்கள். சந்தேகம் வேண்டாம். நான் செய்தேன். பிறகு என்ன செய்வார்கள்?. பாலகுமாரனின் உடையார், சாண்டில்யனின் கடல்புறா என்று செல்வார்கள். நல்லவேளை நான் கல்கியோடு நிறுத்திக் கொண்டேன்.

    என்னுடைய நண்பரொருவர் பொன்னியின் செல்வனைக் கல்லூரிக்குச் செல்லாமல் விடுமுறை எடுத்தெல்லாம் படித்தாராம். நண்பரின் நண்பர் சாப்பிடாமல் எல்லாம் படித்தாராம்.

    சரி. இன்றுள்ளவர்கள் படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதே பெரிய விஷயம். அப்படி யாராவது தப்பித் தவறி நேரம் ஒதுக்கினாலும் பெரும்பாலும் பொன்னியின் செல்வனைத்தான் வாங்கிப் படிப்பார்கள். பெரும்பாலரையும் விடுங்கள். நான் அதைத்தான் செய்தேன். உண்மையாலுமே படிக்க வேண்டியவைகளை படிக்காமலும் இலக்கியங்கள் என்றால் என்னவென்றே தெரியாமலும் போய் விடுவார்கள். இங்குதான் பிரச்சனையே!

    பொன்னியின் செல்வன், நல்ல விறுவறுப்பான கதைதான். நன்றாக கனவில் மிதப்போம். சந்தேகமே வேண்டாம். கல்கி கல்கி என்று பிதற்றுவோம். பிறர் பிதற்றுகிறார்களோ என்னவோ நான் பிதற்றினேன்.

    சரி. சிந்திக்கச் சில கேள்விகள்:
    1) தொலைக்காட்சித் தொடர் நாடகங்களை வீடு தவறாமல் எல்லோரும் பரவலாக பார்க்கிறார்கள். அதனால் இது சிறந்த கலை நிகழ்ச்சி என்று சொல்லிவிட முடியுமா?

    2) வசந்த் தொலைக்காட்சியில் தினமும் மாலை 5 மணிக்கு அரை மணிக்கு கதை கேளுங்க நிகழ்ச்சின்னு பொம்மாலாட்டம் போடுகிறார்கள். எத்தனைப் பேருக்கு இது தெரியும்? மேலும் பார்க்கிறார்கள்? இதை வைத்து சிறந்த கதை நிகழ்ச்சி இல்லை என்று சொல்லிவிட முடியுமா?

    அபிராமி அந்தாதிக்கு திரு.கி.வ.ஜ. எழுதிய உரையைப் படித்திருக்கிறீர்களா? நான் முழுதும் படித்ததில்லை. நான் அதனுடைய காப்புப் பாடலுகாகவும் முதல் பாடலுக்காகவும் அவர் எழுதியதைப் படித்தேன். அப்பா! எத்தனை நுணுக்கங்கள் சொல்லிலும் பொருளிலும்! வியந்தேன் அபிராமிப் பட்டரை நினைத்து!

    மேலும் சில கேள்விகள்;
    3) பொன்னியின் செல்வன் சிந்தனைகளைத் தூண்டுவிடுகிறதா? அப்படியென்றால் எப்படிப்பட்டச் சிந்தனைகளை? (எனக்கு எதுவும் நடக்கவில்லை. மாறாக என் மூளை சற்று மழுங்கியிருந்தது. நல்ல வேளை எப்படியோ கண்டுகொண்டேன்.)
    நன்றாக நேரம் போகும். சந்தேகமே இல்லை.

    4) சிந்தனைகளைத் தூண்டாமல் விறுவிறுப்பாக நேரம் போக்க மட்டும் உதவினால் சிறந்ததென்று சொல்லிவிட முடியுமா? சீட்டாட்டம் கூட இதைச் செய்யுமே?

    5) சூதாட்டங்களும் காலங்கடந்து வெவ்வேறு வடிவங்களில் நிற்கத்தானே செய்கிறது? அதனால் சிறந்த கலையென்று சொல்லிவிட முடியுமா?

    நான் நிரம்பக் கற்றவன் அல்ல. நான் சொல்ல முயற்சிப்பது இதைத்தான்:
    நல்ல இலக்கியங்கள் பொழுது போக்குக்காக இருக்கலாம். ஆனால் அது சிந்திக்கத் தூண்டவும் வேண்டும். மூளையை மழுங்கடிக்ககக் கூடாது. பலரால் படிக்கப்பட்டு பலரது கவனத்தையும் கவர்ந்ததால் அது இலக்கியமாகது. விறுவிறுப்பாக இருப்பதால் அது இலக்கியமாகது. கொஞ்சமாக இருந்தாலும் நிறையக் கேள்விகளைக் கேட்க வைக்க வேண்டும். ஏன் ஏன் என்று கேள்விகள் எழ வேண்டும்.

    படிப்பவர்களுக்கு நல்ல அக மாற்றத்தை உண்டு பண்ணவேண்டும். நான் தன்னம்பிக்கை நூல்களைப் பற்றி இங்கு சொல்லவில்லை.

    இதைப்பற்றி நிறைய சொல்லலாம். கடைசியாக ஒன்று சொல்லி முடித்துக் கொள்கிறேன். காலம் காலமாக நாம் செய்யும் தவறாக நான் கருதுவது, ஒருவரை ஏதோ விஷயத்தில் பிடித்துவிட்டால் கடைசிவரை அவரையே பிடித்துக் கொள்வது. யார் வந்து எதைச் சொன்னாலும் உண்மையோ பொய்யோ சிந்திக்காமல் மறுப்பது. இது இந்தியாவில் அரசியலிலும் எல்லாவிடங்களிலும் நடக்கிறது. கேட்டால் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்பார்கள்!

    நான் நிரம்பக் கற்றவனல்ல. மனதிற்குப் பட்டவற்றைச் சொல்கிறேன். அவ்வளவே. பரிசீலணைக்கும் மாற்றத்திற்கும் உட்பட்டவையே! தவறிருந்தால் மன்னிக்கவும்.

    அன்புள்ள
    பா.மாரியப்பன்

  • வந்தியதேவன் ஆ.ராசா வா?? ம்ம்ம் புரிகிறது!!

    ஆனால் அதே அளவுகோலின்படி ஆதித்த கரிகாலன் MGR ஆக இருக்கவேண்டுமே!!

    உதைக்கிறதே!!

  • நம்ம சுப்பர் ஸ்டாரே வந்தியதேவன் – நன்றாக கமெடி பண்ணூவார்.

  • சமீபத்தில் தான் பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பித்தேன், on web. ஆனால், அதை படித்து முடிகிறவரை என்னால் நிறுத்த முடியவில்லை. எத்தனையோ உலக பெரும் இலக்கியங்கள் என்னை நெருங்க முடியவில்லை. ஆனால் பொன்னியின் செல்வன் – என்னால் பொன்னியின் செல்வனை விட முடியவில்லை. நான் சொல்வது ஒரு பாமரனின் வார்த்தை. சாரு நிவேதிதாவும், ஜெய மோகனும், எனக்கு வேண்டியதை கொடுக்க முடியவில்லை, ஆனால் பொன்னியின் செல்வன் கொடுத்தது. பொன்னியின் செல்வன் ஒரு போதை, சாமானியர்களுக்கான ஒரு போதை. எனக்கு இலக்கியங்கள் பற்றி கவலை இல்லை. அதை பற்றி கவலை பட ஒரு சில பேர் இருக்கிறார்கள். இலக்கியங்கள் எனக்கு புரியாவிட்டால் அது இலக்கியத்தில் பிரச்சனையா அல்லது என் பிரச்சனையா?. I don’t care. I read what interest me and what deserves my time!. If you think I am a fool then you have to consider reading Design Driven Innovation – by Roberto Verganti!!!

    நான் எழுதுவது உனக்கு புரியாவிட்டால், நீ ஒரு முட்டாள், என்றொரு மனோபாவம் இங்கே நடக்கிறது. மயிறு எனக்கு புரியாமல் நீ எழுதுவதானால் நீ ஒரு முட்டாள் என்று நான் ஏன் நினைக்க கூடாது?

  • மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையைப் படம் எடுக்கிறார்..அதை ராஜா காலத்து கதையாகவே எடுக்கிறார் என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள்? கர்ணன் கதையை, ராமாயணம் கதையை எடுத்த மாதிரி நிகழ காலத்தில் கொண்டு வந்து தான் எடுப்பார்…

  • வந்தியத்தேவன் – ஆ.ராசாவா? ஏன்னு எனக்கு புரிஞ்சுபோச்சு. சொன்னா (பா.ரா) வீட்டுக்கு ஆட்டோ வரும்.

  • திரு மாரியப்பன்,
    இலக்கியம் என்பதற்கான அளவீடுகள் மாறிக் கொண்டே இருப்பவை..ஒரு காலத்தில் ஐம்பெரும் காப்பியங்கள் மட்டும் தான் இலக்கியமாக இருந்திருக்கும்;இன்று கருவாச்சி காவியத்தை இலக்கியம் என்று சிலர் அடித்துக் கூற இருக்கிறார்கள்..

    மற்றபடி நீங்கள் சொல்வது உண்மை..அபிராமி அந்தாதிக்கு கிவாஜ வின் உரை எந்தப் பதிப்பகம் போட்டது? இப்போது அச்சில் இருக்கிறதா?

    விவரம் தெரிவித்தால் மகிழ்வேன்..

  • விரைவில் வஞ்சிக்கோட்டை வாலிபனும்,சந்திரலேகாவும்தான் உலக திரைப்படங்களில் தலைசிறந்தவை என்று நீங்கள் எழுதக்கூடும்.படிக்க விறுவிறுப்பான கதை என்றால் கல்கியை விட சுவாரசியமாக எழுதியவர்கள் என்று ஒரு டஜன் பேரையாவது பட்டியலிடலாம்-அலெக்ஸ்டான்டர் டுமாஸ்,அகதா கிறிஸ்டி உட்பட பலர் தேறுவார்கள்.
    சுஜாதாவின் ரசிகர்கள் கல்கியை விட சுஜாதா அதில் பல மடங்கு சிறப்பான எழுத்தாளர் என்பார்கள். கல்கியே எந்தெந்த எழுத்துகளை படித்து தன் எழுத்தினை உருவாக்கிக் கொண்டார் என்று ஒரு பட்டியல் தருவார்கள் சிலர். உங்களுக்கு சில எழுத்து உத்திகளை கல்கி கற்றுக் கொடுத்தார் என்று வேண்டுமானால் எழுதுங்கள்.அது பரவாயில்லை.அதை விடுத்து வெகு மிகையாக எதையாவது எழுதினால் அது நகைப்பிற்குரியது. நல்ல பதிவு நன்றி பாரா என்று கூட பின்னூட்டம் போட முடியாது 🙂

  • To Maariyappan:
    “3) பொன்னியின் செல்வன் சிந்தனைகளைத் தூண்டுவிடுகிறதா? அப்படியென்றால் எப்படிப்பட்டச் சிந்தனைகளை? (எனக்கு எதுவும் நடக்கவில்லை. மாறாக என் மூளை சற்று மழுங்கியிருந்தது. நல்ல வேளை எப்படியோ கண்டுகொண்டேன்.)
    நன்றாக நேரம் போகும். சந்தேகமே இல்லை. ”

    நீங்கள் பொ.செ -வை சரியாக படிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது . நுனிப்புல் மேய்ந்தவர்கள் எல்லாம் பொ செ பற்றி பேச அருகதை அற்றவர்கள். தியாக சிகரம் – என்கிற வார்த்தை யை எங்காவது பார்த்தீர்களா நீங்கள் படிக்கும் போது? நேர்மை நியாயம் போன்றவற்றை இக்கால தலைமுறையான எங்களுக்கு பொ செ தான் போதிதத்தது . தமிழின் மீதான ஆர்வத்தை தூண்டியது பொ செ தான். தேவாரப்பா க்கள் பிரபந்தங்கள் மற்றும் இன்ன பிறவற்றின் இன்பங்களை பொ செ வில் தான் நாங்கள் அறிந்து கொண்டோம் . எப்போதாவது பொ செ வில் உள்ள மேற்படி மேற்கோள்களை நீங்கள் படித்தீர்களா? அபிராமி அந்தாதி படிக்கும் முன் நம்முடைய முப்பாட்டர்களின் தேவார திருவாசங்களை அவற்றில் உள்ள வட்டார தமிழ் வழக்குகளோடு இயைந்த வரலாற்று குறிப்புகளை , பிரபந்தங்களின் தூய தமிழ் சொற்களை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள்.

  • அன்புள்ள நண்பர்களுக்கு

    கீழ்வருபவைகள் யாவும் நான் ஓரளவு தெரிந்து கொண்டவையே…. கருத்துக்கள் மாறலாம்…. கற்றது கைம்மண்ணளவு. கல்லாதது உலகளவு…. என்று முன்னோர்கள் சொன்னதுதான்.

    எதற்குப் படிக்கிறோம் என்பதைப் பலர் சொல்வதைக் கேட்டால் புரியாது. படித்து அனுபவித்தால்தான் புரியும் என்று நினைக்கிறேன். கர்நாடக இசையைப் போல. பொன்னியின் செல்வனைப் படிக்கலாம். தவறில்லை. ஒருவர் கருத்தை வைத்து தனக்கு பிடித்தவரை சட்டென்று வெறுப்பது முறையல்ல. இருந்தாலும் சில கேள்விகளை எழுப்பி அவர் சொல்ல முயல்கிற கருத்தை ஆராயலாம் அல்லவா? அதற்கான அறிவு ஒவ்வொருவரிடமும் உள்ளது என்று நம்புகிறேன்.

    நான் ஒருமுறைதான் படித்திருக்கிறேன். அதில் வந்த தமிழ் இலக்கியங்கள் பற்றிய மேற்கோள்கள் எனக்கும் பிடித்த விஷயங்கள்தான். குறிப்பாக திருக்குறள் பற்றி வந்தவையெல்லாம். சரி இதைப் படித்துவிட்டு எத்தனை பேர் திருக்குறளையோ தேவாரத்தையோ முழுவதும் படித்து முடித்தீர்கள்?

    நேர்மை நாணயம் பற்றி படித்திருப்பீர்கள்…. ஆனால் எத்தனை பேர் நேர்மையாக நடக்கிறார்கள்? நீங்கள் இருக்கலாம். மற்றவர்கள்? எந்த இலக்கியமாக இருந்தாலும் உடனே படித்தவுடன் நேர்மையாகவெல்லாம் மாறிவிட மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். காலப்போக்கில் மாறலாம். அவ்வளவுதான். சிறு வயதிலேயே இதுபோன்ற விஷயங்கள் மனதில் நன்றாகப் பதிய வைக்க வேண்டும்.

    திரு.பா.ராகவன் அவர்கள் படிக்கவேண்டிய சிறந்த புத்தகங்களில் திரு.லா.ச.ரா வின் சிந்தாநதியைச் சொல்லியிருந்தார். வாங்கிப் படித்துப் பார்த்தேன். அப்பொழுது புரியவில்லை. ஓராண்டு கழித்து மீண்டும் படித்துப் பார்த்தேன். இப்பொழுது ஓரளவு புரிகிறது. மிகவும் ரசித்தேன். இதுபோன்ற புத்தகங்கள் பொறுமையைக் கற்றுத் தருகிறது என்று நினைக்கிறேன்.

    நான் சொல்ல முயற்சிப்பது என்னவென்றால் சற்றென்று யாரோ சொல்கிறார்கள் என்று எந்த எழுத்தாளரையும் படிக்காமல் விட்டுவிடாதீர்கள். மாதிரிக்கு அவருடைய சிறந்த படைப்புகளில் ஒன்றாவது எடுத்துப் படித்துப் பாருங்கள். ஒருதடவை புரியவில்லை என்றால் மீண்டும் சிறுது இடைவெளி விட்டு படித்துப் பாருங்கள். புரியலாம். கவலை தேவையில்லை. நமது கல்விமுறை பொறுமையை இழக்கச் செய்கிறது. நம்மை மீட்டெடுக்க இதுபோன்ற படைப்புகளையும் படிப்பது அவசியமே!

    என்னுடைய அக்கறை என்னவென்றால் பொன்னியின் செல்வனைப் படித்துவிட்டு வரலாற்றுப் புதினங்களாகவே படிக்க ஆரம்பித்துவிடக் கூடாது என்பதே. மற்றவற்றையும் படியுங்கள். ஆரம்பித்தில் புரியாமலோ பிடிக்காமலோ போகலாம். பிறகு பிடிக்கும். படித்தவற்றை ஒப்பிடுங்கள். உங்களுக்கே சிறிது சிறிதாகப் புரிய ஆரம்பிக்கும்.

    சும்மா பொழுது போக்குக்காக படிப்பவர்களுக்கு மேற்சொன்னவைகள் எதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    எனக்குள்ள முக்கிய கவலையே, படித்தவர்கள் பெரும்பாலோரால் பிறர் மதிக்க நடந்து கொள்ளாததே!

    “படிச்சிருக்கான் பாரு” என்று பிறர் சொல்லும்போது நெஞ்சு கொதிக்கிறதய்யா….! இதுதான் கல்வி நமக்குக் கொடுத்த அங்கீகாரமா?

    கி.வா.ஜ. வின் அபிராமி அந்தாதிக்கான விளக்கங்களை நான்கு தொகுதிகளாக அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தமுறை சென்னைப் புத்தகக் கண்காட்சியில்தான் வாங்கினேன்.

    இப்படிக்கு
    பா.மாரியப்பன்

  • @பா.மாரியப்பன்,

    //நல்ல இலக்கியங்கள் பொழுது போக்குக்காக இருக்கலாம். ஆனால் அது சிந்திக்கத் தூண்டவும் வேண்டும். மூளையை மழுங்கடிக்ககக் கூடாது. பலரால் படிக்கப்பட்டு பலரது கவனத்தையும் கவர்ந்ததால் அது இலக்கியமாகது.//

    நல்ல இலக்கியங்கள் சிந்திக்கத் தூண்டவேண்டும் என்பது, தமிழ் படங்களில் மெசேஜ் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை போன்றது :))

  • அன்பு பா.ரா
    இப்பதிவுக்கு சம்பந்தமில்ல்லாத ஒரு கேள்வி
    இன்று நெட்டில் மேய்ந்த பொழுது பிராகாஷின் தளத்தில் தங்களைப்பற்றி ஒரு குற்றசாட்டை படிதேன்!
    ”””””””””””பிரகாஷ்,

    பாராவின் Blog site எங்கே இருக்கு? 🙂

    அவரைப் பற்றி — இந்த வார “நக்கீரனில்” எழுத்தாளர் “ம.வெ. சிவக்குமார்” ஒரு பயங்கரக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்!

    அதாவது, “ம.வெ. சிவக்குமார்” — முன்பு ஜெயேந்திரர் நடவடிக்கைகளை வைத்து — ஒரு விமர்சனக் கதை — எழுதியதாகவும் — அது குறித்து அறிந்த ஜெயேந்திரர் — தன்னுடைய மடத்து “தொண்டரடிப்பொடிகளில்” ஒருவராக
    அப்பொது கூட இருந்த எழுத்தாளர் “பா.ரா”-வை — அவர் — இந்த சிவக்குமாரை மிரட்டி வைக்க அனுப்பியதாகவும் — கூறுகிறார்!

    பாரா-வும் — ஜெயேந்திரர் சொன்னதை சிரமேற்கொண்டு — இந்த சிவக்குமாரிடம் வந்து — “பெரியவா சொல்றாப்ல கேக்கலேன்னா ஆட்டோ அனுப்பிடுவா — உம்ம கொல்ல” என்று நேரடியாகவே மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்
    சிவக்குமார்!

    “அம்பி” பா. ராகவன் — என்று பாராவின் — பார்ப்பனியத்தனைத்தை — வெளிப்படையாகவே சொல்கிறார் இந்த ம.வெ. சிவக்குமார்.

    இந்தச் சங்கதி நடந்தது — 1991 வாக்கிலாம்! 🙂

    அப்படி அவர் ஜெயேந்திரரை — மனதிற் கொண்டு எழுதிய சிறுகதை — அவரின் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவிக்கிறார்.

    இதற்கு “சிந்தனையாளர்”, “இணைய BLOG எழுத்தாளர்களின் ஆஸ்தான குரு” பா. ராகவன் நேர்மையான பதில் தருவாரா??? 🙂 ”””””””””””””””

    உண்மயா?

  • மாரியப்பனுக்கு,

    //ஒருவரை ஏதோ விஷயத்தில் பிடித்துவிட்டால் கடைசிவரை அவரையே பிடித்துக் கொள்வது. யார் வந்து எதைச் சொன்னாலும் உண்மையோ பொய்யோ சிந்திக்காமல் மறுப்பது. இது இந்தியாவில் அரசியலிலும் எல்லாவிடங்களிலும் நடக்கிறது. கேட்டால் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்பார்கள்!//

    // “பொன்னியின் செல்வன்” பலரால் வாசிக்கப்பட்டதுதான். பலரைக் கவர்ந்ததுதான். அதில் சிறிதும் ஐயமே இல்லை. என்னையும் கூட. //

    //பெரும்பாலும் பொன்னியின் செல்வனைத்தான் வாங்கிப் படிப்பார்கள். பெரும்பாலரையும் விடுங்கள். நான் அதைத்தான் செய்தேன். உண்மையாலுமே படிக்க வேண்டியவைகளை படிக்காமலும் இலக்கியங்கள் என்றால் என்னவென்றே தெரியாமலும் போய் விடுவார்கள்.//

    // பரிசீலணைக்கும் மாற்றத்திற்கும் உட்பட்டவையே! //

    1. மாரியப்பன் சில இடங்களில் கொள்கையில் உறுதியாக இருந்தேதான் ஆக வேண்டும், இல்லையென்றால் இல்லறம் கூட இனிக்காது. முதலிரவில் பிடித்த மனைவி முப்பதாம் இரவில் பிடிக்காவிட்டால் என்ன செய்வது? எச்சரிக்கை .

    2. பொன்னியின் செல்வனை படித்தபோது சுயநினைவோடுதான் படித்தீர்களா? இல்லை இன்று நீங்கள் சுயநினைவோடுதான் இருக்கிறீர்களா? நேற்று கவர்ந்த ஒன்று இன்று கவரவில்லை என்றால் இது ஒரு விதமான ரசனைக்கோளாறு அல்லது மனநிலைக்கோளாறு. என்ன பிரச்சனை உங்களுக்கு என்று ஆராயவும்.

    3. பொன்னியின் செல்வன் படித்து மூளை மழுங்கிய மாரியப்பன் பின்னர் எப்படி உலக இலக்கியம் படிக்க கற்றுக்கொண்டார் என்பதை கூறினால் அதனை பின்பற்றி பெரும்பாலவனர்களும் வருங்கால சந்ததியினரும் பெரும் பயனடைவார்கள். அட போங்க சார். அவன் போகவேண்டிய பாதையும் தேவையும் அவனுக்குத்தெரியும்.

    4. நீங்கள் எழுதியதைக் கூட உங்களால் உறுதியாக எழுதமுடியவில்லையே… பரிதாபம் கூடவே ஆழ்ந்த அனுதாபம். (இப்போது என்னுடைய முதல் பாயிண்டை மறுபடியும் படித்துப்பாருங்கள்)

  • Internet என்பதை வலைத்தளம் என மொழிமாற்றம் செய்வர்.
    ஆனால் அதற்கு சரியான வார்த்தை சர்ச்சைத்தளம் என தோன்றுகிறது

    எதைச் சொன்னாலும், என்ன எழுதினாலும்,சர்ச்சை/மறுப்பு பின்னூட்டமாக வருகிறது.

    கிருஷ்ணமாச்சாரி என்பவர் “மல்கோவா மாம்பழம் ஒன்று நேற்று முழுசாக சாப்பிட்டேன் .மிகவும் ருசியாக இருந்தது”என பதிவிடுகிறார் என வைத்துக்கொள்வோம்.
    அதற்கு வரும் comments:

    கிருஷ்ணமாச்சாரி போன்றோர் மல்கோவா,ருமானி என்ற புளித்துப்போன வகையான பழங்களையே சொல்கிறார்கள்.பாதிரி ஜிலேபி,இமாம் பசந்த் போன்ற பழங்களை சாப்பிட்டதில்லை போலும்-ஆறுமுகம் சித்தன்னவாசல்

    ஒரு முழு மாம்பழம் அதுவும் மல்கோவா போன்றவை சாப்பிடுவது,உடல் நலனுக்கு தீங்கானது.சர்க்கரை நோய் வர வாய்ப்பு உண்டு-Dr.கைலாஷ்.குறிஞ்சிப்பாடி

    கிருஷ்ணமாச்சாரி போன்ற வந்தேறிகளும்,மேட்டுக்குடியினரும் மா பலா வாழை என உண்டு கொழுக்கலாம்.ஆனால் நாள் முழுக்க உழைத்து தேயும் இந்த மண்ணின்மைந்தன் கேப்பைக்கூழ் பருகி தன்னை திருப்திப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்-செகுவாரா செங்கல்பட்டு

    இதற்கு மேலும் அந்த கிருஷ்ணமாச்சாரி மாம்பழம் பக்கம் போவாரா சொல்லுங்கள்?

    Now to மாரியப்பன்:

    உங்கள் கருத்துக்கள் பற்றி:

    இலக்கியமா இல்லையா என்பது அவரவர் ரசனையைப்பொருத்தது
    ஆனால் அமரர் கல்கியின் எழுத்துக்கள் TV serialஐ விடவும்,சீட்டாட்டத்தை விடவும் பல கோடி மடங்கு உன்னதமானவை .பொன்னியின் செல்வன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் ஒரு புனைவு.ஆனால் நாம் இருப்பது நடுநிசிநாய்கள் காலம் .இங்கிருந்து கொண்டு பொன்னியின் செல்வனை ரசிப்பது கடினம்தான்.

    எனக்கு பொன்னியின் செல்வன் படித்த பிறகுதான் புத்தகங்கள் படிக்கும் ஆர்வமே வந்தது.
    அதில் சித்தரிக்கப்படும் சில காட்சிகள் மெய்மறக்க செய்பவை.
    உளவியல் ரீதியாக அது ஒரு பொக்கிஷம்.வீரம் காதல் அரசியல் சூழ்ச்சி சாதுர்யம் போன்ற பல பிரிவுகள் நம்மை திகைக்க வைக்கும்.

    நண்பரே ஒன்று நல்லதாக இருந்து,உங்களுக்கு மகிழ்வை எற்படுத்துமாயின் அதுவே இலக்கியம்.எளிதாக புரிவது இலக்கியமாகாது எனும் கோட்பாடு நம்மில் பலருக்கு உள்ளது அது சரியல்ல.

    நன்றி.

  • நண்பர் திரு.விநாயகரே,

    அய்யா! உங்களது ரசனையை நீங்கள் எழுதியதிலிருந்தே புரிகிறது.

    நான் எழுதியவைகளை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

    “காலம் காலமாக நாம் செய்யும் தவறாக நான் கருதுவது, ஒருவரை ஏதோ விஷயத்தில் பிடித்துவிட்டால் கடைசிவரை
    அவரையே பிடித்துக் கொள்வது. யார் வந்து எதைச் சொன்னாலும் உண்மையோ பொய்யோ சிந்திக்காமல் மறுப்பது.
    இது இந்தியாவில் அரசியலிலும் எல்லாவிடங்களிலும் நடக்கிறது. கேட்டால் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்பார்கள்!”

    நான் இங்கு சொல்லவருவது என்னவென்றால் ஒருவர் தங்களை உணர்ச்சிவசப்பட வைத்து ஏமாற்றுகிறார். நீங்களும் ஏமாந்துவிடுகிறீர்.
    பின்பு யாராவது வந்து உண்மையைச் சொன்னாலும் நம்பாமல் மறுப்பது.
    நான் இங்கு சொல்வது சொன்னவர் உண்மையையும் சொல்லியிருப்பார். பொய்யையும் சொல்லியிருப்பார் அல்லவா? உடனே வெறுக்கத் தேவையில்லை.
    அதனால் பகுத்தறிந்து விருப்பு வெறுப்பின்றி தெரிந்து கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன்.
    அதாவது நிறைய கேள்விகள் எழுப்பி பகுத்தறியுங்கள் என்றே சொல்கிறேன். சற்று யோசித்துப் பாருங்கள்!
    இந்த அறிவு நம்மிடம் குறைவு படுவதினால்தானே அரசியல்வாதிகள் நம்மையெல்லாம் ஏமாற்றுகிறார்கள்?
    இப்படிக் கேள்வி கேட்கத் தெரிந்தால்தான் நாடு நலம் பெறும்? உங்கள் தலைமுறைகள் நன்றாக வாழும்.

    இதைப்போய் மனைவியுடன் ஒப்பிடுவதிலிருந்தே தெரிகிறது தங்களது ரசனையும் ஞானமும்!
    சற்றாவது பண்பாட்டை கடைபிடியுங்கள்!

    எதையுமே உறுதியாக எழுத வாழ்க்கை அனுபவம் தேவை! இன்னும் பத்து வருடமாவது ஆக வேண்டும்.
    நான் சில கேள்விகளை எழுப்பி தங்களை யோசிக்க வைக்கிறேன். அவ்வளவே!

    நான் சொல்லவருவது இதைத்தான். நல்ல எழுத்தாளர்கள்(சுஜாதா, அசோகமித்திரன், நாஞ்சில் நாடன் மற்றும் பலர்)
    எழுதிய கட்டுரைகளைப் படிப்போம். கண்ணைக் கட்டிக்கொள்ளாமால்!

    இல்லை. நான் இப்படியேதான் இருப்பேன் என்றால் இருங்கள்.
    மசாலா சினிமாக்களும் மன்மத ராசாக்களும்தான் தங்களது ரசனைக்குக் கிடைக்கும். என்ன செய்ய அதுதான் தங்களது விதி!

    ஜெயமோகன் மற்றும் சாரு நிவேதிதா எழுதிய ஒரு நூலையுமே படிக்காமல் புரியவில்லை என்று
    சொல்கிறவர்களிடம் வாதிடுவது நேர விரயம்தான்.

  • // ஒரு நல்ல நாள் பார்த்து கலைஞர் கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கினார். அதன்பிறகு தமிழ்நாட்டின் தொண்ணூற்றொன்பதே முக்கால் சதவீதப் பதிப்பாளர்கள் (இப்போது கிழக்கு உள்பட) பாய்ந்து பாய்ந்து அவரது நாவல்களைப் பதிப்பித்தார்கள்.//

    பாரா சார்,

    க‌லைஞ‌ர் எவ்ளோ ந‌ல்ல‌து ப‌ண்ணியிருக்கார் பாத்தீங்க‌ளா? க‌லைஞ‌ர் 6வ‌து முறையாக‌ முத‌ல்வ‌ராக‌ வ‌ர‌வேண்டுமா? கூடாதா? முடிவு உங்க‌ள் ” கை ” யில்.

    ச‌ரி அதைவிடுங்க‌ள்.

    நான் இதுவ‌ரை ப‌ல‌ருக்கும் பொன்னியின் செல்வ‌னை ப‌ரிச‌ளித்த‌து உண்டு, ஆனால் ப‌டித்த‌தில்லை.கார‌ண‌ம் இங்குள்ள‌ ப‌திப்ப‌க‌ங்க‌ளின் த‌ர‌க்குறைவான‌ ப‌திப்புக‌ள்.
    நீங்க‌ள் வெளியிடுகிறீர்க‌ள் என்ற‌தும் ஆவ‌ல் அதிக‌ரித்துள்ள‌து. ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து மாறுப‌ட்டு நேர்த்தியான‌ ப‌திப்பாக‌ வெளியிட‌ வேண்டும் என‌ வேண்டுகோள் விடுக்கிறேன்.

  • // பொன்னியின் செல்வன் சிந்தனைகளைத் தூண்டுவிடுகிறதா? அப்படியென்றால் எப்படிப்பட்டச் சிந்தனைகளை? (எனக்கு எதுவும் நடக்கவில்லை. மாறாக என் மூளை சற்று மழுங்கியிருந்தது. நல்ல வேளை எப்படியோ கண்டுகொண்டேன்.)//

    // பொன்னியின் செல்வனைப் படிக்கலாம். தவறில்லை.//

    சித்திரைக்கு இன்ன‌மும் சில‌ மாத‌ங்க‌ள் உள்ள‌ன‌ அதுவ‌ரை என் மூளை தாங்குமா என‌த்தெரிய‌வில்லை.

    பாரா இதுக்கு நீங்க‌ளே ஒரு தீர்ப்பு சொல்லுங்க‌ளேன்.

    போகிற‌ வ‌ழியில் ( by the way )
    ந‌ப‌ந‌ப‌

  • To mariyappan,
    We have no time to read all your essay writings. Dont assume that you are the only person reading all the tamil ilakkiyams. People who read P.S, also read tamil ilakkiyams. P.S is the starter for that. Dont be biased on the books you like. and dont argue accordingly. be appreciate others thought too. if you dont like something let you go, but dont say that your thoughts are correct. i felt bad on sending replys. Like your say, read the P.S book aswell ; read it for no of times. I m a fan of La.Sa.Ra too.

    Fondly,
    A P.S Fan.

    Before Requesting Manirathnam for not making P.S Film, I would like to request Pa.Ra :
    Dont compare these rubbish politicians with P.S characters!! You know it 🙂

  • நாகப்பட்டிணம் சூடாமணி விகாரத் தலைமைப் பிக்கு : ?

    who else? its Pa.Raa 😀

  • ரு வேறு களங்களில், வேறு வேறு காலக்கட்டங்களில் நடைபெறும் ஒரேவிதமான சம்பவங்களை ஒன்றோடொன்று கலந்ததுபோல் எழுதுவது எப்படி என்பது ஒன்று. பிரதான விஷயத்திலிருந்து விலகி, கிளைக்கதையில் வெகுதூரம் போக நேரும்போது திரும்பவும் ராஜபாட்டைக்கு சிராய்ப்பு இல்லாமல் வந்து சேர்வது எப்படி என்பது மற்றொன்று.]”

    இப்படியும் படிக்கலாம் என சொல்லி தந்ததற்கு நன்றி,,, அடுத்து படிக்கும் போது கவனித்து படிக்கிறேன்

  • வந்தியத்தேவன் – பத்ரி சேசுவைப் பரிந்துரை செய்கிறேன். சமீபத்தில் கூட மணிரத்தினம் பக்கத்தில் அவர் இருப்பது போல புகைப்படத்தைப் பார்த்தேன் (நாஞ்சில்நாடன் பாராட்டு விழா). ஒரு குதிரை மேல் உட்கார வைத்து அவரை அனுப்பித் தான் பார்ப்போமே. நாராயணபுரம் எரி வற்றுவதற்குள் முடிவெடுத்துவிடுங்கள் ராகவன்.

    ஹரன்பிரசன்னாவும் மைண்டில் இருக்கிறார்.

    :-)))

  • >>>ஹரன்பிரசன்னாவும் மைண்டில் இருக்கிறார்.<<<

    வேணாம்… PETA அலவ் பண்ண மாட்டாங்க ;))))

  • லோகம் அவர்களுக்கு,

    நான் என்னுடையக் கருத்துக்களைத்தான் கூறினேன். சரியென்று ஒரு போதும் நிரூபிக்க முயற்சி செய்யவே இல்லையே! ஏன் உணர்ச்சிவசப்படுகிறீர்கள்? எல்லோரையும் என்னுடைய நண்பர்களாக நினைத்து இப்படியும் யோசித்துப் பாருங்களேன் என்றுதான் சொல்கிறேன். நான் என்றுமே நான் என்ற தற்பொருமை கொள்வதே கிடையாது. கற்றது கைம்மண்ணளவு. கல்லாதது உலகளவுதானே.
    தமிழில் இன்னும் ஆரோக்கியமான சூழல் உருவாகவில்லை என்றுதான் தோன்றுகிறது. மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். வாழ்த்துகள்!

  • விகடனில் வந்த செய்தி….

    மணிரத்தினம் இயக்கபோகும் பொன்னியின் செல்வனில் புத்த பிக்கு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சத்யராஜ்.

    விகடன் லிங்க் கீழே…

    http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=298:2011-03-21-07-40-38&catid=903:tamil-cinema-news&Itemid=63

  • //நாகப்பட்டிணம் சூடாமணி விகாரத் தலைமைப் பிக்கு – பிரணாப் முகர்ஜி.

    //

    பிரணாப் வேண்டாம் – ராஜ்பக்ஷே வைச்சுக்கலாம். நல்லாருக்கும் ..

  • // வந்தியத்தேவன் – அதான் சொன்னேனே, யாரும் இன்னும் அகப்பட்டபாடில்லை. //

    ஆஹா… அன்னிக்கு மீட்டிங்ல ஃபுல் லோட் ஏத்திட்டு கேப்டன போட்டு வறுத்து எடுத்தாரே நம்ம “கைப்புள்ள”…. அவரை வேணும்னா…………..!!??

  • Please dont compare the characters of the Great Ponniyin Selvan with any of the contemporary politcians of TN. Kalki took great trouble to create and sustain these epic characters. Dont spoil the imagination of such a great soul.Our presentday politicians are not even humanbeings by normal standrds.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி