ஓ, மரியா!

ட்விட்டரில் திடீரென்று டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் பெயரைக் குறிப்பிட விரும்பி, மறந்துபோய்த் தொலைந்தேன். எப்போதோ படித்த அவரது பேட்டி ஒன்றுமட்டும் நினைவில் இருந்தது. அதை எடுத்து வைத்திருந்த ஞாபகமும். அதைத் தேடிப்பிடித்து மீண்டும் வாசித்தபோது, மரியாவைக் குறித்து ஒரு கட்டுரையும் எழுதியிருப்பது நினைவுக்கு வந்தது. அது இது. 2008 அல்லது 09ல் எழுதப்பட்ட கட்டுரை என்று நினைக்கிறேன். இப்போது எதற்கு என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. இக்கட்டுரை என் நண்பன் லலிதா ராமுக்காக இங்கே, இப்போது.

O

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். நிலம், வீடு, வாழ்க்கை, எதிர்காலம் அனைத்தையும் அப்படி அப்படியே விட்டுவிட்டுத் தப்பித்தால் போதும் என்கிற ஒரே இலக்குடன் ஓடிய அந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அந்த அன்பான கணவன் மனைவியும் இருந்தார்கள். புதிதாகத் திருமணமான ஜோடி. யூரி மற்றும் யெலேனா. ரஷ்யாவில் [இப்போது உக்ரைனில்] செர்னோபில் அணு உலை வெடித்த இடத்துக்கு வெகு பக்கத்தில் இருந்தது அவர்கள் வீடு. ஒரே லட்சியம், தப்பித்துவிட வேண்டும். தன் உயிரைக் காட்டிலும் தன் காதல் மனைவியின் வயிற்றில் வளர்ந்துகொண்டிருந்த சிறு உயிரைப் பற்றிய கவலை யூரிக்கு அதிகமிருந்தது.

நிறைய கனவுகளையும் கொஞ்சமாக உணவையும் உண்டு உயிர் வளர்த்துக்கொண்டிருந்தவர்கள் அவர்கள். என்னவாவது செய்து வாழ்வில் எதையேனும் சாதிக்க நினைத்த தம்பதி. ஆனால் எதையும் முயற்சி செய்து பார்க்க அனுமதிக்காத அரசியல் சூழல். சோவியத் ஐஸ் கட்டி உடைந்து, சிதறித் தனித்தனித் துண்டுகளாகக் காத்திருந்த பொழுது.

யூரியும் யெலேனாவும் அதிர்ஷ்டவசமாகத்தான் தப்பினார்கள். உயிர் போகவில்லையென்றாலும் கதிர்வீச்சின் தாக்கம் பிறக்கப்போகிற குழந்தைக்கு இருக்குமோ என்கிற அச்சம் அவர்களுக்கு இருந்தது. நல்ல வேளையாக மரியா ஷரபோவா பிறந்தபோது எந்தக் குறைபாடுமில்லாமல் லட்டு மாதிரி இருந்தாள். அழகாகச் சிரித்தாள். அள்ளிவாரி முத்தமிட்டபோது மெத்து மெத்தென்று வெல்வெட் போலிருந்தாள்.

‘யெலேனா, நம்மால் முடியாது. ஆனால் நம் மகள் பெரிய ஆளாகவேண்டும். எதிலாவது. உலகையே திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில் அவள் உயரவேண்டும். இந்த ஏழைமையும் அவலமும் நம்மோடு போகட்டும். நம் மகள்மீது இந்த நிழல் படியக்கூடாது!’ என்றார் யூரி.

ஷரபோவாவுக்கு இரண்டு வயதாக இருந்தபோது அவர்கள் சோச்சி என்கிற பிராந்தியத்துக்குக் குடிபோனார்கள். ஓர் உருளைக்கிழங்குப் பண்ணையில் யூரிக்கு வேலை கிடைத்தது. கூடவே அலெக்சாண்டர் கஃபேல்நிகாவ் என்ற நண்பரும் கிடைத்தார். அவரது மகன் அப்போது ஒரு டென்னிஸ் ஸ்டார். யெவ்கெனி என்று பெயர். பெரிய சாம்பியன்.

எனவே அலெக்சாண்டர் யூரியிடம் சொன்னார். ‘நீயும் பயிற்சி கொடுத்துப் பார். உன் மகளும் பெரிய டென்னிஸ் ஸ்டாராக முடியும்.’ கிலுகிலுப்பை பிடிக்க வேண்டிய குழந்தையின் கையில் அவர் ஒரு புதிய டென்னிஸ் ராக்கெட்டைத் திணித்து, ‘நாளைய சூப்பர் ஸ்டாரே, நன்றாக இரு’ என்று வாழ்த்திவிட்டுப் போனார்.

மரியாவுக்கு ஆறு வயதாக இருந்தபோது யூரி கேட்டார். ‘மகளே, நீ டென்னிஸ் பயிற்சிக்குப் போகிறாயா?’

‘கண்டிப்பாகப் போகிறேன் அப்பா. உங்கள் கனவு எனக்குத் தெரியும். எனக்கு டென்னிஸும் பிடிக்கும்.’

மாஸ்கோவில் அப்போது ஒரு டென்னிஸ் அகடமி இருந்தது. மார்ட்டினா நவ்ரத்திலோவா நடத்திக்கொண்டிருந்தார். கொஞ்சம் செலவு பிடிக்கக்கூடிய பள்ளிதான். ஆனாலும் யூரி தன் மகளைக் கொண்டு அங்கே சேர்த்தார்.

மரியா டென்னிஸ் கற்கத் தொடங்கினாள். பயிற்சிப் பள்ளியில் உடனிருந்த மாணவர்கள் அத்தனை பேரும் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் விளையாடினார்களோ அதைவிடக் கூடுதலாக மூன்று மணிநேரங்கள் அவள் மைதானத்தில் இருந்தாள். பல புகழ்பெற்ற மேட்சுகளின் விடியோக்களை இரவெல்லாம் பார்ப்பாள். தன் மானசீகத்தில் நாளெல்லாம் அவள் போட்டுப் பார்த்த சர்வீஸ்களின் எண்ணிக்கை எண்ணற்றது. மெல்ல மெல்ல மெல்ல அவள் ரத்தத்தின் ஒவ்வொரு செல்லிலும் டென்னிஸ் நுழைந்து வியாபித்தது.

மார்ட்டினா ஒரு சமயம் அவளிடம் கேட்டார், ‘ஏன் இத்தனை உக்கிரமாக விளையாடுகிறாய்? நிதானம் முக்கியம் பெண்ணே.’

‘இல்லை. நான் சீக்கிரம் ஜெயிக்கவேண்டும். என் அப்பாவும் அம்மாவும் பல வருடங்களாகப் பட்டினி கிடக்கிறார்கள்.’

உண்மையில் யூரி, தன் மகளின் டென்னிஸ் கோச்சுக்குப் பணம் கட்ட மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். இரு தினங்களுக்கொரு முறை உணவு என்று சில காலம் அவரும் அவரது மனைவியும் வாழ்ந்தார்கள். ரொட்டி வாங்கவே இரண்டு நாள் க்யூவில் நிற்கவேண்டிய சூழல் அப்போது ரஷ்யாவில் இருந்தது.

மரியாவுக்குத் தன் குடும்ப நிலைமை நன்றாகத் தெரிந்திருந்தது. எனவே கவனத்தை எதிலும் அவள் சிதறவிடவில்லை. டென்னிஸ்தான் வாழ்க்கை என்றால், அதில் உச்சம் தொடுவது ஒன்றுதான் தன் வேலை.

‘யூரி, உங்கள் மகள் மாஸ்கோவில் படித்தது போதும் என்று நினைக்கிறேன். அவளை நீங்கள் எத்தனை சீக்கிரம் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்கிறீர்களோ, அத்தனை நல்லது – அவள் எதிர்காலத்துக்கு.’ என்று மார்ட்டினா ஒருநாள் மரியாவின் அப்பாவைக் கூப்பிட்டுச் சொன்னார்.

‘புரியவில்லை மேடம்.’

‘உங்கள் மகள் தேறிவிட்டாள் என்று சொல்கிறேன்.’

யூரி தாமதிக்கவில்லை. அமெரிக்கா! என்றால் கடன் வாங்கியாகவேண்டும். எத்தனை ஆயிரம் டாலர்கள்? தெரியாது. ஆனாலும் நண்பர் அலெக்சாண்டரிடம் போய்க் கேட்டார். வேறு பலபேரிடமும் தயங்காமல் உதவி கேட்டார். மரியாவும் கடன் கொடுக்கவிருந்த பெரிய மனிதர்களிடம் நேரில் சென்று வாக்குறுதி சொன்னாள். அங்கிள் நான் ஜெயிக்கப் பிறந்தவள். எனக்கு உதவி செய்யுங்கள்.

1994ம் ஆண்டு மரியா ஃப்ளோரிடாவுக்குச் சென்று இறங்கியபோது அவளுக்கு  ஆங்கிலத்தில் ஏ ஃபார் ஆப்பிள் கூடத் தெரியாது. யாரிடம் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது, எப்படிப் பழகுவது, அமெரிக்கக் கலாசாரம் எப்படிப்பட்டது எதுவும் தெரியாது. தெரிந்தது ஒன்றுதான். டென்னிஸ். அவளது மொழி, வழி, விழி, விதி அனைத்தும் அதுவே.

ஏராளமான கஷ்டங்களுக்குப் பிறகு நிக் பொலேட்டரி டென்னிஸ் அகடமியில் மரியா சேர்ந்தாள். ‘மரியா, வெற்றி என்பது ஒரு கணம் வந்து போவது. அதைவிட முக்கியம் வெற்றிக்கான முயற்சிகள். அதுதான் நீடித்த உழைப்பையும் கவனத்தையும் கோருவது. நீ கொஞ்சம் கவனம் சிதறினாலும் நமது கனவுகள் கலைந்துபோய்விடும் மகளே.’ என்று யூரி முன்னதாக அவளிடம் சொல்லியிருந்தார்.

மரியா புன்னகை செய்தாள். ஏழைமை புரிந்தவர்கள் யாருக்கும் மற்றவை புரிவது பெரிய விஷயமல்ல. அப்பா ஹோட்டலில் பிளேட் கழுவி, தன்னை டென்னிஸ் கற்க அனுப்புகிறார் என்கிற எண்ணமே அவளை வெறிகொள்ளச் செய்தது. தனது ஒவ்வொரு சர்வீஸும் தங்கள் ஏழைமையை அடித்துத் துரத்தும் ஆயுதமாக வேண்டுமென்று அவள் விரும்பினாள்.

கொலைப் பயிற்சி! அம்மாதிரியொரு பேய்த்தனத்தை வேறு எந்த வீரரிடமும் அதற்குமுன் கண்டதில்லை என்று அடித்துச் சொன்னார்கள் மரியாவுக்கு அந்தப் பள்ளியில் பயிற்சி கொடுத்த ஆசிரியர்கள். 2001ம் ஆண்டு முதல் முதலாக ஜூனியர் ஆஸ்திரேலியன் ஓப்பன் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக மரியா சென்றபோது அவளுக்கு வயது 14. மைதானத்துக்குள் தவறி நுழைந்த டால்பின் மாதிரி என்ன ஒரு துள்ளல், என்ன ஒரு குதூகலம், என்ன ஒரு குறி பிசகாத் தன்மை!

மரியா அதிகாரபூர்வ டென்னிஸ் போட்டி மைதானங்களுக்குள் நுழைந்த காலத்துக்கும் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை அள்ளியெடுத்துச் சூடிய நாள்களுக்கும் பெரிய இடைவெளிகள் இல்லை. தனது ஒவ்வொரு சர்வீஸையும் ஆக்ரோஷமான கவிதையாக வடிவமைத்ததுதான் மரியாவின் மாபெரும் வெற்றிகளுக்கும் பிரம்மாண்டமான புகழுக்கும் முக்கியக் காரணம். அடிக்கடி அவஸ்தை தரும் தோள்பட்டை வலியினால் அடிக்கடி அவர் பின்வாங்க நேர்ந்ததுண்டு. ஆனால் ஒவ்வொரு சறுக்கலுக்குப் பிறகும் திரும்பவும் எழுந்துவரும் மன உறுதியும் விடாமுயற்சியும் அவர் உடன் பிறந்த சொத்து.

‘நான் ஓய்ந்து நிற்பதை ஒருபோதும் விரும்பமாட்டேன். இந்த பிரம்மாண்டமான வசதிகளும் செல்வாக்கும் செயல்பட்டுக்கொண்டிருப்பதனால் மட்டுமே வந்தவை. வெற்றியல்ல. வெற்றியை நோக்கிய முயற்சிகள்தாம் சுவாரசியமானவை. ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்!’ என்று 2004ல் ஜூரிச் ஓப்பன் போட்டிகளில் வீனஸ் வில்லியம்ஸை வெற்றி கண்டபோது மரியா ஷரபோவா சொன்னார்.

இப்போது தோள்வலிப் பிரச்னை அதன் உச்சத்தைத் தொட்டு உயிரை வாங்கிக்கொண்டிருக்கும்போதும் அவர் தளராமல் மைதானங்களை ஆள்வதன் சூட்சுமம் இதுதான்.

Share

6 comments

  • மரியா ஷெரபோவா செல்வ செழிப்பான குடும்பத்திலிருந்து வந்தவர் என இதுவரை நினைத்தேன் ஆனால் அவர் வாழ்க்கையில் ஒரு படிப்பினை முன்னேற துடிப்பவர்களுக்கு ஒரு உத்வேகம் விடா முயற்சி இவை அடங்கி இருப்பது தெரிகிறது. இளமையில் வறுமை பலரை சாதனையாளர்களாக்கி விடுகிறது. சிலரை தவறான வழிக்கு கொண்டு சென்று விடுகிறது.

  • வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை நிர்ணயித்துக் கொண்டு அதை அடைவதற்கு அசுரப் பிரயத்தனம் செய்தால் வெற்றி சாத்தியமே. மரியாவின் இந்தக் கதையைப் படிப்பவர்களில் ஓரிருவராவது உள்ளூக்கம் பெற்றால் நல்லது. இந்த மாதிரியான நிஜக் கதைகளை அவ்வப்போது கூறுங்கள்.

  • Thanks for wonderful information. I did not know about her efforts behind her achievement. Really, it is a great lesson to youngsters who want to achieve.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!