ஆயிரம் புத்தகங்கள் படித்திருப்பேன். ஆனால் படித்துக் கிழித்த புத்தகம் என்றால் அது லிஃப்கோ டிக்ஷனரிதான். பள்ளியில் நான் கற்காத ஆங்கிலத்தை வீட்டில் எனக்கு அப்பா சொல்லிக் கொடுத்தார். கைல எப்பவும் டிக்ஷனரி வெச்சிக்கோ என்பார். அவருக்கு ஆசிரியராக இருந்த யாரோ ஒருவர் என்ன கேட்டாலும் refer to the dictionary and come to my room என்று சொல்வாராம். பையன்கள் அதை வைத்துக்கொண்டு அவரை எப்படியெல்லாம் ஓட்டியிருக்கிறார்கள் என்ற கதையைப் பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் அப்பாவை நான் அப்படிச் செய்ய அவர் வாய்ப்புத் தந்ததில்லை. என்ன கேட்டாலும் பொருள் சொல்வார். அதன் பிறகு டிக்ஷனரியை எடுத்துப் பார்க்கச் சொல்வார்.
அந்தப் பழக்கம் வளர்ந்து தினமும் டிக்ஷனரியில் ஒரு பக்கம் படிப்பது என்று போனது. அப்படியும், படிக்காமல் இருந்த நாள்கள் பல. ஆனால் எடுக்காதிருந்ததில்லை. 1985 வரை ஒரு தீவிர லிஃப்கோ டிக்ஷனரி வாசகனாக இருந்துவிட்டுப் பிறகு அதை மறந்துவிட்டேன். இடைப்பட்ட காலத்தில் இன்னொரு பதிப்பு வாங்கியிருக்கிறேன் என்று இப்போது எடுத்துப் பார்க்கும்போது தெரிந்தது. எனக்கு என் அப்பா கொடுத்த லிஃப்கோ எங்கே போனதென்று தெரியவில்லை. அது பிய்ந்து போனது நினைவிருக்கிறது. ஆனால் தூக்கிப் போடவில்லை. ஆனாலும் அதைக் காணவில்லை.
இரண்டு தினங்களுக்கு முன்னர் வெங்கட்டைச் சந்திக்கச் சென்றிருந்தபோது இந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தேன். (அவரை உங்களுக்கு ஒரு hoarder ஆகவோ, தமிழ்க் கணிமை முன்னோடியாகவோ, ப்ளாகராகவோ, சொற்பொழிவாளராகவோ தெரிந்திருக்கலாம். அவர் லிஃப்கோ குடும்பத்தின் வாரிசும் கூட.) இன்று எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக வெங்கட் எனக்கு லிஃப்கோ டிக்ஷனரியின் புதிய பதிப்பு ஒன்றை அனுப்பியிருந்தார். பிரித்துப் பார்த்தபோது சிறிது நேரம் பதினைந்து வயதுக்குச் சென்று வாழ்ந்துவிட்டு மீண்டேன்.
இன்று ஒரு சொல்லுக்குப் பொருள் வேண்டுமென்றால் செலக்ட் செய்து இரு விரலால் தொட்டால் look up என்று காட்டிவிடும். அழுத்தினால் மறு வினாடி ஆப்பிள் அர்த்தம் சொல்லிவிடும். ஆனால் முதல் எழுத்து, இரண்டாம் எழுத்து, மூன்றாம் எழுத்து என்று பக்கம் பக்கமாகப் புரட்டி, குறிப்பிட்ட சொல்லின் பொருளைத் தேடிக் கண்டடையும் இடைவெளியில் இன்னும் நான்கைந்து சொற்கள் கண்ணில் பட்டு, மனத்தில் தங்கிவிடும் அனுபவம் கிடைப்பதில்லை.
இன்று கிடைத்த லிஃப்கோ டிக்ஷனரியின் புதிய பதிப்பை என் மகளுக்கு அளித்தேன். இன்னும் முப்பத்தைந்து வருடங்கள் கழித்து அவளும் இப்படி ஒரு குறிப்பை எழுதுவாள் என்று நினைக்கிறேன்.