எப்படி இருக்கலாம், கல்வி? 4

நான் பள்ளியில் படித்த காலத்தில் குடிமைப்பயிற்சி என்றொரு வகுப்பு இருந்தது. இப்போது உண்டா என்று தெரியவில்லை. வாரத்துக்கு ஒரு பீரியட் மட்டுமே இருக்கும். ஏதாவது கைத்தொழில் கற்றுத்தரும் வகுப்பு அது. என் பள்ளியில் அது கைத்தறி சொல்லித்தரும் வகுப்பு என அறியப்பட்டது. ஓரிரு கைத்தறி இயந்திரங்களும் பள்ளிக்கூடத்தில் இருந்தன.

ஆனால் எனக்கு நினைவுதெரிந்து ஒருநாள்கூட நான் தறியில் அமர்ந்ததில்லை. தறி வாத்தியார் என்று ஒருவர் இருந்தார். அவர் பெரும்பாலும் பள்ளியின் கிளார்க்குக்கு அசிஸ்டெண்டாக, பெரிய பெரிய லெட்ஜர்களில் ஸ்கேல் வைத்துக் கோடு போட்டுக் கொடுக்கிற வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பார். சுதந்தர தின விழா, குழந்தைகள் தின விழா போன்ற பள்ளி விழா தினங்களில் கொடி கட்டுவது, மைதானத்தில் சுண்ணாம்புப் பொடியால் கோடு போடுவது, பிற சமயங்களில் பி.ஈ.டி. ஆசிரியர் அறையில் தினத்தந்தி படித்துக்கொண்டிருப்பது போன்றவையே அவரது பணிகளாக அறியப்பட்டன.
எங்களுடைய குடிமைப் பயிற்சி வகுப்புகள் பெரும்பாலும் மைதானத்தில் கழியும். அல்லது வேறு யாராவது ஆசிரியர் அந்த பீரியடை எடுத்துக்கொண்டுவிடுவார்.

நான் படித்தது, கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளி. பக்கத்தில் திருப்போரூர், படூர், கோவளம், செம்பாக்கம் என்று ஊர் தோறும் ஒரு அரசுயர் பள்ளியும் அனைத்துப் பள்ளிகளிலும் குடிமைப் பயிற்சி வகுப்புகளும் அவசியம் உண்டு. அந்நாளில் அவ்வகுப்பின் முக்கியத்துவத்தை யாருமே உணர்ந்ததில்லை என்பதை இப்போது வெட்கத்துடன் நினைவுகூர்கிறேன். ஒரு தொழிலைக் கற்பிப்பது என்பது மிகச் சிறந்த விஷயம். ஏதாவது ஒரு கைத்தொழில். எப்போதாவது யாருக்கு வேண்டுமானாலும் உதவக்கூடிய ஒரு தொழில். இருப்பது நல்லது என்று யாரோ புண்ணியவான் பாடத்திட்டத்தில் என்றோ சேர்த்து வைத்தது.

ஆனால் முற்றிலும் வீணாக்கப்பட்ட ஒரு பாடமாகவே அது ஆகிப்போனது. இன்றைக்குப் பள்ளிகளில் இதே லட்சணத்தில்தான் கம்ப்யூட்டர் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன என்பதையும் இதனோடு இணைத்துப் பார்க்கிறேன். முதல் வகுப்பிலிருந்தே கம்ப்யூட்டர் க்ளாஸ் என்றொரு சடங்கு அறிமுகப்படுத்தப்பட்டுவிடுகிறது. அந்தக் கால தூர்தர்ஷன் நாடக செட்டுகளின் பூச்சாடிகள் போல அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யுட்டர்கள் இருக்கின்றன. அதைக் காட்டி தனியாக ஃபீஸ் வாங்கிவிடுகிறார்கள். வாரத்துக்கு ஒரு வகுப்பு. என்ன சொல்லித்தருகிறார்கள்? எனக்குத் தெரியவில்லை.

என் மகள் படிக்கும் பள்ளிக்கூடத்திலும் கம்ப்யூட்டர் க்ளாஸ் உண்டு. வருடம் ஒருமுறை கம்ப்யூட்டர் கார்னிவல் என்றும் ஒரு திருவிழா நடத்துவார்கள். ஆனால் கம்ப்யூட்டர் வகுப்பில் என்ன சொல்லித்தருவார்கள் என்று கேட்டால் மட்டும் பதில் இருக்காது. கேம்ஸ் விளையாடுவோம் என்று ஒரு சில சமயம் சொல்லியிருக்கிறாள். கலரிங் செய்ததாகவும்.

மாறாக, பள்ளிப் பிள்ளைகளுக்கு ஒழுங்கான, முறையான டைப்பிங் சொல்லித்தரலாம் என்று ஏன் யாருக்கும் தோன்றவில்லை? ஐந்து வகுப்புகளுக்குள்ளேயே இன்று ஆரம்பித்துவிடக்கூடிய விஷயமல்லவா? எங்கள் அலுவலக எடிட்டோரியலிலேயே ஒரு சிலரைத் தவிர யாருக்குமே டைப்பிங் தெரியாது. பெரும்பாலானவர்கள் ஒருவிரல் கிருஷ்ணாராவ்களாகத்தான் தட்டுகிறார்கள். இவர்கள் படித்த நாள்களில் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கிடையாது. டைப்பிங் வகுப்புக்குச் சென்றிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. இன்று அப்படி இல்லையே? கம்ப்யூட்டரின் அவசியம் புரிந்த கல்வித்திட்டம் டைப்பிங் சொல்லித்தருவதை வலியுறுத்தாதது ஏன்?

என் மகள் இரண்டாம் வகுப்புக்குப் போயிருக்கிறாள். நான் வீட்டில் முறையான டைப்பிங் அவளுக்குக் கற்றுத் தந்துகொண்டிருக்கிறேன். பழகுவதில் அவளுக்கு எந்த சிரமமும் இல்லை. இதை ஏன் கம்ப்யூட்டர் வகுப்புகளிலேயே செய்யக்கூடாது? என்னத்தையாவது ஒரு சிடியைப் போட்டு படபடபடவென்று துப்பாக்கி சுடும் அல்லது மோட்டார் சைக்கிள் ஓடும் கேம்ஸ் விளையாடவிட்டு கம்ப்யூட்டர் கற்றுத்தர முடியுமா? தெரியவில்லை.

கிழக்கில் நாங்கள் வெளியிட்ட, கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தும் ஒரு 2டி அனிமேஷன் சிடியை வைத்துத்தான் என் குழந்தைக்கு நான் அடிப்படை கம்ப்யூட்டர் அறிவை ஏற்படுத்த முடிந்தது. ஒரு மௌஸ் மீது ஏறி அமர்ந்து கம்ப்யூட்டருக்கு உள்ளே பயணம் செய்யும் சிறுவனின் அனுபவமாக விரியும் அந்தப் பாடம். ஆர்வமுள்ள பெற்றோர் அவசியம் சொல்லித்தரத்தான் செய்வார்கள். என் வினா, பள்ளிக்கூடங்கள் என்ன செய்கின்றன என்பதுதான்.

பாடத்திட்டத்தில் சரிபாதி வாழ்க்கைக்கு உதவக்கூடிய தொழிற்கல்வியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.

பல வருடங்களுக்கு முன்னர் ஈரோடு அருகே ஒரு கிராமத்தில் டிராக்டர் ஓட்டும் பெண்மணி ஒருவர் இருக்கிறார், அவரைப் பார்த்துப் பேசி கட்டுரை எழுதிவாருங்கள் என்று கல்கியில் என்னை அனுப்பினார்கள். பள்ளிப்படிப்புக்கு வசதியில்லாத அந்தப் பெண்மணி, தன் சுய விருப்பத்தில், டிராக்டர் வைத்திருக்கும் விவசாயி ஒருவரிடம் சென்று தனக்கும் டிராக்டர் ஓட்டக் கற்றுத்தரும்படிக் கேட்டிருக்கிறார். சின்னப்பெண் ஆசைப்படுகிறதே என்று அவர் கற்றுத்தர, கஷ்டப்பட்டு வங்கியில் கடன் வாங்கி, சொந்தமாக ஒரு டிராக்டர் வாங்கி, தனக்கிருந்த சொற்ப நிலத்தில் தானே உழுது பயிரிட்டு, அறுவடை செய்து விற்று, வந்த பணத்தைத் திரும்பவும் நிலத்திலேயே போட்டு, மேலும் பயிர் செய்து, மேலும் நிலம் வாங்கி, தானே உழுது தன்னைச் சார்ந்த யாவரையும் செழிக்கவைத்தவர் அவர்.

கிராமப்புறப் பள்ளிக்கூடங்களில் குடிமைப்பயிற்சியாக ஏன் இதையெல்லாம் சொல்லித்தரக் கூடாது? பள்ளிப் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் லேப்டாப் என்னும் தமிழக அரசின் திட்டம் உண்மையில் எனக்கு அச்சமூட்டக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. வீடு தோறும் மின்சாரம் இல்லாவிட்டாலும் வீடு தோறும் கலர் டிவி இருக்கும் என்னும் ‘அந்தஸ்தை’ச் சென்ற ஆட்சி அளித்ததுபோல், இந்தத் திட்டம் மாணவர்களுக்கு ஓர் அந்தஸ்தை அளிக்குமே தவிர பலனளிக்குமா என்று சந்தேகமாகவே இருக்கிறது. இணையத்தொடர்பு இல்லாமல் வெறும் லேப்டாப் வைத்திருப்பதில் பெரிய அபாயங்கள் இல்லைதான். ஆனால் அதை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று சரிவர கற்றுத்தர ஏற்பாடு செய்யாத பட்சத்தில் ஒரு ஜாமெண்ட்ரி பாக்ஸைக் காட்டிலும் மலிவான விதத்திலேயே அது பயன்படுத்தப்படும்.

இரு வருடங்களுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்தது. சென்னையில் உள்ள பிரபல பத்திரிகை அலுவலக நிர்வாகம் ஒன்று திடீரென்று தனது எடிட்டோரியல் ஊழியர்களுக்கு ஹை-எண்ட் லேப்டாப்களை வழங்கியது. கவனிக்கவும்! அதுநாள் வரை டெஸ்க் டாப்பில்கூட வேலை பார்த்தறியாதவர்கள் அவர்கள். எழுதுவது, எடிட் செய்வது அனைத்தும் கையால்தான். புதிய பளபளப்பான லேப்டாப்பை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அவர்களில் பெரும்பாலானோருக்கு ஒன்றுமே புரியவில்லை. புதிய லேப்டாப் வந்த ஜோரில் முதல் சில தினங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று, அதற்காகவே இணையத் தொடர்பெல்லாம் வாங்கி மின்னஞ்சல் கணக்கு, ஃபேஸ்புக் கணக்கு எல்லாம் தொடங்கி, தெரிந்த தெரியாத எல்லோருக்கும் மெசேஜ் அனுப்பினார்கள். அவர்களில் பெரும்பாலானோர் எனக்கு நண்பர்கள். தமிழில் எப்படி டைப் செய்வது என்று கேட்டு தினசரி பாடாய்ப் படுத்தி, தொலைபேசி வழி மணிக்கணக்கில் அவர்களுக்கு நான் வகுப்பெடுக்க நேர்ந்தது.

ஒரு வாரம், பத்து நாள்தான். அதன்பின் அழைப்புகள் நின்றுவிட்டன. பிறகு விசாரித்தபோது ‘அத எதுக்கு சார் சும்மா தூக்கிட்டு சுத்தறது? ஆபீசுல கிடக்கு. திறக்கறதே இல்ல. நமக்கு அதெல்லாம் சரிப்படாது’ என்று சொல்லிவிட்டார்கள். இதில் தப்பிப்பிழைத்தது மிகச் சிலர்தான். இன்றும் அவர்களில் சிலரை நீங்கள் ஃபேஸ்புக்கில் மட்டும் பார்க்கலாம். போட்டோ அப்லோட் செய்யத் தெரிந்தவர்கள் அவர்கள்.

நீட்டிக்கொண்டே செல்வதில் அர்த்தமில்லை. சரியான பாடத்திட்டம், அவசியமான பாடத்திட்டம், அத்தியாவசியமானவற்றை உள்ளடக்கிய பாடத்திட்டம். இது முதல் தேவை. மிகத் தெளிவான, மிகத் துல்லியமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள். இது அடுத்தது. யோசித்துக்கொண்டே சென்றால் ஆசிரியர் பயிற்சிக்கான பாடத்திட்டத்திலிருந்து சீர்திருத்தம் ஆரம்பமாகவேண்டும் என்று தோன்றும். அடிப்படை ஒன்றுதான். கல்வி சார்ந்த அக்கறைகளும் அணுகுமுறைகளும் அரசு மட்டத்தில் மாறினாலொழிய இவை சுகமான கற்பனைகள் மட்டுமே. டாஸ்மாக் போன்று கல்வி நிலையங்கள் ஒரு நல்ல தொழில் கேந்திரம் என்று நினைக்கத் தொடங்கியாகிவிட்ட நிலையில், பணம் பண்ண வழியில்லாத அரசுப் பள்ளிகளில் இந்தச் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது சுலபமே. தேவை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஈடுபாடு.

இனி நாம் சமச்சீர் கல்வி பற்றிப் பேசலாம்.

[தொடரும் – அநேகமாக அடுத்தப் பகுதியில் முடியும்.]
Share

15 comments

  • அன்புள்ள பாரா,

    இது பற்றிய என்னது எண்ணங்களை ramachandranwrites.blogspot.com என்ற பதிவில் எழுதி உள்ளேன் .

    ஹி ஹி ஒரு விளம்பரம்தான்

    ராமசந்திரன்

  • நான் சமீபத்தில் 1951-1962 காலகட்டத்தில் பள்ளியில் படித்தபோது வாரம் ஒருமுறை நீதிக்கதைகள் வகுப்பு உண்டு. பல நல்ல விஷயங்களை சொல்லித் தந்தனர்.

    ராஜாஜி அவர்களால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்த கல்வியின் அடையாளம்தான் நீங்கள் கூறும் கைத்தொழில் கல்வி. நான் படித்த போதும் உண்டு. அது பற்றி நான் குறிப்பிட்டுள்ளதை பார்க்க: http://dondu.blogspot.com/2006/08/2.html

    மற்றப்படி தட்டச்சுவதில் நானும் ஒருவிரல் கிருஷ்ணாராவ்தான். ஆனால் பிரத்தியேகமாக என் விஷயத்தில் இதுதான் தேவை. ஜெர்மன் மர்றும் ஆங்கில தட்டச்சுப் பலகைகளை சர்வசாதாரணமாக கையாளும் நான் பல விரல் தட்டச்சில் திண்டாடிப் போயிருப்பேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  • பா ரா அவர்களுக்கு, Please answer. Anyone else know the answer please respond.
    இந்திய சுதந்திரம் வாங்கும் முன்பு (before 1947 ) , எத்தனை பிரிடிஷார் இந்தியாவில் இருந்தார்கள் ?

    எத்தனை இந்தியர்கள் சுதந்தர போராட்டத்தில் இருந்தார்கள் ?

    நன்றி : கணியன்

  • ||தேவை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஈடுபாடு.||

    பாரா,எனது சென்ற பதிவின் பின்னூட்டத்தை முற்றிலுமாக ஒத்துக் கொண்டு அதை ஒரு வரியில் ஒத்துக் கொண்டதற்கு நன்றி…!!

    🙂 🙂

    @கணியன்
    உங்கள் கேள்வி சிறு பிள்ளைத் தனமாக இல்லையா?
    பிரிட்டாஷாரின் எண்ணிக்கை கிழக்கிந்தியக் கம்பெனியில் கூட இருக்க வாய்ப்பில்லை;அப்படி இருக்கும் போது வேலை இல்லாத இந்தியர்கள் எவரும் இந்தக் கணக்கை வைத்திருப்பபார்களா என்ன?

    அதுவும் 40 களில் என்ன புள்ளியியல் துறை தனியாக 50 கணிப் பொறிகளுடன் இயங்கிக் கொண்டிருந்ததா?

    அடுத்த கேள்வி இதை விட சிரிப்பூட்டுகிறது..எத்தனை இந்தியர்கள் சுதந்திரப் போராட்டத்தில் இருந்தார்கள்??
    சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உங்களுக்கு வரையறை என்ன?
    வீதியில் இறங்கிப் போராடியவர்கள் மட்டுமா?
    அடித்தோ,சுட்டோ,தூக்கிலிட்டோ கொல்லப்பட்டவர்கள் மட்டுமா?

    அல்லது தலைமறைவுப் போராட்டக்காரர்களுக்கு வெளியில் தெரியாமல் உணவளித்துப் பராமரித்தவர்களா?
    நேதாஜியின் படையில் இருந்தவர்களா?இறந்தவர்களா?

    என்ன வரையறை?

    இந்தியா சுதந்திரம் அடைந்ததால் மகிழாத பிரகிருதிகள் எவராவது இருந்திருந்தால் அவர்களைத் தவிர அனைவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள்தான்!

    உங்கள் கேள்வி குழந்தைத் தனமாக இல்லை?

    ஒன்றும் சொல்வதற்கிற்கில்லை..

  • டோண்டு சார்,

    ராஜாஜியின் சீர்திருத்தக்கல்விக்கு ஆதரவு எல்லாம் இருக்கட்டும். சீர்திருத்தக்கல்வி !!!!! அடேயப்பா என்ன ஒரு வார்த்தை பிரயோகம்!

    நிகழ்காலத்துக்கு வாங்க சார்,
    உன்மையியேலே தொழில் கல்வி அவசியம் என்றால் முடிந்வரை உங்கள் பேரன்/பேத்தி/பசங்களை, ஓரிரு வருடம் வேஸ்ட் ஆனாலும் பரவாயில்லை என்று வயரிங், கார்பெண்ட்ரி, லேத், வெல்டிங், etc….போன்றவற்றை சொல்லித்தரும் ITI – இல் சேர்க்கலாமே ! அவர்களின் தன்னம்பிக்கை அபாரமாய் வளரும்.

    இதை செய்யமாட்டீர்களே, உங்கள் எண்ணமெல்லாம் IIT தான்.

    போங்க சார் இதெல்லாம்
    பேசலாம், பேசிக்கிட்டே இருக்கலாம்
    எழுதலாம், எழுதிக்கிட்டே இருக்கலாம்

    முதலில் நீங்கள் நடைமுறைபடுத்தி பாருங்க,
    அப்புறம்
    அந்த அனுபவத்தை வந்து எழுதுங்க.

    **************************************

    பாரா சார்,

    நான் படித்தபள்ளியில் இப்பவும் உள்ளது 8-ஆம் வகுப்பு வரை, கைத்தொழில் வகுப்பு, நீதிபோதனை வகுப்பு, சமூக சேவை வகுப்பு.

    கைத்தொழில் வகுப்பில் – உங்கள் ஆசிரியரை போல அல்லாமல் நெசவின் நுணுக்கங்களை கற்றுத்தருகிறார்கள்.

    நீதிபோதனை வகுப்பில் – மாணவர்கள் வந்து கதை சொல்ல வேண்டும்.

    சமூக சேவை வகுப்பில் – பள்ளியை சுத்தப்படுத்துதல், மரம்நடுதல், நட்டமரங்களுக்கு தண்ணீர் விடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும்.

    1991-1995 வரை நாங்கள் நட்ட மரமெல்லாம் இன்று வளர்ந்து நிற்கிறது.

    *************************************************************

    இதையெல்லாம் விட்டுவிட்டு நான் சென்னையில்தான் வாழ்வேன் என்றால் எதுவும் நடக்காது.

    கிழக்கு பதிப்பகத்தை தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் நடத்தி பார்க்கலாமே, எழுத்துப்பணியோடு, 4 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயப்பணியையும் பார்க்கலாம்.

    செய்வீர்களா ? மாட்டீர்கள்…………..

    எதையாவது பெறவேண்டுமென்றால் எதையாவது இழக்கத்தான் வேண்டும். என்ன நகரத்தார்களுக்கு இழப்புகள் அதிகம்தான்.

  • கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கும் நகரங்களில் உள்ள அரசுப்பள்ளிகளையுமே குறிவைக்கிறீர்களே ஏன் ? டொன் போஸ்கோ, குட் செப்பர்ட், சர்ச்பார்க், பத்மா சேசாத்திரி, டிஏவி, எஸ்பிஓ என்று ஏன் போகவில்லை ?

    எனக்குத் தெரியும் உங்களால் முடியாது. அவர்கள் தங்கள் மாணவர்களை வெல்டிங், பிட்டர், நெசவு, செருப்பு தைத்தல் (லேத் வர்க்) என்று அனுப்ப பள்ளிகள் நடாத்தவில்லை.

    ஆனால் உங்கள் ‘தொழில்முறைக்கல்வி” – டோண்டு சொன்னதைப் போல ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை வழிமொழியும் – கீழ்த்தட்டு வர்க்கத்தையே குறிவைக்கிறது. கீழ்த்தட்டு வர்க்கம் படிப்பதற்காகவே அரசுப்பள்ளிகள் நடாத்தப்படுகின்றன. அங்கிருந்துதானே மேல்தட்டு வர்க்கத்தினருக்கு வேலை செய்ய ஆட்கள் வரவேண்டும் ?

    Nothing objectionable to your ideal education where vocational education is given due importance or made mandatory, coz, as u said, they are real eduction for life.

    But the qn is that why not we make it mandatory for a marvadi boy studing in Don Bosco or a Tamil brahmin boy studying in PSBB and teach him how to whitewash the building and repair the paster work on the walls or make a class room furniture ?

    The qn is already asked by a commenter here.

  • சென்னையின் மிகச் சிறந்த பள்ளிகளுள் ஒன்றாக அறியப்பட்ட பள்ளியில் பையனை பதினொன்றாம் வகுப்பு சேர்க்க சென்றேன் நேற்று. நேர்முகத் தேர்வில் பையன் எதிர்காலத்தில் அறிவியல் துறையில் ஆராய்ச்சி செய்ய விரும்புவதாகச் சொன்ன போது அவனுக்குக் தேர்வாளர் கொடுத்த அறிவுரை
    அறிவும் மதிப்பெண்ணும் இணைத்து செல்லாது. இங்கே படிக்க வேண்டும் என்றால் கேள்வி எதுவும் கேட்காமல் ஆசிரியர் சொல்வதை சரியாக பின்பற்றி மதிப்பெண் எடுக்க வேண்டும்.

    cut off என்று ஒன்றை நோக்கி மாணவர்களை தள்ளிக் கொண்டு போக வேண்டிய கட்டாயத்தில் கல்வித் துறை இருப்பது வேதனை அளிக்கிறது. பனிரெண்டாம் வகுப்பை பதினோராம் வகுப்பு பாதியில் இருந்தே படித்து உருபோட்டு மதிப்பெண் பெற வேண்டும். புரிந்ததா புரியலையா தேவையானதா இல்லையா எதுவும் பற்றி யோசிக்கக் கூட அவசியம் இல்லை. மதிப்பெண் மட்டும் தான் விலை போகும். இல்லை என்றால் பெற்றோர் மூட்டை கட்டி வடித்து இருக்க வேண்டும் பணத்தை.

  • // கிழக்கு பதிப்பகத்தை தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் நடத்தி பார்க்கலாமே, எழுத்துப்பணியோடு, 4 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயப்பணியையும் பார்க்கலாம்.//

    பாரா விவசாயம் செய்தால் எப்படி இருக்கும்? முகிலிடம் சொல்லி ஒரு கிராபிக்ஸ் செய்யவேண்டும்.

    அப்புறமென்ன பாராவும் கூட ஒரு சகலகலா வல்லவன்தான். 🙂

    ஏரை புடுச்சி உழுவான் – இவன்
    நீரை பாய்ச்சி விடுவான்
    மத்த நேரம் மாடு கண்ண
    மேய்ச்சிடுவான்.

  • எப்படி இருக்கலாம் கல்வி ? எளிமையான பதில் :

    அறிவை அளக்கும் அளவுகோல் அல்ல கல்வி

    அறிவை தூண்டும் தூண்டுகோலே கல்வி ….

  • நான் சவுக்கு வெள்யீட்டு புத்தகம் வாங்கி விட்டேன். (ராஜீவ் மரணம் , புலிகளுக்கு அப்பால் – English Rajiv Sharma, Tamil – Anand Raj, RS 250).
    ஒரு 50 பக்கம் படித்துவிட்டேன். இரவு முழுவதும் படிக்க முடியவில்லை. நேற்று முழுவதும் ஊழல் எதிர்ப்பு பரப்புரை செய்ததால் என்னால் முழுதும் படிக்க முடியவில்லை. இன்று இரவு படித்து முடித்து விடுவேன்.

    இன்று காலை ஊழல் எதிர்ப்பு பரப்புரை மற்றும் தமிழக முதல்வரை மக்கள் சட்டம் (லோக் பால்) ஆதரவு தெரிவிக்க வேண்டி கையெழுத்து இயக்கம் சென்னை அடயார் பகுதியில் நடைபெறுகிறது. தினமலரில் செய்தி இன்று வந்து உள்ளது.
    இடம் : youth hostel ,

    Indiara nagar , 2nd avenue, Adyar, chennai 20

    Date 05 June.2011 (Sunday)

    phone 7358251781/82
    mail@iacchennai.org
    http://www.iacchennai.org

    அனைவரும் வருக . ஆதரவு தருக.

  • நன்றி திரு அறிவன் அவர்களே. நான் எதற்கு இந்த கேள்வியை கேட்டேன் என்றால் எத்தனை கோடி இந்தியர்கள் போராடினால் ஊழலுக்கு எதிரான சட்டம் கொண்டு வர முடியும் ? கருப்பு பணம் வெளிநாடு செல்வதை தடுக்க முடியுமா ?

    I am comparing the India Freedom movement and the current Anti Corruption movement.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!