குணங்களில் பல வகைகள் உள்ளன. அவை கடவுளின் உயரிய படைப்பான மனிதனுக்கு மட்டுமே உண்டு என எண்ணிய வேளையில் சூனியர்களுக்கும் உண்டு என்பதை உரையாடல் வழி அறிய இயல்கிறது. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதில் மிகு விருப்பம்.
அவ்விடத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதை மட்டும் சிந்தனையில் ஏற்றிய சொல்வித்தையில் வல்லவனான சூனிய கதாநாயகன் நியாதிபதியிடம், “நிச்சயமாக இல்லை கோமானே. நான் குளிர்ச்சாவிலிருந்து தப்பிப்பதற்காகவே இதனைச் சொல்கிறேன்” என்று பதமாகக் கூறினான். இந்தப் பதம்தான் அவரின் மனத்திற்குள்ளும் செல்கிறது.
இறப்பைத் தானாகவே ஏற்றுக் கொள்கிறானே என்று பூகம்பச்சங்கைக் கொண்டு அவனை அனுப்புவதும் சூனியர்களின் சுயநலத்தின் உச்சக்கட்டம். அந்தச் சுயநலத்தைத் தன் வாழ்நாளை நீட்டிக்கும் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டான்.
சூனியன் தன்னைத் தற்காத்துக் கொண்ட காட்சியானது குழந்தைகளுக்கு ஆசியர்களோ, பெற்றோரோ, பெரியோரோ கதை சொல்லும் பொழுது அதைத் தன் கற்பனைக்குள் காட்சியாக எவ்வாறு விரித்துக் கொள்வார்களோ. அதுபோல் பா. ராகவன் அவர்கள் எழுத்தின் வழியே கூறிய காட்சியை என் கண் முன் நான் விரித்துக் கொண்டேன். .
அந்தக் காட்சிக்கு முன் வரும் வரியே சுதந்திரத்தின் முழக்கமாக உள்ளது. “ஏன் கடைசிக் கப்பலினின்று நான் வெளியேறிவிட்டேன். இனி நான் சுதந்திரமானவன். வாழ்வோ, மரணமோ, எனக்குரியதை நானே தீர்மானித்துக் கொள்வேன்”.
மனவீரம் கொண்ட ஒருவருக்கு வலியச் சென்று தோல்வியை அளிக்க முற்பட்டாலும் அவர் அந்தத் தோல்வியிலிருந்து வெளியே வந்து விடுவர். அது போல் இந்தச் சூனியனும்.
நீல நகரத்திற்குச் செல்வதற்குப் பலர் காத்திருந்தாலும் அதில் ஒருவரின் உச்சந்தலைக்குள் சென்று குதித்தான். தன்னை அறியாதவன் பிறருக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பான். அதுபோல்தான் அந்த மனிதன் என்பதை உணர்ந்த மாத்திரத்தில் உட்புகுந்தான் சூனியன்.