பா. ராகவன் அவர்கள் இந்த அத்தியாயத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல. பல புதையல் பற்றிய இரகசியங்களைக் கூறியுள்ளார். இந்தப் பகுதியை வாசித்தவர்கள், ‘என்ன புதையலா? நீங்கள் சரியாக வாசித்திருக்க மாட்டீர்கள். உளறாதீர்கள்!’ என்று என்னைப் பார்த்து ஏளனமாகக்கூட எண்ணலாம். இதில் உள்ள அனைத்தும் என் கோணத்தில் புதையலாகவே தோன்றுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னைப் பற்றிய அபரிதமான எண்ணங்கள் உண்டு. உலகத்தில் உள்ள அறிவு எல்லாம் தான்தான் கொண்டுள்ளதாக எண்ணம் உண்டு. உண்மையில் அத்தகைய அறிவு பெற்றவர்கள் என்றால் சரிதான். ஆனால், இல்லை என்றால் அது போல்தான் இந்தக் கோவிந்தசாமியும். அவனது மூளைக்குள் சென்றவுடன் அவனைப் பற்றிப் புரிந்து கொள்கிறது.
மனிதர்களாகிய நாம் சிந்திக்கிறோம். பல கணங்களில் சரியாகச் சிந்திக்கிறோமா என்று பார்த்தால் அவ்வாறு இருப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதற்கு அவன் மீது குற்றம் செலுத்த முடியாது. இது மனிதகுலத்தில் வழிவழியாகக் கடைப்பிடிக்கக் கூடிய ஒன்றுதான்.
வரலாற்றையும் அரசியலையும் பல இடங்களில் ஒற்றை வரியில் கூறி, அக்காலத்திற்கு நம்மைக் கொண்டுசென்று விட்டார். இந்தப் பாணியானது எனக்கு மிகவும் பிடித்ததாகும்.
ஆண்களின் வாழ்வு எளிதானது என்று பல பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வு எளிதானது அல்ல. பொதி சுமக்கும் மாட்டினைவிடப் பல பொதிகளைத் தன் உடலிலும் மனத்திலும் சுமக்கும் பாவப்பட்ட ஜீவன்கள் என்பதே உண்மை. அதற்குக் கோவிந்தசாமியும் விதிவிலக்கல்லர்.
கோவிந்தசாமிஅறிவற்றவன் என்று நாம் முத்திரை குத்தினாலும் அன்புக்கு ஏங்கும் அறிவற்ற மனதும் புத்தியும் படைத்தவன்தான். நிலையற்ற மனது அவனிடம் இல்லாததால் நிலையில்லாமல் ஒவ்வொரு இடமாகச் சென்று கொண்டிருக்கிறான்.
பெண்ணின் அன்புக்கு ஏங்கியிருந்தது சாகரிகாவிடம் அவன் பேசுவதிலிருந்து அறிய முடிகிறது. அவள் இயல்பானவள். சுதந்திரமானவள். நடைமுறையோடு ஒத்துப் போகக் கூடியவள் என்பது அவர்கள் இருவரின் உரையாடல் வழி அறிய இயல்கிறது. அவளுக்காகத் தன்னை மாற்றிக் கொள்ள எண்ணுகிறான். அவளின் மனத்தினைத் தன் வசப்படுத்த வேண்டும் என்பதற்காகவே,
“அவளைக் கவருவதற்காகவேனும் ஆங்கிலம் பேசிப் பழக உறுதி பூண்டான். ஸ்டார் வார் காமிக்ஸ் புத்தகங்களையும் மில்ஸ் அண்ட் பூன் நாவல்களையும் தி இந்து நாளிதழையும் விடாமல் படித்துத் தனது ஆங்கில மொழி அறிவையும் விருத்தி செய்து கொண்டான்”
என்ற செய்தியை எழுத்தாளரின் வழியாக அறிய முடிகிறது.
மனிதன் தான் நேசிக்கும் விரும்பும் காதலிக்கும் அந்த அன்பு மனத்திற்காக மாற்றிக் கொள்ள விழைவான். அதுபோல் தன்னையும் கோவிந்தசாமி மாற்றிக் கொள்கிறான். இந்த அத்தியாயத்தில் ஆணின் மனநிலையே முழுவதும் பரவிக் கிடப்பதை உணர்கிறேன்.
– பிரியா சபாபதி